Our Blog

தென் பரதவரின் வழக்காற்றுச் சொற்கள் சில

தென்பாண்டிக் கடலோர மக்கள் "பைய" என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார்கள், அந்த சொல்லுக்கு "மெதுவாக" என்று பொருள். சைக்கிள் எடுத்து ஊர் சுற்ற கிளம்பி விட்டால் "ஏல பைய பாத்துப்போயிட்டு வா என்னா" என அடுப்பங்கரையில் இருந்து அம்மாவின் குரல் ஒலிக்கும்.

திருவள்ளுவர் காமத்துபாலில் ஒரு குறளில் பைய என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். காதலனும் காதலியும் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது காதலி காதலனைப் பார்த்து மெதுவாக சிரிக்கிறாள். இந்த சூழ்நிலையை வள்ளுவர் சொல்கிறார்

"அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்."

இரண்டாவது அடியில் தலைவி மெதுவாக சிரிக்கிறாள் என்பதை "பைய நகும்" என்கிறார் வள்ளுவர். அட, 2000 ஆயிரம் வருடதிற்கு முன் திருவள்ளுவர் பயன்படுத்திய வார்த்தையை இன்னும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். 

மேலும் சில சொற்கள்:

• ஏல, ஏக்கி -

• ஆச்சி : வயதான பெண்மணி - Elderly Women;. தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்களில் 'பாட்டி'யை ஆச்சி என்று அழைப்பார்கள். .

• பைதா - சக்கரம் ( wheel; In maths (English) pie x Dia(meter) is circumference!!)

• கொண்டி - தாழ்ப்பாள்

• பைய - மெதுவாக

• சாரம் - லுங்கி

• கோட்டி - மனநிலை சரியில்லாதவர்.

• வளவு - முடுக்கு,சந்து

• வேசடை - தொந்தரவு

• சிறை - தொந்தரவு

• சேக்காளி - நண்பன்

• தொரவா - சாவி

• மச்சி - மாடி

• கொடை - திருவிழா

• கசம் - ஆழமான பகுதி

• ஆக்கங்கெட்டது - not constructive (a bad omen)

• துஷ்டி - எழவு (funeral)

• சவுட்டு - குறைந்த

• கிடா - பெரிய ஆடு (male)

• செத்த நேரம் - கொஞ்ச நேரம்

• குறுக்க சாய்த்தல் - படுத்தல்

• பூடம் - பலி பீடம்

• அந்தானி - அப்பொழுது

• வாரியல் - துடைப்பம்

• கூவை - ஆந்தை an owl (bird of bad omen)

• இடும்பு - திமிறு (arrogance)

• சீக்கு - நோய்

• சீனி - சர்க்கரை (Sugar)

• ஒரு மரக்கா வெதப்பாடு - சுமார் 8 செண்ட் நிலம்

• நொம்பலம் - வலி

• கொட்டாரம் - அரண்மனை

• திட்டு - மேடு

• சிரிப்பாணி - சிரிப்பு

• திரியாவரம் - குசும்புத்தனம்

• பாட்டம் - குத்தகை

• பொறத்தால - பின்னாலே

• மாப்பு - மன்னிப்பு

• ராத்தல் - அரை கிலோ

• சோலி – வேலை

• சங்கு – கழுத்து

• செவி – காது

• மண்டை – தலை

• செவிடு – கன்னம்

• சாவி – மணியில்லாத நெல், பதர்

• மூடு – மரத்து அடி

• குறுக்கு – முதுகு

• வெக்க - சூடு, அனல் காற்று

• வேக்காடு - வியர்வை

தமிழ் பிறந்த இடம் பொதிகை என்றும், தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதி மக்களின் வார்த்தைகளில் இன்னும் ஆதித் தமிழ் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

நம் வாழ்வியலோடு கலந்த மொழியை சரளமாகவும், இயல்பாகவும் பேசினாலே அதன் அழிவினை நம்மால்  தடுக்கலாம்.

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.