Our Blog

கொற்கைக் காசுகள்

கொற்கைப் பாண்டியர்கள் வெளியிட்ட காசுகள் நீண்ட சதுர காசுகளாகவும் பின் தலைநகர் மதுரைக்கு மாற்றப்பட்டபின் வெளியிடப்பட்ட காசுகள் பலவிதமான உருவம் தீட்டப் பெற்ற சதுர வடிவக் காசுகளாகவும், வட்ட வடிவிலுமான காசுகளாகவும் இரு வேறு வடிவில் உள்ளன. கொற்கை அஃக சாலையில் அச்சிடப்பட்டச் செம்பு காசுகள் எழுபது ஆண்டுகள் முன்புவரை தாமிரபரணி ஆற்றங்கரையில் இருபக்கங்களிலும் அமைந்த சிருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, தென்திருப்பதி, ஏரல், ஆத்தூர் மற்றும் மாறமங்கலம், பழையகாயல் போன்ற இடங்களில் ஏராளமாகக் கிடைத்தன. 

கொற்கையில் வணிகம் செய்வதற்காக மரக்கலங்களில் பன்னாட்டவரும் வந்தனர். அவர்களது நாணயங்களும் கொற்கை அகழ்வாய்வின் போதும், கொற்கையின் சுற்றுப்புறத்திலும் கிடைத்துள்ளன. ரோமானியர்கள், கிரேக்கர்கள், அரேபியர் நாணயங்கள் மற்றும் ஈழக் காசுகளும் கிடைத்துள்ளன. திருநெல்வேலி ஆட்சியராக இருந்த பக்கிள் துரையவர்கள், 1873 ம் ஆண்டில் சிருவைகுண்டத்தில் அணைகட்டி தாமிரபரணி நீரை பாசனத்திற்காகக் கால்வாய் வெட்டி திருச்செந்தூர் வரை கொண்டு செல்லும் பணியில் மக்கள் ஈடுபட்டிருந்த போது, ஆழ்வார் திருநகரி அருகே ஒரு சிறிய செப்புப் பாத்திரத்தில் அரேபிய பொற்காசுகள் அடங்கிய புதையலை பணியில் ஈடுபட்டிருந்த வேலையாட்கள் கண்டெடுத்தனர். இவைகள் கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரபுக் காசுகள் ஆகும். 

அரேபிய தினார், திரமன், ஈழக்காசு, உரோம் நாட்டு வெள்ளி, தங்க நாணயங்கள் முதலான அந்நிய நாணயங்கள் பாண்டிய நாட்டில் வழக்கிலிருந்தது. பராக்கிரமபாகு பாண்டிய நாட்டை வென்ற போது, கஹபணம் (Kaha-Pana) என்ற ஈழக்காசு பாண்டிய நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டது. பாண்டிய நாட்டிலும், கொற்கையிலும் உரோமானிய நாணயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை கி.பி. 98 ஆம் ஆண்டைய அகஸ்டஸ் நேரவா என்ற உரோம் நாட்டு மன்னனின் காலத்திய காசுகள். உரோம் நாட்டு மன்னர்களான நீரோ கி.பி. 46 கொனேரியஸ் ஆர்க்கேடியஸ் (கி.பி.96) ஆகியோரின் நாணயங்கள் மதுரையில் கிடைத்துள்ளன. 

திருநெல்வேலி காசுகள் நூல்: 

வேலூர், டேனிசு லூத்தரன் சபையைச் சேர்ந்த கிறிஸ்தவ மறைபணியாளர் சி. உலாவேந்தல் என்பவர் கொற்கைப் பாண்டியர்களின் காசுகளையும், மதுரைப் பாண்டியர்களின் காசுகளையும் ஆய்ந்து முதன் முதலாக தென் இந்தியவில் பழங்காசுகளைப் பற்றிய நூலான திருநெல்வேலி காசுகள் என்ற நூலை வெளியிட்டார். இவரது நூலில் கொற்கையிலும், மதுரையிலும் வெவ்வேறு மன்னர்கள் இருந்து கொண்டு தமக்கெனத் தனித்தனி காசுகளை வெளியிட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். பழம் பாண்டியர் காசுகள் மதுரையிலும், கொற்கையிலும் வெளியிடப்பட்ட காசுகள் எல்லாம் ஒன்று போலவே உள்ளன. ஆனால் பிற்காலத்தில் இரு இடங்களிலும் வெளியிடப்பட்ட காசுகள் வெவ்வேறு தன்மைகளையும், வெவ்வேறு விதமான சின்னங்களையும் உடையனவாகத் திகழ்கின்றன. பிற்காலத்தில் காணப்படும் வெவ்வேறு விதமான காசுகள், கொற்கை மன்னர்கள் பரதவ சாதித் தலைவர்களாக, சிற்றரசர்களாக குருகிப்போனக் காலத்தில் அவர்கள் தமக்கென்ற நாணயம் அச்சிட்டு உள்ளதாகத் தெரிகிறது. 

கொற்கைக் காசுகள்: 

பாண்டிய மன்னர்கள் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு இருந்த மட்டும் நீண்ட சதுர வடிவிலான காசுகள் அச்சிடப்பட்டன. பிற்காலத்தில் கொற்கையில் பரதவச் சிற்றரசர்கள் வெளியிட்டக் காசுகள் பெரும்பாலும் செப்புக்காசுகளாகவே இருந்தன. கொற்கைப் பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட நீண்ட சதுரகாசுகளில் பானை, சக்கரம், இணைக்கயல், சங்கு, கொடி, தொரட்டி, நிறைகுடம், சுவத்திகம் போன்ற சுமார் எட்டு அல்லது அதற்கும் குறைவான வடிவங்கள் தீட்டப்பட்டும், பின்புறம் மீன் உருவத்தைக் காட்டும் கோடுகளால் ஆன வடிவமும், சில காசுகளில் எருதும், தொட்டியில் சிறு செடியும் பொறிக்கப்பட்டுள்ளன. சில காசுகளில் குல சேகரன், க, சுந், சுந்திர, வி முதலிய எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. 

இவை கிபி. 3௦௦ ஆம் ஆண்டு வரைக் கொற்கையில் அச்சிடப்பட்டிருக்கலாம் என அறிஞர் உலாவேந்தல் குறிப்பிட்டுள்ளார். பிற்கால கொற்கைப் பாண்டியர்களின் காசுகள், மதுரை பாண்டிய அரசர்களின் காசுகள் சதுர வடிவமும், வட்ட வடிவமும் உடையனவாக இருந்தன. சில காசுகள் மிளகு வற்றல் விதை அளவு சிறிது. இதில் அதிகமான சின்னங்கள் இல்லை. இக்காசுகளில் சுவத்திகம், தாமரை, யானை, கண்ட கோபாரி, திரிசூலம், பிறை, நண்டு, மயில் வைணவத் திருச்சின்னங்கள் முதலியன காணப்படுகின்றன. 

மதுரைக் காசுகள்: 

பாண்டிய மன்னர்கள் மதுரைக்கு இடம் பெயர்ந்த பின்னர் கொற்கையில் காசுகள் அச்சடிப்பதை நிறுத்திவிட்டு, மதுரையிலேயே அச்சிட்டனர். இவை சதுர வடிவிலும், வட்ட வடிவிலும் உள்ளன. பாண்டிய மன்னர்கள் ஆதியில் சைவர்களாக இருந்தனர். பின்னர் பௌத்தர்களாகவும், சமணர்களாகவும் இருந்தனர். பின்னர் வைணவர்களாகவும் மாறினார். வைணவ சமயத்தில் நம்பிக்கைக் கொண்டு அதிவீரராமன், வரதுங்கராமன், வரகுணராமன் முதலிய பெயர்கள் தாங்கிய தோடுதங்கள், காசுகள் வைணவச் சின்னமும் பொறித்துள்ளனர். பல காசுகளில் கருடாழ்வார் உருவமும் பொறித்துள்ளனர். 

தென்னிந்திய நாணயவியல் ஆய்வுகள்: 

தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழகத் தலைவர், திரு, இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சங்ககால கொற்கைப் பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்களின் ஆய்வுகள் பற்றிய முடிவுகளை சமீப காலமாக நாளிதழில் செய்திகளாக வெளிவந்துள்ளன. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நாணயவியல் அறிஞர் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பழமையான நாணயங்களை ஆய்வு செய்து நூல் வெளியிட விரும்பியதால் அவரது பணிக்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் நோக்குடன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம்மிடம் இருந்த சங்க காலப் பாண்டிய நாட்டு நாணயத்தை சுத்தப்படுத்தி ஆய்வு செய்தார். 

அந்த நாணயத்தின் முன்புறம் கீழ் பகுதியில் யானை ஒன்று வலப்புறம் நோக்கி நிற்கிறது. யானையின் மேல் இடப்பக்கத்தில் மா என்ற மவுரிய பிராமி எழுத்து உள்ளது. அதற்கு அடுத்து தமிழ் பிராமி வகையை சேர்ந்த ற, ன் என்ற எழுத்துகளைச் சேர்ந்து மாறன் எனப் படிக்க முடிவதாகக் கூறியுள்ளார். நாணயத்தின் பின்புறம் நடுவில் வேலியிட்ட மரம் போன்ற சின்னமும், இதன் வலது பக்கத்தில் இரண்டு மரக்கிளைகளும், வலது பக்கத்தின் அடிமூலையில் ஆறு முகடுகளைக் கொண்ட மலை சின்னமும் உள்ளது. இதன் காலம் கி.மு. 5 ம் நூற்றாண்டாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 

இந்த நாணயம் இரண்டு தகடுகளில் தனித்தனியாக அச்சிடப்பட்டு ஈயத்தைப் பின் பகுதியில் ஊற்றி இரு தகடுகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதனைக் கொற்கைப் பாண்டியன் வெளியிட்டிருக்கலாம். (செய்தி: தினத்தந்தி 23.3.20216) 

திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சுத்தப்படுத்தி ஆய்வு செய்த பாண்டிய நாணயம் செம்பு உலோகத்தால் ஆனது. எடை 4.3 கிராம், 1.7 செ.மீ நீளமும், 1.5 செ.மீ அகலமும் அளவு கொண்டது. நாணயத்தின் முன்புற மத்தியில் சிதைந்த உருவம் ஒன்று உள்ளது. அதன்மேல் 2 தமிழ் பிராமி எழுத்துக்கள் தென்படுகின்றன. அதன் கீழ்பகுதியில் நீள்சதுர வடிவில் ஒரு தொட்டி உள்ளது. தொட்டியின் மேல் விளிம்பை இரண்டு ஆமைகள் தொட்டுக்கொண்டு ஒன்றை ஒன்று எதிர் நோக்கியுள்ளன. தொட்டியின் கீல்விளிம்னைத் தொட்டுக் கொண்டு இரண்டு ஆமைகள் உள்ளன. 

நாணயத்தின் விளிம்பை ஒட்டி வேலியிடப்பட்ட மரச்சின்னம் உள்ளது. நாணயத்தின் மேல் மூலைப் பகுதியில் தமிழ் பிராமி எழுத்தில் மாறன் என்று அச்சிடப்பட்டுள்ளது. நாணயத்தின் பின்புறம் கோட்டு வடிவ மீன் சின்னம் அழகாக உள்ளது. இரண்டு பெரிய மீன்கள் ஒன்றையொன்று எதிர் நோக்கி நின்ற நிலையில் உள்ளன. இந்த இரட்டை மீன்கள் சங்ககாலக் கொற்கைப் பாண்டியர்களின் சின்னம். இந்த நாணயத்தின் காலம் கி.மு. 3 ம் நூற்றாண்டாக இருக்கலாம். (தகவல்: தினத்தந்தி 30.8.2016) 

கொற்கைப் பாண்டியரின் செழியன் பெயர் பொறித்த வெள்ளி நாணயம் ஒன்றை 2 கிராம் எடையுடன் நீள் சதுரமாவும், ஒழுங்கற்றதாகவும் உள்ளது. 1.5 செ.மீ அகலமும் 1.6 நீளமும் கொண்டதாக உள்ளது. அந்த நாணயத்தின் முன்பகுதியின் வலப்பக்கம் மன்னர் தலையின் மேல் கீரிடம் உள்ளது. அந்த கீரிடத்தை அழகு செய்யும் ஒரு நீண்ட குஞ்சம் நெற்றியிலிருந்து பினோக்கி பின்னோக்கி பின்புறம் கழுத்து வரையில் உள்ளது. முகத்திற்கு எதிரே மேலேயிருந்து கீழாக நான்கு எழுத்துக்கள் தமிழ் பிராமி முறையில் செழியன் எனப் பொறிக்கப்பட்டுள்ளன. 

நாணயத்தின் நடுவில் ஒரு மனிதன் தலையைக் குனிந்து கொண்டு இருக்கிறான், அவன் முன்னங்காலுக்கு அருகில் யானை போன்ற ஒரு சின்னம் உள்ளது. அந்த மனிதன் இடுப்பிலிருந்து தோள்பட்டையின் கீழ் இரண்டு கைகளுக்கு இடையிலிருந்தும், கயிறுகள் மேல் நோக்கி செல்வது போலவும் அச்சாகி உள்ளது. இது முத்து சிப்பி சேகரிக்கும் நிகழ்வை ஒத்த்ப்படமாகும். 2300 ஆண்டுகளுக்கு முன் கொற்கைப் பாண்டியர்கள் கொற்கையில் முத்துக்குளித்த நிகழ்வினை நினைவுப்படுத்துகிறது. 

அசோக பேரரசன் தன் கல்வெட்டில் கூறியுள்ள தாம்ரபருணி நாடு கொற்கைப் பாண்டியர்களது நாடுதான் என்பதை வருங்காலக் கண்டுபிடிப்புகள் உறுதி செய்யும் காலம் வருகிறதோ எனக் கருதுகிறேன் என ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். (தகவல்: தினத்தந்தி 13.10.2016) மேற்குறிப்பிட்ட திரு.கிருஷ்ணமூர்த்தியின் மூன்று ஆய்வுத் தகவல்களையும் நோக்கும் பொழுது சங்ககாலக் கொற்கை பாண்டிய மன்னர்கள் மாறன். செழியன் என்றப் பெயர் கொண்டவர்கள் பரதவர்களே எனத் தெளிவாகத் தெரிகிறது. 

தலைநகர், மதுரைக்கு மாறிய பின் வெளியிட்ட நாணயங்களின் சின்னங்கள், கடல்படு பொருட்களையும், கடல்வாழ் உயிரினங்களையும் கொண்டிருக்காமல், வைணவ மதச்சின்னங்களைத் தாங்கி வந்துள்ளமையால் பிற்காலப் பாண்டிய மன்னர்கள் பரதவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்தும் நிலையில் உள்ளது. அந்த காலங்களில் பரதவர்கள் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள். 

மதுரைக்கு தலைநகர் மாறிய பின்பே கொற்கைப் பாண்டிய அரசர்கள், பரதவ சிற்றரசர்களாக நிலையில் தாழ்ந்து போயினர் என்பது தெளிவு. மூவேந்தர்கள் காலத்தில் பேரரசன் கீழ் சிற்றரசர்கள் அடங்கி திறை செலுத்தி தங்கள் பகுதியை ஆட்சி செய்தனர். நாயக்கர் அரச காலத்தில் பாளையக்காரர் முறை உருவாக்கியது. ஆங்கிலேயர்கள் காலத்தில் சமின்தாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இந்தியாவில் பத்து பெரிய சமஸ்தானங்களிலும், 601 சிற்றரசுகளும் இருந்ததாக பண்டித நேரு அவர்கள் தனது கண்டுணர்ந்த இந்தியா (Discovery of India) எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சரித்திர ஆய்வாளர் டாக்டர். சிகான் லரிப் எழுதிய முத்துகள் வரலாறு பாகம் 5 நூலில் குறிப்பிட்டுள்ளதாவது, வரலாற்று பேராசிரியர்களும் திராவிட இன ஆய்வாளர்களும் பாண்டிய தேசத்தின் பழமை வாய்ந்த அரசர்கள், பரதவ குலத்தைச் சேர்ந்தவர்கள் எனும் கருத்தை ஆதரிக்கின்றனர். 

இந்தக் கூற்றின்படி பரதவர்கள் அரச பரம்பரையினர் என்றும், கடலோடிகள் என்றும், தமிழகத்தில் போர்க்குணம் மிக்க இனம் என்றும் கருதப்படுகின்றனர். கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த பாண்டிய அரசை நிறுவியவர்கள் பரதவர்களே. இதனை இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சமும் உறுதிப்படுத்துகிறது என்று அந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் மதுரையில் களப்பிரர்கள் ஆட்சி வருமுன் வரை பாண்டிய பேரரசின் மன்னர்களாக இருந்தது பரதவர்களே என்பது தெளிவு.

- K. ஜேம்ஸ் பர்னாண்டோ 

நன்றி: பரவர் மலர் – டிசம்பர்- 2017 

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.