Our Blog

பனிமயம் பாடும் பாவலர்கள்

”கடலைத் தாயாக நினைக்கின்ற மீனவனுக்கு வளங்களை அள்ளித்தரும் கடல், அதே வேளையில் மரணத்தையும் அவ்வப்போது பரிசாகத் தருகிறது” என்கிறார் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் (அணிந்துரை – கடலோர கவிச்சோலை) கடல் அன்னையின் கருவறையில் உருவாகும் மீன்வளம், முத்து, பவளம், சங்கு போன்றவையே மீனவனின் வாழ்வாதாரம். இவ்வாறு மீனவனுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் கடல் அன்னையின் கருவறையே அவனுக்கு கல்லறையாக மாறி உயிரைக் குடிக்கும் ஆழிப்பேரலையாக, சுனாமியாக, மீன்பிடிக்கும் போது உயிரை சுருட்டிப்போடும் சூறாவளியாக மாறிவிடுவதும் உண்டு! இயற்கை இவ்வாறு சதி செய்யும் போது, மனிதனும் செயற்கையாக, கடல் அன்னையின் கருவறைகளில் கருசிதைவுகளை அரங்கேற்றி விடுகிறான். அணுஉலைக் கழிவுகளை, தாமிர உருட்டாலைக் கழிவுகளை, நச்சு வாயுக்களை, அனல் மின் நிலைய நிலக்கரி சாம்பல் கழிவுகளை, ரசாயன தொழிற்சாலைக் கழிவுகளைக் கடல் நீரோடு கலந்து மீன்வளத்தைக் கருச்சிதைவு செய்து விடுகிறான். 

இது தவிர, கடல் அன்னையைத் துகிலுரிவதைப் போல கடற்கரை கார்னெட் மணல் கொள்ளையும் நடக்கிறது! இது போதாதென்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை அடுத்திருக்கும் சுண்டைக்காய் நாட்டிலிருந்து வரும் இராணுவம் காயப்படுத்தி, சிறைப்பிடித்து, கொன்றொழித்தக் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்க்க தகுந்த தலைமை, அரசியல் முனையம் இன்றி மீனவன் தவிக்கிறான். இவ்வாறு, தன் தாயாக மதித்துப் போற்றும் கடல் அம்மாவின் மடியிலேயே தனக்குப் போதிய பாதுகாப்பில்லை என்று மீனவன் உணர்கிறான்! எனவே, கரையிலே கோயில் கொண்டிருக்கும் பனிமயத் தாயைத் தன் தாயாக வரிந்து கொண்டு, கடலிலே கிடைக்காத பாதுகாப்பைக் கரையிலே காண முயலுகிறான். கடலோரக் கவிஞர்களும் அதனால் இன்ஹா அன்னையைத் தங்கள் கவி மலர்களால் அர்ச்சனை செய்து, பாதுகாப்பு வேண்டி ஓயவில்லை! 

கடலோர மக்கள் பனிமய அன்னையைப் பாடிப் பரவுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. கிறிஸ்தவம் தழுவுவதற்கு முன் அவர்கள் சார்ந்திருந்த இந்து சமய பாரம்பரியத்தில் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் சிவனுடைய ஆற்றலுக்கு ‘சக்தி’ என்ற பெண்ணுருவம் கொடுத்து “சக்தி வழிபாடு” தோன்றியதாகக் கூறப்படுகிறது. இறைவழிபாடு பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து பல உருவங்களில் வளர்ச்சி அடைந்ததாகத் தெரிகிறது. முதலில் ஆவிகளின் வழிபாட்டில் வடநாட்டில் ‘பகாரி மாதா’ என்றும், தென்னாட்டில் ‘முனி’ வழிபாடொன்றும் வழக்கிலிருக்கிறது. அடுத்து இச்சக்தி வழிபாடு தென்னாட்டில் ‘அம்மன்’ வழிபாடாகவும், வடநாட்டில் ‘சீதளமாதா’ என்றும், தொடர்ந்து தேவதை வழிபாடாக வடநாட்டில் ‘துர்க்கா’ என்றும், தென்னாட்டில் ‘காளி’ என்றும் தொடர்ந்து, சக்திவழிபாடாக (பெண் தெய்வம்) பார்வதி அல்லது கௌரிவழிபாடாக வளர்ந்து, தேவியர் வழிபாடாக பராசக்தி, லெட்சுமி, சரஸ்வதி வழிபாடாக முதிர்ந்து, இறுதியில் ஆண்பாலரான தேவர்கள் மட்டில் பக்தி வழிபாடாக விளங்கிற்று. 

இவ்வாறு பெண் தெய்வங்கள் வழிபாடு மிக்க இந்திய சமய பாரம்பரியத்தில் வந்த தென்கிழக்குக் கடலோர மீனவர்கள் கிறித்தவம் தழுவுவதற்கு முன் திருச்செந்தூர் முருக பெருமானையும், மண்டைக்காடு பகவதி அம்மனையும், மதுரை மீனாட்சி அம்மனையும் வழிபட்டு வந்ததற்கான சான்றுகள் உள்ளன. கொற்கைத் துறைமுகத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மாறவர்மன்கள், செழியன்கள், இம்மீனவரின் முன்னோர்கள். கொற்கையிலும் அதை அடுத்த மாறமங்கலத்திலும் இன்றும் மீனவர் சமூகத்தினர் வாழ்வது குறிப்பிடத்தகுந்தது. இரட்டை மீன்கள் (இணைகயல்) சின்னத்தை தம் இலட்சினையாகவும், கொடியாகவும் கொண்ட இம்மன்னர்கள், கொற்கைத் துறைமுகம் தாமிரபரணி ஆற்றின் களிமுகத்தால் தூர்ந்து போனபோது, மதுரையைத் தலைநகராமாகக் கொண்டு, பாண்டியர்கள் என்று பெயர் தாங்கி, ஆளத் தொடங்கினர். அப்போதும் அவர்களின் இலச்சினையும், கொடியும் இரட்டைமீன் சின்னம் தாங்கி இருந்தன என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இப்பாண்டியர் காலத்தில் கட்டப்பட ஆரம்பித்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், தென்கிழக்குக் கடற்கரை மீனவர்கள் நுழைய ‘வடக்கு வாசல்’ என்ற சிறப்பு நுழைவாயில் இருந்ததாக செய்திகள் உள்ளன. மீனின் ஆட்சி (மீனாட்சி) என்றிருந்த பெயருக்கு, ஆரியர்கள் தாங்கள் வடபுலத்திலிருந்து கொண்டு வந்த தேவர்களோடு மீனாட்சி அம்மனைத் தொடர்புபடுத்த “மீனைப் போன்ற கண் உடையவர்கள்” என்று பொருள் கூறத் தொடங்கினர். 

கடற்கரை மக்களுக்கும் மீனாட்சி அம்மனுக்குமிடையே உள்ள தொடர்பைக் குறிக்க, கிறிஸ்தவம் தழுவிய பின் கடலோர மீனவர்களின் குலாதிபர்களாக இருந்தவர்களின் 21 விருதுகளில் ஒன்றாக, மீனாட்சி அம்மனின் கையிலிருக்கும் கிளியும் அமைந்தது! கிறிஸ்தவம் தழுவிய பின் தென்கிழக்கு மீனவர் சமுதாயத்தில் முற்காலத்தில் தேவாலயத்தில் திருமணச் சடங்கிற்காக வரும் மணப்பெண் ஏந்திவரும் மலர்க்கொத்தொடு துணியால் செய்யப்பட்ட உருவமும் சேர்ந்திருந்தது என்று பார்த்தவர்கள் சான்றுபகர்ந்துள்ளனர். 

இவ்வாறாக, அம்மன் வழிபாட்டில் இணைந்திருந்த தென்கிழக்குக் கடலோர மீனவர்கள், கிறிஸ்தவம் தழுவிய பின் அன்னை மரியாவை, தங்கள் அம்மன் ஆக, அம்மையாகக் கருதினார்கள். 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த மணப்பாடு அந்தோணிக்குட்டி அண்ணாவியார், அன்னை மரியாவை அம்மை என்றும் அழைத்துப் பாடினார். அவர் காலத்தில் ‘பனிமய அன்னை’ என்ற பெயர் பரவலாக அறியப்படவில்லை என்று கொள்ளலாம். “இரக்கத்தின் மாதா” என்றே அன்னை மரியா அழைக்கப்பட்டார். (1889 முதல் 1914 வரை) குலத்தலைவனாக இருந்த தொன்கபிரியேல் தெக்குரூஸ் மோத்தா வாஸ் என்பவரின் அரசவைக் வித்துவானாக இருந்த மணப்பாடு வித்துவான் 2 ஆம் இன்ப கவிராயர் மரியான் சவியேர் என்றி லெயோன் ‘பனிமய/ ஆத்தாள் பதிகம்’ பாடினார். 

· மணப்பாடு வித்துவான் சூசை ரபேல் மிராந்தா 

· உவரி புலவர் ஜான் ஜேசுவடியன் கர்டோசா 

· கூட்டப்புளி புலவர் லாசர் கோஸ்தா 

· வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகஸ் 

· தூத்துக்குடி புலவர் மரிய பூரணம் மஸ்கரனாஸ் 

· தூத்துக்குடி வித்துவான் மரிய அலங்கார பீரீஸ் 

· தூத்துக்குடி பனிமய வெண்பா” படிய புலவர் அந்தோணி தாசன் பீரீஸ் 

· தூத்துக்குடி “பனிமய உலா” பாடிய மிக்கேல் தல்மெய்தா 

· தூத்துக்குடி பண்டித மரியான் சேவியர் ரூபின் வர்மா 

· தூத்துக்குடி பாவலர் T. சேசையா வாஸ் 

· தூத்துக்குடி தென்றல் M.A.S.A. சகாயராஜ் 

· தூத்துக்குடி பாவலர் முறாயிஸ் 

· தூத்துக்குடி கவிஞர் அருள்திரு பிரான்சிஸ் முறாயிஸ் சே.ச 

· தூத்துக்குடி கவிஞர் தேவதாசன் வாஸ் 

· தூத்துக்குடி கவிஞர் தாமஸ் வாஸ் 

· தூத்துக்குடி புலவர் M.J. முத்தையா பர்னாந்து 

· உடன்குடி வித்துவான் ஜே.எம். விக்டோரியா 

· கொழும்பு புலவர் ஏ.பி.வி. கோமஸ் 

· கொழும்பு பாவலர் அ..விஜயன் விக்டோரியா 

· இலங்கை பேசாலை ச.தாவீது பீரீஸ் அண்ணாவியார் 

· சிப்பிக்குளம் கவிதேன்றல் A.F.மாறன் 

என்ற பனிமயம் பாடிய பாவலர் வரிசை நீள்கிறது! இப்பாவலர்களில் ஒன்றிரண்டு பேர் தவிர மற்ற அனைவருமே யாப்பிலக்கணத்தின்படி பாடியவர்களே. புலவர்கள் அரசர்களையோ, தெய்வங்களையோ புகழ்ந்து பாடும்போது உயர்வு நவிற்சி அணியில் பாடுவது தமிழ் இலக்கிய மரபு. அவ்வாறே, கடலோரக் கவிஞர்கள் அன்னை மரியாவைப் பாடும்போது, தங்களின் முன்னாள் சமய பாரம்பரியத்தின் தாக்கங்கள் தங்கள் பாடல்களிலும் படிவதைத் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால் பனிமயம் பாடிய பாவலர்களும் அன்னை மரியாவை, தெய்வமும் நீயே, சக்தியும் நீயே, இம்மையும் மறுமையும் நீயே, இறைவியே, தேவியே என்று பாடிப் பரவியுள்ளனர். உணர்ச்சிப் பிழம்பாகப் பாடிய இச்சொற்களைக் கத்தோலிக்கத் திருச்சபையின் மரியியலில் உள்ள இறையியல் உண்மைகளின் அடிப்படையில் ஆய்வு செய்ய இயலாது. அது புலவர் மரபு என்று ஏற்றுக் கொள்வதே சரி. திருச்சபை மரபு அல்ல. 

மீனவனுக்குக் கடல் அன்னையின் மடியில் கிடைக்காத பாதுகாப்பும் அபயமும் அன்னை மரியாவின் மடியில் கிடைக்கும் என்னும் உணர்வுப் இப்பாக்களில் மேலோங்கி நிறத்து காணத்தக்கது. 

“சிந்தலை கடலில் சென்றிடும் தோணி 
செய்தொழி லாளர்கள் அந்தோ! 
சீரலை குமறிப் பெரும்புயற் காற்றில் 
சேர்துறை தெரி யாமல் 
சித்தமே கலங்கும் தருணமே விரைந்துன் 
சேயனை இனிதுமன் றாடி 
சிறந்தநல் லுதவி புரிந்தவர் மனதில் 
திடமருள் சமுத்திர ராணி! 
கரையும் மறைந்துஉன் ஆலயக் கோபுரக் 
காட்சியும் மறைந்துஆழ் கடலில் 
கலம்விசைப் படகைக் செலுத்திமீன் பிடிப்போர் 
காவல் நீ காலங்கள் யாவும் 
கடும்புயற் காற்றில் மின்இடி மழையில் 
கலங்கிடும் தருணமே விரைந்து 
கருணையோ டெமெக்கு அபயமே தந்து 
காத்தருள் அடைக்கலம் நீயே” 

என்று பலவாறு பனிமய அன்னையை, கடல் அன்னையோடு இணைத்துப் பாடி, சிந்தாயாத்திரை மாதாவாகச் சிறப்பித்துள்ளனர். 

- அருள்திரு. ஸ்டீபன் கோமஸ் 

ஞானதூதன் இதழ் – ஆகஸ்ட் - 2013 

(இக்கட்டுரையின் ஆசிரியர் தென்கிழக்குக் கடலோர மீனவர்கள் என்று பரதர் அல்லது பரவர் என தற்காலத்தில் அழைக்கப்படும் பரதவர்களைக் குறிக்கிறார்.)

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.