Our Blog

விடிந்தகரை 3.02

அரச மரத்தடி நிழலில் கையில் உலக்கை போன்ற தடி ஒன்றை ஊன்றியபடி கிணற்று திண்டின் மேல் அமர்ந்திருந்தார் பூபாளன் ஆராச்சார் ………………………………….. கங்கனார் பரதவ வர்மனின் மண்டைக்குள் மாமுனி சாமிப் பிள்ளையின் வார்த்தை எதிரோலித்துக் கொண்டேயிருந்தது:(ஆனாலும் புதிய யாகமுறை நாளை செய்வோம். அதுவும் பரதவ இடத்தில் தான். அரச சபை எனக்கு ஆகாது தக்சயா. உன் தரவாட்டுக்கு அரசனை வரச்சொல் குமரி துறையிலே வெள்ளியலிலே இருந்து அவனுக்கு விளக்கம் சொல்கிறேன்,)……… என்றதை நினைக்க நினக்க மாமுனி சாமிப் பிள்ளையின் கட்டளையாகவே பரதவ வர்மனுக்கு தோன்றியது.

வெள்ளியல்... தரவாடு...அரசர் ...சாமிப் பிள்ளை என பலவித நெருக்கடி தாண்டி அரசரும் சித்தரும் சந்திக்க எவ்விடத்தை தேர்ந்தெடுப்பது என கங்கனார் பரதவ வர்மன் குழப்பத்தில் இருந்தார். 1600 களில் கொமரிமொனை இப்படித்தான் காட்சியளித்தது முக்கடல் சூழ முனையில் அமைந்திருந்த கொமரி அம்மச்சா ஆத்தா கோவிலை ஒட்டி கிழக்கு வடக்கு கடலோர மணல் வெளியில் 40,50 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மன்னாரின் மன்னவர்கள் பரதவர்களின் வாழ்விடம் அழிந்து பட்ட நிலையிலிருந்தது.

கடல் உரிமைக்காக போராடி இன அழிவிலிருந்து தப்பிப் பிழைக்க இடம் பெயர்ந்து போன கொமரி பரதவரின் குடுகைகளின் சிதைவும் பாண்டி பரதவ நடுகல்களும் சிதிலமடைந்த சிப்பி சுண்ணாம்பு மணற்கல் குவியலுமாய் விரைவிக் கிடந்தது. அதனையும் தாண்டி மேக்காலே ஓங்கி எழுந்து மணல்மேடுகளில் நடுவே பனைமரக்காடும் சற்று தள்ளி புளியமரக் கூட்டமும் சேர்ந்து அடர்ந்த மேட்டு பூமியாகவே கொமரிமொனை இருந்தது. ஆனாலும் அங்கே அம்மனை தேரேற்றி சுற்றி வந்து கொண்டாடு வதற்காகவே மணல் மேட்டை சீர் திருத்தி அம்மச்சா ஆத்தாளின் பாண்டி பரதவர்கள் அவர் சார்ந்த ஆச்சாரியார்கள் கடும் உழைப்பினால் உருவாக்கிய இரதமும் இரதவீதியும் இருந்தது.

"கல்தேர் ஓட்டிய பரதவர்களுக்கு மணலிலே தேரோட்ட கற்றா கொடுக்க வேண்டும்."

இரத வீதியின் மேற்கே ஆராச்சார் ஆன ஆச்சாரியாரின் கொட்டாரம் முப்பது நாற்பது வருடங்களாக பாழடைந்து கிடந்தது. காரணம் 1544கில் தமது சொந்த பரத இனம் தங்கள் கண்கள் முன்னே கொலையாடப்படுவதை வடுகபடையினரால் கருவருக்கப்படுவதையும் கண்டபின்பும் உதவ முடியாமல் தன் உயிர் காக்க பயந்துபோய் அம்மச்சா கோவிலுக்குள் ஒளிந்து கொண்டார்கள் பரதவ ஆச்சாரிமார்கள்.

அதே நேரம் மதத்தின் பிரதிநிதியாய் இருந்தாலும் மனித நேயத்தின் தலைவனாய் எங்கிருந்தோ வந்த பரங்கிய பாதிரி பரதவ புனிதர் சவேரியார் பரதவ பட்டங்கட்டிமாரோடு படை பலம் கூட்டி கொமரிமொனை வந்தார். கடும் போர் நடத்தி பரதர்களை காப்பாற்றி மணப்பாட்டுக்கு அழைத்து சென்று உடலை தேற்றி பொருளாதாரத்தை தேற்றினார். அப்போது குமரித் துறையிலே கோலோச்சிய கங்கன் இரவிந்திர கங்கனாரின் ஏற்ப்பாட்டால் திருவிதாங்கூர் சமஸ்தானது அரசன் உன்னி கேரள வர்மாவை சந்தித்து கிறித்துவ பரதவர்களுக்கு வடுகரிடமிருந்து பாதுகாப்பு அளிக்க உடன்படிக்கை செய்தார் பரதவ புனிதர் சவேரியார்.

ஆனாலும் உணர்வு ரீதியாக பரதவர்கள் அம்மச்சா ஆத்தாளை கொண்டாட துவங்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் அம்மச்சா கோவிலை அடுத்து இருந்த குடியிருப்புகளை மாற்றி வடக்காலே இரண்டு மூன்று காத தூரங்கள் தள்ளி குமரியிலே ஆறு குடும்பங்களை மட்டும் குடியேற்றினார். அவர்களுக்காகவே புத்தம்புது கிறித்துவ கூரைவேந்த ஆலயத்தை கட்டியேழுப்பி தந்தார். இந்நிலையில் மூதாதையர் வில்லவராயர் கட்டின கோவிலுக்குள் ஒளிந்து கிடந்த ஆச்சாரிமார்கள் எனும் ஆராச்சார்கள்.

ஆத்தாளுக்கு பூசை செய்து பயனென்ன கொண்டாட வேண்டியவர்கள் கொலை வாளுக்கு இரையான பின்னர் கும்பிடுவதற்கு ஆள் ஏது ??? தாங்கள் மட்டும் இருந்து பயனென்ன என பலவாறு நினைத்தப்படி கோவிலை விட்டுவிட்டு ரத வீதியிலே இருந்த தன் கூடகோபுரங்களை விட்டுவிட்டு தூரமாய் கூட்டமாய் இருந்த கடற்புரத்து குடியோடு ஒன்றினைந்து வாழ இடம்பெயர்ந்தனர்.

அதனால்தான் ஆச்சாரிமாரின் மாளிகைகள் பாழடைந்து போனது. அம்மச்சா ஆத்தா கோவிலை ஒட்டி வாழ்ந்த மன்னாரின் மன்னவர்கள் பரதவர்களின் வாழ்விடமும் அழிந்துபட்டும் போனது. இதையெல்லாம் உணர்ந்து அறிந்து தெளிந்து கொண்ட கங்கனார், அரசரது ஒப்புதலோடு ஆச்சாரிமார்களான ஆராச்சார் கொட்டாரத்தை அரசர் மற்றும் பரத முனியின் சந்திப்பிற்காக தேர்ந்தெடுத்தார்.

ஆராச்சார் குடும்பங்கள் அம்மச்சா ஆத்தா கோவிலை விட்டுப் பிரிந்து வந்து பரதவர் குடிகளுக்கு வடமேற்கே உள்ள விளை காடுகளுக்குள் குடியேறி இருந்தனர். ஆராச்சார்களைப் பார்க்க பூட்டிக்கிடக்கும் கொட்டாரத்தை பற்றிய விவரம் அறிய தனது குதிரையின் மேல் ஏறி விரைந்தான் பரதவ வர்மன் கழிந்த நாற்பது ஐம்பது வருடங்களில் ஓரிரு ஆராச்சார் தங்களது பூஜை புனஸ்காரங்களை விட்டுவிட்டு கிருத்துவமதம் தழுவியிருந்தனர் ஆனாலும் அதிகமானோர் இன்னும் தன் இடங்களிலே அடையாளங்களை உருவாக்கி அம்மச்சா ஆத்தாளை வழிபட்டு வந்தனர்.

காலகாலமாக கடல் தொழிலைப் பற்றி அறியாதவர்கள் இப்போது கால்நடைகளை வளர்கவும் அவைகளை தங்கள் காட்டுக்குள் மேய்க்கவும் ஆட்களை வைத்து பயிர் செய்யவும் பழகி இருந்தனர். கங்கனார் அந்த விளைக் காட்டுக்குள் நுழையும்போதே ஆரவாரமாய் இருந்தது ஆங்காங்கே ஆட்டுக் கொட்டடியும் மாட்டுத் தொழுவங்களுமாய் அந்த விளைக் காட்டில் நிரம்பி இருந்தது.

வேலையாட்கள் அங்குமிங்குமாக சுறுசுறுப்பாக பணியாற்ற அவர்களை அதட்டி உருட்டி வேலை வாங்கியபடி அரச மரத்தடி நிழலில் கையில் உலக்கை போன்ற தடியை ஒன்றை ஊன்றியபடி கிணற்று திண்டின் மேல் அமர்ந்திருந்தார் முதியவர் ஒருவர். முதியவரை கண்டதுமே இவர்தான் தான் தேடி வந்த பூபாளன் ஆராச்சார் என்பதை உணர்ந்துகொண்ட பரதவவர்மன், குதிரையிலிருந்து கீழே இறங்கி உடனடியாக அவரை மண்டியிட்டு வணங்க, யாரது கங்கனா என முதியவர் கேட்க, நொடியில் மருண்டு போனான் பரதவ வர்மன்.

போத்தி நல்லா இருக்கீளா!

எப்படி கண்டுபிடிச்சீங்க நான்தான் கங்கனார் என்று இதுவரை நீங்க என்னை பார்த்தது கூட இல்லையே என ஆச்சரியமாய் கேட்க.... 

அதான் கங்காதேவியை கொண்டையில வைச்சி வழியவிட்டு இருக்கியே மாப்பிள என உரிமையோடு பேரனை கிண்டல் அடித்தார். புரியாது கங்கனார் பரதவ வர்மன் விழிக்க பூபாளன் ஆராச்சார் இப்படி சொன்னார். மாப்பிள உங்களுக்கு இந்த கொண்டையும் வாளும் அரச முத்திரை மோதிரமும் அடையாளங்கள் எங்களுக்கு பூணூலும் கொண்டையும் கையில் உள்ள இந்தக் கோலும் அடையாளங்கள், முதியவர் சொல்லச்சொல்ல பரதவரின் ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு அடையாளங்களா? ஆச்சரியப்பட்டுப் போனார் பரதவ வர்மன்.

அதன்பின்னர் பரஸ்பர குடும்ப நல விசாரிப்பு உரையாடல் முடிய பரதவ வர்மன் தான் வந்த நோக்கத்தை எடுத்துக்கூற கோபாவேசத்துடன் மடைதிறந்த வெள்ளமாய் சீறிப்பாய்ந்தார் பூபாளன் ஆராச்சார். கங்கனாரை…. பரதவ வர்மனை….பூபாளன் ஆராச்சார் சீராட்டினாரா...? சினப்பட்டாரா...? இல்லை சிறைப் பிடித்தாரா...? பார்ப்போம்

உங்களைப் போல் பதட்டத்துடன் 
…….கடல் புரத்தான்……….

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.