Our Blog

கடல் கடந்த வாணியர்

வரலாற்றுக் காலம் தொட்டு தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மேற்குத் தேசங்களோடும் கிழக்கு தேசங்களோடும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள். வாணிக சங்கம் வைத்தும் மற்ற தேசங்களுடன் உறவுகளை பேணியுள்ளனர்.

பல்லவர்களுடைய ஆதிக்கப் வளர்ச்சியின் ஒரு முக்கிய விளைவு கடல் வணிகம் முன்னேற்றம் அடைந்து வணிகக் குழுக்கள் நடமாட்டம் வங்காள விரிகுடாவில் தெனிந்தியாவுக்கும், தென் கிழக்காசியாவுக்கும் இடையில் பெருகியமையாகும். இதன் ஒரு கூறாக இலங்கையுடன் நடைபெற்ற வணிகம் அமைந்தது. இலங்கையில் தமிழ் இனக் குழு மேலும் வலுப் பெறுவதற்கு உதவிய காரணங்களில் ஒன்று

ஐந்தாம் நூற்றாண்டின் பின்னர் பல்லவப் பேரரசு எழுச்சி பெறத் தொடங்கியதும் தமிழ்நாட்டின் கடல் கடந்த வர்த்தகம் செழுப்புற்றது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளாகத் தென்கிழக்காசிய வர்த்தகத்தில் தமிழ்நாட்டு வர்த்தகர் முக்கிய பங்கெடுத்தனர். அவர்கள் செயல்களால் வர்த்தகம் வளர்ச்சியுற்றது மட்டுமன்றித் தென் கிழக்காசியாவிலும், இலங்கைலும் பல்லவர் பண்பாட்டுக் கூறுகளும், பவுத்த சைவ சமயங்களின் செல்வாக்கும் பரவின.

ஆறாம் நூற்றாண்டிலிருந்து கவனிக்கக் கூடிய ஒரு விடயமாக வணிகக் குழுக்களின் வளர்ச்சி அமைகின்றது. பல்லவ அரசின் எழுச்சி கடல் கடந்த வர்த்தகத்துக்குத் துணையாக இருந்த சூழ்நிலையில் வணிகக் பெருமக்கள் தமிழ் நாட்டுத் துறைகளில் இருந்தும் இலங்கைக்கும், தென்கிழக்காசியாவிற்க்கும் கூடுதலாகச் செல்லும் அளவுக்கு வலுப் பெற்றனர். இதனை வெளிப்படுத்தும் தொல்லியல் சன்றுகள் தமிழ் நாடு, இலங்கை மற்றும் தென்கிழக்காசிய நாடுகளாகிய தாய்லாந்து, வியட்நாம் அகிய இடங்களில் கிடைத்துள்ளன.

இவ்விடங்களில் தென்னிந்திய வணிகக் குழுக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் பவுத்த சங்கத்தார், பிராமணர்கள் மற்றும் சிற்பிகள் ஆகியோரும் பங்கு கொண்டனர். கிழக்குக்கரைத் துறைகள் குறிப்பாக நாகபட்டினம், மாமல்லபுரமும் வங்காள விரிகுடாவுக்கு அப்பால் கிழக்கு இலங்கயின் துறைகளாகிய பல்லவ வங்கம், திருகோணமலை ஆகிய துறைகளுடன் தென் கிழக்காசியாவில் தாய்வான் தங்குவா பா, வியட்நாமின் ஒகியோ ஆகிய துறைகளுடனும் வர்த்தக மார்க்கங்களால் தொடுக்கப்பட்டிருந்தன.

பல்லவ ஆதிக்கத்தின் ஒரு கூறாக மன்னர் பெயர்கள் பல அரசுகளில் பல்லவ மன்னர் பெயர்கள் போன்று வர்மன் என்ற இறுதிச் சொல்லைக் கொண்டிருந்தன. தென்கிழக்காசிய அரசுகளில் இந்திரவர்மன், ஜயவர்மன் ஈசானவர்மன், யசோவர்மன், பூர்ணவர்மன் போன்ற பெயர்கள் ஐந்தாம் நூற்றாண்டில் பரவலாக வழங்கின.

ஒன்பதாம் நூற்றாண்டில் மணிக்கிராமத்தவர் தாய்லாந்தின் தக்குவாபா என்னும் துறையில் பல வகைப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதற்கு அவ்விடத்தில் கிடைத்த தமிழ் கல்வெட்டு ஒன்று சான்று பகருகின்றது. இதே நூற்றாண்டில் இவ்வணிகக்குழுக்கள் கேரளக் கரையோரத்திலும் பல முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

சோழராட்சியின் போது ஐந்நூற்றுவர் என்னும் வணிகக் குழுவினர் முக்கியமானவர்கள். இவர்கள் தொடர்ந்தும் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை செல்வாக்குப் பெற்றிருந்தனர். பல இடங்களில் எறிவீர பட்டணம் என்ற நிறுவனங்களையும், வர்த்தக மையங்களையும் நிறுவினர்

இந்த வணிக குழுக்கள் பற்றி ஆவணங்கள் ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக தெனிந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. பத்தாம் நூற்றாண்டில் இலங்கையில் உள்ளூர்ப் பகுதியாகிய மகியங்கனைக்கு அருகாமையில் ஹோபிடிகம என்ற இடத்தில் மணிக்கிராமத்தவர் வர்த்தகம் நடத்தினர் என்பதற்க்குக் கல்வெட்டுச் சான்றுண்டு. இப்படியான உள்ளூர் வர்த்தக மையம் ஒன்றில் தம் முயற்சிகளில் ஈடுபட்ட மணிக்கிராமத்தவர் முதலில் கரையோர மையங்களாகிய திருகோணமலை, மாதோட்டம் போன்ற இடங்களில் தங்கள் நிலையங்களை நிறுவியிருப்பர்.

லஞ்சியர், நானா தேசிகன், நகரம், வைசிய வாணியர், நகரத்தார், வைசியர், செட்டியார், மணிகிராமம் நானா தேசிய திரையாயிரத்து ஐந்நூற்றுனர். முதலிய பெயர்களில் வணிக சங்கள் பணியாற்றின. இவைகளை போலவே குதிரை செட்டிகள் சங்கம், சாலியர் சங்கம் என சில சங்களும் இருந்தன. குதிரைச் செட்டிகள் மலைநாட்டில் இருந்து வந்தவர்களாம். கி.பி 13-ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த மார்க்கொபோலொ என்ற மேலை நாட்டார், ஒருவகை வணிகரைப்பற்றி பின்வருமாறு வியந்து கூறுகின்றார். “இவ் வணிகர்கள் பொய்யுரையாதவர்; களவு செய்யாதவர்; அடுத்தவரை கெடுக்காதவர்; குடியும் இறைச்சியும் உட்கொள்ளாதவர்; தூய வாழ்க்கை நடத்துபவர்; பூணூல் அணிபவர்; உருவ வழிப்பாடு செய்பவர்; சகுணம் பார்ப்பவர்” என்று. திருமாணிக்கவாசகருக்காக வந்த குதிரைகள் மலைநாட்டில் (சேர நாடு) இருந்து வந்தது என வரலாறு கூறிகிறது.

தமிழர்களின் சரித்திர குறிப்புக்க‌ளை குறித்து வைக்காமை ஒரு மாபெரும் குறையாகவே உள்ளது. வைத்த குறிப்புக்களை பாதுக்காக்காமை இன்னொரு குறையாகவே தெரிகிறது. தமிழர்களின் சாதனை சரித்திரம் மறைக்கப்ப‌டுவதற்கும், மறுக்கப்படுவதற்கும் இதுவும் ஒரு காரணம்.

- J.K.சந்தோஷ் செட்டியார்
நன்றி : www.vaniyartv.wordpress.com

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.