Our Blog

மீதப்பட்ட சமுதாயம்

முத்துக்குளித்துறையில் மாத்திரம் அதன் கத்தோலிக்கர்களின் மக்கட்தொகைப் பெருக்க விகிதம் கடந்த நான்கரை நூற்றாண்டு காலம் குறைவாகக் காணப்படுவதன் காரணிகளைக் தேடுமுன் போர்த்துகீசியர் வரலாற்றையும், வாழ்வியலையும், ஆட்சிமுறைகளையும் சிறிது மனதில் கொள்ள வேண்டும். 

1. மூர் இனத்தவருக்கும், இஸ்பானியருக்கும் சில நூற்றாண்டுகள் போர்த்துகல் அடிமைப்பட்டுக் கிடந்தது. போர்த்துகீசியரோடு இனக்கலப்பு ஏற்பட்டதால் அது ஒரு பிரச்சனையாகக் கருதப்படாத மனநிலையில் ஆட்சி நடந்தது. 

2. விடுதலையடைந்து தலைநிமிர்ந்த போர்த்துகல் நாட்டிற்கும் திருச்சபைக்கும் இருந்த உறவின் காரணமாக திருத்தந்தை கி.பி. 1442 ஆம் ஆண்டு Jus Patranus என்ற ஆணையையும் (Papal Bull) கி. பி 1452 இல் Dum Diverse என்ற ஆணையையும் வழங்கி இருந்தார். ஆகவே மறைபரப்புதல், திருச்சபைக்கு பக்கபலமாய் இருத்தல், மறை பரப்பாளர்களுக்கு ஆதரவும், பராமரிப்பும் அளித்தல் போன்ற போன்ற சில உரிமைகளும், கடமைகளும் போர்த்துகலுக்கு இருந்தது.

3. கி.பி.1498 இல் இந்தியாவுக்கு புதிய ஒரு கடல் வழித் தடத்தை கண்டறிந்தபின் 16 ஆம் நூற்றாண்டு முதல் புதிதாக காலுன்றிய நாடுகளில் பணியாற்ற ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ நான்காயிரம் Soldados என்றழைக்கப்பட்ட மணமாகாத இளைஞர்கள் அனுப்பப்பட்டனர். அவாறு அனுப்பப்பட்டவர்கள் பணிமுடிந்து தாய்நாடு திரும்புவது நிச்சயமில்லாத சூழ்நிலை. எனவே அவர்களுக்கு இரண்டே வழிவகைதான் இருந்தன. ஒன்று வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரிகளாக வாழ்ந்து சென்ற இடத்திலேயே மடிவது, அல்லது சுதேசப் பெண்களோடு உறவு  வைத்துக் கொள்வது. அநேகர் இரண்டாவது முறையையே பின்பற்றினர்.

4. முதலில் கப்பித்தான் ஜெனரலாகவும் பிறகு Estada da India Portuguesa வின் கவர்னராகவும் பொறுப்பேற்ற Afonso de Albuquerque போர்த்துகேய காலனி ஆதிக்கத்தை விரிவாக்கி நிரந்தரப்படுத்தவும் கீழ்க்கண்ட சில கொள்கை வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தார்.

5. Politica dos Casamentos என்னும் ஒரு கொள்கையை நடைமுறைப் படுத்தினார். அதாவது சுதேச பெண்களோடு போர்த்துக்கீசியர் வைத்திருந்த உறவை செம்மைப்படுத்தி சுதேச பெண்களையே திருச்சபை சட்டப்படி மணமுடித்து வாழ்வது. அதனால் Luso Indians என்ற கலப்பின சந்ததியர் போர்த்துகீசியரின் காலணிகள் நிலைத்து நிற்க அடித்தளமாக அமைவார்கள் என எண்ணினார்.

6. போர்த்துக்கல் காலூன்றிய இடங்களில் எல்லாம் சுதேசிகளை கத்தோலிக்கராக மதம் மாற்றி கூடிய மட்டும் அவர்கள் கலாச்சாரத்தையும், மொழியையும் புகுத்தி தங்கள் காலனித்துவ ஆதிக்கத்துக்கு அடித்தளமான ஒரு வலுவான சுதேச சமுதாயத்தை எழுப்புவது (அதற்கென Escola என்ற பள்ளிகூடங்களை நடத்துவது)

7. தேவைபட்டால் சுதேச கத்தோலிக்கர் உட்பட போர்த்துகல் குடிகளை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுபோய் குடியமர்த்துவது.

Aleixo de Menezes, Arch Bishop of Goa.
அல்பகுவர்க்குக்கு பின் வந்தவர்களும் அதே கொள்கைகளையே பின்பற்றினர். போர்த்துகல் காலனிகளின் கவர்னராக கோவா பேராயர் வண. அலேக்சியோ டி மெசிங் (PFrei Alexio de Menezes, Arch Bishop of Goa) 1606 மே திங்கள் 3 ஆம் தேதி முதல் 1609 மே திங்கள் 28 ஆம் நாள் வரை பொறுப்பிலிருந்த போது கத்தோலிக்க பரதர் அனைவரையும் ஒட்டு மொத்தமாக இலங்கையில் குடியமர்த்தும் ஒரு திட்டத்தைப் போர்த்துகல் அரசருக்கு பரிந்துரைத்தார். அரசரின் அனுமதியோடு கொச்சி ஆயர் மேற்பார்வையில் ஓராயிரம் பரதர் குடும்பங்கள் இலங்கையில் நீர்கொழும்பு என்ற இடத்தில் குடியமர்த்தப்பட்டனர். லிஸ்பன் ஆவணக் காப்பகத்தில் A Bulhao de Pati ed. Documentos Remittidos da India ou Livres dos Maneres PP 58 and 161-131 ஆகியவற்றின் பதிவுகளை முனைவர் பெட்ரிக் ஏ. ரோச் என்பார் தனது கள ஆய்வறிக்கையில் வெளியிட்டிருக்கிறார். (vide Fishermen of Coromandel - a social study of the Paravas - by Patrick A.Roche. First published 1984pp47-48) அதைத் தொடர்ந்து மட்டகளப்பு, மன்னார், சிலாவம் போன்ற இடங்களிலும் மற்ற இலங்கை கடலோரங்களிலும் குடியேறிய தடங்கள் தெரிகிறது. காரணம் சிங்கள கத்தோலிக்கரில் Patabendi, Patabendi - Arachchi ஆகிய பெயர் கொண்ட குடும்பங்கள் காணக் கிடைக்கின்றன. (The title Patangatim is from the Tamil Paddankaddi. It is allied to the Sinhalese Patabendi in the term Patabendi-arachchi, a rank generally held by  fishers. One of the duties of a Pattangatyu would seen to have been the collection of the market rents. The word is also applied in this to certain natives in authority at the Pearl fisheries. Notes to Memoir of Hendrick Becher 1716 Colombo 1914 p.48)

பண்டைய திருவதாங்கூர்  சமஸ்தானத்தில் பதினான்கு ஊர்களில் பரதகுல கிறிஸ்தவர்கள் குடியமர்த்தப்பட்டனர். அவர்களில் இன்னும் பூந்துறை, மூதாக்கரை போன்ற இடங்களில் வாழ்கின்றனர். போர்த்துகேய கலப்பினத்தார் தங்கசேரி, அஞ்சுதெங்கு, கொச்சி போன்ற இடங்களில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. (The Portuguese in Malabar - a Social History of Luso Indians by Charles Dias 2018).

எனவே நாம் இன்று முத்துக்குளித்துறை ஊர்களில் காணும் பரதவ கத்தோலிக்கர்கள் மீதப்பட்ட (Residual Community) சமுதாயம் என்றால் தவறில்லை.

- செல்வராஜ் மிரண்டா 

நன்றி: பனிமயம் இதழ்
மே - 2018  

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.