Our Blog

விடிந்தகரை 2.05

அயோத்தி பாண்டவனுக்கு அழிவு வருமோ….?

அலைகடல் பாண்டியனுக்கு முடிவு வருமோ……?

குமரியின் தெற்கே தொடுவானம் வரைக்கும் ஆழியில் அமிழ்ந்து போன ஊழிக் காலத்து பாண்டியரின் தீரம் [நீர் பரப்பு] அது அங்கிருந்து வந்த கொண்டல் எனும் {இலக்கியத்தில் தென்றல் ஆக வர்ணிக்கப்பட்ட தென் துறைக் காற்று} ஒப்பில்லா உப்பு காற்று உடலை தழுவி உசுப்பிய போதுதான் திருவணைபாறையில் இருப்பதை கண்டு அதிர்ந்து சிலிர்த்து நிஜத்திற்க்கு திரும்பினார் கங்கன் பரதவர்மன்.

நேற்று இரவு திருவிதாங்கூர் அரசர் வீர ரவி வர்ம குலசேகர பெருமாள் அவர்களை கண்டுவிட்டு வீடு திரும்பிய கங்கனார். சுருட்டு புகை மூட்டத்திலே திண்ணையோடு திண்ணையாய் ஒண்டியிருந்த பரதவ உவரி முனியை கண்ட ஞாபகம். இப்போது கீழ் திசையில் தூரத்து முகில் கிழித்து முன்னவன் வரப்போகும் முன்வைகறை நேர வெளிச்சத்தில் முனியோடு இருக்கிறோம் அதுவும் சுற்றுத் திசையெங்கும் ஆர்பரித்தாடும் கடலின் அலையின் நுரையில் மிதப்பதாய் மாயை தரும் திருவணை பாறைகளின் முதுகிலே இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டார் கங்கன் பரதவர்மன்.

முன்னீர் சூழ் முதுகுடி திருவணை பாறைகளின் முதுகிலே அங்கும் இங்குமாய் நடந்தோடி, தத்தி தாவி அல்லாடி, நேரெதிரே கரையிருக்கும் தன் ஆத்தாளை பாத்து, பாத்து, நினைத்து, நினைத்து பரிதவித்து ஏதேதோ தனக்கு தானே பாடி கொண்டிருந்தார் பரத மாமுனி. வைகறை அலைகள் தங்களுக்குள் அளாவாடிக் கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக பூட்டிய கிழக்கு வாசல் கதவுகளுக்கு பின்னால் தனித்து கிடக்கும் அம்மச்சாவை வணங்கி வணங்கி அடித்து அடித்து அழுது கொண்டிருப்பதாகவே தோன்றியது பரதவ மாமுனிக்கு.

அதே நடுநிசி வேளையிலும் குமரி துறையிலே பட்டபகல் போல கிராமமே திரண்டு கங்கனார் வீட்டு முன்பு தீவட்டிகளோடு குழுமி நிரம்பி இருந்தது. ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்துக்கேற்றபடி புதுபுது கதைகளை விவரித்து கொண்டிருந்தார். வேறோன்றுமில்லை கங்கனாரை உவரி முனி தூக்கிட்டு போச்சு என்பதுதான் அது. கங்கனாரின் அருமை மனைவி மரியம்மா சித்த பிரமை பிடித்தவளாய் ஒரு ஓரத்தில் புலம்பி கிடக்க கங்கனாரின் ஆத்தாளின் ஓலம்தான் அனைவரையும் கதிகலங்க செய்து கொண்டிருந்தது.

இங்கோ…..?

திருவணை பாறையில் சித்தர் மாமுனியின் ஒப்பாரி அலைகடலின் ஓசையையும் மிஞ்சி நின்றது. ஊழிகாலமாய் உடன்வந்த தொல்பாண்டி பரதகுலத்து ஆத்தாளை அம்மச்சாவை அடைத்து போட்டு விட்டு ஆளாளுக்கு போய் விட்டார்களே…..? ஆத்தாளின் சாபம் வருமோ?? அதனாலே அயோத்தி பாண்டவனுக்கு அழிவு வருமோ….? அலைகடல் பாண்டியனுக்கு முடிவு வருமோ……? என திக்கித் திணறி, முக்கி, முனகி வார்த்தைகள் அழுகை குரலாய் மாறி வெடிக்க. நிலமையை உணர்த்த கங்கன் அவரது கவனத்தை திருப்ப புலம்பலை நிறுத்த நீண்ட நாட்களாக தனது மனதுக்குள் கொட்டி கிடந்த விரக்தியை வெளிபடுத்தி பரதவ மாமுனியின் திருவாய் மூலம் விமோசனம் கிடைக்காதா…! என  நினைத்தபடி கங்கன் பரதவ வர்மன், கடல் இரைச்சலையும் தாண்டி மாமுனியை நோக்கி இரைந்து கேட்டான்.

ஐயரே !

அன்பின் உருவான தொல் பாண்டி பரதவ குலத்தாய் அம்மச்சா ஆத்தா அவ பிள்ளைகள் நம்மள வதைப்பாளா? ஆனாலும் சாமி அவ பிள்ளைகள் இங்கேதானேஇந்த திருவணைப் பாறைகளில் தானே மாதக்கணக்கிலே பட்டினி கிடந்து செத்தார்கள். அடுத்தவனெல்லாம் வந்து அவ பிள்ளைகள நம்ம அண்ணன் தம்பி மாமன் மச்சினன் சித்தப்பனயெல்லாம் வெட்டி வெட்டிக் கொன்னார்களே... அத்தனையையும் அம்மச்சா ஆத்தா பாத்துதானே இருப்பா எனக்கும் எங்களுக்கும் புரியாத கேள்விக்கு பதில் என்ன மாமுனி என பவ்வியமாக கேட்டு பதிலுக்காக கங்கனார் காத்திருந்தார்.

குரல் வந்த திசை நோக்கி திரும்பிய மாமுனி திடுக்கிட்டபடி, நீயும் இங்கேதான் இருக்கிறாயா தக்சயா. மன கிலேசனத்தில் மயங்கி விட்டேன். உன்னையும் நானே எடுத்து வந்ததையும் மறந்து விட்டேன். என்ன சொன்னாய் தக்சயா? என கண்களை துடைத்தபடி கண துளி பொறுப்பாயாக என்றார். எப்போதாவது தன்னை உயர்வு படுத்த முனி இப்படி தக்சயா என அழைப்பது வழக்கம். தான் கேட்ட கேள்விக்கான அங்கீகாரம் தான் தக்சயா என்ற அழைப்பு என்பதை கண நேரத்தில் உணர்ந்த கங்கன்.

அவரது பதிலை எதிர்பார்த்து இருட்டிலே காத்திருக்க. எதிரே இருந்த பாறையின் மேல் வந்து அமர்ந்த உவரி மாமுனி. கொண்டையிலிருந்து எடுத்த சுருட்டை உதடுகளுக்கு சொருகி பற்ற வைத்தார். எங்கிருந்து எப்படி வந்தது தீ இருட்டிலே கங்கனுக்கு புலப்படவில்லை. நீண்ட ஒரு பெரும் இழுப்பு இழுத்து ஊதிய புகையால் பனி கூட்டம் போல் திருவணை பாறை புகையால் சூழப்பட்டது. சித்தர் உவரி மாமுனி கங்கனாரின் கண்களுக்கு தெரியவில்லை. 

தன்னை திருவணையில் விட்டு விட்டு மாயமாய் போனாரோ என எண்ணியபடி மேற்க்கே பார்க்க முப்பது நாப்பது ஆண்டுகளாய் அடைத்து வைக்கப்பட்ட‌ அம்மச்சா கோவில் கிழக்கு வாசல் கதவுகள் திறந்து கிடந்தன.


உங்களைப் போல் ஆவலுடன் உங்கள்

......கடல் புரத்தான்.......

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.