Our Blog

பழந்தமிழாட்சி - நீர்ப் போக்குவரத்து

 பஃறுளியாறு முழுகு முன்னரே, கிழக்கில்சாவகம் மலையா காழகம் (பர்மா) சீனம் முதலிய தேசங்களுடனும், மேற்கில் அரபியா பாபிலோனியா கல்தேயா முதலிய தேசங்களுடனும், தமிழகம் வணிகஞ் செய்து வந்தது.

சீனக்கண்ணாடி, சீனக்காரம், சீனக்கிண்ணம், சீனச்சூடன், சீனப்பட்டு முதலிய பண்டங்கள் சீனத்தினின்றும் இலவங்கப் பட்டை, கிராம்பூ, சாதிக்காய், சாதிப்பத்திரி முதலிய சரக்குகள் நாகநாடுகள் என்னும் கீழிந்தியத் தீவுக் கூட்டத்தினின்றும்,1 தமிழரசரின் நால்வகைப் படைகளுள் ஒன்றான குதிரைப்படைக்கு வேண்டுங் குதிரைகள் அரபியாவினின்றும், சித்திரப்பேழை, பாவைவிளக்கு, மது முதலிய பொருள்கள் யவன நாடுகளினின்றும் தமிழகத்திற்குக் கலங்களில் வந்திறங்கின.

தேக்கு, தோகை (மயில்), அரிசி, அகில், சந்தனம், இஞ்சி, கொட்டை (பஞ்சுச் சுருள்), வெற்றிலை, அடைக்காய் (பாக்கு) முதலிய பல பொருள்கட்குத் தமிழ்ப் பெயர்களே மேலை மொழிகளில் வழங்குவது, பழந்தமிழ் நாட்டு ஏற்றுமதிச் சிறப்பைக் காட்டும்.

கல்தேயா நாட்டைச் சேர்ந்த ஊர் என்னும் இடத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஒரு தமிழ்நாட்டுத் தேக்க வுத்தரம், கி.மு. 3000 ஆண்டுகட்கு முற்பட்டதாகக் கருதப்படுகின்றது. கி.மு. 1000 ஆண்டு கட்கு முற்பட்ட சாலோமோன் என்னும் யூதவரசன் காலத்தில் தமிழகத்தினின்று யூதேயாவிற்கு ஏற்றுமதியான தோகையின் பெயர் யூத மொழியான எபிரேயத்தில் துகி என வழங்கி வந்தது.

கடல்வாணிகத்தைப் பெருக்குதற்பொருட்டு, கி.மு. 55-ல் பாண்டியன் ரோமவரசனுக்கும், கி.பி. 1015-ல் முதலாம் இராச ராசனும், கி.பி. 1015-ல் இராசேந்திரனும் கி.பி. 1077-ல் முதற் குலோத் துங்கனும் சீனவரசனுக்கும் தூது விடுத்தனர்.

முத்தமிழ் நாட்டுக் கடற்கரையிலும், ஒரு காலத்திற்கு ஒன்றும் பலவுமாக, வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு துறைமுகங்கள் அமைந்திருந்தன. சோழநாட்டிற்கு மயிலை, மல்லை, புகார், காரைக்கால், நாகை, தொண்டி முதலியனவும்; பாண்டிநாட்டிற்குக் கவாடம், கொற்கை, காயல் முதலியனவும்; சேரநாட்டிற்கு வஞ்சி, முசிறி, தொண்டி, மாந்தை, நறவூர், கொடுங்கோளூர், காந்தளூர், விழிஞம், கோழிக்கோடு2 முதலியனவும் துறைநகர்களாய் இருந்து வந்தன.

துறைமுகந்தோறும் கலங்கரை விளக்கம் (Light House) இருந்தது. புகார், கவாடம், வஞ்சி போன்ற தலைமை அல்லது கோநகர்த் துறைமுகங்களில், பல்வேறு நாட்டுக் கலங்கள் பல்வகைப் பண்டங்களை நாள்தோறும் ஏற்றுவதும், இறக்குவதுமாயிருந்தன. ஏற்றுமதியும் இறக்குமதியுமான அளவிடப்படாத பண்டப் பொதிகள். ஆயத்திற்காக நிறுக்கப்பட்டு அவ்வத் தமிழ்நாட்டரச முத்திரை பொறிக்கப்பட்டபின், துறைமுகத்தைவிட்டு நீங்கும்வரை சிறந்த காவல்செய்யப்பட்டிருந்தன. அணியவும் சேயவுமான பல்வேறு நாட்டிலிருந்து வந்த புலம்பெயர் மாக்கள் தங்குவதற்கு, வசதியான சேரிகளும் விடுதிகளும் இருந்தன. தமிழகக் கீழ்கடற் கரையில் நாகநாட்டார் குமரி முதல் வங்கம்வரை பல நகரங்களில் வந்து தங்கியிருந்தமையால், அவை நாகர்கோயில், நாகப்பட்டினம், நாகூர், நாகபுரி எனப் பெயர் பெற்றன. மீன் பிடிக்கும் கட்டுமரம் முதல் குதிரைப் படையேற்றத் தக்க நாவாய்வரை பலதரப்பட்ட மரக்கலங்கள் தமிழ்நாட்டு வணிகர்க்குச் சொந்தமாயிருந்தன. ஏலேலசிங்கன், கோவலன் முன்னோர், பட்டினத்தார் என்னும் திருவெண்காடர் முதலியோர் பெருங்கல வணிகராவர். "ஏலேல சிங்கன் கப்பல் ஏழுகடல் சென்றாலும் மீளும்" என்பது பழமொழி யாகும்.

சேரன் செங்குட்டுவன் "கடற்கடம் பெறிந்த காவலன்" என்றும், "கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்" என்றும் புகழப் பெறுவதால் அக்காலத்தரசர் பகைவராலும் கடற்கொள்ளைக்காரராலும் விளைக்கப்படும் தீங்குகளைப் போக்கிக் கடல் வணிகத்தைக் காத்தமை ஊகிக்கப்படும். பீலிவளை நாகநாட்டினின்று புகார் வந்து மீளவும், மணிமேகலை ஈழத்திற்கும் சாவகத்திற்கும் சென்று மீளவும், வசதியும் பாதுகாவலுமான மரக்கலப் போக்குவரத்து அக்காலத்திருந்தது.


"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியுங் 
காலின் வந்த கருங்கறி மூடையும் 
வடமலைப் பிறந்த மணியும் பொன்னுங் 
குடமலைப் பிறந்த வாரமு மகிலுந் 
தென்கடல் முத்துங் குணகடற் றுகிருங் 
கங்கை வாரியுங் காவிரிப் பயனு 
மீழத் துணவுங் காழகத் தாக்கமு 
மரியவும் பெரியவு நெரிய வீண்டி" (185-192)

என்னும் பட்டினப்பாலைப் பகுதியால், புகாருக்கு வந்து சேர்ந்த இருவகை வணிகப் பொருட்பெருக்கை ஒருவாறுணரலாம்.


1. "நீல நாக னல்கிய கலிங்கம்" என்னும் சிறுபாணாற்றுப்படை யடியால்(96), நாகநாட்டினின்று, ஒருவகை யாடையும் இறக்குமதியானதாகத் தெரிகின்றது. நீல நாகன் என்பது நாகருள் ஒரு பிரிவாகும். நல்கிய என்னும் பாடம் சரியன்று.

2. கோழிக்கோட்டில் ஏற்றுமதியான துணியே பிற்காலத்தில் அத் துறைமுகப் பெயரின் ஆங்கில வடிவமான கலிக்கட்(Calicut ) என்பதிலிருந்து திரிக்கப்பட்ட கலிக்கோ ( Calico ) என்னும் சொல்லால் குறிக்கப்பட்டது.


நன்றி: www.tamilvu.org

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.