Our Blog

திரிசடைத் தீவு - 2


மறுநாள் டக்ளஸ் தன்னிடமிருந்த வானியல் வரைபடங்களைக் கொண்டு காற்றடிக் காலம் துவங்குவதற்கு எவ்வளவு நாட்கள் இருக்கிறது என்று கணித்தான். எழுபத்திமூன்று நாட்கள் மீதமிருந்தன. அதுவரை காத்திருக்க வேண்டியதுதான் என்றபடியே அவனும் தீவுவாசிகளைப் போலவே பகலில் மரநிழலில் படுத்துக் கிடக்கத் துவங்கினான். ஆனால் அவனது துப்பாக்கி வீரர்களால் அப்படியிருக்க முடியவில்லை. தன்னோடு பேச மறுப்பவர்களுடன் சண்டையிடவும் சிலவேளைகளில் அவர்களைத் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தவும் முயற்சித்தார்கள். ஒரு துப்பாக்கி வீரன் பட்டங்கட்டி வீட்டுப் பெண் ஒருத்தியின் உதடை அறுத்து எடுத்து விட்டதுகூட நடந்தேறியது. டக்ளஸ் கடலைப் பார்த்தபடியே இருந்தான். கடல், உலகின் ஆதி நிகழ்வுகளின் சாட்சிபோலவே தோன்றியது. கடல் எவ்வளவு மனிதர்களைக் கண்டிருக்கும். எவ்வளவு மாற்றங்களை உள் வாங்கியிருக்கும்.

கடலைப் பார்த்துக் கொண்டேயிருப்பது துப்பாக்கி வீரர்களுக்குச் சித்ரவதை தருவதாக இருந்தது. ஆரம்ப நாட்களில் தங்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டிருந்த துப்பாக்கி வீரர்கள் மெல்ல அதைத் தவிர்க்கத் துவங்கினார்கள். சமையற்காரன் தன்னையே வேறு ஆளாக நினைத்துக் கொண்டு பேசிக் கொள்பவனாகிப் போனான். மற்றவர்கள் அந்தத் தீவில் உள்ள மரம் செடிகளின் இலைகளோ அல்லது பறக்கும் வண்டுகளில் ஏதோவொன்று தங்களுடன் பேசினால் கூடப் போதும் என்பது போன்ற தீவிர மனநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தீவுவாசிகளுக்குக் கிடைப்பது போன்ற மீன்கள் தங்களுக்கு ஏன் கிடைப்பதில்லை என்று அவர்களுடன் சண்டையிட்டார்கள். எதைச் சாப்பிட்ட போதும் நாவில் ஒரே ருசியாக ஏன் இருக்கிறது என்று அவர்களுக்குப் புரியவேயில்லை.

டக்ளஸ் ஒவ்வொரு நாளும் அந்தத் தீவுவாசிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்தபடியே இருந்தான். ஆரம்ப நாட்களில் தொடர்பற்றது போல தெரிந்த பல விஷயங்கள் பிரமாதமான ஒழுங்கு ஒன்றின் வரிசையில் செயல்படுவதை அவன் உணரத் துவங்கினான். அந்தத் தீவு வாழ்க்கை பகலில் செயலற்றது போல தெரிந்தாலும் நூற்றுக்கணக்கான செயல்களால் பின்னப்பட்டிருந்தது அவனுக்குப் புரிந்தது. அலைகளை அவதானிப்பது, படகில் செல்வது, மீன்பிடிப்பது, சங்கு அறுப்பது, பிரார்த்தனை செய்வது, மழைக்காலத்திற்கான நெருப்பிற்கு வேண்டி காய்ந்த விறகுகளைச் சேகரிப்பது, கடினமான மீன் எலும்புகளை அறுத்து கத்தி செய்வது என்று அங்கே ஒரு தினசரி வாழ்க்கை எளிமையாக நடந்தேறிக் கொண்டிருந்தது.

காற்றடிக் காலம் துவங்கப் போகிறது என்பதை ஒரு மாலைநேரத்தின் ஓயாத கடல் அலையின் எழுச்சி காட்டித் தந்தது. அது போன்று உயரமாக அலைகள் சீறுவதை அதன் முன்பு அவன் கண்டதேயில்லை. அலைகள் சீறும்பாம்பின் நாக்கு போல துடித்துக் கொண்டேயிருந்தன. அலை வேகம் கண்டு மணலில் முளைத்த சிறுசெடிகள் கூட வேக வேகமாக நடுங்கிக் கொண்டிருந்தன. அன்றிரவு காற்று விசை கொள்ளத் துவங்கியது. பெருந்துயரம் ஒன்றின் ஆவேசமான கதறல் போன்று காற்றின் ஊளையிடும் சப்தம் உயர்ந்து கொண்டேயிருந்தது. அது கட்டுக்கடங்காமல் ஆவேசமாகி மொத்த தீவையே பிடுங்கி எறிந்துவிடுவது போலிருந்தது. டக்ளஸின் கூடாரத்தைக் காற்று பிடுங்கி வீசியது. மணலை வாரி அடித்தது. துப்பாக்கி வீரர்கள் தனியே நடப்பதற்குக் கூட பயந்தார்கள். யாரோ பதுங்கி வந்து முதுகில் அடிப்பது போல காற்று வீசியது. காற்றின் வேகம் அலைகளை உயரச் செய்தபடியே இருந்தது. வானம் தெரியாதபடி அலைகள் உயர்ந்தன.

அதன் பிந்திய நாட்களில் பகல் இரவாக காற்று வேகமெடுத்தபடியே சீறியது. ஆனால் காற்றடிக் காலத்திற்குப் பழகிய தீவுவாசிகள் எப்போதும் போல இயல்பாக தங்களது படகில் மீன்பிடிக்கச் செல்வதும் சமைப்பதும் விளையாடுவதுமாக இருந்தார்கள். ஆனால் டக்ளஸிற்கும் அவனது துப்பாக்கி வீரர்களுக்கும் காற்றின் உரத்த சப்தம் கேட்டுக் கேட்டு காது நரம்புகள் சிவந்து போய் துடித்துக் கொண்டிருந்தன. ஓசை அதிகமாகியதும் மண்டைக்குள் நரம்புகள் வெடித்து விடுவது போல வேதனை கொள்ளத் துவங்கின. காற்றில் அங்கிருந்த பாறைகள் கூடப் பறந்து போய்விடுமோ என்பது போலிருந்தது.

தீவுவாசிகள் எப்படிக் காற்றை எதிர்கொள்கிறார்கள் என்று டக்ளஸ் கற்றுக்கொள்ள முயற்சித்தான். ஆனால் அந்த சூட்சுமம் புரியவேயில்லை. காற்றடிக் காலத்தின் பகல் மிக மெதுவாக இருந்தது. உறக்கம், விழிப்பு இரண்டுமே வேதனை தருவதாக மாறியது. உலர்ந்துபோன கண்களுடன் அவர்கள் வெளிறிய வானத்தைப் பார்த்தபடியே இருந்தார்கள். காற்றின் வேகத்தில் கிழித்து எறியப்பட்ட இலைகள் தீவெங்கும் சிதறிக் கிடந்தன. காற்று ஒடுங்கவேயில்லை.

டக்ளஸ் உள்ளுர பயப்படத் துவங்கினான். எதற்காக இந்த வீண் முயற்சி. அவர்களைத் துப்பாக்கி முனையில் கடலில் அழைத்துச் சென்று முத்து குளிக்கும்படியாக வற்புறுத்தினால் என்ன குறைந்து விடப் போகிறது என்று ஒரு குழப்பம் உருவாகத் துவங்கியது. தன்னுடைய மன இயல்பைக் காற்று சிதைத்து வருவதை அவன் உணரத் துவங்கினான். அவனை மீறியே அவன் கோபப்பட்டான். கத்தினான். பசியும் தூக்கமும்காம உணர்ச்சிகளும் கூட தீவைச் சுற்றியிருந்த கடலின் எழுச்சியால் தூண்டப்படுவதும் கட்டுப்படுத்தப்படுவதையும் அவன் அறிந்து கொண்டபோது வியப்பாக இருந்தது. பல நேரங்களில் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காமல் இருப்பதற்கு அங்கு வீசும் கடற்காற்றே காரணமாக இருந்தது.

சூறைக்காற்று உச்சத்தை தொட்ட ஒரு நாள் டக்ளஸ் ஆவேசமாகி, துப்பாக்கியை வானை நோக்கி வெடித்தான். பிறகு வெறி கொண்டவன் போல கத்தினான். இன்றைக்கு அவனுடன் படகை எடுத்துக் கொண்டு முத்துக் குளிக்க அவர்கள் உடனே புறப்பட வேண்டும் என்று மிரட்டினான். தீவுவாசிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை. சினத்துடன் அவன் தனது துப்பாக்கியால் பட்டங்கட்டி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆளின் பாதங்களில் சுட்டான். ரத்தம் பெருகியோடியபோதும் அந்த ஆள் வலியால் கத்தவேயில்லை. மற்ற ஆண்கள் டக்ளஸை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். காற்றடிக் காலம் முடியும்வரை அவனது மிரட்டல்களுக்கு அவர்கள் செவிசாய்க்கவேயில்லை. பின்பு ஒரு நாள் காலை சுக்ருத இலைகள் அசைவற்றுப் போயின. காற்று ஒடுங்கிக் கொண்டு விட்டது. கடல் இப்போது அலைகள் ஒடுங்கித் தணிந்திருந்தது. ஆலா குடும்பத்தின் ஆள் டக்ளஸைத் தேடிவந்து மறுநாள் காலை அவர்கள் முத்துப்படுகையைக் காண கடலுக்குள் போகலாம் என்று சொன்னான்.

விடிகாலையில் அவர்கள் இரண்டு நாட்டுப் படகில் புறப்பட்டார்கள். ஒரு படகில் டக்ளஸ் மற்றும் இரண்டு துப்பாக்கி வீரர்களும் மற்ற படகில் ஆலா குடும்பத்து மூன்று ஆண்களுமிருந்தார்கள். படகை வலித்தபடியே கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முன்னால் செல்லச் செல்ல அடிவானம் வேக வேகமாகப் பின்னால் போய்க் கொண்டேயிருந்தது. திசை அறிய முடியாத கடலின் ஒரு புள்ளியில் அவர்களது படகு நின்றது.

ஆலா குடும்பத்தின் இரண்டு ஆண்கள் பிறை வடிவக் கல்லைக் காலில் கட்டிக் கொண்டு நீண்ட கயிற்றோடு கடலில் குதித்தார்கள். அவர்களுடன் தானும் காலில் ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு டக்ளஸ் குதித்தான். கடலின் அடிப்பகுதியை நோக்கி அவர்கள் சென்றபடியே இருந்தனர். கண்ணை யாரோ கையால் பொத்துவது போல நீர் முகத்தை மறைத்துக் கொண்டது. எடையற்ற உடல் சரிந்து அடியாழம் நோக்கி நழுவிக் கொண்டிருந்தது. பவளப்பாறை போல ஏதோ மினுங்கிக் கொண்டிருந்தது.

தன்முன்னே அசையும் நிழல்களைத் துரத்தியபடியே டக்ளஸ் கடலுக்குள் சென்றான். அவன் கண்கள் மெல்லிய வெளிச்சத்தை உணர்ந்தபோது தன்னோடு சேர்ந்து குதித்த இருவரையும் காணவில்லை. எது முத்து விளையும் படுகை, அவர்கள் எங்கே போனார்கள் என எதுவும் தெரியவில்லை. அவனுக்கு ஆத்திரமாக வந்தது. எப்படித் தன் கண்ணில் இருந்து மறைந்தார்கள். அவன் கடலுக்குள்ளாகத் தேடி அலைந்தான். ஓய்ந்து சலித்துப் போய் டக்ளஸ் படகிற்கு வந்தபோது துப்பாக்கி வீரர்கள் மயங்கிக் கிடந்தார்கள். டக்ளஸ் தனி ஆளாகப்படகை வலித்தபடியே திரிசடை தீவிற்கு வந்து சேர்வதற்குள் இரவாகியிருந்தது. தனது துப்பாக்கியுடன் அவன் ஆலா குடும்பத்தை நோக்கி ஓடினான். அவர்கள் ஒரு வரும் வீட்டில் இல்லை. கடலுக்குள்ளாகவே மூச்சடக்கி இருக்கக் கூடுமோ என்று தோன்றியது. விடிகாலை அவன் மறுபடியும் நாட்டுப் படகில் புறப்பட்டுச் சென்றான். அவனால் அந்த இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ஆனால் அவன் திரும்பி வந்தபோது அதே ஆலா குடும்பத்து ஆண்கள் மிக இயல்பாக வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தன்னை அவர்கள் ஏமாற்றி விட்டதாகக் கத்திக் கூச்சலிட்டான். வயதான மனிதன் மட்டும் பதற்ற மற்ற குரலில் முத்துப்படுகையில் விளைச்சல் இல்லை. காத்திருக்க வேண்டும் என்று சொன்னான். டக்ளஸால் அதை நம்பமுடியவில்லை. அவர்களைக் கொன்று விடப் போவதாக மிரட்டினான். அதை எவரும் சட்டைசெய்யவேயில்லை. கடலின் கூச்சலுக்குப் பழகிப் போனவர்கள் தனது மிரட்டலுக்கா பயப்படப் போகிறார்கள் என்று அவனுக்கே தோன்றியது. தான் இனி என்ன செய்வது என்று புரியாமல் அவன் குழப்பமடைந்தான்.

காற்றில் கிழிந்துபோன கூடாரத்திற்குப் பதிலாக ஒரு பாறையின் ஓரமாக மரத்தடுப்பு ஒன்றை உருவாக்கி அதில் தங்கியிருந்த டக்ளஸ் தனது கூடாரத்திற்குள்ளாகவே நாளெல்லாம் படுத்துக்கிடந்தான். அவனது உடல் கொதிப்பு கொண்டது. கண்கள் சிவந்து எரிச்சலூட்டின. மூத்திரம் கூட கடுகடுத்தது. இரவில் அவன் ஒளிரும் நட்சத்திரங்களைக் கண்டு பயந்து அலறினான். அவனுக்காகத் துப்பாக்கி வீரர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு டக்ளஸ் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டான். தீவில் மஞ்சள் வெயிலடித்துக் கொண்டிருந்தது. உடலின் நீர்மை உறிஞ்சப்பட்டு தான் ஒரு காய்ந்த இலை போல உணர்ந்தான்.

இது நடந்த ஐந்தாம் நாளில் ஒரு துப்பாக்கி வீரன் கடலை நோக்கி ஓடி கத்திக் கூச்சலிட்டபடியே தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டான். அது மற்றவர்களின் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்தியது. அவர்கள் நடுக்கத்துடன் அந்தத் தீவிலிருந்து கிளம்பிப் போக இருப்பதாகச் சொன்னார்கள். டக்ளஸ் ஆத்திரமடைந்தான். அவர்களைத் தானே கொன்றுவிடப் போவதாகக் கத்தினான். அந்த மிரட்டல் அவர்களைத் தீவில் தங்க வைக்கப் போதுமானதாகயில்லை. முடிவில் டக்ளஸ் அறியாமல் அவர்கள் இரவோடு தப்பிப் போக முயற்சித்தார்கள். ஆனால் ஓநாய் போல அலைந்து கொண்டிருந்த டக்ளஸ் அவர்களை மடக்கிப் பிடித்து ஆயுதங்கள் மட்டும் தனக்கு வேண்டும் என்று வாங்கி வைத்துக்கொண்டு அவர்களை விடி காலையில் கிளம்பும்படியாகச் சொன்னான். மறுநாள் காலை துப்பாக்கி வீரர்களின் படகு செல்வதைத் தொலைவில் நின்று தீவுவாசிகள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். டக்ளஸ் மட்டும் தீவிலிருந்து போகவேயில்லை.

அவன் கடல்நண்டுகளைப் பிடித்து சமைத்துத் தின்பதும், காற்றில் அலையும் சுக்ருத இலைகளின் சப்தத்தை ரசித்தபடியும் நாட்களைக் கழித்தான். அந்தத் தீவும் மனிதர்களும் அவனுக்குப் பழகியிருந்தார்கள். தீவுவாசிகளால் தன்னை நேசிக்க முடியாது. தன்னாலும் அவர்களை நேசிக்க முடியாது. ஒருவேளை என்றாவது மனவேகம் முற்றி அவர்களைத் தானே கொன்று விடக்கூடும் அல்லது அவர்கள் வெறுப்பின் உச்சத்தில் என்றாவது தன்னைக் கொல்லவும் கூடும் என்று அவனுக்குத் தோன்றியது. இதில் யார் புலி – யார் வேட்டைக்காரன் என்று அவனுக்குப் புரியவேயில்லை.

மழைக்காலம் துவங்கியது. பகலிரவாக மழைபெய்தபடியே இருந்தது. கடலில் விழும் மழைத்துளிகள் அடையாளமின்றி பிரம்மாண்டத்தில் ஒளிந்து கொண்டுவிடுகின்றன. மிகுமழையில் கடற்கரையே தெரியவில்லை. நுரைத்துப் பொங்கி வழிகிறது கடல். காற்றில்லாத அடர் மழை. நனையாத இடம் என்று உள்ளங்கை அளவு கூட அந்தத் தீவில் இல்லை. முத்துக் குளிப்பவர்கள் ஒண்டியிருந்த குகையின் வாசலை டக்ளஸ் மழைக்குள்ளாகவே ஒரு நாள் கடந்தபோது அவர்கள் தண்ணீருக்குள் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அப்போதும் அந்தக் கண்கள் அவனை வெறுப்பதையே உணர்ந்தான்.

டக்ளஸின் துப்பாக்கி வீரர்கள் பெங்கால் போய்ச் சேருவதற்குள் நோயுற்றுக் கடலிலேயே இறந்து போனார்கள். அவர்களில் ஒருவனாக டக்ளஸ் இறந்து போயிருக்கக் கூடும் என்று கவர்னர் முடிவு செய்திருக்க வேண்டும். அவனைத் தேடி வேறு படைப்பிரிவுகள் வரவேயில்லை. காலம் உருமாறிக் கொண்டேயிருந்தது.

ஒவ்வொரு ஆண்டின் காற்றடிக் காலத்திலும் அவர்கள் முத்துக் குளிக்க கிளம்புவார்கள். முன்பு போலின்றி இப்போது ஒரே படகில் அவர்கள் ஒன்றாகச் சென்றார்கள். டக்ளஸ் அவர்களோடு ஒன்றாகவே குதிப்பான். ஆனால் கடலின் உள்ளே அவனால் ஒருபோதும் முத்துப்படுகையைக் காண முடிந்ததேயில்லை. அவர்கள் எப்போதும் போல அவனைத் தனித்துவிடுத்துக் கரையேறிப் போய்விடுவார்கள். இன்னமும் முத்து விளையவில்லை என்ற பதில் அவனை அதே தீவில் காத்திருக்க வைத்தபடியே இருந்தது.

அவன் உருமாறிக் கொண்டேயிருந்தான். அவனுக்குள் நல்முத்துகளை அடைய வேண்டும் என்பதைத் தவிர வேறு ஆசைகள் அத்தனையும் வடிந்து போயிருந்தன. சில வேளைகளில் அவன் அந்தத் தீவில் அலையும் காட்டுப்பூனையொன்றைப் போலவே தன்னை உணர்ந்தான். சில வேளைகளில் அவன் தன்னை மணலில் துளையிடும் குழி எறும்பு போல நினைத்துக் கொள்வான். அவன் மனதில் இருந்த வேட்கைகள் வடிந்து விட்டன. ஒரேயொரு நெருப்பு. அதுவும் அணையாத பெருநெருப்பாக எரிந்து கொண்டேயிருந்தது. அது நல்முத்துகள் தனக்கு வேண்டும் என்பதே.. அதைத் தான் அறுவடை செய்த மறுநாள் அந்தத் தீவை விட்டு விலகிப் போய்விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அதற்காக கடலைப் பார்க்கும் போதெல்லாம் அவன் மனது முத்துகள் விளைந்துவிட்டதா என்று உள்ளூர கேட்டுக் கொண்டேயிருந்தது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் படகில் ஐந்து வணிகர்கள் அந்தத் தீவிற்கு வந்து இறங்கினார்கள். அவர்கள் அன்னாசிப்பழங்களும் காடாத் துணிகளும் சாம்பி ராணியும் ஊதுபத்திகளும் கொண்டு வந்து தீவின் உள்ளே இருந்த சூதனி கோவிலில் வைத்து வழிபட்டார்கள். தீவுவாசிகள் அவர்களை வரவேற்றுக் கடற்சிப்பிகளையும் சங்கையும் அள்ளி அள்ளித் தந்தார்கள்.. தீவுவாசிகள் முத்துகளை ஒருபோதும் விற்பதில்லை என்பதையும் அவர்கள் அறுத்து எடுத்த முத்துகளை மருத்துவம் செய்வதற்காக அருகாமையில் உள்ள சூதனி கோவிலில் வைத்துப் போய்விடுவார்கள் என்றும் வணிகர்கள் சொன்னார்கள்.

டக்ளஸ் கடந்த மூன்று வருஷங்களாக முத்துகளுக்காக காத்திருப்பதாகச் சொன்னான். வணிகர்கள், முத்துகள் கடலில் விழும் கண்ணீர்த் துளிகள் என்றும் சூதனியின் கண்ணீர்த்துளிகள் கடலில் விழுந்தே முத்தாகிறது என்று அந்த மக்கள் நம்புவதாகச் சொன்னார்கள். சிறு வயதில் அப்படியான மாயக்கதையைத் தானும் கேட்டிருப்பதாக டக்ளஸ் சொன்னான். வணிகர்கள் தீவுவாசிகள் தந்த பொருட்களைத் தங்களது படகில் ஏற்றிக்கொண்டு புறப்படும் போது அவன் விரும்பினால் அவர்களோடு கூட வரலாம் என்றார்கள். டக்ளஸ் மறுத்துவிட்டான். அவன் கனவில் முத்துகள் வளர்ந்து கொண்டேயிருந்தன.

ஒன்பது வருஷங்களுக்குப் பிறகு ஒரு நாள் அதிகாலை திரிசடை வாசிகள் முத்துக் குளிப்பதற்காக டக்ளஸை அழைத்துக் கொண்டு கடலுக்குள் போனார்கள். டக்ளஸ் ஒடுங்கியிருந்தான். அவனிடம் பர பரப்பில்லை. கடலில் வீசி எறியப்பட்ட மரத்துண்டு மிதப்பதைப் போலவே தன்னை உணர்ந்தான். கடல் அவனுக்குப் பழகியிருந்தது. கண்ணால் காணும் கடல் வெறும் பொய்த் தோற்றம் என்பது புரிந்திருந்தது. தான் கடலினுள் முத்தைத் தேடிக் குதிக்கப் போவதில்லை என்று சொல்லி அவர்கள் உடலோடு சேர்த்துக் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்து இழுப்பவர்களில் ஒருவனாகப் படகில் இருக்கப் போவதாகச் சொன்னான்.

அவர்கள் கடலில் குதித்தார்கள். அடுத்த இரண்டாவது நிமிஷம் கடலின் உள்ளிருந்து ஒருவன் வெளிப்பட்டு முத்து விளைந்துவிட்டதாகவும் மறுநாள் அறுத்துவிடலாம் என்றும் உற்சாகமாகச் சொன்னான். முதன்முறையாக அவர்கள் தன்மீது அக்கறையோடு பேசுவதை டக்ளஸ் உணர்ந்தான். அவனால் நம்ப முடியவில்லை. ஒன்பது வருஷங்கள் காத்திருந்த முத்துகள் நாளை அவன் கைக்கு வந்துவிடும் என்பது மனதைக் களிப்படையச் செய்தது. தனது பயணத்திற்கான நாட்டுப்படகைத் தயார் செய்யத் துவங்கினான்.

மறுநாள் விடிகாலை பட்டங்கட்டியும் இரண்டு ஆண்களும் தயாராக இருந்தார்கள். டக்ளஸ் அவர்களுடன் கடலுக்குள் சென்றான். அன்றும் அவன் கயிற்றைப் பிடித்துக் கொள்பவனாகவே இருந்தான். இரண்டு மூங்கில் கூடைகள் நிறைய முத்துகளை அறுத்துக்கொண்டு வந்திருந்தார்கள். கரைக்கு வந்த பிறகு அவர்கள் சூதனி கோவில் முன்பாக இருந்த கல்பாறையில் சிப்பிகளைத் திறந்து பார்த்தார்கள். பெரிது பெரிதாக முத்துகள். சுக்ருத இலையொன்றைப் பறித்து அதில் முத்துகளை அள்ளி சூதனி முன்பாகப் படைத்து மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தார்கள். டக்ளஸ் முத்துகளை வியப்புடன் பார்த்தபடியே இருந்தான். அதன் வசீகரமும் அழகும் கடித்துத் தின்றுவிடலாம் போலிருந்தது. பிறகு பட்டங் கட்டி அவன் விரும்பினால் அத்தனை முத்துகளையும் அள்ளிக் கொண்டு புறப்படலாம் என்று சொன்னார்.

டக்ளஸ் ஆவேசத்துடன் முத்துகளை அள்ளி அதற்காகவே வைத்திருந்த சுருக்குப் பையிலிட்டுத் தனது இடுப்போடு சேர்த்துக் கட்டிக் கொண்டான். அங்கிருந்த ஒருவரோடும் பேசவில்லை. தனது நாட்டுப் படகை எடுத்துக்கொண்டான். கடலில் அவன் புறப்படத் தயார் ஆனபோது அதே குடும்பங்கள் கரையில் வந்து நின்று அவனை வெறித்துப் பார்த்தபடியே இருந்தன. அந்தக் கண்களில் இப்போது வெறுப்பில்லை. மாறாக ஏளனம், கேலி மட்டுமே ததும்பிக் கொண்டிருந்தது.

அவன் துடுப்பை வேகவேகமாக வலிக்கத் துவங்கினான். தீவு கண்ணை விட்டு மறையத் துவங்கியது. நடுக்கடலுக்கு வந்தபோது தொண்டை காய்ந்து தாகமாக இருந்தது. வெளிர்நீல வானத்தின்கீழ் அவன் மட்டுமே இருந்தான். கடலின் பிரம்மாண்டம் கண்கொள்ள முடியாமலிருந்தது. தனது நீர்க் குடுவையை வாயில் வைத்து உறிஞ்சியபடியே கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான். கடலின் மீது தயங்கித் தயங்கி வெயில் ஊர்ந்து கொண்டிருந்தது. தீவுவாசிகளின் கேலிப்பார்வை அவன் கூடவே வருவது போலிருந்தது.

எங்கோ அதிகாரத்தில் உள்ள ஒருவரின் அற்ப சந்தோஷத்திற்காகத் தனது இத்தனை ஆண்டு கால வாழ்க்கையை அர்த்தமற்றுச் செய்துவிட்டதைத் தான் தீவுவாசிகளின் கேலி வெளிப்படுத்துகிறதா? கடல் இத்தனை நாட்களாக அவனிடம் சொல்ல விரும்பியது இதுதானா? யோசிக்க யோசிக்க தீவுவாசிகளின் பரிகாச முகத்தின் உண்மை அர்த்தம் புரியத் துவங்கியது. துடுப்பு வலிப்பதை நிறுத்தி விட்டு அவன் இடுப்பில் கட்டியிருந்த சுருக்குப் பையை வெளியே எடுத்து முத்துகளைக் கையில் கொட்டிப் பார்த்தான்.

ஏனோ வாய்விட்டு அழவேண்டும் போலிருந்தது. அந்த முத்துகளைத் தடவிப் பார்த்தான். முத்துகளின் மீது தீவுவாசிகளின் தீராத வெறுப்பு பிசுபிசுப்பாகப் படிந்து போயிருப்பதை அவனால் உணர முடிந்தது. தான் ஒரு இழிபிறவி என்று தன்னைத் தானே சபித்துக் கொண்டான். கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதான். அவனை ஆறுதல்படுத்த அங்கே யாருமேயில்லை.

முடிவில் அடங்கமுடியாத மன வலியோடு தன் கையில் இருந்த முத்துகளைக் கடலில் வீசி எறிந்தான். பிறகு எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் கடலை வெறித்துப் பார்த்தபடியே இருந்தான். காற்று அவன் தலையைக் கலைத்து விளையாடிக் கொண்டிருந்தது. கடற்பறவையொன்று அவனைக் கடந்து மேற்காகச் சென்றது. நீண்ட யோசனையின் பிறகு மெதுவாக திரிசடை தீவை நோக்கித் தனது படகைச் செலுத்தத் துவங்கினான்.

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.