Our Blog

திரிசடைத் தீவு - 1


சிறுகதை

திரிசடைத் தீவு முத்து குளிப்பதற்குப் பிரசித்தி பெற்றது. அங்கு விளையும் முத்துகள் குழந்தைகளின் கண்களைப் போல வசீகரமும் மென்னொளியும் கொண்டவை என்றும் அது போன்ற ஒளிரும் முத்துகள் மன்னார் வளைகுடா பகுதியில் வேறு எங்கும் கிடைப்பதில்லை என்றும் கடற்வணிகர்கள் தெரிவித்தனர். அதனினும் கூடுதலாக ஒரு காரணமிருந்தது. அது, விக்டோரியா மகாராணியின் கவனம் பெறவேண்டுமானால் திரிசடை முத்துகளில் ஒன்று கைவசம் இருந்தால் கூடப் போதும் என்பதே.

லண்டனில் நடைபெற்ற விக்டோரியா மகா ராணியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது உத்கலா ராஜா காலிப் அலியின் மனைவி பேகம் உம்ரா அணிந்திருந்த வெண் முத்துமாலையின் மீது வசீகரமான மகாராணி, தனக்கு அது போன்ற மாலையொன்று உடனடியாகத் தேவை என உத்தரவிட்டாள்.

அவை மிக அரிதான கேசி முத்துகள் என்றும் தென்னிந்தியாவில் உள்ள திரிசடை தீவில் மட்டுமே கிடைக்கக் கூடியது என்றும் கம்பெனி வணிகர்கள் தெரிவித்தார்கள். முத்துகளைத் தேடி அதன் மறுநாளே ராயல் ரெஜிமெண்ட்டின் இரண்டு பிரிவுகள் திரிசடை தீவிற்குப் புறப்பட்டன.

ஆனால் ஒன்றரை ஆண்டுகாலமாகியும் அவர்களில் ஒருவர் கூட திரும்பி வரவேயில்லை என்பதுடன் அவர்கள் உடல்கள் கூட கிடைக்கவில்லை. மறுமுயற்சியாக, 104வது படைப்பிரிவின் முப்பது வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களாலும் திரிசடை முத்துகளைக் கொண்டுவர முடியவில்லை. ஆனால் அந்த முப்பது உடல்களும் விஷம் பாரித்த நிலையில் கடலில் மிதந்ததை வணிகக்கப்பல்கள் கண்டு பிடித்தன. அதிலிருந்து திரிசடைக்கு முத்துகளைச் சேகரிக்கச் செல்வது துர்சாபமான செயல் என்று கருதப்பட்டது.

தொடர்ந்த ஏமாற்றத்தால் ஆத்திரமடைந்த கவர்னர் ரபேல் வாலீஸ் இது குறித்து விசாரிக்கும்படி மத ராஸ் கோட்டைக்கு அனுப்பிய கடிதத்திற்கு ஒரு வரைபடத்துடன் பதில் வந்திருந்தது. அதில் திரிசடை தீவில் உள்ளவர்களைத் தவிர வேறு ஆட்களால் அந்த முத்துப் படுகையை அறிந்து கொள்வதோ அறுத்து எடுப்பதோ இயலாது என்றும், அங்கே முத்து கிடைப்பதற்கு அதிர்ஷ்டம் மட்டுமே துணை நிற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதை கவர்னரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனே தனது படைப் பிரிவில் இருந்து பதினோரு நபர்களைத் தேர்வு செய்து திரிசடைக்கு அனுப்ப உத்தரவிட்டார். அதில் ஒருவனாகவே டக்ளஸ் தீவிற்குப் புறப்பட்டான். ஒன்பது நாள் கடற்பயணத்தின் ஊடே கப்பலில் அவன் கடலோடிகள் அந்தத் தீவைப் பற்றி எழுதி வைத்த குறிப்புகளை வாசித்தபடியே வந்தான். தேவதைக் கதைகளில் வரும் மந்திரத் தீவைப் போன்று எண்ணிக்கையற்ற கதைகள் திரிசடையைப் பின்னியிருந்தன.

திரிசடை தீவில் வசிப்பவர்கள் கடலுக்குள் நாள் கணக்கில் மூச்சடக்கி வாழ முடியும் என்றும் அவர்கள் முத்துகளை ஒருபோதும் விலைக்கு விற்பதில்லை என்றும் மாறாக, தங்களது குலதெய்வமான சூதனியின் உதிர்ந்து விழுந்த பற்கள் தான் கடலில் முத்தாக விளைவதாகவும் ஆகவே அதை அறுவடை செய்து சூதனிக்குப் படைப்பது தங்களது பிறவிக்கடமை என்றும் நம்பினார்கள். திரிசடை தீவில் வாழ்வது மிக போராட்டமான ஒரு கலை. அங்கே கடல் உறங்குவதேயில்லை.

தீவுவாசிகள் மிக எளிமையானவர்கள். அவர்கள் கடல்நண்டுகளைப் போல தங்கள் வளைக்குள்ளாகவே ஒளிந்து வாழ்பவர்கள். வெளிஉலகம் மீது அவர்களுக்கு ஈர்ப்போ. அக்கறையோ இருப்பதேயில்லை. அந்த தீவு சங்கு போன்ற வடிவத்திலிருக்கிறது. எந்த சப்தமும் அதற்குள் சென்றால் அதிகமாகி விடும். ஆகவே அங்கே ஓசை அடங்குவதேயில்லை.

அதிலொன்று, அந்தத் தீவில் உள்ள கற்களில் ஒன்று கடலில் மிதக்கக் கூடியது என்றும் அதைத்தான் தீவுவாசிகள் படகு போல பயன்படுத்துவதாகவும் சொன்னது. மிகையான கதைகள் என்று டக்ளஸ் சிரித்தபடியே கடலோடிகளின் பயம் தான் கதைகளாக உற்பத்தியாகியிருக்கிறது என்று சக வீரர்களிடம் சொன்னான். ஒன்பது நாள் கடல் பயணத்திற்குப் பிறகு அவர்கள் திரிசடை தீவுக்கு ஒரு கல் தொலைவில் கப்பலை நிறுத்திக் கொண்டு நான்கு நாட்டுப்படகில் தீவை நோக்கிச் சுமைகளுடன் புறப்பட்டார்கள். அப்போது கோடை துவங்கி இரண்டு வாரமாகியிருந்தது.

திரிசடை தீவு மிகச்சிறியது. அங்கே இரண்டு குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தன. முதல் குடும்பம் ‘ஆலா‘ என்று அழைக்கப்பட்டது. அவர்கள் கடலில் முத்துவிளையும் படுகையை அறிந்து சொல்லக் கூடியவர்கள். மற்ற குடும்பம் ‘பட்டங்கட்டி‘ என்று அறியப்பட்டிருந்தது. அவர்களே முத்து அறுத்து எடுத்து வருபவர்கள். இரண்டிலுமாகச் சேர்ந்து பதினெட்டு பேர் இருந்தார்கள். அதில் மூன்று குழந்தைகள். ஐந்து பெண்கள்.

நூற்றாண்டு காலமாக அதே தீவில் வசித்து வந்த அந்தக் குடும்பங்கள் ஒன்றுக்குள் ஒன்று திரு மணம் செய்து கொண்டன. இறந்து போனவர்களை அவர்கள் புதைப்பதில்லை. மாறாக, சவத்தோடு பெரியகல் ஒன்றைச் சேர்த்துக்கட்டி கடலின் அடி ஆழத்திற்குக் கொண்டு போய் போட்டுவந்து விடுவார்கள். இறந்தவரின் ஆன்மா ஓளிரும் குமிழ்களாக கடலாழத்தில் மிதந்து கொண்டேயிருக்கும் என்றும் அந்த நீலக்குமிழ்களே முத்துப் படுகைகளை அடையாளம் காட்டுகின்றதாகவும் அவர்கள் நம்பினார்கள்.

இங்கிலாந்திலிருந்து தனது பத் தொன்பதாவது வயதில் இந்தியாவிற்கு வருகை தந்த டக்ளஸ் பிராங் பெங்கால் ரெஜிமெண்டில் ஐந்தரை வருஷங்கள் வேலை செய்து கொண்டிருந்தான். அவனது துப்பாக்கி சுடும் திறமை அசாத்தியமானது. காற்றில் மிதக்கும் இலையின் நரம்புகளைக் கூட அவனால் குறிவிலகாமல் சுட்டுவிட முடியும். அதன்காரணமாகவே அவனை கவர்னரின் வேட்டைப்பிரிவில் எட்டாம் ஆளாகச் சேர்த்திருந்தார்கள்.

கவர்னர் வாலீஸ் மாதம் ஒருமுறை வேட்டைக்குக் கிளம்பிவிடுவார். அவருக்கு மிருகங்களைச் சுடுவதில் அதிக ஈடுபாடு கிடையாது. மாறாக, கொல்லப்பட்ட மிருகங்களின் தலைமீது தனது காலை வைத்துக் கொண்டு கம்பீரமாக புகைப்படம் எடுத்துக் கொள்வதில்தான் ஆர்வம் அதிகம். அதற்காகவே அவருடன் ஜான் மெக்கே என்ற புகைப்படக் கலைஞர் இருந்தார்.

கவர்னரின் இந்த வேட்டைப் பிரிவில் பன்னிரெண்டு துப்பாக்கி வீரர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு மாதமும் முழுநிலா நாளில் கவர்னர் தனது வேட்டைக் குழுவினருடன் வனவிஜயம் கிளம்பி விடுவார். அவரை வரவேற்றுக் காட்டிற்குள் அழைத்துப் போவதற்காக நவாப்பின் ஆட்கள் யானைகள், குதிரைகளுடன் தயாராக இருப்பார்கள்.

அந்த வேட்டைக் குழுவில் டக்ளஸ் பிராங்கே அதிக புலிகளைக் கொன்றவன். தான் கொன்ற புலியின் உடலில் இருந்து ஒரு கொத்து மயிர்களை மட்டும் டக்ளஸ் தனியே வெட்டி எடுத்து ஒரு குப்பியில் அடைத்துக் கொள்வான். எப்போதாவது அந்த மயிர்களைக் கையில் தொடும்போது புலியின் சீற்றமான துடிப்பும் மூச்சும் அதில் இருப்பது போலவே உணர்வான்.

மற்றபடி டக்ளஸை வசீகரிப்பது, சுடப்போகும் மிருகத்திற்காக காத்திருப்பது மட்டுமே. அவன் காட்டிற்குள் நுழையும்போதே இன்று தான் எந்த மிருகத்தைக் கொல்லக்கூடும், அது இப்போது என்ன செய்து கொண்டிருக்கும் என்று யோசிக்கத் துவங்கிவிடுவான். எந்தப் புள்ளியில் தானும் அந்த மிருகமும் சந்திக்கப் போகிறோம், அது ஏன் தன் கையால் சாகிறது என்று ஏதேதோ மனதில் தோன்றியபடியே இருக்கும். கவர்னர் யானை மீது அமர்ந்தபடியே வனத்தை ஒரு மாபெரும் விளையாட்டு மைதானம் போல நினைத்து உவகை கொள்வார்.

அவர்கள் காய்ந்துபோன நாணலை மிதித்து நடந்து ஆற்றைக் கடந்து வனத்தின் அடிவயிற்றை நோக்கிச் செல்லும்போது டக்ளஸின் கண்கள் ஒவ்வொரு இலை அசைவையும் ஊடுருவிச் செல்லும். வாசமும் கவனமும்தான் அவனது வழித்துணைகள்.

புலியின் வருகையை அவனது உள்ளுணர்வு எப்போதுமே முன் கூட்டி அறிவித்து விடுகிறது. அவன் புலியின் கண்களைச் சந்திக்கும்வரை எந்த சலனமும் இல்லாமல் காத்துக் கொண்டேயிருப்பான். எங்கிருந்தோ புலியின் பாதங்கள் பூமியில் மிக நிதானமாக நடந்து தன்னை நோக்கி முன்னேறி வருவது அவனால் உணரமுடியும். அந்த நிமிடங்களில் அவன் பரபரப்பு கொள்வதில்லை. மாறாக, சொல்லமுடியாத ஒரு வலியை உணர்வான்.

அந்த வலி சில நிமிஷங்கள் விருட்டென மீனொன்று நீரின் மீது துள்ளி விழுவது போல அசைந்து ஒடுங்கி விடும். பிறகு அவனுக்குப் புலி, அடித்து வீழ்த்தவேண்டிய வெறும் இலக்கு மட்டுமே. தனது துப்பாக்கியின் விசையை அவன் விரல்கள் அழுத்திய பிறகு அவன் பெருமூச்சிட்டுக் கொள்வான். நிச்சயம் அது புலியைக் கொன்றிருக்கும் என்று நம்புவான். அவனது நம்பிக்கை ஒருபோதும் பொய்யாகவேயில்லை.

செத்துக் கிடக்கும் புலி அவனை வசீகரிப்பதேயில்லை. புலி தன்னை நோக்கி வரும்வரை காத்திருந்த அந்த அரிய நிமிஷங்களை நினைத்த படியே அவன் ஏதாவது மரநிழலில் படுத்துக் கொள்வான். அவனது சுபாவத்தை கவர்னர் உணர்ந்திருக்கக் கூடும். அதனால்தானோ என்னவோ டக்ளஸை பெங்கால் ரெஜிமெண்டில் இருந்து முத்துகளைச் சேகரம் செய்து வருவதற்காக திரிசடை தீவிற்கு அனுப்பி வைத்தார்.

மகாராணியின் விருப்பத்தை நிறைவேற்றினால் நிச்சயம் தான் மதராஸ் ரெஜிமெண்டின் லெப்டினென்டாக நியமிக்கப்படக்கூடும் என்பதற்காகவே டக்ளஸ் திரிசடை பயணத்திற்குத் தலைமை ஏற்க ஒப்புக்கொண்டான். தனது அதிகாரம் மற்றும் வீரத்தால் எதையும் எளிதாக அடைந்துவிட முடியும் என்று நம்பினான். ஆகவே அவனோடு ஐந்து துப்பாக்கி வீரர்களும் ஒரு சமையல் ஆளும் மட்டுமே போதுமானவர்கள். வேட்டைத் துப்பாக்கிகளைத் தவிர வேறு ஆயுதங்கள் எதுவும் தேவையுமில்லை என்று உறுதியாகச் சொன்னதோடு, அதன் மறுநாளே கப்பலில் பயணம் கிளம்பினான். அப்போது அவன் திரிசடை தீவில் ஒன்பது வருஷங்கள் தான் காத்துக்கிடக்கப் போவதை அறிந்திருக்கவில்லை.

திரிசடை தீவிற்கு அருகில் வேறு தீவுகள் இல்லை. அது, கண்ணில் விழுந்த மணல் இமை ஓரமாக ஒதுங்கிக் கொள்வது போல கடலின் கிழக்கு ஓரமாக ஒதுங்கியிருந்தது. ஒன்றிரண்டு மீன்பிடிப் படகுகள் எப்போதாவது அதைக் கடந்து போவதுண்டு. திரிசடை தீவின் நடுவே ஒரு சிறிய குன்று இருந்தது. அதன் மேற்குப்பகுதியில் இரண்டு குகைகள் இருந்தன. மழைக்காலத்தில் முத்துக் குளிக்கும் குடும்பங்கள் அந்த குகைக்குள் ஒதுங்கிக் கொண்டு வசித்தனர். மற்ற நாட்களில் அவர்கள் தரையில் இருந்து ஐந்தடி அடி உயரத்தில் அமைக்கப்பட்ட மர வீட்டில் வசித்தனர்.

கடற்தாழைகளும் நீர்ச்செடிகளும் மணலெங்கும் வளர்ந்திருந்தன. அந்தத் தீவிலிருந்த அடர்பச்சை நிற தவளைகள் அளவில் மிக சிறியவையாக இருந்தன. அவை எழுப்பும் ஓசை கூட விக்கல் எடுப்பது போன்றே இருந்தது. தீவின் உட்புறத்தில் கருஞ்சுனையொன்று இருந்தது. அதிலிருந்து சொட்டும் தண்ணீரைத் தான் தீவுவாசிகள் குடித்துவந்தார்கள்.

தாமரை இலைகள் போன்று அகன்று விரிந்த இலைகள் கொண்ட சுக்ருதம் என்ற செடிகள் தீவெங்கும் அடர்ந்து வளர்ந்திருந்தன. அதிலிருந்து வீசும் நாள்பட்டு போன சாணம் போன்ற வாசனை எப்போதும் காற்றில் இருந்துகொண்டேயிருந்தது . காற்றில் சுக்ருத இலைகள் எழுப்பும் ஓசை யாரோ கையால் அடித்து தாளமிசைப்பது போன்ற ஒரு அதிர்வைத் தந்தபடியே இருந்தது. தீவின் தென்கிழக்கில் கல்லால் ஆன பந்தல் ஒன்றும் ஒரு பலிபீடமும் காணப்படுகிறது. அதைத் தங்களது குலதெய்வமான சூதனி என்று தீவுவாசிகள் வழிபட்டார்கள்.

டக்ளஸ் வந்து இறங்கிய நாளில் தீவுவாசிகள் எவரும் அவனைத் தடுக்கவோ, வரவேற்கவோ செய்யவில்லை. அவனும் துப்பாக்கி வீரர்களும் படகிலிருந்து தங்களது பொருட்களைக் கரை இறக்கிக் கொண்டிருக்கும்போது தொலைவில் இருந்து ஒரு சிறுமி அவர்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். பத்து வயதிருக்கக் கூடும். அவளது சுருண்ட கேசம் காற்றில் அசைந்தபடியே இருந்தது. டக்ளஸ் அவளை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தான். அவளிடம் சலனமேயில்லை. மணலில் கால் புதைய அவளை நோக்கி நடக்கத் துவங்கினான். அவள் வெறித்த கண்களுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்தப் பார்வை அவள் தன்னை வெறுக்கிறாள் என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்தியது. அதைக் கண்டுகொள்ளாதவன் போல அவளை நோக்கிச் சிரித்தான் டக்ளஸ். பதிலுக்கு அவள் சிரிக்கவில்லை. தன் வெறுப்பைக் கண்களின் வழியே உமிழவிட்டாள். அவன் பொய்க் கோபத்துடன் அடிப்பது போல கையை ஓங்கினான். நிச்சயம் அதற்குப் பயந்து அவள் ஓடிவிடக்கூடும் என்று நினைத்தான். ஆனால் அவள் டக்ளஸைப் பொருட்படுத்தவேயில்லை.

அவளிடம் தீவில் உள்ள மற்றவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று சைகையில் கேட்டான் டக்ளஸ். அவள் பதில் சொல்லாமல் அவனையே மேலும் கீழுமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பற்கள் நறநறவென கடிக்கப்படும் சப்தம் டக்ளஸிற்குக் கேட்டது. அவன் இறுக்கமான முகத்துடன் அவளது தலை மயிரைத் தொட முயன்றான். ஆவேசமாக அவள் அந்தக் கைகளைத் தட்டிவிட்டபடியே அவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

படகில் இருந்த பொருட்களைச் சுமந்து வந்தவர்கள் அதை எங்கே கொண்டு செல்வது என்று கேட்டார்கள். டக்ளஸ் அவர்களை அங்கேயே காத்திருக்கும்படி சொல்லிய படியே அந்தச் சிறுமியின் கையைப் பிடித்து தன்னை அழைத்துப் போகும்படியாகச் சொன்னான். அவள் திமிறிக் கொண்டு முறைத்தாள். டக்ளஸ் அவளைப் புறக்கணித்து நடந்து மேடேறித் தீவின் உள்ளே நடந்து கொண்டிருந்தான். அந்தச் சிறுமி அவன் பின்னால் மெதுவாக நடந்து வந்தாள்.

அன்றைய பகலில் டக்ளஸ் அங்கிருந்த இரண்டு குடும்பங்களையும் பார்த்து வந்தான். அவர்களில் ஒருவர் கூட அவனோடு ஒரு வார்த்தை பேசவேயில்லை. வெளியாட்கள் அங்கே வருவதை அவர்கள் விரும்பவில்லை என்பது அவர்கள் முகத்திலே தெரிந்தது. கடல் தனக்கு விருப்பமில்லாதவர்களுக்கு எதுவும் தருவதில்லை. வெளியாட்கள் கடலை ஒருபோதும் தங்களுக்குள் நிரப்பிக் கொள்வதில்லை. கண் வழியாக இதயத்தில் கடல் நிரம்பாதவரை அதை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது என்று தீவுவாசிகள் நம்பினார்கள். ஆகவே தங்களது மறுப்பை அவர்கள் பார்வையின் வழியாகவே தெரியப்படுத்தினர்.

பேசாத அந்த உதடுகள் அவன் மீது மௌனமாகவே ஏளனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. தனது முகத்தின் ஆழத்திற்குள் கண்களால் ஊடுருவிப் போய்விட முடியும் என்பது போல அந்த பார்வைகள் இருந்தன. அவர்களது கண்களை டக்ளஸ் உற்றுப் பார்த்தபோது திட்டுத் திட்டாக மேகம் செல்வது போல வெறுப்பு மிதந்து கொண்டிருந்ததை உணர்ந்தான்.

டக்ளஸ் தனது ஆட்களுடன் தீவின் வடக்குப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கிக் கொண்டான். வெளிச்சத்தின் துளி கூட அந்தத் தீவில் இல்லை. கூடாரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கைப் பிடித்துத் தின்பதற்காகவே ஒரு வகை பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. அவை ஆசையோடு சுடரை விழுங்கிக் கொண்டு பறந்தன. தீவுவாசிகள் விளக்கைப் பயன்படுத்துவதேயில்லை. அவர்கள் இருட்டிற்குள்ளாகவே நடமாடப் பழகியிருந்தார்கள்.

தீவில் இருள் கருஞ்சாந்து போன்ற பிசுபிசுப்புடன் அடர்ந்திருந்தது. அவர்கள் தங்களது கண்களால் இருட்டைத் துளைக்க முடியாததை உணர்ந்தார்கள். டக்ளஸ் படுக்கையில் கிடந்தபடியே இருட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நேரமாக ஆக தீவு மறைந்து போய் தான் கடலின் மீது உறங்குவது போலவே தோன்றியது. பின்னிரவு வரை விழித்துக் கிடந்த அவனைத் தூக்கம் தன்னையறியாமல் பீடித்தது.

விழித்தபோது காலை வெளிச்சம் கடற்கரையில் பிரகாசம் கொண்டிருந்தது. கடல் நண்டு ஒன்று அவசரமாக நடந்து மணலேறிச் சென்றது. இளவெயிலின் மிருதுவும் நுரை ததும்பும் அலைகளின் மெல்லோசையும் அவன் மனதை சாந்தம் கொள்ளச் செய்வதாக இருந்தது. தனியே கடற்கரையில் நடந்து கொண்டிருந்தான். தாடை போல துருத்திக் கொண்டிருந்த ஒரு திட்டில் உட்கார்ந்து கொண்டபடியே கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான். கடலும் தன்னைப் பார்த்துக் கொண்டு இருப்பது போலவே உணர்ந்தான். முன்பு ஒருபோதும் இவ்வளவு நெருக்கமாக கடலைத் தான் அறிந்ததில்லை என்பது போலிருந்தது. கடல் எதையோ சொல்வது போல தோணியது. என்ன சொல்கிறது என்று அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு நாளைக்குள்ளாகவே முத்து குளிப்பவர்களை எளிதாக மிரட்டிப் பணிய வைக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டான். பிறகு தான் கொண்டு வந்திருந்த முகம் பார்க்கும் கண்ணாடி, வாசனை சோப்புகள், அலங்காரத் துணிகள், மெழுகு வர்த்திகள், பீங்கான் கோப்பைகள் போன்றவற்றைப் பரிசாக எடுத்துக் கொண்டு அந்தக் குடும்பங்களைத் தேடிச் சென்றான்.

பட்டங்கட்டியிடம் தான் இங்கிலாந்து மகாராணியின் விருப்பத்தின்படி முத்துகள் வேண்டி வந்திருப்பதாகவும் அதைக் கடலில் இருந்து அறுவடை செய்து தரவேண்டியது அவரது பொறுப்பு என்றும் அன்பான குரலில் சொன்னான்.

பட்டங்கட்டி அதற்கு பதில் பேசவேயில்லை. மாறாக, தரையில் ஒரு குச்சியால் கோடு கிழித்தபடியே பதில் பேசாமல் உட்கார்ந்திருந்தார். அவருக்கு வயது எழுபதைக் கடந்திருக்கும். செம்பட்டை படிந்த தலை. பருத்த உதடுகள், ஆள் மெலிந்து உயரமானவராக இருந்தார். கழுத்தில் மீன் எலும்பு ஒன்றை மாலையாகப் போட்டிருந்தார். அவரது வீட்டுப் பெண்கள் டக்ளஸின் துணைக்கு வந்திருந்த துப்பாக்கி வீரர்களை வெறித்துப் பார்த்த படியே இருந்தனர். பிறகு பட்டங்கட்டி எதுவும் சொல்லாமல் எழுந்து வெளியே சென்றுவிட்டார்.

இதுபோலவே தான் ஆலா குடும்பத்திலும் நடந்தது. அவர்களும் டக்ளஸின் பரிசை ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஆத்திரத்தில் அந்தப் பரிசுகளை கடற்கரையில் வீசி எறிந்து வந்தான் டக்ளஸ். கடலில் விளைவதை அறுவடை செய்து தருவதற்கு எதற்கு இவ்வளவு பிடிவாதம். கடல் முத்துகள் இவர்களது சொத்துக்களா என்ன? அதைத் தனக்குத் தருவதன் வழியே என்ன இழந்துவிடப் போகிறார்கள். ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறார்கள் என்று யோசித்தபடியே இருந்தான்.

சில வாரங்கள் அங்கே தங்கி அவர்களது தினசரி வாழ்க்கையை அவதானிப்பதன் வழியே முத்துக் குளிப்பவர்களை வசீகரித்துவிட முடியும் என்று டக்ளஸ் நம்பத் துவங்கினான். அதற்காக அவன் பகலிரவாக அந்தத் தீவில் நடப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு நாளும் அதிகாலை வெளிச்சம் அந்தத் தீவை ஒரு பெரிய மலரைப் பூக்கச் செய்வதைப் போல ஒளிர்வு கொள்ள வைக்கிறது. புலரியில் ஒரு ஆள் படகில் கிழக்கு நோக்கிப் போவதையும் அந்த ஆள் திரும்பி வரும்போது படகு நிறைய மீன்களும் கடற்சிப்பிகளும் வந்து சேர்வதையும் டக்ளஸ் பார்த்துக் கொண்டேயிருந்தான். அந்த மீன்கள்தான் தீவுவாசிகளின் பிரதான உணவு. நாளின் பெரும்பான்மை நேரங்கள் அவர்கள் கடலை வெறித்துப் பார்த்தபடியே கரையோரம் உட்கார்ந்திருப்பதைக் கண்டான்.

அவர்கள் கடலோடு பேசுகிறார்கள். கடலும் அவர்களுடன் பேசுகிறது போலும். காற்றையும் இருளையும் வெயிலையும் அவர்கள் வரவேற்கிறார்கள். தாங்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டதற்காக நன்றி தெரிவிக்கிறார்கள். பலநேரங்களில் காற்றில் சிறுசெடியின் இலை அசைவதைப் போல நளினமாக அவர்கள் கடலின் முன்னே நடனமாடுகிறார்கள்.

திரிசடைவாசிகளாக இருந்த பெண்கள் பருத்த ஸ்தனங்களும், குள்ளமான உருவத்துடனும் இருந்தனர். அவர்கள் சங்கு அறுப்பதில் தேர்ச்சி கொண்டிருந்தனர். ஒவ்வொரு பெண்ணும் ஒரு மூங்கில் சீப்பைத் தலையில் செருகியிருந்தாள். ஒருவர் சீப்பைப் போல மற்றவரிடம் இல்லை. சீப்பு தலையில் இருந்து நழுவி விழுந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.

ஒவ்வொரு நாளின் மாலையும் அந்தப் பெண்கள் சிவப்பும் மஞ்சளுமான மலர்களைத் தங்களது தலை நிறைய சூடிக் கொண்டு குழந்தையைச் சீராட்டும் குரலில் கடலை நோக்கி எதையோ பாடுகிறார்கள். கடல் அதைக் கேட்டுத் துயில்கிறது போலும். அந்தப் பெண்களில் ஒருத்திக்கு இடது கால் இல்லை. சுறா கடித்துத் தின்றுவிட்டதைப் போல எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. அவள் டக்ளஸை எங்கே கண்டபோதும் உடனே குனிந்து கைப்பிடியளவு மணலை அள்ளிக் காற்றில் பறக்கவிட்டு எதையோ தனக்குள்ளாக முணு முணுப்பாள். என்ன சொல்ல விரும்புகிறாள் அவள். அதுவும் வெறுப் பின் அடையாளம்தானா?

கோடானு கோடி மணல் துகள்களில் ஒன்றைப் போல அவனது வாழ்க்கையும் விதியின் கைகளால் மட்டுமே அடித்துக் கொண்டு செல்லப்படுகிறது என்பதைத் தான் அவள் உணர்த்துகிறாள் என்று டக்ளஸ் அன்று அறிந்திருக்கவில்லை.

வெயிலேறிய பகலில் பெண்களும் குழந்தைகளும் கடற்சிப்பிகளைச் சுழற்றிப் போட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள். சில நேரங்களில் மரநிழலில் ஒன்றாக உட்கார்ந்து எதையோ முணுமுணுத்துக் கொண்டிருப்பதும் நடந்தது. அவனை தீவுவாசிகள் கண்டுகொள்ளவேயில்லை. தீவைப்பற்றி கடலோடிகள் எழுதியதில் ஒன்றிரண்டைத் தவிர அத்தனையும் கற்பனை என்றே தோன்றியது.

ஒரு நாளிரவு துப்பாக்கி வீரர்களில் ஒருவன் தன்மீது ஒட்டிக் கொண்டிருந்த கொசுவைத் துரத்துவது போல கைகளை ஆவேசமாக வீசி எதையோ விரட்டிக் கொண்டிருந்தான். எதைத் துரத்துகிறான் என்று புரியாமல் மற்றவர்கள் அவனை விசித்திரமாகப் பார்த்த போது அவன் கூக்குரலிட்டுக் கத்தினான். என்ன செய்கிறது என்று மற்றவர்கள் அவனைப் பிடித்து உலுக்கிக்கேட்கவே ‘தீவுவாசிகளின் வெறுப்பு, தன்மீது சாக்கடைப் புழுக்கள் போல ஊர்ந்து கொண்டேயிருக்கிறது. அந்த வெறுப்பைத் தன்னால் தாங்க முடியவேயில்லை. உடல் முழுவதும் கம்பளிப் பூச்சிகள் அப்பிக் கொண்டிருப்பது போல வெறுப்பு ஒட்டிக் கொண்டிருக்கிறது. சிறுவர்களும் கூட நம்மை வெறுக்கிறார்கள். அந்தக் கண்கள் நம் உடலைத் துளைக்கின்றன. ஊசிமுனை போல குத்துகின்றன. அதை என்னால் தாங்க முடியவில்லை‘ என்று அரற்றினான். அந்த உண்மையை யாவருமே உணர்ந்திருந்தார்கள். ஆனால் அதைப் பகிர்ந்து கொள்ளாமலே இருந்தார்கள். டக்ளஸை அது ஆத்திரப்படுத்தியது.

மறுநாள் டக்ளஸ் பட்டங்கட்டி குடும்பத்தில் இருந்த ஒரு பெண்ணைப் பிடித்துத் தனது கூடாரத்திற்கு இழுத்து வந்து மணலில் பாதி உடம்பு வெளித்தெரியும்படியாக புதைத்து வைத்து அவர்களில் எவராவது தன்னோடு பேசும்வரை அவளை விடப்போவதில்லை என்று கத்தினான். அந்தப் பெண்ணின் கண்களில் பயமேயில்லை. அவளது கூந்தல் காற்றில் அலைந்தபடியே இருந்தது. அதுபோன்ற உக்கிரமான கண்கள் எதையும் டக்ளஸ் கண்டதேயில்லை.

காட்டுப்புலிகள் கூட தன்னை அவன் கொல்ல வந்திருக்கிறான் என்று அறிந்த போதும் இப்படியான வெறுப்பை உமிழ்ந்ததில்லை. ஏன் இவர்களிடம் இத்தனை உக்கிரமான வெறுப்பு. அவன் தன் முன்னே புதையுண்டிருந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் பல்லை உடைக்க வேண்டும் போன்ற ஆத்திரம் உருவானது. ஏன் அவர்களில் ஒருவரும் அவனை எதிர்ப்பதேயில்லை. அவனைத் தாக்கிக் கொல்ல வரும் புலியின் ஆவேசம் அவனுக்குத் தேவைப்பட்டது. அப்போது தான் அவனது ரத்தம் சூடாகும். ஆனால் அவர்கள் தணிந்து போகிறார்கள். உறுதியான தங்கள் மறுப்பைக் கண்களில் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள்.

என்ன தந்திரமிது. ஒருவேளை இந்த யுக்தியால் தன்னை அவர்கள் துரத்திவிடவும் கூடுமோ. அவன் புதையுண்டு கிடந்த பெண் முகத்தருகே குத்துக்காலிட்டு உட்கார்ந்த படியே தன்னோடு ஏதாவது பேசும் படியாகக் கட்டாயப்படுத்தினான். அவள் முகத்தில் அசைவேயில்லை. அவன் தனது கைவிரல்களால் அவள் பற்களைத் திறந்து பேச்சை வெளியே பீறிடும்படி செய்ய முயற்சிப்பவன் போல பலத்தைப் பிரயோகம் செய்தான். அந்தப் பற்கள் திறந்து கொள்ளவேயில்லை. அவள் காதிற்குள் மிக மோசமான வசையைக் கத்தினான். அப்போதும் அவள் தலை கவிழ்ந்தேயிருந்தது.

அன்றிரவு ஆலா குடும்பத்தின் வயதான ஒருவர் ஆமை ஓடு ஒன்றில் அவித்த மீனும் நீரிணிபழத் துண்டுகளும் கொண்டு வந்து டக்ளஸிடம் தந்து, கடலடியில் முத்து விளையும் படுகையைக் காற்றடி காலம் முடிந்த பிறகே அறிந்து வர முடியும் என்றும் சொல்லி அந்தப் பெண்ணைத் தன்னோடு அழைத்துக் கொண்டு போனார். காற்றடி காலம் எப்போது என்று டக்ளஸ் கேட்க விரும்பினான். ஆனால் அதற்குள் அந்தப் பெண்ணும் முதியவரும் அங்கிருந்து விலகிப் போகத் துவங்கியிருந்தார்கள்.

அன்றிரவு டக்ளஸ் தான் சுட்டுக்கொன்ற புலியின் ரோமங்களை ஒவ்வொன்றாகக் கையில் எடுத்து வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான். தீவுவாசிகளின் செயல்பாடு அவனது புலிவேட்டை சாகசங்களைக் கேலி செய்வது போலவே இருந்தது. திடீரென அவர்களை நள்ளிரவில் தாக்கிக் கொன்றுவிட்டால் என்னவென்று கூட தோன்றியது.

அவன் மனது தடுமாறிக் கொண்டேயிருந்தது. தனது சாகசங்கள் வெறும் கற்பனைகள் தானோ என்று தோன்றத் துவங்கியது. ஒருவேளை புலிகள் தன்னைக் கொல்வதற்கு அவனை அனுமதித்திருக்கின்றன என்பதுதான் நிஜமா? தனது வேட்டை அத்தனையும் மிருகங்களின் ஒப்புக்கொடுத்தலால் ஏற்பட்டதுதானா? எந்தப் புலியும் ஏன் தன்னைத் தாக்கிக் கொல்ல முயற் சிக்கவேயில்லை. ஏன் ஒரு புலி அவனிடம் சுடப்பட்டுச் சாக விரும்புகிறது. அவனுக்குள் வாழ்வில் முதன் முறையாக பயத்தின் ஒரு துளி கசியத் துவங்கியது. அவன் விடியும்வரை மணலில் படுத்தே கிடந்தான். நல் முத்துகள் இல்லாமல் வெறும்கையோடு திரும்பிப் போகமுடியாது. எப்படியாவது காத்திருக்க வேண்டும். இது புலிக்காகக் காத்திருப்பதைவிட அதிக பொறுமையும் கவனமும் கொண்டது. அதில் தான் தோற்றுப் போய்விடக்கூடாது என்பதில் மிகுந்த உக்கிரம் கொள்ளத் துவங்கினான்.

தொடரும் 

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.