Our Blog

சமயத்தில் சங்கமித்த சமூகம் - 6


கிபி. 3 ஆம் நூற்றாண்டில் அசோக மன்னரின் உறவினரான மகிந்தர் இலங்கை செல்லும் வழியில் காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கி 7 புத்த விகாரங்களைக் கட்டியதாக சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கூறுகிறது. பௌத்தர்களின் சிறு தெய்வங்களில் ஒன்றாகிய தாராதேவி என்னும் மணிமேகலை தெய்வம் கடல் காவல் தெய்வமாகும். இது கோவலனின் குல தெய்வமுமாகும். இதனாலேயே தனக்கும் மாதவிக்கும் பிறந்த மகளுக்கு மணிமேகலை எனப் பெயரிட்டான் கோவலன். இத்தெய்வத்தை சமுத்திர மணி மேகலை, முதுமணிமேகலை என்றும் வழங்குவர். பௌத்த மத குறியீடுகள் எட்டில் இரட்டை மீன் குறியீடு, சங்கு குறியீடு, கப்பலை ஓட்டும் சருக்கியின் குறியீடு என கடல் சார்ந்த 3 குறியீடுகள் இடம் பெற்றிருப்பதும் கவனத்திற்குரியது. 

சிலம்பில் அழற்படுகாதையில் மதுரையில் கண்ணகியின் கோவத்தைத் தவிர்க்க மதுராபதி தெய்வம் முயலும் காட்சியுள்ளது. பத்தினி தெய்வ வழிப்பாட்டில் கண்ணகியின் பங்கு மிகவும் முக்கியமானது. சேரன் செங்குட்டுவன் சுருளி மலையில் கண்ணகிக்கு கோவில் எழுப்ப பாண்டியன் நெடுஞ்செழியன் மகன் வெற்றி வேல் செழியன் கொற்கையில் கோயில் எழுப்பினான். வெற்றி வேல் அம்மன், செழிய நங்கை, செழுகை நங்கை என அழைக்கப்பட்ட அவ்வம்மன் சிலை தற்போது காணாமல் போய் அவ்விடத்தில் துர்க்கையம்மன் சிலை மட்டுமே உள்ளது. கண்ணகி வழிபாடே நாளடைவில் பகவதி அம்மன் வழிபாடாக உருப்பெற்றது. பகவதி வழிபாடு பரதவரிடம் காணப்பட்ட வழிபாடுகளில் ஒன்றாகும். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை கட்டியது பரதவ சிற்றரசன் வில்லவராயனே. இன்றுவரை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கொடியேற்ற நிகழ்வில் பரதவர்கள் முக்கிய இடம் பெறுவதும் வழக்கிலுள்ளது.

பரதவர்கள் கடல் தொழில், உப்பு வணிகம், பண்டமாற்றுதல் (வணிகம்) என வேலை சார்ந்த பிரிவினைகள் உருவான போது செல்வம் பெருக பெருக கடற்கரையை ஒட்டிய ஊர்களில் குடியேறி வணிகத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இவர்கள் தமது சமூக அந்தஸ்தையும், பூர்வாசிரமத்தையும் நிலைநாட்ட சமண மற்றும் பௌத்த சமயங்களை தழுவினர். மீன்பிடித்தலும், வேட்டையாடுதலும் கொலைத் தொழில் என சமணம் கூறியது. இதனையே பட்டினப்பாலை பின்வருமாறு கூறுகிறது.

‘வலைஞர் முன்றில் மீன் பிறழ்வும் 

விலைஞர் குரம்பை மா ஈண்டவும் 

கொலை கடிந்து’ ....

இதன் பொருளாக மீன் பிடிப்போரையும், இறைச்சி விற்போரையும் தமக்குப் பகையாகக் கொண்டு, தாம் முற்பட்ட கொலைத் தொழிலை அவர்களிடமிருந்து போக்கி வாழ்ந்து வந்தனர் என்பதாகும். அவர்களில் ஊண் உண்போர் பௌத்த சமயத்தையும், ஊண் உண்ணாதோர் சமண சமயத்தையும் ஏற்றுக் கொண்டனர். இவர்களே ‘குலத்தில் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்’ என அழைக்கப்பட்டனர். 

முற்காலத்தில் மூக்கையூர், வேம்பாறு, வைப்பாறு ஆகிய பகுதிகளில் வாழ்ந்த பரதவர்களின் முக்கிய மீன் பிடி தலமாக அமைந்த நல்ல தண்ணி தீவுப் பகுதியின் கரைப் பகுதியில் காணப்படும் கீழமுந்தல் கிராம தெய்வமாக ‘தாராதேவி’ இருந்தாகவும், தற்போது ‘சேது வந்த அம்மன்’ என்னும் பெயரில் குறிக்கப்படுவதாகவும் அறிய முடிகிறது. இவ்வூருக்கு அருகே காணப்படும் மாரியூர் கடற்கரையோரக் கோவிலில் ‘பவள நிற வல்லியம்மன்’ என்னும் பெயரில் உமையாள் வழிபாடு நடைபெறுகிறது.

மதுரையை அடுத்த அரிட்டாபட்டி கழிஞ்ச மலை குகையில் காணப்படும் சமணர் படுகைகளை இலஞ்சியின் தலைவன் மாபரவன் மகன் இமயவன் அமைத்துக் கொடுத்ததாகக் காணப்படும் கல்வெட்டின் மூலம் சமணம் தழைக்க பரவர்கள் காரணமாக இருந்ததை உறுதி செய்ய முடிகிறது. தவிர கொற்கையிலும், பழைய காயலிலும், வேம்பாற்றிலும் சமணர் கால கற்பீடங்களும், சிலைகளும் காணப்படுவதும், கடலோர கிராமங்கள் பலவற்றிலும் சமணர் சிலைகள் காணப்படுவதும் சமண வழிபாடு கடலோரத்தில் காணப்படுவதை உறுதிப்படுத்த முடிகிறது. 

பரதவர்கள் வழிபாட்டில் ஊர் தேவதைகள் எனப்பட்ட அம்மன்களே பெரிதும் இடம் பெற்றனர். எனினும் மீனாட்சியே இவர்களின் குல தெய்வமாகும். மீன்பிடித்தலிலும், முத்தெடுத்தலிலும் ‘மீனாட்சி பங்கு’ என்று எடுத்து வைத்தனர். குமரி அம்மன் இவர்களின் முக்கிய தெய்வங்களில் ஒன்றாகும். இவ்வம்மனை ‘கடல் கெழு செல்வி’ என அழைத்து மகிழ்ந்தனர். குமரி அம்மனும், கொற்கை மாரியம்மனும் பரதவர்களின் முக்கிய கடல் காவல் தெய்வங்கள் ஆகும். இவ்விரு அம்மன்களின் கோவில் சன்னிதிகளும் கடலை நோக்கியவாறு அமைந்திருக்கிறது.

புதுச்சேரி, வீராம்பட்டினத்திலுள்ள செங்கழுநீர் அம்மனும் பரதவர் வழிபட்ட முக்கிய தெய்வம் ஆகும். ஒரே தேவதாரு மரத்துண்டினால் செய்யப்பட்டதே இவ்வம்மன் சிலையாகும். பட்டாரிகா, தேவகன்யா, பத்மகன்யா, சிந்து கன்யா, சுகல கன்யா, வனகன்யா, சமாதி கன்யா, என அழைக்கப்பட்ட சப்த கன்னியரின் வழிபாடும் பரதவரிடம் அக்காலத்தில் காணப்பட்டன.

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.