Our Blog

புன்னைக்காயல் மருத்துவமனை

புன்னைக்காயல் என்னும் தென் தமிழகக் கடற்கரை ஊர் தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் என்றும் நிலைத்திருக்க வேண்டிய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். தமிழகத்தில் முதல் தமிழ்க் கல்லூரியும் (கி.பி. 1567) முதல் தமிழ் அச்சுக்கூடமும் (கி.பி. 1578) முதல் வேதியர் பயிற்சி நிலையமும் (கி.பி.1550) தோன்றியது இவ்வூரில் தான். அனைத்திற்கும் மேலாகத் தமிழகத்திலேயே மருத்துவப் பணிக்கென்று முதல் மருத்துவமனையை உருவாக்கியதே புன்னைக்காயல்தான்! அந்த வகையில் புன்னைக்காயலின் புகழ் தமிழகத்தில் மங்கி மறையாமல் என்றும் நிலைத்திருக்கும்.

தமிழகத்தின் முதல் மருத்துவ மனையை உருவாக்கித் தென்னிந்தியா முழுமைக்கும் மருத்துவப் பணிக்கு வழிகாட்டிய இப்புகழ்மிக்கப் புன்னைக்காயலில் தற்போது தமிழக முன்னணித் தொழிலதிபர் திரு A.ராஜா பிஞ்ஞேயிர அவர்கள் பெருந்தொகை செலவு செய்து கட்டியெழுப்பியுள்ள புதிய மருத்துவ மனையைத் தூத்துக்குடி முன்னாள் ஆயர் அருட்பெருந்தகை M.அம்புரோஸ் அவர்கள் திறந்து வைத்துள்ளார்கள். புன்னைக்காயலில் ஏறக்குறைய 455 ஆண்டுகளுக்கு முன்னால் சிறப்புடன் பணியாற்றி வந்த அந்தப் பழைய முதல் மருத்துவமனையை நம் நினைவுக்குக் கொண்டு வருவோம். இப்பழைய மருத்துவமனையின் தோற்றம், சிறப்பு, பணிகள் ஆகியவற்றை வரலாற்று ஆதாரங்களுடன் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

தோற்றம்

போர்த்துக்கீஸியரின் ஆதரவின் கீழ் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் இந்தியாவின் தென்பகுதிகளில் கிறிஸ்தவத் திருமறையைப் பரப்பி வந்த யேசு சபையினரின் அரிய முயற்சியினால் பல அற நிலையங்களும், அறிவாலயங்களும் இந்தியாவில் உருவாகின. இருப்பினும் அக்காலத்தில் இந்தியா முழுவதுமே இரண்டு பெரிய மருத்துவ மனைகளே இயங்கி வந்தன. ஒன்று சால்செட்டிலும், மற்றொன்று புன்னைக்காயலிலும் நிறுவப் பட்டிருந்தன. (1) 

அந்த வகையில் புன்னைக்காயல் மருத்துவமனை தமிழ்நாட்டில் உருவான முதல் மருத்துவமனை என்பதில் ஐயமில்லை. புனித சவேரியாருக்குப் பின் முத்துக்குளித்துறைப் பகுதியின் தலைமைக் குருவாகப் பணியாற்றி வந்த யேசு சபைக் குரு ஹென்றி ஹென்றிக்கஸ் என்பவரே இம்முதல் மருத்துவமனையை 1550-ஆம் ஆண்டு புன்னைக்காயலில் நிறுவினார். இது பற்றி அவர் உரோமையிலுள்ள யேசுசபைத் தலைவர் இல்லத்திற்கு 1551-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி எழுதிய மடலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.

"முத்துக்குளித்துறையிலும், உள்நாட்டுப் பகுதியிலும் பிணியுற்ற ஏழைமக்களின் நலனுக்காக அண்மையில் புன்னைக்காயலில் புதிதாக ஒரு மருத்துவமனையை உருவாக்கியுள்ளோம். இந்த மருத்துவமனையானது, இந்நாட்டிலேயே மிகவும் வியக்கத்தக்கப் புதுமையான ஒரு நிறுவனமாகும். இப்படிப்பட்ட ஒன்றை இப்பகுதியில் வாழும் மக்கள் இதுவரை அனுபவித்ததே இல்லை....... இம்மருத்துவமனையானது நமது (யேசு சபை) இல்லத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது.(2) 

இம்மருத்துவ மனையில் சாதிமத வேறுபாடின்றி எல்லாப் பிணியுற்ற மக்களும் அன்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். இங்கு விளங்கிய கிறிஸ்தவப் பிறரன்பு பிறமத மக்களை மிகவும் கவர்ந்தது. "இத்தகைய அன்பு அவர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவம்! அதனால் கிறிஸ்தவத் திருமறையை அவர்கள் தங்களின் தாய் எனக்கருதினர். பலர் தங்களின் மரணப்படுக்கையில் திருநீராட்டுப் பெற்று இறந்தனர்."(3)

அக்காலத்தில் முத்துக்குளித்துறையில் போர்த்துக்கீசியத் தளபதியாகப் பணியாற்றி வந்த மனுவேல் ரொட்ரீகஸ் குட்டினோ என்பவர் புன்னைக்காயல் மருத்துவமனையைத் தனது சொந்த வீடாகவே கருதி அங்கேயே அவர் வாழ்ந்து வந்தார். அங்கிருந்த பிணியாளர்களையும் அவர் தனது சொந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே மதித்துப் பேணினார். ஏழைப் பிணியாளர்கள் மீது அவர் காட்டிய இரக்கமும், அன்பும் இன்னும் பல அதிகாரிகளையும் இம்மருத்துவமனையில் சேவை செய்யும்படித் தூண்டியது. (4)

மருத்துவர்:

புன்னைக்காயல் மருத்துவமனையில் முதல் தலைமை மருத்துவராக முத்துக்குளித்துறையைச் சேர்ந்த ஒருவரே பணியாற்றி வந்தார். இவரைப் பற்றி சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் 1551-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி யேசுசபைத் தலைமை இல்லத்திற்கு எழுதியதாவது:- "இம்மருத்துவ மனையில் தலைமை மருத்துவராக இப்பகுதியைச் சேர்ந்த ஒருவரே பணியாற்றி வருகிறார். இவர் முன்னர் இப்பகுதியிலுள்ள மக்களுக்கு மறைக்கல்வி போதித்தவர். சிறந்த பக்திமான். இவரும் இவரது மனைவியும்
ஆசீர்வதிக்கப்பட்ட புண்ணிய சீலர்கள். இறைவனின் அருளால் இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்த பிறகு, இருவருமே இப்போது பிரம்மச்சாரிகளாகக் கற்பு வாழ்க்கையை மேற்கொண்டு தங்களை இறைவன் சேவைக்கே அர்ப்பணித்துவிட்டனர். இறைவன் அவர்களை எந்நாளும் ஆசீர்வதிக்கட்டும்!"(5)

சில வேளைகளில் யேசு சபைச் சகோதரர்கள் ஒரு சிலரும் இம்மருத்துவமனையில் பணி புரிந்தனர். விசுவாச வாழ்விலும், பிறர் பணியிலும் ஆர்வமிக்கக் கிறிஸ்தவர்களுக்காக சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் 1572-ஆம் ஆண்டில் புன்னைக்காயலில் ஏற்படுத்தியிருந்த 'பிறரன்புச் சபை" (Confraternity of Charity)எனும் பக்திச் சபையிலிருந்து வாரந்தோறும் இரு ஊழியர்கள் இம்மருத்துவமனையில் பிணியாளர்களுக்குச் சேவை செய்தனர். 

ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் "பிறரன்புச் சபை" வாரக் கூட்டத்தில், அந்த வாரம் முழுவதும் மருத்துவமனையில் பணி செய்வதற்கென இருவர் நியமிக்கப் படுவர். (6). இவர்கள் பிணியாளர்களை அன்புடன் பராமரித்ததோடு, மரணப் படுக்கையிலிருந்தவர்களையும் தேற்றி, அவர்கள் நல்ல மரணமடையும்படி உதவினர். மேலும் ஏழைப் பிணியாளர்களுக்கு உணவும் குளிர்காலத்தில் உடையும் இலவசமாக வழங்கினர். (7)

புன்னைக்காயல் மருத்துவமனையில் கிறிஸ்தவர் மட்டுமின்றி, பிறமத மக்களும் சிகிச்சையோடு இலவச உணவும், உடையும் பெற்று வந்ததினால் அதன் பொருளாதாரம் பின் தங்கிய நிலையிலிருந்தது. இதற்காக வாரந்தோறும் அந்தப் பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஊர்களின் மக்களிடமிருந்து இம்மருத்துவமனையின் செலவுக்காக நன்கொடை வசூலிக்கப்பட்டது. (8) 

முத்துக்குளி நடக்கும் காலங்களில் கிறிஸ்தவர்கள் புன்னைக்காயல் மருத்துவமனைக்குப் பெருந்தொகையை நன்கொடையாகக் கொடுத்து வந்தனர். 1560- ஆம் ஆண்டு முத்துக்குளிப்பின் போது மட்டும் பெருமளவு நன்கொடை வழங்கினர். முத்துக்குளிப்புக் காலங்களில் பொதுமக்கள் இம்மருத்துவமனைக்குத் தாராள மனதுடன் நன்கொடை வழங்கினர். (9).

மேலும் முத்துக்குளித் துறைப் பகுதி வாழ் கிறிஸ்தவ மக்கள் செய்யும் குற்றங்களுக்குத் தண்டனையாக அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதப் பணமும் புன்னைக்காயல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி போர்த்துக்கீஸியத் தளபதி ஏற்பாடு செய்திருந்தார். இது பற்றி வேம்பாறு ஊரைச் சேர்ந்த தியோகு டி மஸ்கித்தா என்பவர் 1583- ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தூத்துக்குடியில் கூறிய சாட்சியமாவது:

"ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக ஹென்றி குருக்கள் புன்னைக்காயலில் மருத்துவமனையொன்று நடத்தி வருகிறார். இம்மருத்துவமனையின் செலவுகள் மக்கள் வழங்கும் தர்மத்தைக் கொண்டும், முத்துக்குளியின்போது கிறிஸ்தவ மக்கள் வழங்கும் நன்கொடை கொண்டும், குற்றங்கள் புரிந்த கிறிஸ்தவர்களுக்கு இக்குருக்கள் விதிக்கும் அபராதப் பணமும் கொண்டு நடத்தி வருகின்றனர். " (11)

போர்த்துக்கீசியப் போர் வீரர்கள் இந்தியாவின் வெப்பத்தன்மையாலும், நலக்குறைவுள்ள உணவினாலும் பாதிக்கப்பட்டு அடிக்கடி நோயில் விழுந்தனர். பிணியுற்ற அவர்கள் தகுந்த உதவியின்றி கைவிடப்பட்ட நிலையில் மேலும் குறைந்த வருமானமுடைய அவர்கள் வறுமைக்குப் பலியாகித் தவித்தனர். இவ்வெளிய போர்த்துக்கீஸிய வீரர்கள் புன்னைக்காயலின் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் பிணியுற்றப் போர்த்துக்கீசிய வீரர்களுக்கெனப் புன்னைக்காயலில் ஒரு மருத்துவமனையை அவர் இருந்த ஆலயத்துக்கருகிலேயே 1551-ஆம் ஆண்டு நிறுவினார். இம்மருத்துவமனையின் கட்டிடச் செலவினைப் போர்த்துக்கல் நாட்டு மன்னரே ஏற்றுக் கொண்டார். (12) இப்போர்த்துக்கீசிய மருத்துவமனையின் நிரந்தரப் பொருளாதாரத்துக்கென்று, முத்துக்குளித்துறைத் தளபதி மனுவேல் குட்டினோ செய்த விண்ணப்பத்திற்கிணங்க, கோவை மேலாணையாளர் (Viceroy) ஆண்டுதோறும் 100 ஸ்குடி என்னும் தொகை அனுப்பி வைத்தார்.(13)

மருத்துவமனையின் மறைவு:

பொதுமக்களுக்காகவும் போர்த்துக்கீஸியருக்காகவும் புன்னைக்காயலில் ஏற்படுத்தப்பட்ட இவ்விரு முதல் மருத்துவமனைகளும் 1553-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எதிரிகள் (வடுகர்கள்) புன்னைக்காயல் மீது நடத்திய படையெடுப்பின் போது நெருப்புக்கு இரையாகி அழிந்து போயின என்று சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் புனித இஞ்ஞாசியருக்கு எழுதியுள்ள மடலிலிருந்து அறிகிறோம்.. (14) அதன் பிறகு யேசு சபைக் குருக்கள் மக்கள் தாராளமுடன் வழங்கிய நன்கொடையைக் கண்டு மீண்டும் ஒரு மருத்துவமனையைப் புன்னைக்காயலில் எழுப்பினார். இம்மருத்துவமனையில் மருத்துவர்களாகப் பணியாற்றியவர்களுக்குக் கிறிஸ்தவ மக்கள் வழங்கிய தர்மப் பணத்திலிருந்தே சம்பளம் வழங்கப்பட்டது. 

இந்த மருத்துவமனையானது 1590-ஆம் ஆண்டு வரை இயங்கி வந்ததற்குச் சான்றுகள் உள்ளன. (15) முத்துக்குளித் துறையில் 1579-ஆம் ஆண்டு வரை யேசு சபையின் தலைமை இல்லமாக விளங்கிய புன்னைக்காயலின் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்து யேசு சபையினர் தங்களின் தலைமை இல்லத்தைத் தூத்துக்குடிக்கு மாற்றிவிட்டனர். அது முதல் புன்னைக்காயல் மருத்துவமனையும் தனது பழைய மாண்பினை இழந்து விட்டது. (16). அடிக்கடிப் புன்னைக்காயல் மீது மதுரை நாயக்கனின் வடுகர் படையினர் நடத்தியத் தாக்குதலின் போது இம்மருத்துவமனையும் வலிமை இழந்து படிப்படியாக மறைந்திருக்க வேண்டும் என நம்பலாம்.

பிற மருத்துவ மனைகள்:

புன்னைக்காயல் மருத்துவமனையினால் மக்களுக்கும், கிறிஸ்தவ மறைக்கும் விளைந்த ஏராளமான நன்மைகளைப் பார்த்துவிட்டு முத்துக்குளித்துறையின் மற்ற முக்கிய ஊர்களிலும் மருத்துவமனைகள் அமைப்பதற்குச் சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் அரும்பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். அதன்படி 1566-ஆம் ஆண்டு சில பெரிய மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டன. இம்மருத்துவமனைகளின் நிர்வாகப் பொறுப்பினை கிறிஸ்தவ மக்களிடமே அவர் ஒப்படைத்தார். 

மேலும் மருத்துவர்களாகவும் இப்பகுதியில் வாழும் மக்களையே நியமித்தார். ஒவ்வொரு கிறிஸ்தவ ஊரிலுமுள்ள பொதுமக்களிடமிருந்து உணவும், உடையும் தர்மமாகப்பெற்று இம்மருத்துவமனைகளிலுள்ள ஏழைப் பிணியாளர்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தார். தூத்துக்குடியில் கிறிஸ்தவத் தனவந்தர் ஒருவர் தனது சொந்த செலவிலேயே பெரிய மருத்துவமனையொன்றை நிறுவினார். 

முத்துக்குளிப்பு நடக்கும்போதெல்லாம் தூத்துக்குடி வாழ் கிறிஸ்தவ மக்கள் இம்மருத்துவமனைக்குத் தாராளமுடன் பொருளுதவி வழங்கினர் (17). தூத்துக்குடி மருத்துவமனையானது 1603-ஆம் ஆண்டு கயத்தாறு மன்னனும், மதுரை நாயகனும் சேர்ந்து தூத்துக்குடியின் மீது நடத்திய தாக்குதலின் போது நெருப்புக்கு இறையாகி அழிந்தது. (18)

1572-ஆம் ஆண்டின் யேசு சபைக் கணக்குப்படி, முத்துக்குளித்துறையில் மொத்தம் 27 கிறிஸ்தவ ஊர்களும், 20 கோயில்களும், 7 மருத்துவமனைகளும் இருந்தன. இவ்வேழு மருத்துவமனைகளும் கீழ்க்கண்ட ஊர்களில் இயங்கி வந்தன.

1. மணப்பாடு

2. வீரபாண்டியன்பட்டணம்

3. புன்னைக்காயல்

4. தூத்துக்குடி

5. வைப்பாறு

6. மன்னார்

மன்னாரில் போர்த்துக்கீஸியருக்கும் பொதுமக்களுக்கும் என்று இரு மருத்துவமனைகள் இருந்தன. இவ்வேழு மருத்துவமனைகளிலும் மிகப் பெரியதும், சிறப்பு மிக்கதும் புன்னைக்காயல் மருத்துவமனையே! (19) தமிழ்நாட்டின் மருத்துவப் பணிக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் விளங்கி, கிறிஸ்தவப் பிறரன்பை சாதிமத வேறுபாடின்றி தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கி வந்த புன்னைக்காயலைத் தமிழக மக்கள் எளிதில் மறந்துவிட முடியாது.

(நன்றி:ஞானதூதன் 1977)


அருட்திரு. வெனான்சியுஸ்


வரலாற்று ஆய்வாளர், தூத்துக்குடி மறை மாவட்டம்

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.