Our Blog

புறநானூறில் பரதவர்


புறநானூறில் இருந்து பரதவர் பற்றிய இன்னும் சில தகவல்கள்

புறநானூறு 378

சோழ வேந்தன் நாட்டை விரிவாக்கும் நோக்கத்தில் வஞ்சிப் பூச் சூடி, செருப்பாழி என்னும் கோட்டையை அழித்துத் தனதாக்கிக்கொண்டான். அந்த வஞ்சிப் போரைப் புலவர் பாடினார். அது கேட்ட வேந்தன் புலவர்க்கு அவர் அறிந்திராத அரிய அணிகலன்களை வழங்கிச் சிறப்பித்தான். 

தென்னாட்டுப் பரதவரின் கொட்டத்தை அடக்கி அவர்களை வேரோடு சாய்த்தான். வடநாட்டு வடுகரை வாட்போரில் வென்றான். அவன் தலையில் தொடுத்த கண்ணி. கையில் வேல்.அவன் குதிரையின் குளம்பு [வடிம்பு] எங்கும் பாவின.

அவன் அரண்மனை [கோயில்] தோரண மாலை, கள் ஆகியவற்றின் இருப்பிடம். மேற்குத் திசையில் தோன்றும் பிறை வடிவில் வெண்ணிறத்தில் அமந்திருந்தது. குளிரந்த நீர் கொண்ட குளம் போன்ற அகழியுடன் திகழ்ந்தது.
அந்தக் கோட்டை வாயிலில் நின்றுகொண்டு, தன் பெரிய கிணைப் பறையை முழக்கிக்கொண்டு, வேந்தனின் வஞ்சிப்போர் வெற்றியைப் பாடினார்.


அதனைக் கேட்ட வேந்தன் அரிய அணிகலச் செல்வத்தைப் பரிசாக வழங்கினான். அவை புலவருக்காகச் செய்யப்பட்டவை அல்ல. மேம்பட்ட சிறப்புடையவை. புலவர் தாங்கமுடியாத அளவு மிகுதியாக வழங்கினான்.


அதனைப் பார்த்த புலவரின் பெருஞ் சுற்றத்தார் விரலில் அணியவேண்டிய அணிகலனைக் காதில் மாட்டிக்கொண்டனர். காதில் அணிய வேண்டியவற்றை விரலில் மாட்டிக்கொண்டனர். இடுப்பில் அணிய வேண்டியவற்றைக் கழுத்தில் மாட்டிக்கொண்டனர். கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டியனவற்றை இடுப்பில் கட்டிக்கொண்டனர்.

இது எப்படியிருந்தது என்றால்,

கடுமையான போர்த்திறம் கொண்ட இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை அரக்கன் இராவணன் தன் வலிமை மிக்க கைகளால் தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன் கணவன் அடையாளம் கண்டுகொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள் அணியுமிடம் தெரியாமல் அணிந்து அழகுபார்த்துக் கொண்டது போல் எனக்கு நகைப்பு விளைவிப்பதாக இருந்தது.


தென் #பரதவர் மிடல் சாய,

வட வடுகர் வாள் ஓட்டிய,

தொடை அமை கண்ணி, திருந்து வேல் தடக்கை,

கடு மா கடைஇய விடு பரி வடிம்பின்,

நல் தார், கள்ளின், சோழன் கோயில், 5

புதுப் பிறை அன்ன சுதை சேய் மாடத்து,

பனிக் கயத்து அன்ன நீள் நகர் நின்று, என்

அரிக் கூடு மாக் கிணை இரிய ஒற்றி,

எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கு என வகுத்த அல்ல, மிகப் பல, 10

மேம்படு சிறப்பின் அருங் கல வெறுக்கை

தாங்காது பொழிதந்தோனே; அது கண்டு,

இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல்,

விரல் செறி மரபின செவித் தொடக்குநரும்,

செவித் தொடர் மரபின விரல்செறிக்குநரும், 15

அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,

மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்,

கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,

நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் 20

செம் முகப் பெருங் கிளை இழைப்பொலிந்தாஅங்கு,

அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே

இருங் கிளைத் தலைமை எய்தி,

அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே.


திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங் குடையார்பாடியது.

காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.