Our Blog

சேர மன்னனின் செப்புப் பட்டயம்


இந்தியப் பிரதமர் மோடி, 3 நாள் அரசு முறைப் பயணமாக கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் சென்றார். அப்போது இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு 2 செப்புப் பட்டயங்களை நினைவுப் பரிசாக வழங்கினார். இரண்டுமே பழங்கால தமிழ் வட்டெழுத்துகளால் எழுதப்பட்டவை. முதல் செப்புத்தகடு சேர மன்னரும், அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவருமான சேரமான் பெருமானால் யூதர்களின் தலைவன் ஜோசப் ராபனுக்கு வழங்கப்பட்டது. மற்றொன்று, சேர நாட்டவருக்கும், யூதர்களுக்கும் இருந்த வர்த்தக தொடர்புகள் பற்றியது. யூதர்களின் தலைவனான ஜோசப் ராபன், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஷிங்க்லி என்ற பகுதியில் இளவரசராக இருந்துள்ளார். இந்த ஷிங்க்லி பகுதி, 'யூதர்களின் இரண்டாம் ஜெருசலேம்' என்று இன்றளவும் அழைக்கப்படுகிறது.

யூதர்களுக்கும் சேரர்களுக்கும் விரிவான வர்த்தகத் தொடர்புகள் இருந்தன. அக்காலக்கட்டத்தில் சேரமான் பெருமான், ஜோசப் ராபனுக்கு அனுப்பிய செப்புத் தகடுதான் இப்போது பிரதமர் மோடியால் இஸ்ரேல் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் செப்புத் தகடுகள், கேரளாவில் திருவல்லா பகுதியில் அமைந்துள்ள, 'மல்லங்கரா மார் தோமா சிரியன்' தேவாலய நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது.

யார் அந்த சேரமான் பெருமான்?

தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் சேரர் குடியில் பிறந்தவர்தான் சேரமான் பெருமான் . இவர் மன்னர் மட்டும் அல்ல, சைவத்தையும் தமிழையும் போற்றிப் பாடிய அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். 'சேரர் குலம் செய்த சிவபுண்ணியங்களால் பிறந்தவர்' என்று இவர் போற்றப்படுகிறார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பெருமாக்கோதையார். சிறுவயது முதலே, திருஅஞ்சைக்களத்து இறைவனின் மீது பேரன்பு கொண்டவர். திருமுகப் பாசுரம் அருளிய பெருமைக்குரியவராவார். சேக்கிழார் இயற்றிய கழற்றறிவார், வெள்ளானைச் சருக்கம் ஆகியவற்றில் இவரைப் பற்றிக் குறிப்புகள் உள்ளன. சுந்தரரின் உற்ற நண்பர். சுந்தரர் பெருமான் கயிலை செல்லும்போது இவரும் உடன் சென்றவர் .

ஒருமுறை சுந்தரர் திருவஞ்சைக்களம் சென்று இறைவனைப் போற்றித் 'தலைக்குத் தலைமாலை' என்ற திருப்பதிகத்தைப் பாடினார். இறைவனும் இவரின் பாசத்தளையைப் போக்கி அருள்புரிய விரும்பினார். அதன்பொருட்டு இந்திரன் முதலான தேவர்களையும், வெள்ளை யானையும் அனுப்பி கயிலாயம் அழைத்துவரச் சொன்னார்.

அதன்படி இந்திரன் முதலான தேவர்கள் வெள்ளையானையுடன் திருவஞ்சைக்களம் சென்றடைந்தனர். சுந்தரரிடம் இறைவனின் விருப்பத்தைக் கூறினர். சுந்தரரும் யானையின் மீது ஏறி 'தானென முன் படைத்தான்' என்ற பதிகத்தைப் பாடிக்கொண்டே கயிலாயம் சென்றார்.

இதனைத் தன் யோகக்கண்ணால் அறிந்த சேரமான் நாயனாரும் ஒரு குதிரையின் மீது ஏறி திருவஞ்சைக்களம் சென்றடைந்தார். அங்கே சுந்தரர் கயிலாயம் செல்லும் அற்புதக் காட்சியைக் கண்டுகளித்தார். தானும் கயிலாயம் செல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு குதிரையின் காதில் திருஐந்தெழுத்தினைப் பாடிக் கயிலாயம் சென்றடைந்தார்.

இந்த நிகழ்ச்சி பற்றி அருணகிரிநாதர் தமது திருப்புகழில், நாத விந்துக லாதீ நமோநம என்று தொடங்கும் பாடலின் நிறைவில்,

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை

சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்

ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய

சேரர் கொங்குவை காவூர் நனாடதில்

ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

என்று சேரமான் பெருமாள் நாயனார் கயிலாயம் சென்றது பற்றி குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் மொழியின் தொன்மையும், தமிழர்களின் வர்த்தகத் திறனும் உலகளாவியது என்பதை இந்த செப்புப் பட்டையம் உணந்த்துகிறது.

(12.07.17)

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.