Our Blog

வேம்பாற்றுப் பெரியடப்பனாரின் புதல்வருக்குப் பிரிவாற்றக் கவிகள்

A.M.D.G

வேம்பார் ஸ்ரீ-மான் சந்தியோகு மாதவடியாப் பெர்னாந்து அடப்பனாரவர்களின் சிரேஷ்ட புத்திரரும், அலெக்ஸ் பெர்னாந்து அவர்களின் பிரிய பிதாவும் எனது சிறிய தந்தையவர்களுமான ஸ்ரீ-மான் சவியேர் எஸ்தேவுப் பர்னாந்து அவர்களின் மரணத்தைக் குறித்து பிரிவாற்றக்கவிகள் 

அறுசீர் விருத்தம் 

திருமருவும் நிம்ப நகர்த்திங்கள் குலாதிப தலைமைச் சிரேஷ்டராய் நின்
றுருமருவப் புகழ் படைத்த பெரியடப்பனாரெனு மாவுசித பூமன்
மரு மருவுந் திண்புயவான்  சந்தியோகு மாதவடியாப் பெர்னாந்து
தருமருமைச் சிரேஷ்ட புத்ரா சவியேரெஸ்தேவுப் பர்னாந்து தாரா 

விற்பனமார் காருண்யா மேதினியோர் புகழ் சுகுணா, மேன்மையாளா 
கற்பகம்போல் வரிஞர்களுக்கு பகார தீரகுண கருணையாளா 
சற்குருக்களன்பு நிறை தவவொழுக்கந் தெய்வ பக்தி சார்ந்த சீலா 
தற்பரனை யனுதினமும் போற்றி நிற்கும் சாதுரிய சத்யவாக்யா 

பத்தொன்பானூற்றுச் சதூர்த்தசி சகாப்த மதி பகரக்றோபர் 
மத்தியின் மூவைந்தா நாட் குருவாரம் மாலை ஏழரை மணிக்கு 
இத்தரையின் வாழ்வனைத்தும் விழலெனவே புரம்போக்கி இல்லாளோடு 
புத்திர சோதரர்களையும் புலம்ப விட்டுப் பரகதியிற் புகுந்தீரந்தோ 

முரசு  தவில் வாத்தியங்கள் திரையொலியை நிகர்த்ததென முழங்கியார்ப்ப 
வரிசையோடு குடைசுருட்டி ஆலவட்டக் கொடிகளிறு மருங்கிற் சூழ 
குருசு மணியோடு சடத்தை வெகு சனங்கள் புடைசூழக்கோவிற்கெய்து  
பரிசுறுபாக்கியநாதர் பூசையுடன் ஒப்பீசும் பாடினாரே 

உருக்கமுள சோதரரும் மனைவி மைந்தர் மருமக்களொடு பவுத்ர    
வருக்க முடன் மைத்துனரோடுற்ற பந்து மித்திரரும் வருந்தித்தேம்ப 
மறுக்கமழச் சடலமதைச் சத்யமறைவிதி யோழுங்காய் மந்திரித்துத் 
திருச்செபங்கள் நிறைவேற்றிச் சிமித்தேரிதனிற் கொடுபோய்ச் சேமித்தாரே 

எண்ணரிய புகழ்படைத்த என் சிறிய தந்தையரே எப்போ காண்பேன்
நண்ணரிய பேரின்ப வாழ்வுகந்து புவிவாழ்வு நசையை நீக்கி
விண்ணரிய சேசு திரு இருதயத்திலிளைப்பாற விரும்பியிந்த
மண்ணறையிற் போயப்புகுந்தீரென்னாளு முமதருமை மரக்கொண்ணாதே

பாங்காகத் திருடனைப்போற் சாவு வருமென்று முன்னோர் பகர்ந்தவண்ணம்
சாங்காலம் வந்ததுவோ என்னருமைத் தந்தையரே தலத்தை விட்டு
ஆங்காங்கு சென்றிருந்த மைந்தர்கட்கும் சோதரர்க்கும் அருகில்வந்து
நீங்காமற் காத்திருக்கக்கிடைத்த தவம் யான்பெறவும் நேர்ந்திலேனே

தங்களின் சகோதரியும் தாஸ்டீக மைத்துனராம் சம்பிரதாய
துங்கன் அய்யாத்தம்பி தேமேல் ப்ரபுடீகசுகுணரும் மாசுமுகமேவும்
இங்கித செல்லையாத் தேமேல் மருகரும் தங்களிறப்பையெண்ணிப்
பொங்கி மனம் வருந்தி விழி நீர் புரளப்பரிதாபித்துப் புலம்பினாரே.

பக்தியோடு சேசுமரி சூசையெனுந் திருநாமம் பணிந்து போற்றி
முக்திவழியுணர்ந்த வுமதாத்துமத்தைப் பேரின்ப மோட்சஞ்சேர்த்து
உத்தரிக்குந் தலத்திலுள வேதனையையகற்றி நீடுழிகாலம்
நித்ய சுகவாழ்வருளப்பரமனிடம் மன்றாடி நிற்கின்றேனே.

இங்ஙனம் 
செ.மு. முத்தையா ரொத்ரீகு 
செந்தமிழ் சங்க வித்துவான் 
வேம்பார் 
17.10.1914, கொழும்பு.

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.