Our Blog

கடலோடிய மூத்தகுடி எம் தமிழ்க்குடி!


“வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்- அடி

மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்”.

-மகாகவி பாரதியார்.

5000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் மிகமூத்த கடலோடி இனமாக நாடுகடந்து வணிகம் செய்த தமிழினத்தின் பெருமைமிக்க வரலாற்றைப் பதிவு செய்கையில் மகாகவியின் இந்த எழுச்சிமிகு வரியுடன் துவங்குவதுதான் பொருத்தமாகும்.

‘NAVY’ என்ற ஆங்கில வார்த்தை ‘நாவாய்’ என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பிறந்ததுதான் என்பதையே தமிழினம்தான் கடலோடி வணிகத்தின் தொல்குடி என்பதற்கான முதற் சான்றாக முன்வைக்கிறேன். ‘நாவாய்’ என்றால் கப்பல். இன்றும் தென் அமெரிக்க இஸ்பானியப் பழங்குடியினர் கூடக் கப்பலை ‘நாவாய்’ என்றே அழைக்கின்றனர்.
தென்மேற்குப் பருவமழைக் காலமான ஆடிமாதம் ரோமிலிருந்து கிளம்பி சேரநாட்டின் துறைமுக நகரமான தொண்டியில் வந்து சேர்வார்கள். அதேபோல் தை மற்றும் மாசி மாதத்தில் பருவமழை ஓய்ந்ததும் காற்றின் விசை மாறிய பிறகு இங்கிருந்து அங்கு செல்வார்கள் படம் – ncbs.res.in
பழந்தமிழர்கள் மேற்கே கிரீஸ் (கிரேக்கம்), ரோமாபுரி, எகிப்து முதல் கிழக்கே சீனா வரையிலும் மற்றும் பாலஸ்தீனம், மொசப்பத்தேமியா, பாபிலோனியா போன்ற நாடுகளுடனும் வாணிபத் தொடர்புகொண்டு கடலோடிப் பிழைத்தார்கள். தமிழகத்துப் பண்டங்களான ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு ஆகியவற்றிற்கு மேற்கு ஆசிய நாடுகளில் மிகுந்த தேவை ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்ட பழந்தமிழர்கள் இவற்றை அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். பருவமழைக் காலத்தை சாதகமாகக் கொண்டு தமிழர்கள் மேற்கொண்ட கடல்வழிப் பாதையே (SEA ROUTE) உலகின் மிகப் பழமையான கடல்வழி வணிகப் பாதையாகக் கருதப்படுகிறது.

தென்மேற்குப் பருவமழைக் காலமான ஆடிமாதம் ரோமிலிருந்து கிளம்பி சேரநாட்டின் துறைமுக நகரமான தொண்டியில் வந்து சேர்வார்கள். அதேபோல் தை மற்றும் மாசி மாதத்தில் பருவமழை ஓய்ந்ததும் காற்றின் விசை மாறிய பிறகு இங்கிருந்து அங்கு செல்வார்கள். இன்றும் தை, மாசி மாதங்களை எகிப்தியர்கள் TAIRUS, MAUSHIR என்றுதான் அழைக்கிறார்கள். கொற்கை முத்துகள், சேர நாட்டின் புகழ்பெற்ற மிளகுகள், யானைத் தந்தங்கள், தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை இங்கிருந்து எகிப்து மற்றும் ரோமாபுரி தேசங்களுக்கு ஏற்றுமதி செய்ததையும், ஈரோடு மாவட்டம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகின் மிகப் பழமையான இரும்புத் தொழிற்சாலையாக விளங்கியதாக அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டதோடு, கொடுமணலிலிருந்து பொருட்கள் அங்கே எடுத்துச் செல்லப்பட்டதையும் எகிப்தில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.

யூதர்களின் ஆதி சமயத் தலைவர் மோசஸ் (Moses) என்பவர், தாம் நிகழ்த்தி வந்த இறைவழிபாட்டில் ஏலக்காயைப் பயன்படுத்தினார் என்று பழைய ஏற்பாடு (Old Testament) கூறுகிறது. மோசஸ் கோயில் கட்டி வழிபாடு செய்தது கி.மு. 1490இல் என்பர். தென் அரேபியா நாட்டு அரசி ஷேபா (Sheba), இஸ்ரேல் நாட்டின் மன்னன் சாலமன் (Solomon) என்பவனைக் காணச் சென்றபோது, அவனுக்குப் பரிசுப்பொருள்களாக ஏலக்காய், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களைக் கொண்டு போனதாகப் பழைய ஏற்பாட்டில் ஒரு குறிப்புக் காணப்படுகிறது. சாலமன் ஆண்ட காலம் கி.மு.1000 என்பர். சாலமனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சேரநாட்டுத் துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் மயில் தோகை, அகில் மரங்கள், யானைத் தந்தம், குரங்குகள், வெள்ளி போன்ற பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன என்ற குறிப்பும் கல்வெட்டிலிருந்து அறியப்படுகிறது.
தென் அரேபியா நாட்டு அரசி ஷேபா (Sheba), இஸ்ரேல் நாட்டின் மன்னன் சாலமன் (Solomon) என்பவனைக் காணச் சென்றபோது, அவனுக்குப் பரிசுப்பொருள்களாக ஏலக்காய், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களைக் கொண்டு போனதாகப் பழைய ஏற்பாட்டில் ஒரு குறிப்புக் காணப்படுகிறது. படம்- infrakshun.files.wordpress.com

கிரேக்கம், ரோமாபுரி ஆகிய நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்த வணிகர்களை யவனர் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கிரேக்கர்கள் தங்கள் நாட்டையும், மொழியையும் ‘அயோனெஸ்’ (aones) என்று கூறிக் கொள்வராம். அதுவே தமிழில் ‘யவனர்’ எனத் திரிந்தது என்பர். ஆனால் அச்சொல் கிரேக்கர்களையும், ரோமர்களையும் ஒரு சேரக் குறிப்பதாக விளங்குகிறது. யவனர்களோடு வாணிபம் செய்த தமிழர்கள் முசிறி துறைமுகம் வழியாகத் தங்கத்தையும், மதுவையும் இறக்குமதி செய்து மிளகினை ஏற்றுமதி செய்தனர். இதை


“யவனர் தந்த வினைமாண் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

வளங்கெழு முசிறி”

-அகநானூறு, 149

என்ற பாடல் மூலம் அறியலாம்.

யவனர்கள் வாணிபர்களாக மட்டுமன்றி, தமிழக மன்னர்களின் அரண்மனையில் கைவினைக் கம்மியராகவும் (கம்மியர்- உலோக வேலை செய்பவர்), காவல்காரர்களாகவும் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பெரிய துறைமுகப்பட்டினங்களில் யவனர்களுக்குத் தனி இருப்பிடங்கள் இருந்தன.

தொண்டிப்பட்டினம் சேரநாட்டை ஆண்ட பொறையர்களின் ஆட்சியில் இருந்தது. இந்த தொண்டி துறைமுகப் பகுதியை அடுத்து வருவதே முசிறி. அந்தக் காலத்தில் கடல் வழியாக கப்பல்களில் வணிகம் நடந்த இந்தியத் துறைமுகங்களிலேயே பெரியது மேற்கே சேரநாட்டின் தொண்டியும், முசிறியும், கிழக்கே சோழநாட்டின் காவிரிப் பூம்பட்டினமும் மட்டுமே. சரியாகச் சொன்னால் பெரியாறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள துறைமுகம்தான் முசிறி.

புறநானூற்றுப் புலவர் பரணர் முசிறியைக் குறித்துப் பாடுகையில்


“மீன் நொடுத்து நெல் குவைஇ

மிசை யம்பியின் மனைமறுக் குந்து!

மனைக் கவைஇய கறிமூ டையால்.

கலிச் சும்மைய கரைகலக் குறுந்து

கலந் தந்த பொற் பரிசம்

கழித் தொணியான் கரைசேர்க் குந்து;

மலைத் தாரமும் கடல் தாரமும்

தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும்

புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்

முழங்கு கடல் முழவின் முசிறி யன்ன…”


இதிலிருந்து குவித்து வைக்கப்பட்ட (மீனை விற்று வந்த பொருளால்) மிளகு மூட்டைகள், மற்றும் யவனர்கள் கப்பலில் கொண்டுவந்த பொற்காசுகள் முதலியவற்றைக் குறித்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும் இன்று பார்ஜ் (BARGE) என்று சொல்லக்கூடிய சிறு கப்பல்கள் மூலம் சரக்குகள் கப்பலிலிருந்து வருவதும், போவதுமாய் இருந்தது புலனாகிறது.

இந்தத் துறைமுகங்களைப் பற்றி கிரேக்க மாலுமி சோஃப் வில்ஃப்ரெட் எழுதிய பழங்கால நூலான ‘செங்கடல் வழிகாட்டி’ (Periplus of the Erythrean Sea) இவ்வாறு கூறுகிறது:

“திண்டிஸ், செரொபாத்ராவின் அரசில் உள்ளது. அது கடலினின்றும் சாதாரணமாய்க் காணக் கூடியது. முசிரிஸ் இதே அரசனிடம் உள்ளது. அரேபியாவிலிருந்து வந்துள்ள கப்பல்களால் இது நிறைந்திருக்கும். இது நதியில் உள்ளது. இது நதியில் உள்ளது. திண்டிசிலிருந்து கடல் நதி வழியாக ஐந்நூறு ஸ்டேடியா தூரத்தில் உள்ளது”. கி.பி 215இல் அலெக்சாண்டரியாவில் நடந்த குரூர நிகழ்ச்சிக்குப் பின் இவ்வணிகம் தடைபட்டுப் போனது.

இருப்பினும் உலகத்தரம் வாய்ந்த துறைமுகத்தைக்கொண்ட காவிரிப் பூம்பட்டினம் தொடர்ந்து கடல்வழி வணிகம் செய்து வந்தது. புகார், பூம்புகார், பட்டினம், காவிரிப்பூம்பட்டினம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இத்துறைமுக நகரம் காவிரி ஆறு வங்கக் கடலில் புகுகின்ற இடத்தில் அமைந்ததால் இப்பெயர்களைப் பெற்றது. இந்நகர் பற்றி பெரிப்ளூசு, ‘கமரா’ எனவும், தாலமி, கபேரிஸ் எம்போரியான் (Kaberis Emporion) எனவும் குறிப்பிடுகின்றனர்.

கி.பி. 5ஆம் நூற்றாண்டில் புத்தர் இங்கிருந்த புத்தவிகாரையில் தங்கியிருந்து பிராகிருத மொழியில் அபிதம்மவதாரம் என்னும் இலக்கியத்தை இயற்றியதாகக் கருதப்படுகிறது. இதில் இவ்வூர் கவேரபட்டினம் எனக் குறிப்பிடப்படுவதோடு இதன் எழில்மிகு தோற்றம், அமைப்பு, அங்கு வாழ்ந்த உயர்குடி மக்கள் மற்றும் அரிய வைரக்கற்கள் முதல்கொண்டு விற்கப்பட்ட பெரிய கடைத்தெருக்கள் வரை பேசுவதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

காவிரிப்பூம்பட்டினத்தின் நகரமைப்பு மற்றும் துறைமுகச் சிறப்புகளை பட்டினப்பாலையும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. யவனர்கள் தங்கியிருந்த இடத்தை யவன இருக்கை எனச் சிலப்பதிகாரம் சுட்டுகிறது. வெள்ளையன் இருப்பு எனும் ஒரு பகுதி காவிரிப்பூம்பட்டினத்தில் இன்றும் காணப்படுகிறது. சோழர்களின் சிறப்புமிகு இத்துறைமுக நகரை உருவாக்க யவனத்தச்சர் என அழைக்கப்பட்ட ரோமானிய நாட்டுச் சிற்பிகள் பயன்படுத்தப்பட்டதை மணிமேகலை (19) காட்டுகிறது. வெவ்வேறு நாடுகளில் இருந்து நீரின் வழியாக இத்துறைமுகத்திற்கு வந்து இறங்கிய பொருட்கள் குறித்தும் அதன் சிறப்புப் பற்றியும் பின்வரும் பாடல் மிகத் தெளிவாக விவரிக்கிறது.


‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்

காலின் வந்த கருங்கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும்

கங்கை வாரியும் காவிரிப் பயனும்

ஈழத் துணவும் காழகத் தாக்கமும்

அரியவும் பெரியவும் நெரிய வீண்டி

வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு’

-பட்டினப்பாலை 185-193

அதாவது நீரின் வழியாக வரப்பெற்ற உயர்வகை குதிரைகள், நிலவழியாகக் கொண்டு வரப்பட்ட மிளகு, வடக்கு மலைகளிலிருந்து தருவிக்கப்பட்ட அரிய வைரக்கற்கள் மற்றும் பொன், மேற்கு மலைகளில் கிடைக்கின்ற சந்தனம் உள்ளிட்ட வாசனைப் பொருள்கள் தென்கடல் முத்து, கீழைக் கடல் பகுதியிலிருந்து பெறப்படும் பவளம், கங்கை மற்றும் காவிரியின் வளத்தால் பெறப்பட்ட பொருள்கள், ஈழத்திலிருந்து உணவு வகைகள், காழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை (பெரும்பாலும், உலோகப்பொருளாக இருக்க வேண்டும்), பிற இடங்களிலிருந்து வந்து இறங்கிய அரிய மற்றும் பெரிய பொருள்களும் இத்துறைமுகம் வந்து சென்றதை அறிவதிலிருந்து இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகச் செயல்பாடுகள் உச்சநிலை பெற்றிருந்ததை அறியமுடிகிறது. இத்துறைமுகத்திற்கு இரவு நேரங்களில் வந்துசேரும் கப்பல்களுக்குத் திசையினை உணர்த்த கலங்கரை விளக்கம் இருந்ததை, “இலங்கு நீர் விரைப்பிற் கலங்கரை விளக்கமும்” என்ற சிலப்பதிகாரப் பாடல் மூலம் அறியலாம்.

இந்தத் துறைமுகத்தில் வந்து தங்கிய நாவாய்கள் (கப்பல்) கம்பங்களில் கட்டப்பட்ட யானைகள் அசைந்து கொண்டிருப்பது போல துறைமுகத்தில் அசைந்துகொண்டிருந்தன என்பதைப் பின்வரும் பாடல் மூலம் அறியலாம்.


‘வெளில் இளக்கும் களிறு போலத்

தீம்புகார்த் திரை முன் றுறைத்

தூங்கு நாவாய்த் துவன் றிருக்கை

மிசைக் கூம்பின் அசைக் கொடியும்’

-பட்டினப்பாலையில் (172-175 அடி)

புகார் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி சிறப்பாக நடைபெற்றதையும், இப்பொருட்களுக்குச் சுங்கம் வசூலிக்கப்பட்டதையும், இதற்கு அடையாளமாக அப்பொருட்களின் மேல் சோழ அரசின் புலி முத்திரை இடப்பெற்றதையும்


“நீரினின்று நிலத்தேற்றவும்

நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்

அளந்தறியாப் பலபண்டம்

வரம்பறியாமை வந்தீண்டி

அருங்கடிப் பெருங்காப்பின்

வெளில் இளக்கும் களிறு போலத்

தீம்புகார்த் திரை முன் றுறைத்

தூங்கு நாவாய்த் துவன் றிருக்கை

மிசைக் கூம்பின் அசைக் கொடியும்”

-பட்டினப்பாலை (167-175)

என்ற பாடல் வரிகள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. எனவே இத்துறைமுகத்திலிருந்து அரசுக்கு நிறைய வருவாய் வரப்பெற்றதோடு வாணிபம் வளர்ச்சியடைந்திருந்ததால் புகார் நகரமும் செல்வச் செழிப்போடு காணப்பட்டது என்பதையும் உணரமுடிகிறது.


“மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது

புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்

இடைப்புலப் பெருவழிச் சொரியும்

கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே”

– புறநானூறு (30)

என்னும் வரிகள் பாய்மரத்தில் (mast) கட்டப்பட்டிருந்த பாய்கள் களையாமல் (இறக்கப்படாமல்) பெரிய கலங்கள் (ships) புகார் துறைமுகத்திற்குள் வந்து சென்றதைக் காட்டுவதிலிருந்து இத்துறைமுகச் செயல்பாடுகள் மிகச் சுறுசுறுப்புடன் இருந்ததை உணர முடிகிறது.

1960 ஆம் ஆண்டு எஸ்.பரமசிவன் என்பவர் இக்கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட காந்த அளவியல் (magnetic survey) ஆய்வில் இங்கு கட்டடப் பகுதிகள் புதையுண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இந்தியத் தொல்லியல் துறை 1962ஆம் ஆண்டு இக்கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட மேற்பரப்பாய்வு மற்றும் அகழ்வாய்வுகள் சிறப்புக்குரியவையாகும் (Indian Archaeology-A Review, 1962-1967).

மேற்பரப்பாய்வில் (exploration) வானகிரி, கீழையூர் ஆகிய இடங்களில் கருப்பு-சிவப்பு மண்கலச் சில்லுகளுடன் ஒருபக்கம் புலி மறுபக்கம் யானை பொறிக்கப்பட்ட சோழர்காலச் செப்புக்காசு, யவனர் தொடர்புக்குரிய ரூலெட்டட் பானை ஓடுகள், அரிய கல்வகைகளினாலான மணிகள் (beads) மற்றும் வெள்ளையன் இருப்பு என்ற இடத்தில் ரோமானிய நாணயம் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன.

அகழாய்வில் இத்துறைமுகத்தின் உலகளாவிய வரலாற்றுச் சிறப்புகளைக் காட்டும் பல அரிய கண்டுபிடிப்புகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. கீழையூரில் பெரிய செங்கற்களால் உருவாக்கப்பட்ட சுவர்களுடன் கூடிய கட்டடப் பகுதியும் அச்சுவர்களின் மேல் இருந்த மரத்தினாலான கம்பங்களும் (wooden – posts) கண்டுபிடிக்கப்பட்டன.

இக்கட்டடப் பகுதி ஏற்றுமதி இறக்குமதிக்குப் பயன்படுத்தப்பட்ட துறைமுகப் பகுதியின் படகுத் துறையாக (wharf) அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மரக்கம்பங்கள் துறைமுகத்தில் கப்பல்களைக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கரிப்பகுப்பாய்வு (Carnbon 14 Dating) காலக்கணிப்பு முறையில் இக்கம்பங்கள் கி.பி. 3ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தவையாகக் கணிக்கப்பட்டுள்ளமை இத்துறைமுகத்தின் தொன்மைக்கு அறிவியல் பூர்வமான சிறப்பைச் சேர்ப்பதோடு பட்டினப்பாலை காட்டும் இத்துறைமுகச் சிறப்பும் இதன்வழி மெய்ப்பிக்கப்படுகிறது. இக்கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்களின் நீளம், அகலம், கணம் முறையே 60×40×7 செ.மீ அளவு கொண்டதாக மிகப்பெரிய செங்கற்களாகக் காணப்படுகின்றன.

தமிழக அரசு தொல்லியல் துறையினர் 1998 ஆம் ஆண்டு இங்கு மேற்கொண்ட அகழாய்வில் யவனருடன் தொடர்புடைய அம்பொரா மண்ஜாடிகளின் சில்லுகளும், பிராமி எழுத்தில் ‘அபிமகததோ’ எனப் பொறிக்கப்பட்ட மண்கலச் சில்லும் கிடைத்துள்ளன.

திரைகடல் ஓடி திரவியம் தேடிய தொல்குடியின் வழித் தோன்றல்கள் என்ற எண்ணமே தொடர்ந்து நம்மை வழிநடத்திச் செல்லும்.

உசாத்துணைகள் :
Sangam literatures –அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், பட்டினப் பாலை
Periplus of the erythrean sea- Schoff Wilfred
(K.V.Raman, Excavation at Poompuhar, II International Tamil Conference, 1968)
Trade and trade routes in Ancient India –Moti Chandra
Indian Shipping a Historical Survey —Baldeo Sahai
”History of Ancient Geography”- Dr. E.H.Bunbury
“Oxford History of India” – Vincent Smith
- பிரபு தமிழன் 
Thanks: roar.media

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.