Our Blog

சமயத்தில் சங்கமித்த சமூகம் - 5

பழமை வாய்ந்த புண்ணியத் திருத்தலமான ராமேஸ்வரம் திருக்கோயிலில் ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமர் இங்கே வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம்! ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயில் மூலவருக்கு இராமநாத சுவாமி என்றும் இராமேஸ்வரம் என்று பெயர் ஆனது.  இங்கு கடல் நடுவே கோயில் கொண்டுள்ள பர்வதவர்த்தினி அம்மையின் பெயர் பரதவரை நினைவு கூர்வதாக அமைந்துள்ளதும் கவனத்திற்குரியது.


விஷ்ணுவின் தசாவதாரங்களில் முதல் மூன்று அவதாரங்களும் கடலுடன் மிக நெருங்கிய தொடர்புடையவை. மச்ச அவதாரம் திருமாலின் முதல் அவதாரமாகும். மச்சம் என்ற சமஸ்கிருத சொல், தமிழ் மொழியில் மீன் எனப்பொருள் தரும். இந்த அவதாரத்தில் திருமால் நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவருபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.

கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி விஷ்ணு எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும். இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்). வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.

மேலும் விஷ்ணுவின் உறைவிடமே பாற்கடல் ஆகும். அவ்வகையில் காரைக்காலை அடுத்த திருமலைராயன் பட்டணத்தைச் சேர்ந்த செம்படவ தலைவரின் மகளான பத்மினி நாச்சியாராக திருமகள் பிறக்க, பெருமாளே அவரை திருமணம் செய்து கொண்டதாக தொன்மம் கொண்டு அம்மக்கள் சௌரிராஜப்பெருமாளை மாப்பிள்ளை சாமியாக நினைத்து விழா எடுத்து மகிழ்ந்து வருவதும் நடைமுறையிலிருந்து உள்ளது. 

திருமலைராயன் பட்டினத்தில் மாசிமக நன்னாளில் தீர்த்தவாரி திருவிழா வெகு பிரசித்தம். தங்கள் பகுதிக்கு வரும் இவர்களை காரைக்கால் பகுதியை சார்ந்த திருமலைராயன் பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள், நிரவி ஸ்ரீ கரிய மாணிக்கப் பெருமாள், வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், தென்னங்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், காரைக்கால் கோவில்பத்து கோதண்டராமர், ஆகிய எழு பெருமாள்கள் எதிர் கொண்டு கடற் கரைக்குஅழைத்துச் செல்கின்றனர்.

திருமலைராயன் பட்டினத்திற்கு செல்லும் வழியில் உள்ள பட்டினஞ்சேரி என்ற கடற்கரைக் கிராமத்தில் உள்ள மீனவ இன மக்கள் ஊர் எல்லையில்பெருமாளை பட்டும், மாலைகளும் ஏந்தி எதிர் கொண்டு அழைக்கின்றனர். தங்கள் மாப்பிள்ளையை, நெற்கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில் சௌரிராஜப்பெருமாளை ஏழப்பண்ணி தங்கள் தோள்களில் தூக்கி வைத்துக் கொண்டு மாப்ளே! மாப்ளே! என்று கூப்பிட்டவாறே சௌரிராஜப்பெருமாளை மாப்பிள்ளை என வரவேற்று மகிழ்கின்றனர்.

கடற்கரைக்கு வந்த பெருமாள் கடலில் இறங்கி தீர்த்தம் கொடுத்தருளுகின்றார். பின்னர் கரையில் கட்டு மரங்களால் அமைக்கப்பட்டு, மீன் வலை கொண்டு விதானம் கட்டபட்ட பந்தலில் மீன் காய வைக்கும் பாயை ரத்ன கம்பளமாக விரிக்கின்றனர். அன்று பெருமாள் நெற்கதிர்களால் எழிலாக அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில் சௌரி முடியுடன் தங்க கருட வாகனத்தில் சேவை சாதித்து அருளுகின்றார். மற்ற எட்டு பெருமாள்களும் தோளுக்கினியானில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றனர்.

ஸ்ரீ சௌரிராஜப்பெருமாள் தங்கள் கிராமத்திற்கு எழுந்தருளுவதை ஒட்டி இந்த மீனவர்கள் முதல் நாளும், மாசிமகத்தன்றும் மறு நாளும் கடலுக்கு மீன் பீடிக்க செல்வதில்லை. புலால் உணவு உண்பதையும் தவிர்க்கின்றனர். பெருமாள் தங்கள் சேரிக்குள் நுழையும் போது, அந்த மீனவக்குலப் பெண்கள் நேராக வந்து வணங்குவதில்லை. மருமகனுக்கு முன்னால் வந்து பெண்கள் நிற்கக் கூடாது என்பது மரபாம். மீனவர்களுக்கு அதாவது பெண் வீட்டாருக்கு வெற்றிலை, பாக்கு துளசி மாலை ஆகியவற்றுடன் பத்து தோசைகளும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இத்தலத்தில் வருடத்தில் ஒரு நாள் இந்த மீனவர் குலத்தினருக்காக ஆண்டுக்கொரு முறை விசேஷ பூஜைகள் ஆராதணைகள் செய்யப்படுகின்றன. 

பட்டினஞ்சேரி மீனவர்கள் பாற்கடலில் பிறந்த லெட்சுமியை விஷ்ணு திருமணம் செய்ததை நினைவு கூர்ந்து மாசி மகத்தன்று வீட்டு மருமகனாக எண்ணி வணங்கி வருகிறார்கள். இதன் மூலம் நெய்தல் மக்களிடையே வைணவம் சேர்ந்து கொண்டதை அறிய முடிகிறது.

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.