Our Blog

தமிழ் அச்சு வரலாற்றைத் தொடங்கியவர் - அறிஞர் அண்ட்ரிக் அடிகளார்


தமிழில் முதன்முதலில் அச்சு நூல்களை வெளியிட்ட அண்டிரிக் அடிகளார் (எ) ஹென்றிக்கு ஹென்றிக்கஸ் (Henrique Henriques) போர்ச்சுகீசிய நாட்டிலுள்ள ‘விலாவிகோசா' என்னும் ஊரில் கி.பி. 1520-ல் பிறந்தார். சமய வாழ்வில் பெரிதும் நாட்டம் கொண்டமையால் ‘பிரான்ஸ்சிகன் துறவறச் சபை'யில் சேர்ந்தார். அவர் யூத மரபைச் சார்ந்தவர் என்பதால் சபையில் இருந்து நீக்கப்பட்டார். எனவே, ‘கோய்ம்ப்ரா' பல்கலைக்கழகத்தில் கி.பி. 1545இல் திருச்சபைச் சட்டத்தைக் கற்றுத் தேர்ந்தார். அப்போது புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட யேசு சபையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கி.பி. 1546-ல் குரு பட்டம் பெற்ற அண்ட்ரிக் அடிகளார் அதே ஆண்டில் ஏப்ரல் 26 அன்று இந்தியாவிலுள்ள சவேரியாரிடம் செல்ல அனுமதிக்கப்பட்டுப் பயணமானார். அவருடன் 12 யேசு சபைக் குருக்களும் புறப்பட்டனர். அவர்கள் 17.9.1546 அன்று கோவா வந்தடைந்தனர். அக்காலத்தில் மலாக்காவில் இருந்த சவேரியர் அடிகளாரை ‘முத்துக் குளித்துறை'யின் தலைமைக் குருவாக இருந்த ‘அந்தோணி கிரிமினாலி' என்பவரிடம் அனுப்பினார். அவர் புன்னைக் காயல் அதன் சுற்றுப்புற ஊர்களையும் மறைப் பணிக்காக இவரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் கிரிமினாலி இறந்துபோகவே, 1549இல் அண்ட்ரிக் தலைமைக் குருவானார்.

முத்துக்குளித்துறைக்கு வந்தவுடன் இங்குள்ள தமிழ் மக்களிடம் கலந்து பழக தமிழ்மொழி அவசியம் என்பதை அறிந்த அண்டிரிக் தமிழை முதலில் படிக்கத் தொடங்கினார். பேச்சு மொழி, எழுத்து மொழி இரண்டிலும் தேர்ந்தார். அதன் விளைவாக முதன் முதலில் ‘தம்பிரான் வணக்கம்' (1578) என்னும் நூலை அச்சிட்டு வெளிப் படுத்தினார். தமிழில் அச்சான முதல் நூல் இது என்று கருதப்படுகிறது. Doctrina Christiana என்னும் தலைப்பில் போர்த்துக்கீசிய பாதிரியார் ‘மார்க்கோசி சொரிசி' எழுதிய நூலின் தமிழாக்கமே இந்நூல். இந்த மொழிபெயர்ப்புக்கு பீட்டர் மானுவல் என்பவர் உதவியுள்ளார். இந்நூல் அவர் பணியாற்றிய முத்துக்குளித்துறைப் பகுதியில் வாழ்ந்த பரதவர்கள் பேச்சு மொழியிலேயே மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூலுக்கு பரதவர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். எழுத்தறிவில் கேரளக்கரை மக்கள் இந்திய நாட்டில் முத லிடம் வகிப்பதற்குக் காரணம் தம்பிரான் வணக்கமே என்பர்.

தமிழ்நாட்டு எல்லைக்கு வெளியே அச்சடிக்கப்பட்ட முதல் தமிழ் நூல் தம்பிரான் வணக்கம் என்றால், தமிழக எல்லைக்குள்ளேயே அடிகளாரால் அச்சடிக்கப்பட்ட நூல் ‘அடியார் வரலாறு' (1586). தூத்துக்குடி மாவட்டம் - புன்னைக்காயலில் இந்நூல் அச்சடிக்கப்பட்டது. இவை தவிர, ‘கிரீசித்தியானி வணக்கம்' (1529) ‘கொம்பெசியனாயரு' (1578) முதலிய நூல்களையும் அடிகளார் அச்சிட்டார்.

இதுதவிர முதல் ‘ஐரோப்பியத் தமிழ் இலக்கண நூல்' ஒன்றையும் அடிகளார் எழுதியுள்ளார். இதற்கு ‘மலபார் இலக்கணம்' என அண்ட்ரிக் பெயரிட்டுள்ளார். கையெழுத்துப்படியாக இருந்த இந்த நூலை 1954-ல் லிஸ்பன் நகர தேசிய நூலகத்தில் சேவியர் தணிநாயக அடிகளார் கண்டெடுத்தார். 1982-ல் ஹான்ஸ் ஜெ. பெர்மீர் என்பவர் ஆய்வுப் பதிப்பாக இதை வெளியிட்டார்.

சமயப்பணி புரிய வந்த அண்ட்ரிக் சமுதாயப் பணி யையும் ஆற்றினார். 1550-ல் முத்துக்குளித்துறை வாழ் பரதவர்களின் நிதியுதவியுடன் மருத்துவமனை ஒன்றை நிறுவினார். இதனைத் தொடர்ந்து 1567-ல் தமிழ்க் கல்லூரி ஒன்றையும் புன்னைக்காயலில் நிறுவி அதன் இயக்குநராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

06.02.1600-ல் தமது 80-ம் வயதில் புன்னைக்காயலில் காலமானார். தூத்துக்குடி மாதாகோயிலில் அவரை அடக்கம் செய்வதற்காகத் தோணியில் கொண்டு சென்றபோது அவ்வுடலுடன் ஏழு தோணிகளில் ஆட்கள் சென்றனராம். அவருடைய உடலைத் தங்களுடைய ஜெபமாலையால் தொட்டு அவற்றை நினைவுச் சின்னமாக வைத்துக்கொள்ள அலைமோதிய கூட்டத்தை விலக்கி உடலைக் கரைக்கு கொண்டு செல்வதற்குப் படாதபாடு பட்டதாக அவரது வாழ்க்கை வரலாறு கூறுகிறது.

கிறித்துவர்கள் மட்டுமின்றி, இந்துக்களும் முஸ்லிம்களும் கூட அடிகளாரிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். இன்றும்கூடப் புன்னைக்காயலில் சத்தியப் பிரமாணம் செய்யும்போது அண்ட்ரிக் பெயரில் வாக்குறுதி அளிப்பதைக் காணமுடிகிறது.

- ப. சரவணன், ஆய்வாளர். தொடர்புக்கு: psharanvarma@gmail.com

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.