Our Blog

காலனியம் சமயம் பரவர்


நூல் அறிமுகம்

காலனியம் சமயம் பரவர் சில வரலாற்று குறிப்புகள்

- ஜெ.எச். செல்வராஜ், 
நெய்தல் வெளி வெளியீடு, நாகர்கோவில், 
விலை 85ரு.

மகாகவி பாரதியின் சமகாலப் பண்டிதரும், இதழாளருமான மணப்பாடு ஜே.ஆர். மிராந்தாவின் பேரன், செல்வராஜ் மிராந்தா, 80. அவர் தற்போது தூத்துக்குடியில் வாழ்ந்து வருகிறார். கடந்த 1900ம் ஆண்டில் இருந்து, 1950ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில், தூத்துக்குடியில் பரவர்கள் வாழ்க்கையின் முதன்மையான சமூகவியல் பொருளியல் கூறுகளை இந்த நூலில் ஆவணப்படுத்தியுள்ளார்.

சுவையான பாரதி ஆய்வாளர்கள் கூட அறிந்திராத ஒரு நிகழ்வு பற்றிய பதிவுடன், முதல் அத்தியாயம் துவங்குகிறது. 1908ம் ஆண்டில் சுதேச கீதங்கள் என்ற தலைப்பில், பாரதி பாடல்களின் தொகுப்பு ஒன்று வெளியாயிற்று. அதில் இடம் பெற்றிருந்த, ‘பறையருக்கும் இங்க தீயர் புலையருக்கும் விடுதலை, பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை’ என்ற பாடல் வரி, ஜே,ஆர். மிராந்தாவை உறுத்திற்று.

கொழும்பு நகரில் இருந்து வெளிவந்த, ‘திராவிட மித்திரன்’ (வாரம் இருமுறை வெளியாகும் இதழ்), பரதன் (மாத இதழ்) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியரான மிராந்தா, தூத்துக்குடிக்கு வந்து, அங்கு கைவல்ய சுவாமி மடத்தில் தங்கியிருந்த பாரதியை சந்தித்து, பரவர் எக்காலத்திலும் தாழ்த்தப்பட்ட ஜாதியாகவோ, இழிந்த வர்ணத்தினராகவோ இருந்ததில்லையே, மோனைக்காக எங்கள் ஜாதி பெயரை சேர்த்து விட்டீர்களா? என்று கேட்டார். சற்றும் தாமதிக்காமல் பாரதி, கவிதை வடிவில் வீசிய பதிலை, ஜே.ஆர்.மிராந்தாவின் வாய்மொழியாக கேட்டு, 1954ல் தாம் எழுதி வைத்திருந்ததை, நூலாசிரியர் இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.

கடந்த, 1914ல் இந்தியாவின் புனித சங்கு (தி சேக்ரெட் சாங்க் ஆப் இண்டியா) என்ற நூலில், ஜேம்ஸ் ஹோர்னலும், 1917ல் திருநெல்வேலி மாவட்ட விவரச்சுவடியில் (டின்னவேலி டிஸ்ட்ரிக்ட் கெஜட்டீர்), மாவட்ட ஆட்சியர் ஹெச்.ஆர்.பேட்டும், பரவர் பற்றி எழுதி வைத்துள்ள குறிப்புகளில் இருந்து மேற்கோள் காட்டியும், பரவர்களின் குடிப்பழக்கம் எவ்வாறெல்லாம் அவர்கள் முன்னேற்றத்தை தடுத்து வந்துள்ளது என்பதை விளக்கியும், ஆசிரியர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பரவர்களுக்கு உள்ளேயே, மூன்று வகை ஜாதி அடுக்குகள் இருப்பதும் பதிவாகி உள்ளது. தூத்துக்குடி பனிமய மாதா கோவில் தேர் திருவிழாவில், பரவர்களின் தலைவர், முதன் முதலில் வடம்பிடிப்பதே நடைமுறையாக இருந்துள்ளது. 1947ம் ஆண்டில், கத்தோலிக்க மத குருமாரே முதலில் வடம் பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததன் விளைவாக பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பத்தில் சிக்கி கொள்ளாமல், அப்போதைய மறைமாவட்ட ஆயர், வாடிகன் நகருக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

அவருக்கு தந்தி அடித்து கேட்டபோது, மேலும் குழப்பம் வகையில் ஆயர் பதில் தந்தி கொடுத்த நிகழ்வு – இவை போன்ற சுவையான செய்திகள் இந்த நூலில் பதிவாகி உள்ளன.

அருமையான புத்தகம் கண்டிப்பாக படிக்க வேண்டியது

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.