Our Blog

சமயத்தில் சங்கமித்த சமூகம் - 3

சைவ வழிபாட்டில் பரதவர்கள் அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர். தம் பாண்டிய வம்சத்தில் பிறந்த மலையத்துவசப் பாண்டியன் மகளான மீனாட்சியை தம் குலதெய்வமாகக் கொண்டிருந்தனர். மீனாட்சியின் திருமணம் மதுரையில் சோமசுந்தரருடன் நடைபெற்றதாகவும், சிவனே சோமசுந்தரராக தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே  பாண்டியர்கள் மதுரையில் மீனாட்சி எனப்படும் அங்கையற்கண்ணிக்கு ஆலயம் அமைத்தனர். இவ்வாலயத்தை தலைமைப் பீடமாகக் கொண்ட பரதவர்கள் தங்கள் ஊர்களிலும் மீனாட்சி சொக்கநாதருக்கென ஆலயங்கள் அமைத்தனர். 

அனைத்து கடற்கரை பட்டினங்களிலும் சிவாலயம் ஒன்று எழுப்பப்பட்டன. பரதவர்கள் கிறிஸ்தவத்தை தழுவியதும் அவ்வாலயங்கள் கைவிடப்பட்டன. அருகிலுள்ள ஊர்களுக்கு அவ்வாலயத்தின் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு அங்கு கோயில் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. உதாரணமாக வேம்பாற்றிலிருந்த மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தின் சிலைகள் மேல்மாந்தை மற்றும் விளாத்திகுளம் கொண்டு செல்லப்பட்டு அங்கு கோயில் எழுப்பப்பட்டு, வழிபடப்பட்டு வருகிறது. வேம்பாற்றில் அவ்வாலயம் இருந்த பகுதி சிவபெரும்குன்றம் என்று இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது. 

மதுரை மீனாட்சி அம்மன் திருவிழாவின் போது மீனவருகேன்று ஒருநாள் மண்டகப்படி  உண்டு. இவர்களுக்கென்று தனிவாயிலே (வடக்கு வாசல்) உண்டு எனவும், அது அடைக்கப்பட்டு உள்ளதாகவும் வாய்மொழி பேச்சுகள் நிலவுகின்றன. கடலில் மீன் வளம் பெருகவும், கடல் பயணங்களில் விண்மீனாய் வழிகாட்டவும், கடல் வாணிபம் சிறப்பாக அமையவும், மீனைப் போல விழி மூடாமல் தம்மைக் காக்கும் அன்னையாக பரதவர்கள் மீனாட்சியை வணங்கினர். 

64 நாயன்மார்களில் முதலானவர் அதிபத்தர் என்னும் பரதவர் ஆவார். சிவபக்தரான இவர் மீன் பிடித்தலில் தலைமீனை சிவனுக்குப் படைப்பவர். இவரை சோதிக்க சிவன் இவருக்கு தங்கமீன் ஒன்றினை முதல்மீனாக வலையில் பட செய்ய அதையும் சிவனுக்கே படைத்தார். இதனால் மகிழ்ந்த சிவன் இவருக்கு வீடு பேறு அளித்தார். இதனை நாகபட்டின மாவட்ட மக்கள் இன்றுவரை சிறப்பாக நினைவு கூர்ந்து வருகிறார்கள். 

அவ்வாறே 'சங்கறுப்பது எங்கள் குலம்' எனக்கூறிய நக்கீரரும் பரதவரே. இவரும் சிவனால் வீடு பேறு அடையப் பெற்றவர் ஆவார். இவ்வாறு இரு பரதவர்கள் சிவனால் வீடு பேறு அடையப் பெற்றதன் மூலம் பரதவர் சைவ வழிபாட்டின் மேல் கொண்ட  பற்றுதலை அறியலாம். 

திருவாரூர் அருகேயுள்ள திருக்குவளையில் கிபி. 1219 ல் எழுதப்பட்ட கல்வெட்டில் சிவன்படவர் என்னும் சொல் காணப்படுவதும், செஞ்சி மன்னரால் எழுதப்பட்ட செப்பேட்டில் சிவன்படவர் என்னும் சொல் காணப்படுவதும் கூர்ந்து நோக்கக் கூடியதே. இச்சொல்லே பிற்காலத்தில் செம்படவர் என மாறியிருக்க வேண்டும் என உணர முடிகிறது. இதனையே மாணிக்கவாசகர்  திருவாசகத்தில் 

' படவதேறிப்பாரொடு விண்ணும் பரவியேத்த' 

எனப்பாடி சிவனே படவன் எனக் குறிப்பிடுகிறார்.

திருவிளையாடல் புராணத்தில் வரும் வலைவீசு படலம் நடைபெற்ற உத்திரகோசமங்கை தற்போது இராமநாதபுரம் அருகேயுள்ளது. இது ஆதியரசர் என்னும் பரதவ மன்னன் ஆளுகையிலிருந்தது. சிவனின் சாபத்தால்  உமையாள் இவரது மகளாகப் பிறக்க, நந்தி தேவர் சுறா வடிவில் கடலில் பரதவருக்கு தொல்லை கொடுக்க, ஆதியரசர் சுறாவைப் பிடிப்போருக்கு மகளை மனம் முடிப்பதாக வாக்குக் கொடுக்க, சிவனே வலையராய்  உரு எடுத்து சுறாவை அடக்கி உமையாளை மனம் முடித்து ஆசி வழங்கிய இடமாகும். இராமநாதபுரம் சமஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் மாரியூர் பூவேந்திநாதர் ஆலயத்தில் இந்நிகழ்வு நினைவு கூறப்படுகிறது. அவ்வாறே சிதம்பரத்தில் பர்வத ராஜ குலத்தோர் இந்நிகழ்வை தேர் திருவிழாவாக நினைவு கூர்வதும் முக்கியத்துவம் பெற்றது.

ஆதியில் கடற்கரைப் பட்டனமாகத் திகழ்ந்த இவ்வூர் இன்று கடற்கரையிலிருந்து தொலைவிலுள்ளது எனினும் அதற்கான எச்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. சிவ வழிபாட்டின் உச்சமாக இங்கு 7 அடி உயர மரகத நடராஜர் சிலை காணப்படுகிறது. இதனை ஆதி நடராஜர் எனவும், இவ்வூர் ஆதிசிதம்பரம் எனவும் அழைக்கப்படுகிறது. மாணிக்க வாசகரோ உத்திரகோசமங்கையை சிவனது சொந்த ஊராகவும், பாண்டிய நாடு சிவனது பதியாகவும் குறிப்பிடுவது கவனத்திற்குரியது.

இங்கு காணப்படும் உமையவள் மங்களேஸ்வரி, சுந்தர நாயகி என அழைக்கப்படுகிறார். இம்மங்களாம்பிகையின் மேல் அளவு கடந்த பற்றுதல் கொண்ட பரதவர்கள் அவளுக்கு கல்லில் தேர் அமைத்து நகர்வலம் வந்தனர். காலத்தின் கோலத்தால் அத்தேர் இன்று அங்கு காட்சிப் பொருளாக உள்ளது. இதனை பரதவர்கள் தங்கள் சொற்கட்டயங்களில் ஒன்றான 'உத்திர கோசமங்கையில் கல்தேர் ஓட்டிய ஜெயவீரா' எனக் கூறுவதன் மூலம் இன்றும் இதனை நினைவு கூறுகிறார்கள்.

இக்கோவிலில் தலைமைப் பூசாரிகளாகப் பணி செய்த பரதவர்கள் கிறிஸ்தவம் தழுவிய பின் இக்கோவிலைக் கைவிட்ட,  பரதவருகே உரிய சாமி சன்னிதி இன்றும் இங்கு மூடப்பட்டுள்ளது. கிறிஸ்தவம் தழுவிய பின்னரும் பரத சாதித் தலைவர்கள் தங்களது பதவியேற்பு நாள் அன்று உத்திரகோசமங்கை வந்து வழிபட்டு வந்ததையும் பிற்காலத்தில் அதுவும் நின்றதையும் சாகித்ய அகாடமி விருது பெற்ற கொற்கை நூல் குறிப்பிடுகிறது.

 -தொடரும் -


- நி. தேவ் ஆனந்த்

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.