Our Blog

பரதவர்களின் பதவி பெயர்கள்

பரதவர்களின் பழங்காலப் பதவி பெயர்கள் - 2

Tomb Stone in Vembaru,
Tamilnadu
முத்துக்குளித்துறைப் பரதவரின் நீண்ட வரலாற்றுச் சுழற்சியில் அவர்கள் கிறிஸ்தவம் தழுவிய நிகழ்விற்கு முற்பட்ட தொல்பழங்காலத்திலே அவர்களிடம் ஒரு வலிமை மிக்க கட்டுக் கோப்பான சமூகத் தன்னாட்சி அமைப்பு முறையும் (An Autonomous body and Rule) இருந்ததற்கான தடய எச்சங்களாக பட்டங்கட்டி, அடப்பன், ஞாயம் போன்ற பதவி பெயர்கள் தங்கிய குடும்பங்கள் இன்றும் கடலோரக் கிராமங்கள் சிலவற்றில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணும் போது அவை பற்றி ஆய்ந்தரியத் தூண்டும் எண்ணங்கள் எழுவது இயல்பு. 

அடப்பன்:

அடப்பன் என்றால் கடப்பமரம், பரவர் என பொருள் தருகிறது கழக அகராதி. அடப்பன் என்ற சொல் அடு என்ற வேர் சொல்லிலிருந்து பிறந்திருக்க வேண்டும். அடு + அல் = அடல், வலிமை என்றும், அடு + அப்பன் = அடப்பன் என்றால் வலிமை பொருந்தியவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

அடுநை ஆயினும் விடுநை ஆயினும்
நீ யளந் தறிதிநின் புரமை

என்ற 91 வது புறப்பாடல் (போரில் வென்றபின் பகைவனைக்) கொன்றாலும் (மன்னித்து) விட்டாலும் நீயளந்தறிதி என்று பொருள் தருவதால் அடு என்ற சொல்லடியாகப் பிறந்த அடப்பன் என்ற சொல் போர் சம்பந்தப்பட்டதாகவே இருந்திருக்க வேண்டும்.  

அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்

என்ற 768 வது குறளும் அடல் என்ற சொல்லை போரிடும் தகைமை என்ற பொருளிலே தருகிறது. சங்க காலத்துப் பரதவரின் வாழ்வியல் பற்றிய செய்தியை பட்டினப்பாலை படம் பிடித்துக் காட்டுகிறது. அவற்றில் குறிப்பாக

..... முதுமரத்த முரண் களரி
வரிமணல் அகந்திட்டை
இருங்கிளை யின னொகஂகறஂ
கருந்தொழிற் கலிமாக்கள்
கடலிறவின் சூடுதின்றும்
வயலாமை புழுக்குண்டும்
வறளடும்பின் மலர் மலைந்தும்
புனலாம்பற் பூச்சூடியும்
..................................
மலர் தலையும் மன்றத்துப் பலருடன் குழீகிக்
கையினும் கலத்தினு மெய்யுறத் தீண்டி
பெருந்சினத்தாற் புரங்கொடாது
இருங்செருவின் இகல் மெய்பினோர்

என்ற வரிகளுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கலிமாக்கள் என்ற சொல்லுக்கு பரதவர் என்றே பொருள் கொள்கிறார். எனவே சங்க காலத்தில் போர் முறை பயிற்றுவிக்கும் களரி என்ற பயிற்றகங்கள் இருந்தன என்பதும் கடலில் பிடிக்கின்ற இறால் என்ற புலாலையும் வயல் ஆமையின் இறைச்சியையும் தின்று உரமேறிய முடலையாக்கை முழுவலி மாக்களாகி பரதவர் அடம்பக் கொடியின் மலர்களை மாலையாகக் அணிந்து கொண்டு அக்களரிகளில் கைகளாலும், ஆயுதங்களாலும் மோதிப் போரிட்டனர் என்பது தெரிகிறது. என் நண்பரும் கல்வெட்டு ஆய்வாளருமான சென்னை உயர்திரு. எஸ். இராமச்சந்திரன் அவர்களுடன் இதுகுறித்து உரையாடியது இன்றும் நினைவிலிருக்கிறது.

அடம்பு  என்பது நெய்தலில் நீர்நிலைகளின் அருகில் வளரும் முயல்காது கொடிக்கீரையின் மலர்கள் ( Ipomoea pes-Capraea என்பது Botanical Name) எனவே அடம்ப மலர் சூடி போரில் தலைமையேற்று வழிநடத்துபவன் அடப்பன் என்று அறியப்பட்டிருக்கலாம். கொழும்பு பரதர் அசோசியேஷன் தலைவர் என்ற நிலையில் திவான் பகதூர் ஐ. எக்ஸ். பெரைரா அவர்கள் 1937 ஆம் ஆண்டு ஜனவரி 31 தேதி இலங்கை குடிவரவு கமிஷனருக்கு சமர்பித்த நீண்ட மகஜரில் 9ஆம் பக்கம் 2 வது பாராவில் ஆளும் பராக்கிராம பாகு (1410 – 1468) காலத்தில் புத்தளம் முற்றுகையிடப்பட்டபோது, ஆதி அரச அடப்பன், வர்ண சூரிய அடப்பன் என்ற இரு தளபதிகளின் கீழ் 7740 பரதவர்கள் கீழக்கரை, காவேரிப்பட்டணம் என்ற இடங்களிலிருந்து ஆறாவது பராக்கிரம பாகுவுக்கு உதவியாகச் சென்று முற்றுகையை முறியடித்ததாகச் சொல்கிறார். அடு, அடம்பு, அடப்பன் என்ற சொற்களுக்கு உள்ள தொடர்பை இது உறுதிப்படுத்துகிறது.

- தொடரும் -

- செல்வராஜ் மிராண்டா
நன்றி : பரவர் மலர் 2017

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.