Our Blog

தர்மத்தின் வேதசாட்சி சங். சூசை மாணிக்கம் சுவாமிகள்

சூசை மாணிக்கம் சுவாமிகள், தஞ்சை பகுதியை சேர்ந்தவர். வேம்பாறு பரிசுத்த ஆவி பணித்தளத்தின் பொறுப்பாளாராயிருந்த மொன்சிஞ்ேஞாா் D. சாமி நாதர் சுவாமிக்குத் துணை குருவாகப் பணிபுரிந்தார். அக்காலத்தில் வேம்பாறு பரிசுத்த ஆவி வேத போதக தளம் 25 துணைப்பங்குகளைக் கொண்டு விளங்கியது. சங். சூசை மாணிக்கம் சுவாமிகள் சிப்பிகுளம் கிராமத்தில் பொறுப்பேற்றிருந்தார்.

சிப்பிகுளம் கிராமத்தில் இன்று நெடிதுயர்ந்து நிற்கும் புனித வியாகுல அன்னை ஆலயம் கடலோடிகளுக்கும், சாலையில் 5 கிலோ மீட்டருக்கும் அப்பால் பயணிக்கும் பயணிகளுக்கும் மாதாவின் மகிமையை வெளிப்படுத்துகிறதென்றால் அதற்குரிய முழு புகழும், பெருமையும் தர்மத்தின் வேதசாட்சி என்றழைக்கப்படும்  சங். சூசை மாணிக்கம் சுவாமிகளையே சாரும். 

D. சாமி நாதர் சுவாமிகள் வேம்பாற்றில் புதிய ஆலயம் உருவாக்கத் திட்டமிட்ட போது, சிப்பிகுளத்திலும் அதே போன்ற ஆலயத்தை உருவாக்க சங். சூசை மாணிக்கம் சுவாமிகள் விரும்பினார். ஆனால் அதற்கு சாமி நாதர் சுவாமிகள் ஒப்பவில்லை. திருச்சி ஆயர் பசாந்தியரும் நிதி உதவி அளிக்கவில்லை. 

உள்ளுரிலே, கடற்கரை வருவாயைக் கொண்டு சங். சூசை மாணிக்கம் சுவாமிகள் சிப்பிகுளத்தில் ஆலயத்தை உருவாக்கினார். இறுதிக் கட்டத்தில் பணமுடை ஏற்பட்டது. இந்த நேரம், ஏற்றுமதிக்காகச் சென்ற தோணிகளிலிருந்து பஞ்சு மூட்டைகள் சிப்பிகுளம் கடற்கரையில் வந்து ஒதுங்கின. அவை தூத்துக்குடி ராவ்பகதூர் கயத்தான் வில்லவராயருக்குச் சொந்தமானவை. பஞ்சு மூட்டைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர் அன்பளிப்பாகக் கொடுத்த ரூ2000/- ஆலயப் பணிகள் நிறைவுற உதவிற்று. அந்த காலத்தில் இந்த ஆலயம் எழுப்ப மொத்த செலவு ரூபாய் ஏழாயிரம்.

வைப்பார் (இன்றைய கீழவைப்பார்) கிராமத்தில் மிகத் தீவிரமாகப் பெரியம்மை நோய் பரவி, அதனால் பலர் பாதிக்கப்பட்டனர். அந்த பங்கு சங். சூசை மாணிக்கரின் பணிகுட்பட்டதல்ல. இருப்பினும் அங்கு சென்று அருட்சாதனங்களை வழங்கிக் கொண்டிருந்தார். அங்கு பொறுப்பில் இருந்தவர்கள் இந்த பணியைச் செய்ய முன் வரவில்லை. இந்த சூழ்நிலையில் பெரியம்மை நோய் சங். சூசை மாணிக்கரைத் தாக்கியது. பத்து நாட்களாக வேம்பாறு கிராமத்தில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தார்.

'மிகக் கொடூரமான வேதனையில் சிரமப்பட்டாலும், ஒரு வார்த்தை கூட மனம் நொந்து பேசவில்லை. அவஸ்தை கொடுத்த பின், இறுதி மூன்று நாட்களிலும் அவரது உடல் உபாதைகள் மிகக் கொடுமையாயிருந்தது. அவரது நாசியினால் அவரால் சுவாசிக்க இயலவில்லை. அவருடைய குடல், வயிறு எல்லாம் எரிவதாகக் கூறினார். இந்த நல்ல குருவானவர், மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அவரது பிரிவாற்றாமையால் மக்கள் மிகவும் துன்பப்பட்டனர். அனைவரிலும் சிப்பிகுளம் மக்கள் இரட்டிப்பு மடங்கு துயரப்பட்டு நொந்தனர். இப்பேற்பட்ட தங்களின் நல்ல தகப்பனை, சிப்பிகுளம் ஆலயத்திலேயே நல்லடக்கம் செய்ய வேண்டுமென்றும், சடலத்தை தங்களிடம்  ஒப்படைக்க வேண்டுமென்றும், சிப்பிகுளம் மக்கள் போராடினர். நலிவுற்ற உடல், மாட்டுவண்டிப் பயணத்தினால் மேலும் பாதிக்கப்பட்டு விடும் என்பதால் சடலத்தை சிப்பிகுளம் மக்களிடம் ஒப்படைக்கவில்லை' என்கிறார் சாமிநாதர் சுவாமிகள்.

பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை யாரும் போய்ப் பார்க்க மாட்டார்கள். எனினும் இந்த உத்தமக் குருவின் உன்னதமான சேவைகளை மறக்காத எல்லா மக்களும் - இந்துக்கள் - முஸ்லிம்கள் உட்பட பலரும் பல்வேறு கிராமங்களிலிருந்து அணி அணியாக வந்து, வணங்கி, மரியாதை செய்தனர். இதனால் எல்லா மக்களும் இறுதி மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக, சடலத்தை மூன்று நாட்கள் வரை வைத்திருந்து, வேம்பார் தூய ஆவியானவர் ஆலயத்தின் நடுபகுதியில் (இடது புற சன்னலருகில்) நல்லடக்கம் செய்தார்கள். அந்தக் கல்லறையை இன்றும் காணலாம்.

1910 பெப்ரவரி மாதம் 10 ஆம் நாளில் காலமான இந்த நல்ல குருவானவரை 'தர்மத்தின் வேதசாட்சி' (Martyr of Charity) என்று கூறலாம்.

இந்த வரலாறு: - "Trichy - Morning Star" 10 th Year No 56' ல் தரப்பட்டுள்ளது.

- கலாபன் வாஸ் 

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.