Our Blog

நாவான் சாத்திரம் - ஓர் அறிமுகம்

கப்பல் கட்டும் கலை குறித்த செய்திகள் ஓலைசுவடிகளில் காணப்படுகின்றன. சென்னை கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் இக்கலை குறித்து இருந்த கப்பல் சாத்திரம், நாவாய் சாத்திரம் என்னும் இரண்டு ஓலைசுவடிகளை பழனியப்பப் பிள்ளை (1950), எஸ். சௌந்திர பாண்டியன் (1995) ஆகியோர் முறையே பதிப்பித்துள்ளார்கள். 

‘நாவான் சாத்திரம்’ என்னும் பெயரிலான சுவடியொன்று தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச் சுவடித்துறையின் சுவடி நூலகத்தில் (சுவடி எண் 718) பாதுகாக்கப்பட்டு வருகிறது. இச்சுவடி 33 செ.மீ நீளம், 3 செ.மீ அகலம் கொண்டதாகும். இச்சுவடியில் 14 ஏடுகள், 28 பக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் 9வரிகள் மிக நெருக்கமாக எழுதப்பெற்றுள்ளன. இச்சுவடியில் 81 பாக்கள் உள்ளன. சுவடியிலுள்ள ஏடுகளின் இடதுபக்க ஓரங்களில் ஏட்டெண்ணும், உட்தலைப்புகளும் எழுதப்பெற்றுள்ளன. ஏட்டெண், பாடல் எண் போன்றவை தமிழ் எண்களாலேயே குறிக்கப் பெற்றுள்ளன. இந்நூலின் ஆசிரியர் சீவரத்தினக் கவிராயர் ஆவார். 

இச்சுவடியில் எழுத்துநிலை மிகவும் தெளிவாக எழுதப் பெற்றுள்ளது. சுவடிகளில் பொதுவாகக் காணப்படுவது போன்றே இதிலும் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளிகள் இல்லை. ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு  ஒன்று போலவே எழுதப் பெற்றுள்ளன. மேலும் “h”, “u” இவற்றிக்கான வேறுபாடுகள் இல்லை. எழுத்துப்பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. ஏடுகள் நல்ல நிலையில் உள்ளன. இச்சுவடிக்குக் ‘காப்பு சட்டம்’ போடப்பட்டுள்ளது. 

நாவான் சாத்திரச் சிறப்புக் கூறுகள்  

கப்பலின் சிறப்பு:

தமிழர்கள் மிகுதியாகக் கடற்பயணம் செய்துள்ளனர். பயணக் காலங்களில் மாலுமிகள் விண்மீன்களையும், திங்களையும் நோக்கித் திசை அறிந்து மரக்கலங்களைச் செலுத்தியுள்ளனர். வானத்தை நோக்கி நேரம் அறிந்து கொள்ளவும் பயின்றிருந்தனர். நாம் ஒரு செயலைச் செய்யும்போது நல்ல நேரம், நல்ல நாள் போன்றவற்றைப் பார்க்கிறோம். அது போல கப்பல் கட்டும் முறைக்கும் நேரம் பார்த்துக் கப்பலைக் கட்டத் தொடங்குகின்றனர். இச்செய்திகளைத் தருவது இச்சுவடியாகும். இச்சுவடியில் காணப்பெறும் முக்கியக் கூறுகள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன. 

கப்பல் செய்வதற்கு ஏற்ற காலம்: 

நல்ல நாள், நல்ல நேரம், திதி, சந்திரன் (நட்சத்திரம்) இவைகளின் சேர்க்கை, மகரம் முதலிய ஆறு சர லக்னங்கள் மற்றும் 27 நட்சத்திரங்களில் கடைசி ஏழு நட்சத்திரங்கள் தவிர மற்ற நட்சத்திரங்களில் கப்பலைச் செய்கின்றனர். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இந்நான்கு இராசிகளிலும் கப்பலைச் செலுத்த முடியாது.

கப்பலை உடனடியாக செய்ய முடியாது. நல்ல நேரம், நாள் பார்த்துக் கப்பல் செய்ய ஆரம்பிக்கின்றனர். அதனுடைய ஒவ்வொரு பலகை வைப்பதற்கும் நல்ல நாள் பார்த்து செய்கின்றனர். அப்பொழுதுதான் கப்பலானது முழுமையாக உடையாமல் இருக்கும் என்று நம்புகின்றனர். நல்ல நாள் பார்த்துச் செய்யும் கப்பலே சிறப்பாகக் கடலில் சென்று வரும். கப்பல் மட்டுமின்றி மரக்கலம் செய்வதற்கும் நல்ல நாள் பார்த்துச் செய்கின்றனர். இதனை,

சூலமொன் பானில் நிற்கச் சேர்ந்தனாள் பிறனாள் தானும் 
வாலிபந் தாள மொன்று வயங்குட னிரண்டும் முன்னே 
யேலவே யிருபத் தெட்டு மெண்ணிய கொள்கை யிற்றை 
கோலியே கூம்பி மீதே குறித்தநாள் நடத்து மென்றான் (2)

நடந்தநாள் பரிதி தன்னை நாட்டுக வுச்சி மீதே 
தொடர்ந்தநாள் வலமே யெண்ணாச் சொல்லுக நன்மை தீமை
வடந்தரு கூம்பி மூன்று மனுவொடு வங்கம் பாழாம் 
கிடந்தமுன் னணியச் சூலம் கிளம்பிடில் முறியு மென்றான் (3)

முறிந்தன வடியி நாளும் முதல்வன் தானு மங்கே 
பிறிந்தன மனுக்க ளெல்லாம் பின்மரத் தலையி னுண்மை 
அறிந்தவர் தெரிந்து கொண்டு ரணியமும் பிறமுந் தானும் 
சிறந்ததோர் பதியிற் சேர்ந்து சேர்ந்தினி திருக்கு மென்றார் (4)

திருந்திய வகத்து முன்னாள் செய்யயீ ராறுஞ் செப்பி
லருந்திய சூல மொன்பா னணிமரக் கலங்கள் செய்யிர் 
வருந்திய மிதுனங் கன்னி வளர்சிலை மீன மாகா 
பொருந்திடு மற்ற ராசி யென்னவெ புகன்றார் முன்னோர் (5)

என்னும் பாடல்கள் உணர்த்தக் காணலாம்.

நாள், நேரம், திதி, நட்சத்திரம் (சந்திரனின் நிலை) இவைகளின் நிலை அறிந்து மகரம், துலாம், கடகம், மேஷம், ஆகிய நான்கு சர லக்னங்களை நீக்கி 27 நட்சத்திரங்களில் கடைசி ஏழு நட்சத்திரங்களான உத்திராடம், திருவோணம், அவிட்டம், சத்யம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி தவிர மற்ற நட்சத்திரங்களில் கப்பலைக் கட்டத் தொடங்குகின்றனர். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இந்நான்கு இராசிகளிலும் கப்பலைச் செய்யத் தொடங்கக்கூடாது.

கப்பல் செய்வதற்கு முன் அந்த மரத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். மரம் வெட்டும் போது கருப்பாக இருந்தால் பாம்பு வாழ்வதாகவும், தயிலம் போல் இருந்தால் தேள் வாழ்வதாகவும், பல நிறங்களில் இருந்தால் தவளை வாழ்வதாகவும், அதிக சிவப்பாகக் காணப்பட்டால் பல்லி வாழ்வதாகவும் சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. இதனை,

தெள்ளிய ஒற்றை யாகிற் றிருந்திய நன்மை யாகும் 
முள்ளதி விரட்டை யாகி லுண்மையாய்க் கேடே யாகும் 
தெள்ளிய வியாழம் நிற்கில் தீமைகள் திறப்புண் டோடும் 
வள்ளிய பிண்டி நாதர் மரம்பல தொடாதென் றாரே (31)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

கறுப்பு நிறம் கொண்ட மரக்கலம் தீமை ஏற்படுத்தும் என்றும், வெள்ளை நிறம் கொண்ட மரக்கலம் நன்மை விளைவிக்கும் என்றும் குறிப்பிடுவர். கப்பல் கட்டுவதற்கு முன் மரத்தை வாங்குபவர்கள் அந்த மரத்தில் எந்த விதமான ஓட்டையும் இருக்கக் கூடாது என்றும், ஓட்டை உள்ள மரத்தை வாங்கினால் அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் என்றும் நாவான் சாத்திரம் குறிப்பிடுகின்றது. இதனை, 

தண்டிய வண்டி னேறு தாவிய பதத்திற் நின்றால் 
குன்றிடுஞ் செல்வ ந்தானும்  கொடியதோர் மரத்தின் கொத்தி
மிண்டிய துளைகள் கொள்ளில் மேதினி தன்னில் கேடாம் 
மெண்டிசை தனிலெப்போது மியல்விடா தேரை வைப்பே (30)

மரத்தை இரண்டாக வெட்டி அதையே மூன்று துண்டுகளாக்குகின்றனர். அதில் முன் பகுதியும், பின் பகுதியும் நன்மை ஏற்படும் என்றும், ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது துண்டுகளாக இருந்தால் கப்பல் செய்ய பயன்படாது என்றும், நான்கு, ஐந்து துண்டுகளாக இருந்தால் கப்பல் செய்ய உகந்தவை என்றும், பத்து துண்டுகளாக கப்பல் செய்தால் மரணம் ஏற்படும் என்றும் சாத்திரம் கூறுகிறது. இதனை,

ஏராவை யீரைந் தாக்கி யிரண்டுமூன் றோன்றும் நன்மை
ஓராத ஆறு மேழும் ஒன்பதுந் தருவா மொட்டும் 
நேராக வங்கம் பாழாம் நிலைத்திடும் நாலு மைந்தும் 
காராருங் குழலாய் பத்துங் கர்த்தாவின் மரண மாமே (17)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

கப்பலின் அடிப்பகுதி (ஏரா):

கப்பலின் அடிப்பகுதிதான் மிகவும் முக்கியமானது. அதைத் தவறாகச் செய்தால் உடைப்பு ஏற்பட்டு நீருக்குள் மூழ்கிவிடும். இதனால் கப்பலின் அடிப்பகுதியை செய்யும்போது நல்ல நாள் பார்த்துச் செய்கின்றனர். அடி மரத்தின் நீளத்தை அளந்து ஒரு முழத்துக்கு 24 அங்குலமாகப் பெருக்கி வந்த தொகையை 27 - இல் கழித்து மீதியை வைத்து அசுவினி நாளில் கப்பல் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இதனை,

ஏராவி நீளமென தாகு மென்றேற் றிடுமோர் முழங்கள் விரலைத் 
தோராம லெட்டி னாலே பெருக்கித் தொகையான வான வெல்லாம் 
சீராரும் யிருபத் தேழில் கழித்துச் சிதைவுற்று நின்ற சேடம் 
ஆராயும் அசுபதிமுதலாக வெண்ணி அறிந்துநீ சொல்வங்கே நாளே (19)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

மரத்தினுடைய அடிப்பாகத்தை அளந்து எட்டுப் பகுதியாக மடக்கி அதில் ஆறு மடிப்பு விட்டு, அதையே இரண்டு மடங்காக எடுத்து, அதை மூன்று பகுதியாக அமைத்து அதில் இரண்டு பகுதி விட்டு ஒரு பகுதியைப் பாய்மரத்தின் அடிப்பலகையாக நடுப்பகுதியில் வெட்டி முட்டுக் கொடுக்கின்றனர். மரத்தை வெட்டுவது பாவம் என்று கருதுவதால், பஞ்ச பூதங்களை ஒன்று சேர்த்து வெட்டினால் அதன் பாவம் விலகும் என்கின்றனர். இதனை,

பாலுடன் தேனும் நெய்யும் பழமுடன் மஞ்சள் சாரும் 
காலுறு மப்பு மூப்பும் கடுகுட னிளனீர் காந்தம் 
வேலுறு மணியச் சல்லம் மரமூமோ ஒக்கக் கொண்டால்
மாலுறும் நீரை யாட்ட மருவிய கரையிற் சேரும் (44)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

கப்பலைக் கட்டுவதற்கான செலவுகளைப் பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல், கப்பல் கட்டுவது மட்டுமின்றி கடலில் மீன் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றியும், சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பல்கள் நல்ல நாள் பார்த்துச் செல்ல வேண்டும் என்பது பற்றியும், கிரக நிலை பற்றியும் குறிப்பிடுகிறது. கடலில் மீன்பிடிக்கச் செல்பவர்கள் நல்ல நாள், நட்சத்திரம் பார்த்துச் செல்ல வேண்டும். அப்படிப் பார்க்காமல் செல்பவருக்குக் கடலிலே ஆபத்து ஏற்படும் என்பதைக் கூறுகிறது. இதனை,

கண்ட முழத்தை யெட்டதனிற் கருதிப் பெருக்கிப் பன்னிரண்டில் 
நின்று கழித்தா லாயம்மிச்சம் நிசமுன் முளத்தை யொன்பதனி 
லொன்றப் பெருக்கி யொருபதினில் ஒழித்தால் மிச்சஞ் சிலவென்று 
வென்றி யறிஞோர்  முன்றுரைத்த விதியின் படியே அறிவீரே (22)

காலை யெழு கதிராகில் கனகஞ் சேரும் 
கரியாகில் மிகத்தோசம் கடலிற் கேடாம் 
மாலையெழும் பிறையாகில் வரவு கூடும் 
மங்கையர்தன் சீரடியே மடந்தை கேடாம் 
காலுடனே மழுவாகிற் கடலிற் கேடாம் 
கண்டறிஞோர் ஏராவின் கண்ணடைகள் தானே (23)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

கப்பல் கட்டுவதற்கு முன் முதலில் தோணியில் பலகை செய்து கடலில் மிதக்க விடுகின்றனர், அதற்குப் பிறகு கப்பல் கட்டுதல், கப்பல் ஓட்டும் கருவி போன்றவற்றைச் செய்கின்றனர். ரேவதி, ரிஷபம், அவிட்டம் இவைகள் மூன்று நாழிகை இருக்கும் போது கப்பல் செய்தால் இதனுடைய பின்பக்கம் உடைப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கிவிடும் என்று இந்நூல் குறிப்பிடுகின்றது. (பா.30)

கிரகநிலை:

கிரகநிலை பார்த்து கப்பல் கட்டத் தொடங்குகிறனர். அவை சனிதிசைப் பலன், செவ்வாய் திசை பலன், சூரிய திசைப் பலன், ராகு திசை பலன் போன்றவையாகும்.

சனி திசைப்பலன்:

சனி, 1 - ஆம் இடத்தில் இருந்தால் நீருக்குள் மூழ்கும், 4 - ஆம் இடத்தில் உச்ச நிலையில் இருந்தால் கப்பல் உடையும், 6 - ஆம் இடம் இருந்தால் காற்று, மழை பாதிப்பு ஏற்படும், 8 - ஆம் இடம் இருந்தால் பொருள்கள் அழியும், 10 - ஆம் இடம் இருந்தால் காற்று அடித்து கப்பல் செல்லாமல் நிற்கும் என்கிறது.

செவ்வாய் திசைப்பலன்:

செவ்வாய், 1 - ஆம் இடம், 5 - ஆம் இடம் இருக்குமானால் கடற்கரையிலே உடைப்பு ஏற்படும்.

சூரிய திசைப்பலன்:

சூரியன், 3 - ஆம் இடம், 6 - ஆம் இடம்,  7 - ஆம் இடம்  இருக்குமானால் கப்பல் ஓட்டும் கருவி உடைப்பு ஏற்படும் என்றும்,  11 - ஆம் இடம் இருப்பின் கரையைச் சேராது என்றும் கூறுகிறது.

ராகு திசைப்பலன்:

ராகு, 5 - ஆம் இடம்,  8 - ஆம் இடம்  இருக்குமானால் கடலில் கப்பலைச் செலுத்த முடியும் என்கிறது. கப்பல் மட்டுமின்றி தோணி, வங்கம், நாவாய் இவைகள் செய்வதற்கும் நல்ல நாள் பார்த்து செய்கின்றனர். இல்லையெனில், இதனுடைய பாய்மரம் சிதைவு பெற்றுவிடும். கப்பல் கட்டும் போது சரியான அளவு எடுத்துக் கொண்டு கட்டினால் தான் சிறப்பாக இருக்கும் என்று மாலுமி கூறுவார். இதனை,

மேடத்தில் அஞ்ச தாகு மிடபத்தி லேழே முக்கால் 
நாடுகற் கடகம் அஞ்சாம் நல்லதோர் சிங்கம் நாலாம் 
நீடுகொல்  நாலே அரைக்கால் நிட்செய மகரமூன்று 
காடொற்ற ராசி தானுங் கரைதனில் சேரு மென்றார் (35)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

கப்பல் ஓட்டுபவர் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து ஓட்டினால் அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கரை சேர முடியும் என்பது பற்றியும் குறிப்பிடுகின்றது. (பா 44)

கப்பல் கட்டி முடித்த பிறகு கடலில் செலுத்துவதற்குத் தயாராகும் நிலையில் இருக்கும் போது, கடலில் அதிக கொந்தளிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு மஞ்சள், தேன், நெய், சந்தனம், வில்வம், சூடம் போன்ற பொருட்களைக் கொண்டு எட்டுத் திசையில் உள்ள தெய்வங்களுக்குப் பூஜைகள் செய்கின்றனர். அதற்குப் பிறகு பயணம் மேற்கொள்கின்றனர் என்கிறது இந்நூல். இதனை,

சேந்த நல் மஞ்சள் தேனும் நெய்யோடு சந்த னங்கள் 
வாய்ந்ததோர் துளசி வில்வம் மஞ்சளும் சூடன் கோட்டமன்னும் 
காய்ந்ததோர் கனலி லிட்டுக் கருதிய தீபங் காட்டிப் 
போந்தஅஷ் சதைகள் போடா பூசைகள் விரும்பு மன்றோ (45) 

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

கப்பலில் பயணம் செய்வதற்கு உகந்த காலம் :

மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், துலாம், மகரம், தனுசு ஆகிய சுப லக்னங்களிலும், நல்ல திதி, வாரம், நட்சத்திரம் இவைகளின் சம்பந்தத்தால் ஏற்படுகிற நல்ல யோகம், நல்ல நாளில் படகில் பயணம் செய்தால் நன்மைகள் ஏற்படும் என்கிறது. 

மரக்கலம் வைக்க ஆகாத நாள்:

உத்திரட்டாதி, அத்தம், உத்திரம், மூலம், பூரம் ஆகிய நட்சத்திரங்களில் நாவாய் செலுத்தினால் நாவாய் முறிந்துவிடும் என்கிறது. இதனை,

அறிவி லத்தம் அளகிய உத்திரம் 
செறிவிலா வளர்முப் பூரஞ் சிதைத்தனர் 
நெறிபடுங் குழலாய் முகூர்த்தஞ் 
செயல்முறி படுங்கலன் முன்னீ ரதனுள்ளே (55)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.
மரக்கலம் வைக்க உகந்த நாள்:

ரோகினி, உத்திரட்டாதி, புனர்பூசனம், பூசம், அவிட்டம், அனுஷம், உத்திரம் இந்த நட்சத்திரங்களில் ஏரா வைத்தால் குற்றம் ஏற்பட்டு பிறகு நன்மை பயக்கும் என்கிறது. இதனை,

மூங்கில் ரோணி முரசுத்தி ராடம்பணை 
தாங்கு பூசம் அவிட்டந் தரணியில் 
ஓங்கும் நற்கலம் வைத்தி டில்கலந் 
தீங்கு மற்றுந் திருந்திய செல்வமே (56)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

சூரியன் மற்றும் செவ்வாய் ஒரே திசையாய் இருக்கும் போது கப்பலில் சரக்குகளை ஏற்றிச் சென்றால் அதற்கு சேதம் ஏற்படும். சரக்கு ஏற்றிச் செல்வதற்கு என நல்ல நாள், நட்சத்திரம், ராசி பலன்கள் பார்த்துச் செலுத்த வேண்டும் என்கிறது. இதனை,

குருட்டுநாட் பொல்லா நாளிற் கொலியே கலன்கள் செய்யில் 
அருக்கனுஞ் சோமன்தானும் அணைத்துட நிற்குமாகில் 
மரக்கல நாய னோடு சரக்குமே சேத முண்டாம்
விருத்தாமாந் தீக்கோள் நிற்கில் வென்றில ரென்று சொன்னார் (57)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

சரக்கு ஏற்றிச் செல்லும் நாள்:

அசுவினி, திருவோணம், அனுஷம், ரேவதி, சோதி, மிருகசீரிஷம், அத்தம் ஆகிய நாளில் சரக்குகளை ஏற்றிச் சென்றால் நன்மை ஏற்படும் என்கிறது. இதனை, 

ஆதி யோணம் அனுஷ்டமு ரேபதி 
சோதி மான்றலை சொல்லிடி லத்தமும் 
நீதி சேரு நெறி கட லோடிட 
நாதனார் சொன்ன நாளிது நன்மையே (58)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

மரக்கலம் வைக்கும்/ வைக்காத இடம்: 

ரிஷபம், ரேவதி, துலாம், திருவோணம் இந்த ராசிகளில் மரக்கலம் வைத்தால் நல்ல பலன்கள் ஏற்படும். ஆனால் மீன ராசியில் வைத்தால் அழிவு ஏற்படும் என்கிறது. இதனை,

தகரரி யிடபம் நன்மை தருந்தண்டு தானுந் சூலம் 
பகைவற் காம துலையே நல்லிபலன் மிகுந்தேள் போக்கில்லை 
மிகுகுடங் கடலிற் வாழும் மீனுளக் கேடு போன 
விலத்திகை யிழைத்தோடு மானுந் தேடுமத்தி மத்தில் நன்றே (60)

வாரமுறும் வாரமதை வகுக்குங் காலை 
மதிபுதனும் வானவர்தன் குருவு மற்றைச் 
சோரைநிதம் பருகவுணர் குருவு மென்றுஞ் 
சொல்லறிய பலன்களெல்லாம் கொடுப்பர் நாளுங் 
காரியோடு சேயிரவி கலம்வைத் தெல்லாம் 
கண்டயிவை கலமிறக்க யெடுக்கி லாகாப் 
பூரணமா யுருமினிது வினித்தோர் தங்கள் 
புக்கிருந்த செங்கமலப் பொற்பி னாளே (61)

என்னும் பாடல் உணர்த்தக் காணலாம்.

இது போன்ற பல சிறப்புகளைப் பெற்ற இச்சுவடிச் செய்திகள் இன்னும் வெளிப்படாமல் இருப்பது தமிழுலகிற்கு இழப்பாகும்.


- மோ.கோ.கோவைமணி 
"நாவாய்"  கடல்சார் வரலாற்றாய்வுகள் நூலிலிருந்து

நன்றி: தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.