Our Blog

பட்டினப்பாலை சுட்டும் பரதவர்

விளையாட்டுக் களத்தில் மறவர்களின் மற்போரும் வாட்போரும்:

முது மரத்த முரண் களரி 
வரி மணல் அகன் திட்டை 
இருங் கிளை இனன் ஒக்கல் 
கருந் தொழில் கலிமாக்கள் 
கடல் இறவின் சூடு தின்றும் 
வயல் ஆமை புழுக்கு உண்டும் 
வறள் அடும்பின் மலர் மலைந்தும் 
புனல் ஆம்பல் பூச் சூடியும் 
நீல்நிற விசும்பின் வலனேர்பு திரிதரு 
நாள்மீன் விராய கோள்மீன் போல 
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇ 
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி 
பெருஞ் சினத்தான் புறங் கொடாது 
இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர் 
எல் எறியும் கவண் வெரீஇப் 
புள் இரியும் புகர்ப் போந்தை (59-74) 

புகார் நகரில், வரி வரியாக மணல் பரந்த அகன்ற மேட்டுப் பகுதியில் உள்ள பழைமையான மரத்தின் நிழலில், மறவர்கள் தம் வலிமையைக் காட்டும் போர்ப்பயிற்சிக் களம் இருந்தது. அவ்விடத்து மறவர்களின் பெரிய உறவினர்களும், இனச் சுற்றத்தினரும் கூடியிருந்தனர். வலிமையான போர்த்தொழிலில் வல்ல போர் மறவர்கள், கடல் இறாலினைச் சுட்டுத் தின்றனர். வயலிலே கிடைத்த ஆமையினை வேக வைத்து உண்டனர். மணலில் மலர்ந்துள்ள அடப்பம்பூவினைச் சூடினர், நீரில் பூத்த ஆம்பல் பூக்களைப் பறித்துத் தலையில் அணிந்து கொண்டனர். நீல நிறமான அகன்ற வானத்தில் வலமாக எழுந்து திரியும் நாள்மீனாகிய சூரியனோடு பொருந்திய கோள்கள் போல அகன்ற இடத்தையுடைய பொது மன்றத்தில் போர் புரிவோரும், காண்போருமாகிய மக்கள் ஒன்று கூடி இருந்தனர். கையினாலும், படைக்கலத்தினாலும் ஒருவருக்கொருவர் பின் வாங்காது, போட்டிப் போட்டுக் கொண்டு தம் மிகுந்த போர் வலிமையைக் காட்டினர். மேலும் வலிமையைக் காட்ட எண்ணி, கவணில் கல்லை ஏற்றி எறிந்தனர். இவர்கள் எறிகின்ற கல்லிற்கு அஞ்சி பறவைகள், சொரசொரப்பான பனைமரங்களை விட்டு வேற்றிடத்திற்குச் சென்றன. 

சொற்பொருள் விளக்கம்:

முது மரத்த – பழைமையான மரத்தையுடைய, முரண் களரி – மறவர்கள் தமது வலிமையைக் காட்டும் போர்ப்பயிற்சிக் களம், பரிமணல் – காற்றால் அறலாக (வரி வரியாக) அமைந்த மணல், அகன் திட்டை - அகன்ற மேட்டுப்பகுதியில், இருங்கிளை – பெரிய அளவில் உறவினர்கள், இனன் ஒக்கல்- இனச்சுற்றத்தினர், கருந்தொழில் – வலிய தொழில் (போர்த் தொழில்), கலி மாக்கள் – செருக்குடைய போர் மறவர்கள் (விடையாட்டுப் போரில் ஈடுபட்டிருக்கும் மறவர்கள்) கடல் இறவின் - கடலில் கிடைக்கும் இறால் மீனின், சூடு தின்ஷிம் சுட்டுத் தின்றும், வயல் ஆமை – வயலிலே உள்ள ஆமை, புழுக்கல் உண்டும் – அவித்து உண்டும், வறள் அடம்பின் – மணலில் பூத்துள்ள அடப்பம்பூ, மலர் மலைந்தும் – மலரினைத் தலையில் சூடியும், புனல் ஆம்பல் – நீரில் வளரும் ஆம்பல், பூச்சூடியும் – பூவினை அணிந்து கொண்டும், நீல் நிற விசும்பின் – நீல நிறமுள்ள வானத்தில், வலன் ஏர்பு திரிதரு – வலமாக எழுந்து உலவுகின்ற, நாள் மீன் விராய – நாள்மீனாகிய சூரியனுடன் பொருந்திய, கோள்மீன் போல - கோள்கள் போல, மலர்தலை மன்றத்து - அகன்ற இடத்தையுடைய பொது மன்றத்து, பலருடன் குழீஇ – பலருடன் கூடி, கையினும் – கைகளாலும், கலத்தினும் – படைக்கலன்களாலும், மெய் உறத் தீண்டி – உடலோடு உடல் பொருத மோதியும், பெருஞ்சினத்தால் – மிக்க சினத்தால், புறக்கொடாது - ஒருவருக்கொருவர் பின் வாங்காமல், இருஞ்செருவில் – பெரிய சண்டையில், வீரர்களுக்குள் நடக்கும் பெரும் போரில், இகல் – போர், பகை, மொய்ம்பினோர் – வலிமை வாய்ந்தவர், கவண் எறியும் – கவணால் எறிகின்ற, கல் வெரீஇ – கல்லுக்கு அஞ்சி, புள் – பறவைகள், இரியும் – விட்டுப் போகும், விரைந்து செல்லும். 

பரதவர்களின் இருப்பிடம்:

கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி 
நடுகல்லின் அரண் போல 
நெடுந்தூண்டிலில் காழ் சேர்த்திய 
குறுங் கூரை குடிநாப்பண் 
நிலவு அடைந்த இருள் போல 
வலை உணங்கும் மணல் முன்றில் (78-83) 

இறந்த வீரர்களின் நினைவாக நடப்பட்டிருக்கும் நடுகல்லுக்குக் கேடயங்களை வரிசையாக வைத்து வேலை ஊன்றி அமைத்திருக்கும் அரண் போல, நீண்ட மீன் தூண்டில் கோலினைச் சார்த்தி வேலி அமைக்கப்பட்டிருக்கும் குறுகிய கூரையினையுடைய குடிசை காணப்படும். இதன் நடுவில் நிலவினைச் சேர்ந்திருக்கும் இருளைப் போல, வலை உலர்ந்து கொண்டிருக்கும் மணல் முற்றத்தினை உடையது பரதவரின் இருப்பிடம். 

சொற்பொருள் விளக்கம்:

கிடுகு நிரைத்து – கேடயங்களை வரிசையாக வைத்து, எஃகு ஊன்றி – வேல்களை நட்டு, நடுகல்லின் – வீரர்களின் நினைவாக நடப்பட்டிருக்கும் நடுகல்லுக்கு, அரண் போல – வேலி போல, நெடுந்தூண்டிலின் - நீண்ட மீன் தூண்டிலின், காழ் சேர்த்திய – கோலினைச் சார்த்தியிருக்கும், குறுங்கூரை, சிறிய கூரையினையுடைய, குடிநாப்பண் – குடிசையின் நடுவில், நிலவு அடைந்த இருள் - நிலவைச் சேர்ந்திருக்கும் களங்கமாகிய இருளைப் போல, வலை உணங்கும் - வலை காய்ந்து கொண்டிருக்கும், மணல் முன்றில் – மணல் நிறைந்த வீட்டின் முற்றம் (முன்பகுதி) 

பரதவர்களின் வழிபாடும் விளையாட்டும்:

வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த 
வெண் கூதாளத்துத் தண்பூங் கோதையர் 
சினைச் சுறவின் கோடு நட்டு 
மனை சேர்த்திய வல் அணங்கினான் 
மடல் தாழை மலர் மலைந்தும் 
பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும் 
புன்தலை இரும் பரதவர் 
பைந் தழை மா மகளிரொடு 
பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது 
உவவு மடிந்து உண்டு ஆடியும் (84-93) 

பரதவர், விழுதினையுடைய தாழையின் தாள்களின் அடிப்பகுதியில் வளர்ந்திருக்கும் வெண்டாளியின் குளிர்ச்சியான மலர்களால் கட்டப்பட்ட மாலையினை அணிந்திருந்தனர். சினையான சுறாமீனின் கொம்பினை நட்டு, அதில் தம் நிலத்து தெய்வமாகிய வருணனைத் தங்கச்செய்து, அத்தெய்வத்திற்குப் படைத்த மடலோடு கூடிய தாழை மலரைத் தாம் சூடினர். சொர சொரப்பான பனை மரத்திலிருந்து இறக்கிய கள்ளைப் பருகினர். எண்ணெய் தடவாத தலைமயிரும், கரிய நிறமுமுடைய பரதவர், முழு நிலா நாளில் ஊக்கம் குறைந்து, கருமையான குளிர்ந்த கடலில் மீன் வேட்டைக்குச் செல்லாமல், பசுமையான தழை ஆடையினை உடுத்த தம் பெண்களோடு தாம் விரும்பும் உணவினை உண்டு விளையாடினர். 

சொற்பொருள் விளக்கம்:

வீழ்த்தாழை – விழுதினையுடைய தாழை, தாள் – அடிப்பகுதி, தாழ்ந்த – அடிப்பகுதி, வெண்கூதாளத்து – வெண்கூதாளத்தின், தண் பூங்கோதையர் – குளிர்ந்த பூ மாலையினை அணிந்தவர், சினைச் சுறவின் – சினையாக இருக்கும் சுறா மீனின், கோடு நட்டு – கொம்பினை நட்டு, மனை சேர்த்திய – சுறா மீனின் கொம்பினைத் தெய்வம் தங்கும் இடமாகச் செய்து, வல் அணங்கினோன் – வலிய கடல் தெய்வமாகிய வருணனுக்குப் (படைத்து), மடல் தாழை – மடலையுடைய தாழை, மலர் மலைந்தும் – மலரினைச் சூடியும், பிணர்ப் – சொர சொரப்பான, பெண்ணை – பனை மரத்திலிருந்து (எடுத்த) பிழி மாந்தியும் – கள்ளைப் பருகியும், பைந்தழை – பசுமையான தழையினை, மா மகளிரொடு – கருத்த மகளிரொடு, பாய் இரும் பனிக்கடல் – பரந்த கருமையான குளிர்ச்சியான கடல், வேட்டம் செல்லாது – மீன் பிடித்தலுக்குச் செல்லாது, உவவு மடிந்து – முழுமதிநாளிலே ஊக்கம் குறைந்து, உண்டு ஆடியும் – தாம் விரும்பியதை உண்டு ஆடினர். 

சங்கமுக நீராடலும் , பகல் விளையாட்டும்:

புலவுமணல் பூங்கானல் 
மாமலை அணைந்த கொண்மூ போலவும், 
தேறுநீர்ப் புணரியோடு யாறுதலை மணக்கும் 
மலி ஓதத்து ஒலிகடல் 
தீது நீங்க கடல் ஆடியும் 
மாசு போக புனல் படிந்தும் 
அலவன் ஆட்டியும் உரவுத்திரை உழக்கியும் 
பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும் 
அகலாக் காதலொடு பகல் விளையாடிப் 
பெறற்கு அரும் தொல்சீர்த் துறக்கம் ஏய்க்கும் 
பொய்யா மரபின் பூமலி பெருந்துறை (94-105) 

(க.ரை) புலால் நாறும் மணலையும், பூக்களையும் கொண்ட கடற்கரையிலே, பெரிய மலையைச் சேர்ந்த மேகத்தைப் போலவும், தாயின் மார்பினைத் தழுவிய குழந்தையைப் போலவும், தெளிந்த நீரினையுடைய கடலோடு,காவிரியாறு கலக்கின்ற இடமாகிய சங்கமுகத்துறையில் (கடலும் ஆறும் கலக்குமிடம்) அலைகளின் ஒலி மிகுந்து காணப்பட்டது. இச்சங்கமுகத்தில் தீவினை நீங்க கடலாடினர். கடலாடியதால் மேனியில் படிந்த உப்பு நீங்குவதற்காக, பின் பாவிரியாற்றிலே குளித்தனர். நண்டுகளைப் பிடித்து ஆட்டியும், ஒலி மிகுந்த அலைகளிலே விளையாடியும்,மணலிலே பாவை செய்தும், ஐம்புலன்களால் பெறுகின்ற இன்பம் அனைத்தையும் நுகர்ந்தனர். பின்பும் அவ்விடத்தை விட்டு நீங்குவதற்கு விருப்பமின்றி, விருப்பத்துடன் பகற்பொழுதெல்லாம் விளையாடினர். நீர்வளம் என்றும் பொய்க்காததால், பூக்கள் நிறைந்து காணப்படும் காவிரிப்பூம்பட்டினத்துச் சங்கமுகத்துறை, பெறுவதற்கரிய தொன்மையான சிறப்பினையுடைய சொர்க்கத்தை ஒத்து விளங்கியது. 

சொற்பொருள் விளக்கம்:

புலவு மணல் – புலால் நாற்றம் வீசும் மணல், பூங்கானல் – பூக்களைக் கொண்ட கடற்கரை,மாமலை அணைந்த – பெரிய மலையைச் சேர்ந்த , கொண்மூப் போலவும்- மேகத்தைப் போலவும், தாய் முலை தழுவிய – தாயின் மார்பைத் தழுவிய, குழவி போலவும் – குழந்தையைப் போலவும், தேறுநீர் – தெளிந்த நீர், புணரியொடு – கடலோடு, யாறுதலை மணக்கும் – காவிரியாறு ஒன்று கூடும், காவிரியாறு ஒன்றுசேரும், மலி ஓதத்து – ஒலி மிகுந்து காணப்படும் அலை ஒலி கடல் – ஒலிகிகின்ற சங்கமுகத்துறை (கடலும் ஆறும் சங்கமிக்கும இடம்) தீது நீங்க – தீ வினை நீங்க, கடலாடியும் -கடலிலே குளித்தும், மாசுபோக – கடல் நீரில் குளித்த உப்பு நீங்க, புனல் படிந்தும் – காவிரி நீரிலே குளித்தும், அலவன் ஆட்டியும் – நண்டுகளைப் பிடித்து அலைந்தும், உரவுத்திரை உழக்கியும் – ஒலி மிகுந்த அலைகளிலே விளையாடியும், பாவை சூழ்ந்தும் – கடற்கரை மணலிலே பாவை (மணல் பொம்மை) செய்தும், பல்பொறி மருண்டும் - ஐம்புலன்களால் பெறுகின்ற இன்பம் அனைத்தையும் நுகர்ந்தும், அகலாக் காதலொடு – நீங்காத விருப்பத்தோடு, பகல் விளையாடி – பகற்பொழுதெல்லாம் விளையாடி, பெறற்கரும் – பெறுவதற்கு அரிதான, தொல்சீர் – தொன்மையான சிறப்புடைய ,துறக்கம் ஏய்க்கும் – சுவர்க்கத்தை ஒத்திருக்கும், பொய்யா மரபின் - நீர் வளம் பொய்த்துப் போகாத மரபினையுடைய, பூமலி பெருந்துறை – பூக்கள் நிறைந்து காணப்படும் பெரிய காவிரிப்பூம்பட்டினம். 

காவிரிப் பூம்பட்டினத்து இரவு நேர நிகழ்வுகள் :

துணைப் புணர்ந்த மட மங்கையர் 
பட்டு நீக்கித் துகில் உடுத்தும் 
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் 
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் 
மகளிர் கோதை மைந்தர் மலையவும் 
நெடுங்கால் மாடத்து ஒள்எரி நோக்கிக் 
கொடுந் திமில் பரதவர் குருஉச்சுடர் எண்ணவும் 
பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும் 
வெண் நிலவின் பயன் துய்த்தும் 
கண் அடைஇய கடைக் கங்குலான் (106- 115) 

காவிரிப்பூம்பட்டினத்துச் செல்வச் செழிப்பு மிகுந்த நெடிய தூண்களையுடைய மாடி வீட்டில் வாழ்ந்த மங்கையர், இரவு நேரத்தில் பாடல்களைக் கேட்டும், நாடகங்களை விரும்பிப் பார்த்தும், வெண்ணிலவின் காட்சி இன்பத்தை நுகர்ந்தும் மகிழ்ந்தனர். தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் ,தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து பருத்தி ஆடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் கள்ளினை அருந்தாது மட்டினைக் குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை(மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர். இவ்வாறு இன்பம் நுகர்ந்து, இரவின் கடையாமத்திலே கண் அயர்ந்தனர். இந்த இரவினிலே, மீன் பிடிக்கச் சென்ற வளைந்த கட்டுமரங்களையுடைய பரதவர், நெடிய தூண்களையுடைய வீட்டின் மாடங்களிலே ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒளி பொருந்திய விளக்குகளை எண்ணிப்பார்ப்பர். (மீன் பிடிக்கச் சென்ற பரதவர், மாடங்களில் ஏற்றி வைத்த விளக்குகளில் அணைந்தன தவிர அணையாமல் எரியும் சுடர்களை எண்ணி இரவு நேரத்தைக் கணக்கிட்டுக் கரைக்குத் திரும்புவர் போலும்) 

சொற்பொருள் விளக்கம்:

துணைப்புணர்ந்த – கணவரைக் கூடின, மட மங்கையர் – இளம் பெண்கள் , பட்டு நீக்கி –பட்டாடையினை நீக்கி, துகில் உடுத்து – பருத்தி ஆடையினை இடுத்தி, மட்டு நீக்கி – கள்ளினைத் தவிர்த்து, மது மகிழ்ந்து – மதுவினை அருந்தி மகிழ்ந்தும், மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் - கணவர் அணியும் (கோதை) மாலையினை சூடியும், மகளிர் கோதை மைந்தர் மலையவும் – மகளிர் அணியும் கோதையினை ஆடவர் சூடியும், நெடுங்கால்மாடத்து- நெடிய தூண்களையுடைய மாடி வீட்டில், ஒள்எரி நோக்கி – ஒளியுள்ள விளக்குகளை எண்ணுவதும், பாடல் ஓர்ந்தும் – பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தும், நாடகம் நயந்தும் – நாடகங்களை விரும்பிப் பார்த்தும், வெண் நிலவின் பயன் துய்த்தும் – வெண்மையான நிலவின் பயன் துய்த்தும் – வெண்மையான நிலவின் காட்சி இன்பத்தை அனுபவித்தும், கண் அடைஇய – கண் உறங்குகின்ற, கடைக் கங்குலான்- இரவின் கடைசிப்பகுதி .


கப்பலின் மேலேற்றப்பட்டுள்ள கொடிகள்:

வெளில் இளக்கும் களிறுபோலத் தீம்புகார்த் திரைமுன்துறைத் தூங்குநாவாய் துவன்று இருக்கை மிசைக் கூப்பின் நசைக் கொடியும் (172-175) கள் விற்கும் முன்றிலிலுள்ள கொடி மீன்தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலிமுன்றில் மணல் குவைஇ மலர்சிதறிப் பலர்புகுமனைப் பலிப்புதவின் நறவு தொடைக் கொடியோடு (176-180)


(க.ரை) காண்பதற்கு இனிய புகார் நகரின், அலை வீசும் கடற்கரையின் முன்னே, கட்டுத்தறியை அசைக்கும் ஆண் யானையைப் போல, அசைகின்ற மரக்கலன்கள் நிறைந்த இடத்தில் மரக்கலன்களின் மேல் ஏற்றப்பட்டுள்ள விருப்பமான கொடியும்,

சொற்பொருள் விளக்கம்: வெளில் இளக்கும் - கட்டுத்தறியை, களிறு போல- களிற்றைப் போல, அலை வீசும் கடற்கரையின் முன்னே, தீம்புகார் திரை முன்துறை-இனிய புகார் நகரின் துவன்று – நிறைந்த, இருக்கை – இருப்பிடத்தில், மிசை – மேலே, கூம்பின் – மரக்கலன்களின் உச்சி , நசைக் கொடி – விருப்பமான கொடி, (அயல்நாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்யும் வணிகர்களுக்குப் பிறநாட்டு கப்பல்கள் வந்துள்ளமையினை அறிவிப்பன அவற்றின் மேலே ஏற்றப்பட்டுள்ள கொடிகளே என்பதால் நசைக்கொடி என்றனர்)


No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.