Our Blog

பரதவரின் குடிநீர் நுட்பம்


”கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ?”

என்பது படகோட்டி திரைப்படத்தின் பாடல் வரிகள். உலகெங்கும் தங்கள் நாவாய்கள் மூலம் கடற்பயணம் மேற்கொண்டு திரைகடல் ஓடி திரவியம் தேடிய தமிழ் குடிமக்களாம் பரதவர்கள் பற்றிய பல்வேறு தகவல்களை சங்க இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. வணிகப் பொருட்களை அதிகம் ஏற்றி செல்லும் கப்பல்களில் தங்கள் தேவைக்காக குடிநீரை அதிகம் கொண்டு செல்லும் போது அதிக இடம் எடுத்துக்கொள்ளும் அவ்வாறே கப்பலின் எடையும் அதிகரிக்கும். ஆக பெரும் கடற்பயணங்கள் மேற்கொண்டு உலகையே வலம்வந்த இவர்கள் தங்களின் கடற்பயணங்களில் குடிநீருக்கு என்ன செய்வார்கள்? என்ற வினா நாம் அனைவரின் மத்தியிலும் எழுவது இயல்பே?. 

பெரும்பாலும் கடற்பயணங்களில் வணிகப் பொருட்களை விற்க செல்லும் இடங்களில் கிடைக்கும் நீரை சேகரித்து வைத்துக் கொள்ளுவர் என்றும் கடல் நடுவே காணப்படும் தீவுகளில் கிடைக்கும் நன்னீரை சேகரித்து குடிநீராகப் பயன்படுத்துவார்கள் என்றும் நாம் வழக்கமாக எண்ணுவோம். எனினும் பரதவர்கள் கடல் நீரையே குடிநீராகப் பயன்படுத்தும் தொழில் நூட்பத்தை அப்போதே அறிந்து கடல்நீரை குடிநீராகப் பயன்படுத்தினர் என்பதே உண்மை.

உலகெங்கும் தங்கள் நாவாய்கள் மூலம் கடற்பயணம் மேற்கொண்டு வணிகம் செய்த பரதவர்கள் பற்றிய பல்வேறு தகவல்களைப் பற்றி சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவர்கள் தங்களின் கடல் பயணத்தின்போது தங்களுக்குத் தேவைப்படும் குடிநீருக்காக கடல் நீரையே சார்ந்து இருந்தனர். கடல் நீரை குடிநீராக்கும் தொழில் நூட்பத்தை அப்போதே அறிந்து கடல்நீரை குடிநீராகப் பயன்படுத்தினர். 

இத்தொழில் நூட்பத்திற்காக அவர்கள் பயன்படுத்திய பொருட்கள்:

தேத்தான் கொட்டை: - தேற்றான் கொட்டை

இது நீரை சுத்திகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீரைத் தெளிய வைப்பதனால்தான் `இல்லம்’ என்ற தமிழிலக்கியப் பெயரைக் கொண்ட தாவரத்துக்குத் தேத்தாங்கொட்டை, தேறு, தேற்றா என்ற ஆகு பெயர்கள் பின்னர்த் தோன்றின. 

இந்தப் பண்பு “இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து” என்ற கலித்தொகை பாடல் வரியிலும் (142:64), பெருங்கதை பாடல் வரியிலும் (35:215) சுட்டப்பட்டுள்ளது. பிரகத்சம்ஹிதை என்ற வடமொழி நூலும் இந்தப் பண்பு பற்றி குறிப்பிடுகிறது. 
     • அஞ்சனா (பெரிய ஏலக்காய்),
     • முஸ்டா (கோரைக்கிழங்கு),
     • உசிரா (வெட்டி வேர்),
     • நாகா (நன்னாரி),
     • கோசடக்கா (நுரைபீர்க்கை),
     • அமலக்கா (நெல்லி) 
போன்றவற்றைப் பொடி செய்து, அவற்றைத் தேத்தாங் கொட்டைத் தூளுடன் கிணற்று நீரில் கலந்தால் கலங்கிய, கசந்த, சப்பென்ற, உப்பான, ருசியற்ற, நாற்றமடிக்கும் நீர் நன்கு தெளிந்து ருசியும் மணமும் கொண்ட நல்ல நீராகும்” இது சுரபாலர் எழுதிய விருக்ஷாயுர்வேத நூலின் 299-300-ம் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு தமிழ் வடிவம். 

Strychnos potatorum P.Oudhia Ecoport seeds
ஆப்பிரிக்கக் கண்டத்து அடிமைகள் அமெரிக்கக் கண்டத்துக்குக் கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டபோது, பீப்பாய் நீரைச் சுத்தம் செய்வதற்காகப் புளியங்கொட்டை பயன்படுத்தப்பட்டதைப் போன்று, பண்டைய தமிழகக் கப்பல்களில் நீண்ட தூரப் பயணங்களின்போது, நீரைத் தெளிவாக்கிச் சுத்தம் செய்யத் தேத்தாங்கொட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

இன்றும் கூடப் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டக் கிராமங்களில் தேத்தாங்கொட்டை நீரைத் தெளிவாக்கவும் சுத்தமாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அண்மைக்கால ஆய்வுகளின்படி பொடி செய்யப்பட்ட தேத்தாங்கொட்டைத் துகளிலுள்ள கார்போஹைட்ரேட் பல்வேறு வேதிப்பொருட்களை (கன உலோகங்களையும் சேர்த்து) உறிஞ்சி நீரைத் தெளிவாக்குகிறது.

ஆல்கஹாலை வெகுவாக கட்டுப்படுத்தும் நிலம்புரண்டி என்னும் என்னும் மூலிகை மனித வாடை தொலைவில் இருக்கும்போதே மண்ணில் புதைந்து கொள்ளும் தன்மை கொண்டது. இதைக் கண்டுபிடிக்க கையில் தேற்றான் கோட்டையை வைத்துக் கொண்டு நடக்கும் போது இது மண்ணில் புதைவதில்லை. ஒருவேளை மண்ணில் புதைந்துவிட்டால் அந்த  இடத்திற்கு வரும் போது கையில் இருக்கும் கோட்டைகள் தானாகவே ஆடும் தன்மை கொண்டது. இதன் மூலம் மண்ணில் மறைந்துள்ள நிலம்புரண்டி செடியை கண்டறியலாம்.

 அரைநெல்லிக்காய் மரக்குச்சி:

நீரின் சுவையை அதிகரிக்க செய்யவும்,  உடல் வெப்பத்தை தணிப்பதற்கும் சிறந்ததாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து உடல் ஆரோக்கியத்தை வலிமைப்படுத்தும். நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டுவிடுவார்கள். தண்ணீர் இனிப்பாக மாறிவிடும். கடற்பயணங்களில் நீரின் சுவையை அதிகரிக்க அரைநெல்லிக்காய் மரக்குச்சி பயன்பட்டது.  

முருங்கைக்குச்சி  :

தேத்தாங்கொட்டையைப் போலவே முருங்கையும் நீரிலுள்ள பாக்டிரியாக்களை நீக்கி தூய்மையான குடிநீரை தருகிறது. இரவு படுக்கைக்குப் போகும் முன் நீரில் முருங்கை விதைகளை போட்டு விட்டு காலையில் நீரை வடிகட்டிக் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. தற்காலத்தில் முருங்கை விதை மற்றும் இலையில் இருந்து எடுக்கப்படும் காரிஜிக் ஆண்டிமைக்ரோபியல் புரதங்கள் நீரைச் சுத்திகரிக்கும் திறன் உள்ளவை என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துளசி:

துளசி அதி அற்புதமான கிருமிநாசினி. வீட்டுக்கு கிருமிநாசினி பயன்படுத்துவதுப் போல மனித உடலுக்கான கிருமிநாசினியாக பயன்படுகிறது துளசி. துளசியில் இல்லாத சத்துகளும், மருத்துவகுணமும் வேறெதிலிலும் இல்லை.  துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் வியாதியே நம்மை நாடாது. கடற்பயணத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்படாமல் இருக்க துளசி பயன்பட்டது.

செம்பு பாத்திரம்:

உள்ளே ஈயம் பூசப்படாத செம்பு பாத்திரத்தில் நீரை நிரப்பி வைத்து பின்னர் பருகினால் நீரிலுள்ள பாக்டிரியங்கள் அனைத்தும் கொல்லப்பட்டு மிகவும் தூய்மையான நீர் கிடைக்கும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும். செம்பு சொம்பில் தண்ணீர் ஊற்றி வைத்து காலை வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதனாலேயே அக்காலத்தில் செம்பு குடம் ஒன்று சீதனமாக கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.

வெட்டிவேர் மற்றும் நன்னாரி:

வெட்டிவேர் மற்றும் நன்னாரி இவை இரண்டையும் சுத்தமான வெள்ளைத்துணியில் வைத்துக் கட்டி நீரில் போட்டு வைத்து நன்கு ஊறிய பின்னர் பருகும் போது உடலுக்கு புத்துணர்ச்சி தருவதுடன் கோடை காலத்தில் உடலில் ஏற்படும் அதிக நீரிழப்பைக் குறைத்து தாகம் ஏற்படுவதைத் தடுக்கிறது. அத்துடன் உடல் வெப்பத்தையும் குறைக்கிறது. நீர் நல்ல வாசனையாக இருக்கும்.

குறிப்பாக 
      • தேத்தான் கொட்டை
      • அரைநெல்லிக்காய் மரக்குச்சி 
      • முருங்கை மரக் குச்சி 
ஆகிய மூன்றையும் போதிய அளவு எடுத்து உப்புத் தண்ணீரில் போட்டுவிட்டால் உப்புநீர் நன்னீராகிவிடும். இந்த தொழில்நூட்பத்தை கொண்டே கடல் நீரை குடிநீராகப் பயன்படுத்தி கடற்பயணங்களில் பரதவர்கள் தங்கள் நாவாய்களை செலுத்தினர்.

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.