Our Blog

யார் இந்த பரவன்?


சிலப்பதிகார பரவர்களை எழுத ஆரம்பித்த உடன் எடுத்த எடுப்பிலே மகாகவி பாரதியே நினைவில் வந்தார்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு  

என்று பாடிய மகாகவி மறு அடியில் இப்படி பாடி சிலப்பதிகாரம் என்ற தமிழ் மொழியின் முதற் காப்பியத்திற்கு பெருமை சேர்த்தார். "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என்றோர் மணியாரம் பதித்த தமிழ்நாடு....."

தமிழரின் அரசியல், பண்பாடு, வாழ்க்கைமுறை ஆகியவற்றை சிறப்பாக எடுத்து கூறும் இந்த முத்தமிழ் காவியம் பரவர்களைக் குறித்தும் பேசி இருக்கிறது.

'கற்பும் காமமும், நற்பால் ஒழுக்கமும்/ மெல்லியல் பொறையும் நிறையும் வல்லிதின்/ விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்/ பிரிவோம் அன்ன கிழவோன் மாண்புகள்' என்று தொல்காப்பியம் (தொல் கற் 11) பட்டியலிட்டிருக்கும் பெண்ணுக்குரிய பேரார்ந்த மாண்புகளையும், கற்பின் திண்மை பாய்ந்த பொற்புடைத் தெய்வமாக போற்றப்படும் சிறப்புகளையும் கொண்டவளாக கண்ணகி விளங்கினாள் அன்றோ? அவள் ஒரு 'பரத்தி' என்றால் அது எமக்கு பெருமை தானே? இந்திய விடுதலை வேண்டி முழக்கமிட்ட பாரதி, 

பரவரோடு குறவருக்கும் 
மறவருக்கும் விடுதலை 

என்று பாடினானே ...யார் இந்த பரவன்?

'நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி' அஞ்சி அஞ்சி வாழ்பவனா? 'அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டு' உறங்கி கிடப்பவனா? ' மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்று என்னும் ஈனக்' குலத்தைச் சார்ந்தவனா? இல்லை..... இல்லை.... ஒரு போதும் இல்லை.... அவனுகென்று ஒரு வரலாறு இருக்கிறது.

அவன் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பை காவியம் பாடுகிறது. கவிதைகள் போற்றுகிறது. 'நெரித்த திரைக் கடலும், நீல விசும்பினிடை திரித்த நுரையும்' எனப் பாடுகின்றன. பரவர்களின் காலத்தை கணக்கிடுவது எப்படி? சங்க காலத்திற்கு முன்பே பொங்கு புகழ் வாழ்க்கை கொண்டிலங்கிய பரவர்களைச் சிலப்பதிகாரம் சிறப்பாகப் பாடுகிறது.

உரைசால் சிறப்பின் அரசுவிழை திருவின் 
பரதவர் மிகுந்த பயங்கெழு மாநகர் 

செல்வச் சீமான்களான பரதர்கள் நிறைந்த மாபெரும் புகார் நகர் என சிறப்பித்துள்ளது. அன்று யாவனரோடும், எகிப்தியரோடும் வணிகம் வளர்த்து வானுயர வாழ்ந்த பேரினம் அல்லவா பரவர் இனம்? 

'தமிழன் வேறு' 'பரவன் வேறு' என்பதல்ல......
முதல் தமிழனே பரவன் தான் .......
அவன் கடல் தோன்றியபோதே தோன்றியவன் .....
அவனது வரலாறு கடலோடு தொடங்குகிறது.

' திங்களோடும் செழும் பரிதி தன்னோடும் 
விண்ணோடும் உடுக்களோடும் 
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழ் 
உடன் பிறந்தோம் நாங்கள்'
  - என்றாரே புரட்சிக்கவிஞர் பாரதி தாசன்.....


அந்த கடலோடு பிறந்த தமிழோடு பிறந்த தமிழன் பரவனே..... நெய்தல் நிலத்தின் நிகரில்லாத் தலைவன் பரதனே.... 'இலங்கு இரும்பரப்பின் எறிசுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான் திமிற்' காரன் பரவனே...... அவனே பண்டிதன்...... அவனே பாண்டியன்..... அவன் காற்றை அறிந்தவன்... கடலின் புத்திரன்! பரவன் இந்த மண்ணிற்கு அந்நியன் அல்ல.... அடிமையும் அல்ல.... அவன் மறந்து போன தன்னினத்தின் கனவுகளையும் பல்வேறு தளங்களில் வெளிப்படுத்தியே தீர வேண்டிய காலம் இப்போது வந்தாயிற்று.... பேச்சு, எழுத்து என்ற இருவகை எடுத்துரைப்பு முறைகளாலும், கலைந்து கிடக்கின்ற இந்த தொல்குடிப் பரவனின், 'கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையையும்' நிலம் நோக்கிய பெருவெளியில் மிக அழுத்தமாகப் பதிவு செய்தாக வேண்டும். அப்போது தான் ' பரவன்' யாரென 'பரவன்' தெரிந்து கொள்வான்.

முதலில்

காற்றிலே இன்னும் வேகமாய் அசைகிறது எம் கொடி 
எம் பதாகை காற்றில் உயர உயர 
கொடியில் நீந்தும் மீன் 
இனி ஆகாயத்திலும் பறக்கும் ......!

- பானுமதி பாஸ்கர் 
நன்றி : பரதர் சமூக வழிகாட்டி இதழ் 

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.