Our Blog

இரத்த பூமி - 15


வரலாற்றில் தன் இனம் மாண்பு வீரம் தன்னை நிலை நிறுத்த பரதவர் படை நிலை பெற்று நின்றது தன்னை காவு கொடுக்கவும் பரதவர் படை துணிந்து நின்றது......?
.................................................................

உலகத்து நிலபரப்பில் எங்கு சென்றாலும் புவியின் மிகுதியான பகுதி சூழ் ஆழியிலெ பரதவன் எங்கேயேனும் தத்தளித்தாலும் அங்கே வானவியல் கொண்டும் இயற்கை கொள்வாரம் கொண்டும் தாம் வாழும் கணியத்தை தடத்தை அறுதியிட்டு கூறுகின்ற பேரறிவும் உச்சபட்ச நுண்ணறிவும் கொண்டு கணியம் கணிக்கும் பரதவன்….. அந்த‌ பரதவ காணியாளனின் மூதாதை ஆதி உயிரியலின் வழிவந்தவர் தாம் எனும் உன்னதத்தை அறிந்துணர்ந்த‌ பாண்டி பரதவ புலவன் கணியம் பூங்கொன்றன் சொன்னது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதாகும் அதனால் தானோ...? என்னவோ பாண்டிய பரதவரின் பாரம்பரிய அரசியற் கொள்கை பண்பட்ட பகைவரற்ற தேசம் என்பதே ஆகும். ஆனால் காலத்தின் ஏற்பாட்டால் புயற் கடல் வெள்ள சீற்றத்தால் கொற்கை தூர்ந்து போய் பாண்டி தலைநகர் மதுரைக்கு மாறிப் போனது பரதவரின் வழி வந்த பாண்டிய சொந்தம் தூரமாகிப் போனது.

முத்து சிலாபத்திலே முரண்பட்ட‌ பரதவ பாண்டியனே பாண்டி பரதவரின் பகைவரான போதுதான் பரதவரின் தாக்குதல் எனும் பேராண்மை எழுகிறது மதுரை காஞ்சி யின் பாடலுக்கான சூழ்நிலை உதயமானது. பிந்தைய‌ காலத்தில், பாண்டிய அரசு முடிவுக்கு வந்து சோழ அரசு மறைந்து போன பின்பு நாயக்கன், மூர்களோடு சேர்ந்து நேருக்கு நேராக‌ ஒத்தைக்கு ஒத்தையாக மோதாமல் துப்பாக்கி வெடிக்குண்டு என‌ அன்றைய நவீன ஆயுதத்தோடு பரதவனை சூரையாடிய போது தன் இனத்தை தற்காத்து கொள்ள சிலுவையை நாடினான்.

அந்த திரு சிலுவை தான் பின்நாளில் பாரமான சிலுவையாகி இன்று வரை தூக்கி தூக்கி சுமை தாங்கியாகிப் போனான். பக்தி எனும் ஆன்மீக சுழிக்குள் சிக்கி அமிழ்ந்தே போனான். சரி அது பற்றி பிறகு தொடருவோம்

வடுகரின் ஆதிக்கம் அழிந்த பின் நாட்களில் பரதவனுக்கு தற்காத்தல் தேவை இல்லாதாகி போனது. ஆனாலும் பாண்டியபரதவரின் பண்பட்ட பகைவரற்ற தேசத்தில் பிணக்குகள் உருவான காலங்களில் ஏன் 70வது 80களில் கூட‌ இடிந்தகரை ஆனாலும், உவரி ஆனாலும், குமரியிலும் கூட பகைவரின் இடம் தேடி செல்லும் தாக்குதல் போரே நடந்தேறி உள்ளது..

இத்தகைய கலிமாக்களாக‌ பயமறியா பரதவர்களாக போரிடும் மரபு சார்ந்த விந்தை நமக்குள் விளைய காரணாமாய் அமைந்த களம் தான் இது. இதுபோலவே அன்றும் புன்னைக்கரையை மீண்டும் தாக்க திட்டமிட்டிருக்கும் கடற்கொள்ளையரையும், இரப்பாளியையும் கொன்று ஒழிக்கவும் விதாலனால் பிடித்து செல்லப்பட்ட பிணையக்கைதிகளை மீட்கவும், போர்த்துக்கீசிய படையுடன் பரதவர்கள் கீழக்கரைக்கு விரைந்தனர்.

புன்னைக்கரையை தாக்க கீழக்கரைக்கு வடக்கே திட்டமிட்டு காத்திருந்த மூர்படைக்கும்…..?  கொள்ளையர்களுக்கும் பரதவரோடு இணைந்த போர்த்துக்கீசியரின் வருகை பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. பதற்றத்தில் கொள்ளையர்கள் போர்துகீசிய கப்பற்படை மீது கடும் ஆக்ரோஷ தாக்குதல் தொடுத்தனர்.

தொடர்ந்து கடலிலே கர்ண கொடூரமான போர் நடந்தது. போர்த்துக்கீசியரின் ஒரு பிரிவு கில் ப‌ர்னான்டஸ் டி கார்வெல்கோ, தலைமையிலும் ம‌ற்றொரு பிரிவு கமாண்டர் லோரல் கோயன்கோ தலைமையில் பரதவப் பட்டங்கட்டிமாரோடு இணைந்து போராடியது. 36 மணி நேரமாக‌ நடந்த‌ போரில் போர்த்துகீசிய படை பெரும் பின்னடைவையே சந்தித்தது

முன்னேறிய கில் ப‌ர்னான்டஸ் டி கார்வெல்கோ படை பரதவக் கடலின் கடுஞ்சீற்றத்தாலும், நீரோட்டத்தாலும் வடக்கே எதிராளியின் திசை நோக்கியே வளிந்து சென்றது. வடக்கே செல்ல செல்ல கொள்ளையர்களின் தாக்குதலுக்கு ஆளாகியது. போர்த்துகீசிய கப்பல்கள் அக்னி காட்டில் அலும்பி தழும்பி அலைகளில் அமிழ போர்த்துகீசியர்கள் தப்பிப் பிழைத்து தீவுகளில் பதுங்கினர்.

தீவுகளில் பரிதவிக்கும் போர்துகீசியரை காக்க பரதவ தலைவரும், பட்டங்கட்டிமாரும் நிறைந்திருந்த மற்றொரு கப்பல் பிரிவை வடக்கே நோக்கி நகர தளபதி கோயால் கோ ஆனையிட்டார். ஆவேசப்பட்ட பாண்டியம்பதி கெண்டலும் தெரியாது, கச்சானும் தெரியாது, வாணுவாடு தெரியாது, சோணுவாடு தெரியாது, வசமா இவனுவகிட்ட மாட்டிகிட்டோம் என்று தனக்குள் புலம்பி கொண்டு கேப்டன் பாய திருப்பாம‌ கரைக்கே விடுங்க என அதட்டினார்.

பரதவ தலைவனின் , பட்டங்கட்டிமாரின் விடாப்புடியான மூர்க்கத்தனமான‌ காட்டு கூச்சலாலும் போர்துகீசிய பாய்மரகப்பல் கரை நோக்கி செலுத்தப்பட்டு கரையேறி தட்டி நின்றது. பரதவ தலைவர் ஏதோ சொல்ல‌ புரஞ்சேரனும் அய்யனாரும் கரைக்கு தாவி குதித்து மேற்காலே கருவேல காட்டுக்குள் ஓடி மறைந்தனர்.

கண நேரத்தில் புயலாய் செயல்பட்ட பரதவ மறவர்கள் பாய்மரக்கப்பலின் பீரங்கிகளை குண்டு கட்டாக தூக்கி கடற்கரை மணற் பரப்பிற்க்கு விசிறி அடித்தனர். ஒன்றிரண்டு பீரங்கிகள் கடலுக்குள் அமிழ்ந்து போனாலும் கரையில் விழுந்தவைகளை நிமிர்தி் நேராக்கிகரையில் இருந்தாவாரே கடலுக்குள்ளும் கரையிலும் இருந்த‌ எதிரிகளை நோக்கி சுட்டுத் தள்ளினர்.

தீவுகளில் பதுங்கிய கில் பர்னான்டஸின் படைகளை வேட்டையாடிய கொள்ளைகார மூர் படையின் கவனம் கடலோர பரதவர் படை மீது திரும்பியது. தன் படையனைத்தையும் திருப்பி பரதவர் மீது தாக்குதல் நடத்த‌ ஆணையிட்டது. மூர் படையோடு ஒப்பிடுகையில் குறைவாயிருந்த பாண்டியம்பதி பட்டங்கட்டிமாரின் படை நோக்கி தரையிரங்கி சூறாவளியாய் தாக்க தலைப்பட்டது.

ஆக்ரோசமாய் பாய்ந்து வரும் மூர் படையை இன்னும் இன்னும் முன்னேரும் படி பரதவர் படை தெற்க்காலே பின் வாங்கி சென்று பெரும் மணற்மேட்டிலே நிலை பெற்று நின்றது. 

ஆம் வரலாற்றில் 
தன் இனம் 
தன் மாண்பு 
தன் வீரம் 
தன்னை நிலை நிறுத்த பரதவர் படை 
நிலை பெற்று நின்றது

தன்னை காவு கொடுக்கவும் பரதவர் படை 
துணிந்து நின்றது......?

......கடல் புரத்தான்......

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.