Our Blog

வீரபரதவர் வாழ்ந்த மணலூர்


ஆறு கடலோடு கலக்குமிடத்தினை அழிமுகம் என்பர். இவ்வழிமுகத்துக் கரையிலே அமைந்த துறைமுகங்கள் யாவுமே சரித்திரம் சமைத்தவையாகும். பண்டைய தமிழகத்தில் சோழத்துப் புகாரும், சேரத்து முசிறியும், தென்புலத்து கொற்கையும் இவ்வாறு அமைந்தவைகளே! இவை மூன்றும் கால சுழற்சியால் அழிந்து பட்டனவாயினும் அவை விட்டுச் சென்றிருக்கின்ற வரலாறும், அவ்வரலாற்றின் வாயிலாக நாமறிகின்ற செய்திகளும், பண்டைய நாகரிகமும், பண்பாடும் நம்மை இன்றும் இரும்பூதெய்தச் செய்கின்றன.

அமிழ்தெனும் தமிழுக்கும் மூத்தத் பொதிகையில் பிறந்து, புகழ்சால் தென்பாண்டிச் சீமையிலே தவழ்ந்தோடும், பொருளுறைச் செல்வி கடலோடு கலக்குமிடத்தில் கொற்கை தலை நிமிர்த்து நின்ற நாட்கள் பண்டையத் தமிழக வரலாற்றின் பொற்காலமாகப் போற்றப்படுகின்றன. முத்தமிழ் புரந்த மூவேந்தர் பரம்பரைக்கும் வித்திட்ட முதல் மாமன்னன் தோன்றியதே கொற்கை மண்ணிலேதான் என்ற கருத்து வரலாற்றுசிரியர்கள் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

கொற்கையின் அமைப்பும் சிறப்பும் அழகுபடக் கூறப்பட்டிருப்பது மதுரைக்காஞ்சியில்தான்:- முழங்கு கடல் தந்த விளக்கு கதிர் முத்துகள், அரம் போழ்ந்தறுத்த நேரிய சங்கு வளைகள், பரதர் தந்த பல்வேறு கூலம், பரந்து விரிந்த உப்பங்கழிகள், அவைகளில் வாரியெடுத்த வெள்ளுப்புக் குவியல்கள், அவற்றை ஏற்றிச் செல்லக் காத்து நிற்கும் நாவாய்கள், நாவாய்களை செலுத்தும் திண்தோள் திமிலர்கள், அவர்கள் சேய்மையிலிருந்து ஏற்றிக்கொண்டு வந்த நிமிற்பரிப்புரவிகள், என்றெல்லாம் பலதும் நிறைந்து மலிந்திருந்த கொற்கையில் .... உயர்ந்த மண்மேடுகளிருந்தன, கடற்கரைச் சோலைகளிருந்தன, அதன் கண் படர்ந்து பேய்போல் தலைவிரித்த தாழை மரங்களிருந்தன. அவை மடல்விழ்த்துக் கடற்கரைப் புயலுக்கு மாற்றுச் செய்து கொண்டிருந்தன.

அத்தகைய கொற்கை இன்று மிகச்சிற்றூராய்க் குறுகிப் பொலிவிழந்து கடலைவிட்டு நான்கைந்து மைல்கள் உட்தள்ளி உறங்கிக்கொண்டிருக்கிறது. பொருநையின் வெள்ளத்தோடு விரவி அடித்து வரப்பட்ட வண்டல் பல்லாண்டுகளாய்க் கூடி மேடாகித் தூர்ந்து போய் இத்தகையதோர் அவலத்திற்கிலக்காகி விட்டது. ஏறத்தாழ 12 ம் அல்லது 13 ம் நூற்றாண்டிற்குப் பிறகு கொற்கை வணிகப் பெருந்துறையென்ற நிலையினை இழந்து அழிந்துபட்டது எனலாம்.

கொற்கை என்ற பெயரையல்லாது..... மணலூர், மதுரோதயநல்லூர், சோழேந்திர சிம்ம சதுர்வேதிமங்கலம் என வேறு பல பெயர்களாலும் அழைக்கப்பட்டதாக அறிகின்றோம். இவைகள் அனைத்துமே காரணப்பெயர்கள் என்பது எனது துணிவு.

மணலூர் என்று பெயர் தொல் பழங்கால முதலே வழக்கிலிருந்து இன்று வரை நின்று நிலவு மென்றாகும். மகாபாரதத்திலே அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை செய்ததைக் கூறுமிடத்து அவன் கலிங்கத்திற்கு கூடாகச் சென்று, கோதாவரியையும், கீழ்த்தொடர் மலையிலேயுற்ற மகேந்திரத்தையும் தாண்டி காவேரியைப் புறமாக விட்டு கீழ்க்கடலோரத்திலிருந்த மனலூரையடைந்தான் என்று சொல்லப்படுகின்றது. ( Tamilian Autiquray – Vol 2 No 1 – notes on sangam Age –by PAndit D Sararirayan) மதுரைக்காஞ்சியிலே கொற்கை மணல் மிகுந்த திட்டுகளையுடைதாயிருந்தது என்ற வருணனையிலிருந்தும், 

“ மாடமோங்கிய மணன் மலி மறுகிற் 

பரதர் மலிந்த பல்வேறு தெருவில்” 

என வரும் பெரும்பாணாற்றுப்படை வரிகளாலும் கொற்கையில் மணல் மிகுதியாயிருந்தது தெளிவாகின்றது. மணல் மிகுந்த ஊராதலின்..’மணலூர்’ என்று அழைக்கப்பட்டது.

கொற்கையில் மலிந்து கிடந்த கடல்படு திரவியங்களும் கடல் வழிவந்த பொருட்களும் பாண்டித் தலைநகராயிருந்த மதுரையின் செல்வ செழிப்பிற்கும் சீருக்கும் காரணமாயிருந்தமையால் மதுரோதய நல்லூர் எனச் சிறப்பித்து அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லின் செல்வர் ரா.பி. சேது பிள்ளை கருதுகின்றார். 

நெய்தல் நில ஊராதலின் கொற்கையில் பெரும்பாலும் பரதவரே வாழ்ந்தனர் என்பதில் ஐயப்பாடில்லை. இப்பரதவர் 

‘வளைபடு முத்தம் பரதவர் பகரும்’ (ஐங்195) 
என்ற ஐங்குறுநூறு வரிகளாலும்,

‘நான்வலை முகந்த கோள்வல் பரதவர்’ (அகம் 300) 

‘பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ (அகம் 140) 

என்ற அகநானூற்றுச் செய்திகளாலும் முத்துக்குளிக்கும் தொழிலையல்லாது, மீன் பிடித்தல், கடலிலே வேட்டையாடுதல் போன்ற தீரச் செயல்களிலும் சூரர்களாய் இருந்தனர் என்று தெரிகிறது. சுழலுக்கும் சுறாவுக்கும் இடையில் மூழ்கி முத்தெடுக்கும் பரதவர் நல்ல உடல் வலிமை பெற்றிருந்தனர். சிவந்து விரிந்த கண்களும் குன்றக மன்ன வளர்ந்த கருமேனியும் அவர்கள் பெருவீரர்களென விளம்பிற்று. உடலிலும் உள்ளத்திலும் உரமிகுந்த இப்பரதவர் கொலைத் தொழிலிலும் வல்லவராயிருந்தனர். சிறிய குடிசைகளில் வாழும் இப்பரதவர் படகுகளில் ஏறிச்சென்று பெரிய மீன்களைக்குறிய இறப்பினையுடைய உளிகொண்டு தாக்குவர். அங்ஙனம் தாக்கப்பட்ட பெரிய மீன்கள் விண்ணை அணி செய்யும் வில் போலத் தாவி அந்தக் கடலையே கலக்கி மறுப்படச் செய்து கடைசியில் வலிமைகுன்றி கரை பொதூங்கும், 

..குறி இறைக் குரம்பை கொலைவெம் பரதவர் 

எறியுளி பொருத ஏமுறு பெருமீன் 

புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட 

விசும் பணி வில்லிற் போகிப் பசும் பிசிர்த் 

திரைப்பயில் அழுவம் உழக்கி உரனழிந்து 

நிரைதிமில் மருங்கில் படர்தருத் .....(அகம் 10)

என்ற அகநானூற்றுச் செய்தி பரதவர் வீரவாழ்விற்கும் கொல்லும் வண்மைக்கும் சான்றாய் நிற்கின்றது. கொழுத்த மீனையும் இறைச்சியையும் தின்று கொழுத்த உடலையுடைய பரதவர் விற்கலையிலும் வல்லுநராயிருந்தனர். இவர்களது வீரத்தன்மையும் போர்த்திறனும் கண்டு பகைவர் அஞ்சினர்.

“செற்ற தெவ்வர் கலங்கத் தலைச் சென்று 

அஞ்சுவரத் தட்கும் அணங்குடைத் துப்பிற் 

கெழு உன் குறைக் கொழுவல்சிப் 

புலவுவிற் பொலி கூவி 

ஒன்று மொழி ஒலியிருப்பில் 

தென்பரதவர் போரேறே!” (மதுரைக்காஞ்சி 139-144)

போர்த்திறம் கொண்ட அவர்களை வெல்லவே இயலாது. அப்படிப்பட்ட வெல்ல முடியாத தென்பரதவரை வென்றவன் நெடுஞ்செழியன். எனவே தான், ‘ தென்பரதவர் போரேறே’ எனப் போற்றப்படிருக்கிறான். 

வீரத்திற்கும் போர்த்திறத்திற்கும் பெயர் பெற்ற பரதவரே பாண்டிய நாட்டுப்படைகெல்லாம் கருவூலமாயமைந்தனர். செருக்கேனத்தே வீறுகொண்டு செல்வர். மாற்றார் படை எத்தன்மைத்தாயினும் அழித்தே மீள்வர். எப்போதெல்லாம் பரதவர் வலிமை குன்றி வீரமிழந்து வாளாவிருந்தனரோ அப்போதெல்லாம் பாண்டி மண்டலம் மாற்றார் கைமாறியது. இது வரலாற்று பேருண்மை. ஏறத்தாழ கி.பி. 300 ல் தொண்டை நாட்டிலிருந்து பல்லவர்க்குப் புறமுதுகு காட்டிவந்த களப்பிரர், சோழ, பாண்டியர் நாடுகளின் மீது படையெடுத்தனர். சோழ, பாண்டிய மண்டலங்கள் வடுகர் வாட்களுக்கு அடிபணிந்தன. பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை ஒழித்து அரசுக் கட்டிலேறியது வரை பாண்டியநாடு வடுகராட்சியில் வாடியது. இதோ புறநானூறு பேசுகின்றது. 

‘தென் பரதவர் மிடல்சாய வட வடுகர் வாளோட்டிய (புறம் 378) போரில் வீரத்தின் தன்மையும், வெற்றியுன் திண்மையும் பகைவரைக் கொல்லும் திறனைப் பொறுத்ததேயாகும். எனவே வீரனின் கை – கொல்லும் கை! கொல்வதிலே, மிகவும் திறன் கொண்ட கைகளையுடைய வீரபரதவர் வாழ்ந்த மணலூர் ‘கொல் + கை – கொற்கை’ என அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒருவேளை கொற்கையிலிருந்து, அதாவது மணலூரிலிருந்து சென்ற பரதவர் படை பாண்டியர்க்கெதிராய் வந்த களிற்றுப் படையைக் கண்டக் கோடாரிகள் கொண்டு தகர்த்திருக்கலாம். அவ்வெற்றிக்குப் பின் இவ்விலஞ்சினையைப் பரிசாகப் பெற்றிருக்கலாம். அப்படியொரு கருத்தோடு நோக்குமிடத்து பாண்டியர்க்கெதிராய் களிற்றுப்படை மிகுதியாய் உபயோகிக்கப்பட்டது தலையாலங்கானத்துச் செறுவிலும், அச்செறுவிலும் அச்செறுவிலே வாகைசூடிய பாண்டியன் சேரநாட்டுத் துறையாகிய முசிறியை முற்றுகை இட்டபோது தான் மேற்கூறிய இரு போர்களிலும் கொற்கைப் பரதவரே வெற்றிக்குக் காரணமாய் இருந்திருத்தல் வேண்டும். அந்தப் போர்களிலே உபயோகப்படுத்தப்பட்ட மழுவும் அவற்றால் அழிக்கப்பட்ட களிறும் வெற்றிச் சின்னங்களாக கருதி மணலூர் மன்னன் ஏற்றிருக்க வேண்டும் எனவே, மணலூர் கொற்கை என்று அழைக்கப்பட்டது.

- செல்வராஜ் மிராந்தா

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.