Our Blog

இரத்த பூமி - 13

வந்தேறிகளுக்கும், வழித்தப்பிகளுக்கும் புகலிடம் தந்த மீன் கொடி கொண்ட‌ மீன் குடியோன் நாடு

கிழக்கு மேற்காக நீண்டிருந்த அந்த அறையில் மேற்கிலிருந்த சிலுவையின் முன்பு இரப்பாளி மண்டியிட்டு பிராத்தனை செய்ததாக, கதவை திறந்து உள்ளே சென்ற பரதர்களுக்கு தோன்றியது.

உண்மையில் இரப்பாளி அந்த நேரத்தில் இஸ்லாமிய இறைசின்னமான கஃபாவின் திசை நோக்கி இஸ்லாமியர்களின் தவிர்க்க முடியாத இறை தொழுதல் கடைமையை ஆற்றிக்கொண்டிருந்தான். உடன் வந்த அனைவரையும் கொற்கைகோ சைகைக்காட்டி அமைதியாக்கிய பின்பு அங்கிருந்த இருக்கைகளில் அனைவரும் அமர்ந்தனர். இரப்பாளியின் தொழுகை முடியும் வரை அனைவரும் அமைதி காத்திருந்தனர்.

ஆனாலும் இளம் பரதவர்களுக்கு மனதுக்குள் ஆக்ரோஷமும் கோபமும் தலை தூக்கியது பரதவர்களை சுட்டு இம்சைபடுத்தி, தூயதந்தையை கொடுமைப்படுத்தி, ‍ பரத்திகளை இழிவுபடுத்திய ஈன இரப்பாளிக்கு ஏனிந்த மரியாதை என‌ பொங்கிக் கொண்டிருந்த இளம் பரதர்களின் எண்ணம் போல பாடனும் துடித்து கொண்டிருந்தான். 

தொழுகை முடிந்த இரப்பாளி திரும்பிப் பார்த்தபொழுது... அறையெங்கும் பரதவக்கூட்டம் நிரம்பியிருந்தது. ஒரு வினாடியில் இரப்பாளியின் சப்த நாடியே ஒடுங்கி போனது இரப்பாளியின் கண்களில் மரணபயம் தெரிய எதையும் காட்டி கொள்ளாமல் அங்கே நட்ட நடுவே தனக்காக காலியாக இடப்பட்ட இருக்கையில் போய் அமர்ந்தான்.

இரப்பாளி அந்த இருக்கையில் அமர்கின்ற வேளையிலே கொதித்து போயிருந்த‌ பாடன் கூட்டத்தின் மெளனத்தை உடைக்கும் விதமாக‌ ஆவேச கூச்சலிட்டான். சின்னையா என்ன எழவுக்கு இவனைத் தேடி வந்தீய இவன கண்டம்துண்டமா வெட்டி இந்த புன்னக்காயல் மண்ணுல புதைக்கனும்யா."என பதட்டப்பட‌

தூரத்திலிருந்த சடையனார் எழுந்து மக்களே.. பாடா.. உன் ஒத்த கைக்கு இவன் தாங்கமாட்டான். ஆனாலும் பாண்டியமார் நமக்கு சில போர் தர்மம் இருக்கு பாத்துக்கோ...அதுவுமில்லாம‌ "இவன புதச்சா நம்ம காத்தவரானையும், தூயத்தந்தையாரையும் ம‌ற்றும் கேப்டன் குடும்பத்தாரையும், எப்படி காப்பாற்ற முடியும். அது சரியான முடிவல்ல" என சொன்னபடிதூரத்தில் இருந்த சடையனார் இரப்பாளியின் அருகே போய் அமர்ந்தார்.

இரப்பாளியின் பயத்தை போக்கும் விதமாக அரபியிலே குசலம் விசாரித்தவர். ஏதேதோ பேச ஆரம்பிக்க, சடையனாரின் அரபு வார்த்தைகளைக் கேட்ட இரப்பாளி திகைத்துப் போனான்.

பழங்குடி பாண்டியர்கள் எவனுக்கும் அடங்காத படுபாதகர்கள் கடலுயிரிகளுக்கு தன் பகை உயிரை பரிசளிக்கும் ஏமகாதகர்கள் ஆனாலும்உலகறிவில்லா உன்மத்தரை படைபலம் கூட்டி பகடியாடலாம் என‌ விதாலன் விதித்த விதியையும், முதற்கடவுள் முகமது நபியை மறுதலித்து மூரினத்தை முறியடிக்கும் முரட்டு பரதவரை முடமாக்கி அடிமையாக்கிட வேண்டும் என்ற சமாரியனின் கட்டளையையும் நிறைவேற்ற துடித்த இரப்பாளிக்கு அரபு மொழியிலே நாகரீகமாக பேசுகின்ற சடையனாரின் பேச்சே ஓராயிரம் குழ‌ப்பங்களை உள் மனதில் உருவாக்க..... தான் தான் மாபெரும் போராளி சூத்திரதாரி என நினைத்தவனுக்கு கூடியிருக்கின்ற ஓவ்வோரு தலையும் சூத்திரங்களின் அகராதியாக இருக்குமோ என‌ தோன்றியது

இரப்பாளியும் சடையனாரும் நீண்ட காலத்து நண்பர்கள் போல அராபிய மொழியிலே பேசிக்கொண்டனர். பாடனது எண்ணத்தை ஆமோதித்த இளம் பரதவர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசி சலசலத்துக் கொண்டிருக்க‌.... பெரியவர் சடையனும் இரப்பாளியும் என்னதான் பேசிக்கொண்டார்கள் என்பதை கேட்டப்படி புரியாமல் கூட்டமே வேடிக்கை பார்த்தது. 

முத்து மகுடம் தரித்த
மீனாட்சி அம்மை 
தர்மசங்கடத்தை உணர்ந்த நீக்கு போக்கு அறிந்த பாண்டிய பதியின் மகன் இளம் தலைவர் எழுந்து அதை தீர்க்கும் விதமாக‌ வேம்பார் சடையனாரை பரதவகுலத்தவர் அறிந்திருந்தாலும் அவரை கூட்டத்தில் கெளரப்படுத்தும் விதமாக பாண்டிய பரதர்களே..... எங்கையா பாண்டியம்பதியின் பிள்ளைகளே ......இதோ வேம்பார் சடையனார் இவரும், இவரது பாரம்பரியமும் பாண்டியம்பதியின் பாரம்பரிய பரதவ குலத்து ஞானக்குருக்கள். 

இவர்களுக்கு சமஸ்கிருதமும், இந்தியும் அதையும் தாண்டி அரபியும் தெரியும். பரதவர்களது சிவன், முருகன், அம்மன் கோவில்களில் பூசை புனஸ்காரம் செய்கின்றவர்களும் இவர்களே. உண்மையில் சொல்லப்போனால் பரதவ குலத்து அந்தனர்கள் என்று சொல்லிவிட்டு உங்களது சங்கடத்தை தீர்க்கும் முறையில் இவர்களது உரையாடலை நானே தமிழில் சொல்கிறேன் என்றார்.

பெரியவர் சடையனார் போல சின்னையாவுக்கும் அரபு தெரியுமா என்று இளம் பரதர்கள் ஆச்சரியத்தில் அமிழ்ந்தனர். சடையனார் நிலமையை உணர்ந்து புன்சிரிப்போடு அப்படி தொடு என்றார். பரதவ கூட்டத்து ஒப்புதலோடு  இரப்பாளியும் சடையனாரும் உரையாட கொற்கைகோ மொழிபெயர்த்தார்.

சடையன், "ஐயா இராப் அலி, நாங்க பாண்டியர்கள். இந்த நாட்டின் உரிமையாளர்கள். வஞ்சகமாக எங்கள் நிலத்தையும் எங்களையும் அடிமைபடுத்தவும் அபகரிக்கவும் நினைக்கின்ற நாயக்கனோடு சேர்ந்துவந்து எங்களை துன்புறுத்துவது சரியாகுமா? "

இரப்பாளி, 
"இந்த கடலின் உரிமையாளர்கள் நாங்கள் எங்களிடம் அடிமையாக முத்துகுளித்தவர்கள், கடலை சொந்தம் கொண்டாடலாமா? முத்துக்களை கொள்ளையடிக்கலாமா? எமக்கு தரவேண்டிய வரி, திரை, வட்டி இவைகளை தராது மறுப்பது நியாயமா?

சடையனார்,  கால கொடுமை..கொள்ளைகாரர்கள் எங்களை பார்த்து கொள்ளைகாரன் என்பது.....

வட்டம், அனுவட்டம், அம்பு, முதுங்கறடு, குறுமுத்து, கோத்தமுத்து, ஒப்புமுத்து, இரட்டை நிம்பளம், பயிட்டம், அம்பு, சப்பத்தி, குளிந்த நீர், சிவந்த நீர். என்பது என்னவென்றாவது தெரியுமா ?

இரப்பாளி, ….…… ………… ………..?

சடையனார், 
முத்துக்களின் வகை தெரியாத .... உங்களுக்கு முத்துக்கள் சொந்தமா?

இரப்பாளி எனக்கும் தெரியும், அரபி அல் இத்ரசியின் ஆவணத்திலுள்ளது. நீங்கள் உரிமை கொண்டாடும் கடல் அரபு குலத்து வாரிசு, காயல்பட்டிணம் முதலியார் பிள்ளை மரைக்காயருக்கு உரியது. 

சடையனார், அடேய் இரப்பாளி இது பரதவ கடலடா.... பாரம்பரிய பாண்டிய கடலடா... கடலுக்குள்ளே புதையுண்டு கிடக்கிறதே... எமது ஆதி குமரி நாடு அதுவும் அரபியருக்கு சொந்தமா? வந்தேறிகளுக்கும் வழித்தப்பிகளுக்கும் புகலிடம் தந்த மீன் கொடி கொண்ட‌ மீன் குடியோன் நாடு.

செய்த நன்றிக்குத் தான் எங்களது கடலை கூர் கூராக பிரித்தார், நாயக்கருக்கு 97 கல்லும், சேதுபதிக்கு 59 கல்லும், திருவிதாங்கூருக்கு 76 கல்லும் உண்டு. ஆனால் நாயக்கன் வெறும் 10 கல்லை மட்டுமே முதலியாருக்கு கொடுத்தார், அது எமது புன்னை கல்லாகும். 

எமது முத்து பேட்டைகளை தங்கள் வசமாக்கி கொண்டதால், வரலாற்றை திருத்தாதீர்கள். இரண்டு நூற்றாண்டுகளுக்கான போர் இது தெரியுமா உனக்கு ?

அரசை இழந்து அலங்கோல அரசியலில் மடிந்து ஒடுக்கப்பட்ட எம் வம்சத்து வீழ்ச்சியை எம்முயிர் பாண்டிய பரம்பரை மரபுகளை கதையாக, பாடலாக‌, வாய் வழி செய்தியாக, பரம்பரைக்கு கடத்தி வந்தவர்கள் நாங்கள்.

ஓடாவி எனும் எங்கள் குமரித்துறை மேதாவியும், பரதவர்களின் ஒச்சியங்களை பாடும், குமரி ஒச்சிய கவிராயரும் 90 வயதிலும் எம்மோடு இருக்கிறார்கள்.

அவர்களின் வாய் வழி எம் பரதகுலத்து பழங்கதைகளையும் பாடல்களையும் கேட்கிறாயா..?

அரபியிலே இரப்பாளியொடு சடையனார் கதைத்தபோதும் ஓடாவி, ஒச்சியகாரர் என்னும் பெயர் புரிந்து கூட்டமே தலையை திருப்பி அவர்களை தேடியது. ஓடாவி 90 வயதுகாரராகயில்லை கூன் போடாத நிமிர்ந்த நடை, பொக்குவாயில்லை ஆனாலும் வெத்திலை வாய். ஒச்சியகாரர் உயரம் குறைந்த திரண்ட உருவத்தோடு மேலாடை அணியாத கூன் வளைந்தவராய் இருந்தார்.

அவர்களுக்கு அந்த சபையில் கிடைத்த அறிமுகமே வாழ்க்கை சாதனையாக நினைத்து கொண்டார்கள். பரதவரின் வரலாற்றை பரம்பரைக்கு கடத்தி வரும் மூதுரைஞன் தாங்கள் என்பதின் கர்வத்தோடு நிமிர்ந்தார்கள்.

கொற்கை கோ வை தழுவிய ஒச்சியகாரர் கரகரத்த குரலிலே சின்னையை என்ன வேணும் கேளுங்க‌ என சொல்ல கொற்கை கோ சைகை காட்டி பூட்டா .. அங்கே.. என சடையனாரை சுட்டினார்.

எப்பா, இந்த துலுக்கமாரு எப்படி இங்க வந்தானுவப்பா சொல்லுங்க இந்த இரப்பாளிக்குனு சொல்ல...

ஒச்சியகாரர் மக்கா நா பாட்டு பாடினா நம்ம பயலுவளுக்கே புரியாது. இதுல இந்த ஈனங்கெட்ட இரப்பாளிக்கு என்ன யழவு புரிய போது. ஓடாவிட்ட கேளுங்கயா...மாப்ள சொல்லுவோய் என எடக்கு மடக்காக சொன்னார், கோபக்கார ஒச்சியகார‌ர்  சபையிலே பேசாமல் இருப்பதே நல்லது என நினைத்த ஓடாவியார் பேச ஆரம்பித்தார் .

எய்யா, நீங்க சடையன் தானே சடையவர்ம பாண்டியன் தானே மக்களே இதுகெல்லாம் காரணம், நம்ம‌ பூட்டாமாரும்.. பூட்டிமாரும் தான் ரொம்ப காலத்துக்கு முன்னே ஒரு 20 தலை முறைக்கு முன்னே மேக்கே பரவமாரோடு பாய்மரக் கப்பல் பெர்சியாவுக்கு போன போது

பாரசீகத்துல (ஈராக்) பஸ்ராவின் கொடுங்கோல் அரசன் ஹிஜாஜ் இபுனு யூசுப்பிடமிருந்து தப்பிய (ஹிஜ்ரி வருடன் 41 முதல் 95 வரை) ஹாஷிம் வம்சம், பாருக் வம்சம், பாக்கீர் வம்சம், உமையா வம்சம் என கடலுல தத்தளிச்ச 200, 300 துலுக்கமாரை அவங்க குடும்பத்தை மீட்டு இங்கே நம்ம கொற்கை பாண்டியருக்கிட்ட குலசேகர பாண்டியன்னு நினைக்கிறேன். அவரு கிட்ட கொண்டு விட்டாங்க....

அதிலுள்ள அரேபிய பெண்கள் உயிர் மானம் காத்த பரதவ பாண்டியர்களை மணமுடித்து கொண்டார்கள். அவர்களோடு உறவு முறை பாராட்டி பாசம் கொண்டார்கள். பாண்டிய நாடே தன் தாயகமாக மனதில் கொண்டார்கள்.

அரசரது பாதுகாப்பிலே..... அரசாங்கத்து வம்சாவழியில‌ .... வந்த நம்ம பிள்ளைங்கதான் மரைக்காயர்மார். நம்ம வம்சத்து சண்டையிலே சோழன் செஞ்ச கருமத்திலே தாய்பிள்ளையாக அடிச்சி மோதினோம். நாம பாசமாத்தான் இருக்கோம் அவங்களும் நம்ம மறக்கலை.

ஆனாலும் அதை மிஞ்சிய ஒன்று உண்டு, எம் குலத்தவன் காயல்பட்டண‌த்து முதலி மரக்காயன். மதத்தால் துலுக்கனோடு இனைந்தவன் தான். நாங்களும் தான், முதலில், மாறுதலை வேண்டி நற்செய்திகளை கேட்டு இங்குள்ளவர்களின் பாதி தலைமுறை இசுலாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தான். அதிகாரத்தையும், பொருளாதாரத்தையும் பெருக்கி கொள்ள இசுலாத்தை தழுவியவர்கள் தான். ஆனால்.... ஆனால்.....

தமிழை வளர்த்த பாண்டியர்கள் நாங்கள் பிறமொழியிலே தொழுதிட வேண்டுமோ... எம் மன்றாட்டை உணராத பிறமொழி கடவுளிடம் இறைந்திட வேண்டுமோ...பனை உயர் அலை எதிர்த்து உயிர் பிழைத்து பாடுபட்டு வந்தவர்கள். 

பனங்கள்ளை பருகி பசியார உண்டு மணல் மெத்தையில் இளைப்பாறுவதற்கு உம் மதம் தடை சொல்லுமோ..?

தமிழையும் கள்ளையும் பறிக்க நினைத்த நீ  உன்னை சார்ந்ததால் எம் கடலையும் பறிக்க நினைத்தாயே... பாண்டிய வீரத்தை விலை பேசி விற்றுவிட்ட பொசங்கெட்ட பாண்டியரில்லடா நாங்க பரதவ பாண்டியர்கள்... அனைவரையும் அழித்து புதைத்தாலும் எம் ஆதிதாய் கடல் நுறையிலிருந்து பொங்கி வரும் அதிசய பிறவிகளடா நாங்கள்..

உணர்ச்சிகரமான இந்த வார்த்தைகளை இரப்பாளிக்கு மொழி பெயர்த்த கொற்கை கோ விற்கு குருதி கொதிக்க உணர்ச்சி வெடித்தது. ஒன்றுமே அறியாத இரப்பாளி குமரிதுறை ஓடாவியாரின் வார்த்தைகள் யாவும் பரதவரால் புனையப்பட்ட புது கதையோ என்று பதற்ற‌துடன் அவனும் வார்த்தைகளை விரசமாக வீசினான்.

இரப்பாளி: 
காயல்பட்டிணம் முதலி மரக்காயரின் அடிமைகள் நீங்கள் அவரை விட்டுவிட்டு பரங்கிகளோடு சேர்ந்தது எப்படி..?

சடையனார்:
அடேய்.. இரப்பாளி என் சகோதரனுக்காக‌ கடமைபட்டவன், அவன் வாழ என் உயிரையும் கொடுப்பவன். முன்னொரு காலத்தில் காந்தாரியோடு வந்து மஹா பரதவரை விரட்டிய சகுனி போல‌ அவனது மாமனுக்கு அதுதான் துலுக்கனுக்கு, நான் அடிமையில்லை. கற்பையும் கடமையும் போற்றும் பாண்டியர்கள் நாங்களடா..

இரப்பாளி:
கற்பு.. ஆ... கருத்த பரவனின் பங்காளி, முதலி மரக்காயர் வெள்ளை அரபியாம் ஆ.. ஆஹ.... பரத்திமாரின் …………தெரியுதே என கொடுரத்தனமான அவலட்சணமான வார்த்தைகளை உச்சரித்து முடிப்பதற்க்குள்.....கூட்டமே ஓங்கார கூச்சலிட புன்னை கோட்டையே அதிர்ந்தது.

சொந்தங்களின் ஆசியால் மீண்டும் உங்கள்

….….கடல் புரத்தான்……..

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.