Our Blog

மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழ்மொழியின் பெருமை


‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடித் தமிழ்’ எனப் புகழ் பெற்ற செம்மொழித் தமிழின் பெருமையினைச் சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும், புராதனச் சின்னங்களும் வெளிப்படுத்தியுள்ளன. ஆயினும், கடலுக்கடியில் மூழ்கிக்கொண்டிருக்கும் தமிழ் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்வது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமாகிறது.

தற்போதைய, உலகளாவிய ஆய்வில் கண்டுபிடித்த செய்தியின் அடிப்படையில் மடகாசுகருக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் தெற்கு பரந்துபட்ட இந்துமகா சமுத்திரத்தில் மூழ்கிய லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என அழைக்கப்படுகிறது. பங்கியா-குமரி இருந்த நிலப்பரப்பில்தான் உயிரினம் மனிதனின் வழித் தோன்றல்கள் தோன்றியுள்ளன.அமெரிக்க, ஆஸ்திரேலியக் கண்டங்களில் ஆரம்பகால உயிரினமோ, மனிதவழித் தோன்றலோ, பிறந்ததாக, வாழ்ந்ததாக அடையாளங்கள் இல்லை.

பங்கியா(பாண்டியா) என்ற நிலப்பகுதி பிளவுபட்டு லுரேசியா, கோண்டுவானா என்று இருந்த குமரிக் கண்டம் பகுதியில் இயற்கைச் சீற்றத்தினால் பல்வேறு மாறுபாட்டினை அடைந்தன.

கி.மு.300இல் தென்கடலில் பயணம் செய்த கிரேக்கத் தூதுவர் மெகஸ்தனீஸ் பங்கியாவைப் ‘பண்டேயா‘ எனக் குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து உடையத் தொடங்கிய நிலப்பரப்பு கோண்டுவானா. வடக்கிலிருந்து பிரிந்த நிலப்பரப்பு இலாராசியா. கோண்ட்வானா மீண்டும் உடைந்து தென்னமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என்று பிரிந்தது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் கோண்ட்வானா பெருங்கண்டம் அமைந்திருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

கன்னியாகுமரி வரலாற்றுச் சிறப்புமிக்க இதனைத் தென்கடலில் மூழ்கிப் போன குமரியத்தின் எஞ்சிய நிலமாகக் குமரிமுனை, இலங்கை, இலட்சத் தீவுகள் அறியப்படுகின்றன.

”பஃறுளி-…………………………………………

………………………………கொடுங்கடல் கொள்ள”…….சிலம்பு கா. காதை (19-20) பாடலடிகள் தமிழ்மொழியின் பெருமையை அறியச் செய்துள்ளது. குமரிக்கோடு என்ற மலைநிலத்தைச் சுற்றி குமரி ஆறு, மலை, அதனைச் சுற்றி நாடுகள் பல இருந்தன. அவைகளே பஃறுளியாறு, குமரிக்கோடு. குமரிமுனையின் வரலாறு குறித்து

• ஸ்டிராபோ-கி.மு.74-கி.பி-24

• தாலமி—கி.பி.119-161

• மார்க்கோபோலோ—கி.பி.1254-1324 போன்றோர் ஆய்வு செய்து பல கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

தாலமி இந்தக் குமரி முனையை ‘புரோமன்போரியம் குமரி‘ என்று குறிப்பிட்டுள்ளார். முதலில் பஃறுளி ஆறு அழிந்து, குமரிக்கோடு கடலில் மூழ்கிய பின், முசிறியின் பல பகுதிகளும் கடலில் மூழ்கின. கடல்கோள் நடந்த செய்திகள் கி.பி. 79 ஆகஸ்டு 23-24 அத்துடன் கி.மு.மூன்றாம் நூற்றாண்டின் (300) இறுதி எனவும், காவிரிப்பூம்பட்டினம், மலங்கே என்ற மகாபலிபுரம் என்ற மாமல்லபுரம் ஆகியன கடலில் மூழ்கியவற்றைக் கூறுகின்றனர்.

”குமரியக் கிழக்கு மலையாளப் பாண்டியப் பண்டு நாட்டிலிருந்து செங்கடல் வழியாக வந்து நைல் நதிக்கரையில் குடியேறிய (தமிழர்) மக்கள் எகிப்தியர் என்று ” புராதன கிழக்கு வரலாறு” (The Ancient History of the Near east) என்ற தமது நூலில் ஆர்.எச்.ஹால் என்பவர் கூறுகிறார்.. அவரே திராவிட மக்களும் எகிப்தியரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்” என்றும் கூறுகிறார். இதே கருத்தினை( outline of history by H.G Wellman”s place in nature and other essays P.23 Thoms Huxle) மற்றும்” ருக்வேத இந்தியா ” என்ற தமது நூலில் அபினஸ் சுந்தரதாஸ் என்பவரும் ” புராதனக் கலைஞன் ” என்ற தமது நூலில் பண்டிதர் சவுரிராயர், மற்றும் மெகஸ்தனீஸ் ஆகியோரும் குறிப்பிடுகின்றனர்.

ஏராளமான சங்கச் செய்திகள் சமகாலமான சங்க இலக்கிய எழுத்துகளில் கிடைத்துள்ளன. புகலூர் ஆறுநாட்டார் மலையில் பதிற்றுப் பத்து 7,8,9 ஆம் பத்துக்குரிய செல்வக்கடுங்கோ வாழியாதன் பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ பெயர் பொறித்த பழந்தமிழ்க் கல்வெட்டு கிடைத்துள்ளது. தேரிருவேலி அகழாய்வில் நெடுங்கிள்ளி பெயர் பொறித்த பானை ஓடும், மாக்கோதை, கொல்லிப்பாறை, கொல்லிரும்பொறை, குட்டுவன்கோதை என்ற சேரர் பெயரும், பெருவழுதி என்ற பாண்டியர் பெயரும் பொறித்த காசுகளும் கிடைத்துள்ளன.

அண்மைக்காலத்தில் கிழக்கு நாடுகளிலும், மேற்கு நாடுகளிலும் பல சங்ககாலச் சோழர் புலிக்காசும், பெரும்பத்தன் கல் என்று பழந்தமிழ் எழுதப்பட்ட தங்கம் உரைத்துப் பார்க்கும் உரைகல்லும் கிடைத்துள்ளன. எகிப்து நைல் நதிக்கரை ஊரான குவாசிர் அல்காதிம் என்ற ஊரில் கண்ணன், சாத்தன், பனை ஒறி என்று எழுதப்பட்ட பானை ஓடுகளும், பெறனிகே என்ற இடத்தில் “கொறபூமான்” என்று எழுதப்பட்ட பானைஓடும் கிடைத்துள்ளது. இவை சங்ககாலத்தின் இருப்பையும், தொன்மையையும், காட்டுகின்றன. (செவ்வியல் ஆய்வுக்கோவை, உலகத் தமிழ்ப்படைப்பாளர் நூல் வெளியீட்டகம், திருச்சிராப்பள்ளி, மு.பதி.2011)

விழுப்புரம் கீழ்வாலை மலைப்பாறைப் பகுதிகளில் காணப்படும் ஓவியங்கள், குறியீடுகள் போன்றவை பழங்காலத்து வரலாற்றுடன் தொடர்பு கொண்டுள்ளனவாக அமைந்துள்ளன. இங்கு காணப்படும் ஓவியங்கள் ஆப்ரிக்க, ஆஸ்திரேலியா ஓவியங்களை ஒத்துள்ளது.

செங்கோன் தரைச்செலவு குறித்த நூல் குமரிக்கண்டம் குறித்த பழமையான செய்திகளைத் தரலாம் என ஆய்வுகள் மூலம் அறியப்படுகிறது. சமவயங்க சுத்த என்ற சமண நூல் (18 மொழி-தொகுப்பு) வாயிலாகத் தமிழ்மொழி குறித்த பல செய்திகளை அறியலாம். லலிதா விஸ்தாரம் என்ற பௌத்த நூல் தொகுப்புப் பட்டியலில் தமிழ்மொழி குறித்த செய்திகள் கிடைக்கலாம்.

கி.மு 4500-இல் எகிப்து நாட்டை மீனன் என்ற தமிழன் ஆண்டான். இதுபற்றி எகிப்திய அக்கால குருவான மனேதா என்பவர் மீனன் முதல், 300 புராதன அரசர் வரலாற்றை அவர் அங்கு எழுதி வைத்தார். எகிப்தில் மீனன் சவ உடல் மதமதக்கத் தாழி என்ற குழு தாழியில் தைலம் பூசிப் புதைக்கப்பட்டுள்ளது. கி.மு.4000 ஆண்டில் பரவன் என்ற தமிழ் மன்னன் எகிப்து அரசனாக விளங்கினான். அவர்கள் பேசிய மொழி தமிழ்மொழி எனப் பலநூல்கள் குறிப்பிட்டுள்ளன.

கி.மு.4000 ஆம் வரையில் எகிப்து-பண்டு இடையே நோவா காலம் தொடர்ந்தும் (கி.மு.2400) கப்பற் பயணங்கள் நடந்திருப்பதை பொறிக்கப்பட்டிருக்கும் எகிப்தியச் சின்னங்கள் தெரிவிக்கின்றன. எகிப்திலிருந்து நோவா என்பவர் கட்டிய கப்பல் கூட பண்டு(பாண்டியர்)நாட்டிற்காகச் செய்தவையாகும். இவை பற்றிய விபரங்களை முதலில் பட எழுத்துகளிலிருந்து மொழி பெயர்த்து ஹென்றிபுரோசு என்பவர் வெளியிட்டார். குமரித் தமிழர்கள் நிலப்பகுதிகள் கடலில் மூழ்க பல இடங்களுக்குக் குடிபெயர்ந்தனர்.

சுமேரியர்களை முன்னோடிகளாகக் கொண்டு மத்தியத் தரைக்கடல் கிழக்குப் பகுதியில் பனைமரங்களடர்ந்த இடங்களில் கோட்டை, கொத்தளம் அமைத்துப் பெரும் வணிகர்களாக வாழ்ந்த கடலாடிப் பகற்பரவத் தமிழர் வழியினரே பொனீசியர். அவர் வழியினரே பிரிட்டானியர். இச்செய்திகளின் வழி தமிழ்மொழி மிகவும் பழமை வாய்ந்தது என அறியப்படுகிறது.

யோனாகுனி தீவை ஒட்டிக் கடலில் மூழ்கித் தேய ஆய்வாளர்கள் கடல் மட்டத்திலிருந்து 100 அடி ஆழத்தில் பிரமிடுகள் போன்ற வடிவத்துடன்கூடிய கட்டுமானங்களைக் கண்டறிந்தனர்.கற்களால் ஆன இந்தக் கட்டுமானங்கள் இயற்கையா? இலெமூரியாக் கண்டத்தின் நாகரிக எச்சங்களா என்ற ஆய்வு நிலை நீடித்து வருகிறது.

இலெமூரியாக் கண்டம் என்பதை மூ என்று சொல்வார்கள். இந்தியாவிலும், பர்மாவிலும் உள்ள இந்து மடாலயங்களில் கிட்டும் ஆவணங்கள் இது பற்றிப் பேசுகின்றன.

ஆங்கில அமெரிக்க ஆய்வாளர் சேம்சுசர்ச்சுவார்டு 1931 இல் எழுதிய காணாமற்போன மூ அல்லது இலெமூரியாக் கண்டம் ஹவாய் தொடங்கி மரியானாவரை பரவி இருந்ததாகவும், கடற்கோள் ஏற்பட்ட பிறகு தென்னமெரிக்கா வழியாக அட்லாண்டிசுக் கண்டத்தின் கடலோரம் வழியாக ஆப்பிரிக்காவுக்கும் அகதிகள் பரவினர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரெஞ்சு எழுத்தாளர் அகசுதசு லெ பிளாஞ்சீயோன்(1825-1908) 19 ஆம் நூற்றாண்டில் மூ கண்டம் குறித்துக் குறிப்பிட்டுள்ளது சிறப்பானது. மாயன் சுவடிகளை அவர் மொழியாக்கம் செய்தபோது மூ என்னும் கண்டம் இருந்தது குறித்தும், அக்கண்டத்திலிருந்து தப்பித்தவர் மாயன் நாகரிகத்தை உருவாக்கியதாகவும் எழுதியுள்ளார். இதன்வழி இலமூரியாக் கண்டம் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

எட்கார் காய்சி(1877-1945) அட்லாண்டிசு பற்றியும், மூ பற்றியும் அறிந்தவரான இவரே முதன்முதலில் இலெமூரியாக்கண்டம் எனப் பெயரிட்டார். துறவி தந்த சுவடிகள் வழி மூ என்னும் பழம்பெரும் நாகரீகம் குறித்து அறியப்பட்டுள்ளதாக நந்திவர்மன் குறிப்பிடுகிறார் (கடலடியில் தமிழர் நாகரீகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.,மு.ப.2010) .

மேலும், மூழ்கிக் கிடக்கும் அட்லாண்டீசு தென் சீனக் கடலில் இருப்பதாயும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூழ்கிய குமரிக்கண்டம் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கனடா நாட்டின் புகழ்பெற்ற ஆங்கில ஏடான ஏட்டில் திசம்பர் 7,இல் செய்தியாளர் மைக்கேல் கியூபா நாட்டருகே கடலடி நாகரிகம் குறித்த சான்றுகள் குறித்துப் பதிவு செய்துள்ளார்.

கியூபா நாட்டு மாந்த உயிரியல் (Anthropology) அகாதமியின் ஆய்வாளர் ஒருவர் அந்தப் பாறையின் மீது குறியீடுகளும், கல்வெட்டு எழுத்துகளும் தெளிவாகப் பார்க்கமுடிந்ததையும், அது எம்மொழி எனத் தெரியவில்லை எனவும் குறித்துள்ளார்.

இதன்வாயிலாகத் தமிழ்மொழியின் பெருமை அறியப்படவேண்டிய நிலையிலேயே இன்னமும் அமைந்துள்ளது. இவ்வாய்வு முடிவுகள் வெளிவரின் தமிழ்மொழியின் பெருமை தழைத்து வளரும்.இது குறித்து இன்னமும் ஆய்வுகள் வெளிவர தமிழ்மொழி செழித்து வளரவேண்டும். சுவடிகள் படிக்கவும், கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகள் குறித்தும் அறிய மக்கள் முன்வரவேண்டும்.

- முனைவர்.பி.ஆர்..லட்சுமி.

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.