Our Blog

இரத்த பூமி - 11

நடுநிசியில் முழங்கிய சங்கு

கொச்சின் போர்த்துக்கல் கோட்டையிலே பிரளயமாய் வெடித்த பாண்டியரின் ஆதங்க உரை பரதேசியருக்கு ஆவேச உரையாக தோன்றிற்று

ஒன்றுமேயில்லாமல் ஊர்காண உலகம் காண வந்தவருக்கு ... 

ஊழி காலத்தே ஆழியாண்டு

உலா வந்த உயர் பரவனோடு
 
உடன்பாடு கொண்டு உடன்பட்ட பிறகே பாண்டி மண்ணில் பாதம் பதித்து படை கூட்டி கோட்டை கட்டி பலமானதை உணர்ந்ததால், பட்டங்கட்டிமாரின் துணையோடு படை கூட்டவும் பரத எதிரிகளின் சிதைமூட்டவும் சித்தமானார்கள்.

கொச்சின் போர்த்துகீசிய கோட்டையிலிருந்து கில் பர்ணான்டஸ் கேப்டன் தலைமையில் தளபதி லோரன்கோ கோயல்கோ துணையோடு பரதவ தலைவரோடும் பட்டங்கட்டிமாரோடும் பெரும் கப்பற்படையானது பீரங்கிகள் மற்றும் வெடி குண்டு துப்பாக்கி போர் தளவாளங்களோடு சேர நாட்டு துறையிலிருந்து பாண்டி நாட்டு புன்னை கோட்டைக்கு விரைந்தது.

அடப்பனாரும் பாடனும், ஏனைய பரதவரும் இரப்பாளியின் பதவியேற்பை பறை சாற்ற வடக்கே ஒரு குழு அடப்பனார் தலைமையிலும் தெற்கே ஒரு குழு பாடன் தலைமையிலும் பரதவ ஊர்களுக்கு பாய்மர கப்பலிலே இரப்பாளியின் படையோடு பயணித்தனர்.

ஊருக்கு ஒரு கப்பல் கரை இறங்கியது, கடலோரத்து கரை எங்கும் வாளாலும் திருக்கை வாலாலும்...... பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டு, பரதவ கடலோரம் இரப்பாளியின் கொள்ளையர்கள் அனைவரும் கொன்று புதைக்கபட்டனர். அதிசயமாய் தப்பி பிழைத்தோர் ஆழியிலே ஆழ்த்தி அடக்கம் செய்யப்பட்டனர். இரப்பாளியின் கதை முடிக்க கடல்புறமே ஆர்ப்பரித்து திரண்டது.

அன்றய இரவே சாரை சாரையாக இரப்பாளியின் கொள்ளை கப்பல்களில் கொள்ளையர்களின் போராயுதங்களோடு புன்னை நோக்கி பரதவர் படை கிளம்பியது. அன்றய இரவு பொழுதினிலே புன்னைக் காயலிலே புன்னை பரணியாற்றின் தென்கரை தாண்டி தூரத்து கடலோரத்தில் கையிலே தீவட்டியோடு நடுநிசி வேளையிலும் ஓர் உருவம் பரதவரின் வருகைக்காக காத்து கிடந்தது

ஆழியிலிருந்து ஒளி கண்ட அத்தனை படகுகளும்  ஆரவாரமின்றி கரை ஒதுங்க அங்கே கொற்கை கோ கையில் தீவட்டியோடு தனியாளாய் நின்றிருந்தார். வடக்கத்தி பரதவரின் வருகைக்காக காத்திருந்து அடப்பனாரும் வேம்பாத்து சடையனாரோடு கரை வந்து சேர்ந்து கொற்கைக்கோவை ஆரத்தழுவிக் கொண்டார்

கணநேரமும் தாமதிக்காது தாக்குதல் தொடர்பான ஆலோசனைகள் முடிவெடுக்கப்பட்டு அத்தனை பெரும் படையும் இரவின் நிசப்த்தத்தோடு பரணி தென்கரை தாண்டி இருட்டிலே ஊடுருவி தவழ்ந்தவாரே கோட்டை மேலுள்ள கொள்ளையரின் பார்வைக்கு தப்பியபடி புன்னை கோட்டையை நெருங்கி சுற்றிவளைத்து ஆணைக்காக காத்திருந்தது.

நேரம் கடந்து செல்ல மயான அமைதி, திடீரென்று கோட்டைக்குள் சங்கோன்று நீளமாய் முழங்கி அடங்கியது.  கோட்டை காவல் கொள்ளையர்கள் பதட்டத்தோடு துப்பாக்கிகளை தூக்கி கோட்டைக்குள் குறி வைக்க அடுத்த நொடி கோவில் மணி இரண்டு அடி அடிக்கப்பட்டது. ஒரு அடி அடித்து மறு அடி அடிக்கும் போது, மணியின் ஓசையோடு கலந்து போனது அனைத்து கோட்டை காவல் கொள்ளையர்களின் உயிரை குடித்த பரதவரின் தோட்டாக்களின் வெடிச் சத்தம்.

கொள்ளையர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டு, கீழே விழுந்து மாண்டனர். குடியானவர் வீட்டின் வழியே பரதவர் கூட்டம் உள்ளே புகுந்தது

இரவோடு இரவாக, கொள்ளையர்கள் அனைவருமே கைது செய்யப்பட, ராஜ்ஜிய கனவுடன் ஏதுமறியாது நித்திரையில் களித்திருந்தான் இரப்பாளி.

........கடல் புரத்தான்.......

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.