Our Blog

சங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள்…..

வடக்கே வேங்கட மலையும் தெற்கே தென்குமரியும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட பரந்த தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர். இவர்களுள் சேரர் என்பவர் இன்றைய கேரளப் பகுதிகளை ஆண்டவர்கள் எனப் புரிதலுக்காகக் குறிப்பிடலாம்.

சேர மன்னர்களின் வரலாற்றை அறிவிக்கும் நூல்போல் விளங்குவது பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கியமாகும். இதில் பத்துப் புலவர்கள் பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பாடிய பத்துப் பத்துப் பாடல்களின் தொகுதியான நூறு பாடல்களை இந்நூல் கொண்டிருந்தது. முதற் பத்தும் கடைசிப் பத்தும் நீங்கலாக எண்பது பாடல்கள்தான் அதாவது எட்டுப் பத்துகள்தான் இன்று கிடைத்துள்ளன.

இவற்றுள் இரண்டாம் பத்து என்னும் பகுதியைப் பாடிய புலவர் குமட்டூர்க் கண்ணனார் ஆவார்.இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இப்புலவரைச் சிறப்பிக்க நினைத்த மன்னன் இமயவரம்பன் உம்பற்காட்டுப் பகுதியில்(மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்குப் பகுதி) ஐந்நூறு ஊர்களையும், தென்னாட்டு வருவாயில் முப்பத்தெட்டு ஆண்டுவரை பகுதியும் வழங்கினான் என அறிய முடிகிறது.

கடம்பர் என்ற கடற்கொள்ளையரை அழித்து வெற்றியுடன் மீண்ட இமயவரம்பன் செடுஞ்சேர லாதனை அவன் நாட்டு மக்கள் பாராட்டி வரவேற்றனர். அக்காட்சியைக் கண்ட புலவர் பெருமா னுக்குக், கடலுள் மாமர வடிவில் இருந்த சூரபத்மனை அழித்து மீண்ட முருகன் நினைவுக்கு வருகின்றான். அம் முருகனாகவே புலவர் இமயவரம்பனை எண்ணிப் பாடியுள்ளார்.

கடம்பர்கள் என்பவர்கள் கடலிடை உள்ள தீவுகளை வாழிடமாகக் கொண்டு அவ்வழிச் செல்லும் கலங்களைக் (கப்பல்களை) கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இக் கொடியவர்களால் தம் நாட்டில் நடைபெற்று வந்த கடல்வணிகம் பாதிக்கப்பட்டதை அறிந்த இமயவரம்பன் அக்கடம்பர் பகுதி மீது(அரபிக்கடல் பகுதியில்)படையெடுத்தான்.

சேரநாட்டுப் படை மறவர்கள் கடம்பர்களின் கலத்தையும் நாட்டையும் பாழ்படுத்தினர். சேரர் படையுடன் போரில் வெற்றிபெற முடியாது என உணர்ந்த கடம்பர்கள் தங்கள் காவல் மரத்தை மட்டுமாவது காத்துக்கொள்ள நினைத்தனர். அவர்களின் காவல் மரமான கடம்ப மரத்தை அழிக்கும் முன் கடம்பர்களையும் சேரர் படை அழித்தது. கடம்ப மரத்தை அடியோடு வெட்டி வீழ்த்தி, வீழ்ந்த கடம்பமரதைக் குடைந்து முரசாக்கி மறவர்கள் முழக்கம் செய்தனர். அம் முழக்கொலி கேட்ட சேரநாட்டுப் படை மறவர்களும் மக்களும் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். 

இதனைக் கண்ட குமட்டூர்க் கண்ணனார்,

“வரைமருள் புணரி வான்பிசிர் உடைய,
வளிபாய்ந்து அட்ட துளங்கு இரும் கமஞ்சூல்
ஒளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறள்வேள் களிறு ஊர்ந்தாங்கு…
“பலர்மொசிந்(து) ஓம்பிய அலர்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்குபணை செய்த வெல்போர்
நார்அரி நறவின் ஆர மார்பின்,
போர்அடு தானைச் சேர லாத!” (பதிற்றுப்பத்து 2: 1-16)
எனவும்,

“துளங்கு பிசிர்உடைய மாக்கடல் நீக்கிக்
கடம்பறுத்து இயற்றிய வலம்படு வியன்பனை” (பதிற்றுப்பத்து 17: 4-5)
எனவும்

“இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேர லாதன் ” (பதிற்றுப்பத்து 20 :2-5)
எனவும் பாடியுள்ளார்.

அகநானூற்றுப் புலவர் மாமூலனார் அவர்கள் (கி.மு.மூன்றாம் நூற்றாண்டு. பார்க்க: பே.க.வேலாயுதனாரின் சங்ககால மன்னர் வரிசை,1997)

“சால்பெரும் தானைச் சேரலாதன்
மால்கடல் ஒட்டிக் கடம்பறுத்து இயற்றிய
பண்அமை முரசின் கண்அதிர்ந்தன்ன”(அகம். 347)

(பொருள் : பெரும் படையுடையவன் சேரலாதன். அவன் பெரிய கடலில் பகைவர்களை அழித்து அவர்களின் கடம்ப மரத்தை அறுத்து முரசு செய்தான். அம் முரசு முழங்கியது போல) எனவும்

“வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பறுத்து” (அகம். 127 )

(பொருள்: வெற்றி தரும் முரசத்தையுடையவன் சேரலாதன்.அவன் கடலில் பகைவரை வென்று அவரது காவல் மரத்தை வெட்டினான்) எனவும் பாராட்டியுள்ளனர்.

பண்டு கிரேக்க, உரோமை நாடுகளுக்குச் சேரநாட்டு யானைத் தந்தங்கள், மிளகு முதலிய பொருள்களும் பாண்டியநாட்டு முத்து உள்ளிட்டவையும் மேலைக்கடற்கரை வழிச் சென்றமையும் அந்நாட்டின் செல்வம், பொருள்கள் தமிழகம் வந்ததையும் வரலாற்றால் அறிகிறோம். அவற்றைக் கடம்பர்கள் கொள்ளையடித்ததையும் ஒருவாறு உய்த்துணர முடிகிறது.

இப்பாடலடிகளின் வழியாக இன்று சோமாலிய கடற்கொள்ளையர்கள் செய்யும் வேலைகளைப் பண்டைய கடம்பர்கள் செய்தனர் போலும். இவை பற்றி விரிவாக ஆராய இடம் உள்ளது. கடம்பர்கள் இல்லை. கதம்பர்கள் எனப் பொருள்கொள்ளும் அறிஞர்களும் உள்ளனர்.இக் கதம்பர்கள் மைசூர் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் எனவும் அறியமுடிகிறது. தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

– முனைவர் மு.இளங்கோவன்

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.