Our Blog

அரேபிய தமிழக வணிக கலாச்சார தொடர்புகள் - ஒரு வரலாற்றுப் பார்வை


தமிழகத்திற்கும், அரேபியாவிற்கும் 2500 ஆண்டுகளுக்கு முன்பே வணிகத் தொடர்பு இருந்து வந்தது. அரேபியர் தொகுத்து வைத்திருந்த புவியியல் செய்திகளும், பல்வேறு நாடுகளின் கடல் வரைபடங்களும் அவர்களது திரைகடலோடும் திறமைக்கு தக்க வழிகாட்டிகளாக அமைந்து, அவர்கள் கடல் சார்ந்த தொழில்களை (பிற நாட்டுடன் வணிகம், முத்துக் குளித்தல், மீன் பிடித்தல் போன்றவை) சிறப்பாக மேற்கொள்ள காரணமாக இருந்தது.

பஹ்ரைன், ஏமன், ஹோர்முச், ஆகிய நாட்டு துறைமுகங்களிலிருந்து புறப்பட்ட அரேபிய கப்பல்கள், இந்திய நாட்டுக் கடலில் வலம் வந்தன. அரேபிய தென்முனைத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டக் கப்பல்கள், 47 நாட்களில் தமிழகத்தின் வட எல்லையைத் தொட்டன. அரேபிய வணிகர்கள் பொன்னையும், புதுமை பொருட்களையும், மிளகு, முத்து ஆகியவற்றையும் பெற்றுச் சென்றனர். இவ்வாறாக தமிழகத்தின் வணிகப் பொருட்கள் அரேபிய வணிகர்களின் மூலமாக உலகின் பல பகுதிகளுக்கும் சென்றன.

வணிக நிமித்தம் தமிழ் நாட்டிற்கு வந்த அரேபிகள், தமிழகத்துதுறைமுகப் பட்டினங்களில் தங்கலாயினர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அகநானூறு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி போன்ற நூல்களில் இதற்கான சான்றுகள் காணப்படுகின்றன.

அரபுமக்களை யவனர் எனவும், அவர்களது குடியிருப்புகளை யவனச்சேரி என்றும் இந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. அரேபிய வணிகர்களின் பண்டமாற்று வணிகம் குறித்த செய்திகளும் இவற்றில் நிறைய காணப்படுகின்றன.

அரேபிய குதிரைகள் தமிழகத்திற்கு பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டன. இதற்கு தமிழகத்தில் நல்ல விலை கிடைத்தது. அரேபியரின்கப்பல்களில் குதிரைகள் வந்து இறக்குமதியான செய்தியினை

“நீரில் வந்த நிமர்பரிப்புரவியும்”

எனப் பட்டினப்பாலை கூறுகிறது. தமிழகத்திலிருந்து திரும்பிச்செல்லும் அவர்களது கப்பல்கள் இங்கிருந்து மிளகுப் பொதிகளைச் சுமந்து சென்றன. இச்செய்தியை கூறும் சங்ககாலஇலக்கியமான அகநானூறு

“யவனர் தந்த வினைமாணன் கலங்கள்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்”

எனக் கூறுகிறது. பொற்காசுகளைக் கொண்டு வந்து கொடுத்து மிளகு ஏற்றிச் சென்றதாக குறிப்பிடப்படுகிறது. (கறி என்பது மிளகைக் குறிக்கும்) உலகின் கீழ்க் கோடியான சீனத்துடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்த அரேபியருக்கு தென் இந்திய துறைமுகங்கள் மையமாக விளங்கின. தமிழகத்து துறைமுகங்களை தொட்ட பின்பே அவர்களது கப்பல்கள் ஜாவா, சுமத்ரா, மலாக்கா, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்றன. இந்நாடுகளிலிருந்து கொள்முதல் செய்த பலதரப்பட்ட பொருட்களையும், ஐரோப்பிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு சென்று அறிமுகப்படுத்தியவர்களும் அரேபியரே ஆவார். சங்க காலத் தமிழ் இலக்கியங்கள் துறைமுகத்தை பந்தர் என்று அழைக்கின்றன.

“இன்னிசை புணரி இரங்கும் பெளவத்து
நங்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்”

என பதிற்றுப் பத்து கூறுகிறது. பந்தர் என்பது அரபுச் சொல் ஆகும். இச்சொல் துறைமுகத்தைக் குறிக்கும். அக்காலத்தில் துறைமுகங்களாக இருந்த ஊர்கள் சில இன்றும் பந்தர் என வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தென்னாற்காடு மாவட்டம் பரங்கிப்பேட்டை (போர்ட்டோ நோவோ) மஹ்மூது பந்தர் எனவும், சென்னைக்கு அருகிலுள்ள கோவலம், ஷஹீதுபந்தர் எனவும் அழைக்கப்படுகிறது. தமிழகத்திற்கும், அரேபியாவிற்கும் நிலவிய நெருங்கிய தொடர்பினை இந்த சான்றுகள் வலியுறுத்துகின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அரேபியரின் தொடர்பினால் சுமார் 1500 அரபுச் சொற்கள் தமிழ் மொழியில் இடம் பெற்றுள்ளன. அவை அரபுச் சொற்கள் என அடையாளம் காண முடியாத அளவுக்கு தமிழ்மயமாகி உள்ளன. அவற்றில் கீழ்க்கண்ட சில சொற்களை மட்டும் இங்கு குறிப்பிடுவோம்.

அசல், அத்தர், அண்டா, அமல், அல்வா, அமினா, அயன், அனாமத்து, அக்கப்போர், ஆசாரி, இனாம், இலாகா, ஊதுபத்தி, கசாப்பு, கச்சா, கஜானா, கம்மி, கிராக்கி, கெடுபிடி, கிஸ்தி, குமாஸ்தா, கைதி, குத்தகை, சர்க்கார், சர்பத், சலாம், சிப்பந்தி, டபேதார், தரகர், தண்டோரா, தராசு, நகல், நமூனா, பட்டுவாடா, பந்தோபஸ்து, பலே, பூந்தி, பைசல், பேஷ், மசோதா, மராமத்து, ,மாஜி, முகாம், மிட்டாய், ரத்து, ரஸ்தா, ராஜினாமா, வக்கீல், வக்காலத்து, வஜா, வாபஸ், வாய்தா, ஜாமீன், ஜாஸ்தி, ஜோர், ஜில்லா, ஜமீன், மைதானம் ஆகியன.

வானசாஸ்திரத்திலும், கணித முறையிலும், புதிய நடைமுறைகள் ஏற்பட்டன. நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலை அறியும் வழக்கம், அரேபிய எண் முறையும் இங்கு வந்து சேர்ந்தன (1 முதல் 9 வரை அரேபிய எண்களாகும்.) தமிழகத்தில் வழக்கிலிருந்த சித்த வைத்திய முறையுடன் புதிதாக யூனனி என்ற மருத்துவமுறையும் அறிமுகமாகி இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது.

உணவுப் பழக்கங்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. நாம் சுவைத்து உண்ணும் பிரியாணி (இது ஈரான் நாட்டு உணவு), புலவு, நான், புரோட்டா, சமூசா, கஞ்சி ஜிலேபி, ஹல்வா இன்னும் இது போன்று புதுவகை புலால் உஅணவுகள் இந்தியா நாட்டு அடுக்களைக்கு வந்துச் சேர்ந்தன. ஒரே தட்டில் பலர் கூடி உண்ணும்முறை அரேபியரின் வழக்கம். இம்முறை தமிழகத்திற்கு அறிமுகமாகியது. தமிழகத்து கடற்கரைப் பட்டினங்களில் வாழும் மரக்காயர்களது திருமணம் போன்ற வைபவங்களில் ஒரே தட்டில் நான்கு பேர், ஆறுபேர் சேர்ந்து உண்ணும் பழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது. உடை உடுத்தும் பழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பெண்களது சல்வார் கமீஸ், குப்பாயம், ஆண்களின் ஜிப்பா போன்றவை அரேபியரின் தொடர்பால் கிடைத்தவை.

டாக்டர் ஜெ.ராஜா முகமது, M.A. (Hist), M.A. (Arch), M.A. (Anth), BGL.,PhD
முன்னாள் காப்பாட்சியர் அரசு அருங்காட்சியகம், புதுக்கோட்டை
தமிழ்நாடு, இந்தியா

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.