Our Blog

வேம்பாற்றின் வெண் முத்து சிலுவைமுத்து சுவாமிகள்

வேம்பாற்றினை தம் தாய்பதியாகக் கொண்டு 25.12.1905 அன்று பிறந்த சங். சிலுவைமுத்து தல்மெய்தா சுவாமிகள் கண்டியில் 26.08.1934 அன்று குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். சுவாமிகள் வேம்பாற்றில் உதித்த மூன்றாவது குருவாகும். இவர் நமதூரின் மேல் அளவு கடந்த பாசம் கொண்டு விளங்கினார்.

முத்துக்குளித்துறை  மறைமாவட்டத்திற்கு இவர் ஆற்றிய பணிகள் பணிகள் அளவிட முடியாதது. பெரிய கோயில் எனப்படும் பனிமய மாதா கோவிலிலும், சின்னக்கோயில் எனப்படும் மேற்றிராசனக் கோவிலிலும் பல்வேறுபட்ட பணிகளை செய்துள்ளார். குறிப்பாக .....

04.06.1954 ஆம் ஆண்டு திவ்ய சந்த மரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் திருக்கோவிலில் பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்றார்கள். அது முதல் கொண்டு பல்வேறு பனிமய நாயகியின் ஆலயத்தில் பல்வேறு பக்தி முயற்சிகளை ஏற்படுத்தினார்.

குறிப்பாக சகாய மாதாவிற்கென வாராந்திர பக்தி முயற்சியைத் தொடங்கி, வெற்றிகரமாக நடைபெறச் செய்கிறார்கள். திருச்சிலுவை கோவிலை நன்கு பழுதுபார்த்து வாரந்தோறும் வெள்ளிக் கிழமையன்று மக்கள் சேர்ந்து செபிக்கும் பக்தி முயற்சியை உருவாக்கினார்.

பனிமய நாயகியின் ஆலயத்தின் முகப்பினைச் சுற்றி அலங்காரக் கிராதிகள் அமைத்து, சலவைக் கல் பீடத்தினை ஒத்த வெண்ணிறக் கிராதிகளை, ஆண்களுக்கும், பெண்களுக்கும் நடுச்சாலையில் அமைத்து, கோயிலை அழகுபடுத்தினார்கள்.

பனிமய நாயகியின் ஆலயத்தின் சிற்றாலயங்களான புனித தோமையார் கோவில், புனித செபஸ்தியார் கோவில், சகாயபுரம் சகாயமாதா சிற்றாலயம், புனித சவேரியார் சிற்றாலயம் போன்றவற்றை சிறப்பாக புதுப்பித்தார். புனித சவேரியார் மருத்துவமனையையும், பிஷப் ரோச் வாசகசாலைக் கட்டிடத்தையும் பழுதுபார்த்து திருத்தியமைத்தார். 

திவ்ய சந்த மரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் திரு சொரூபம் திருமந்திர நகரில் எழுந்தருளியதன் நான்காம் நூற்றாண்டினை கொண்டாடும் வகையில் 5.8.1955 ஆம் அன்று நடைபெற்ற 9 ஆவது இரதோற்சவம் மிக கெம்பீரமாக நடைபெற சுவாமிகள் ஆற்றிய பணியை விவரிக்க இயலாது. இவ்விழாவில் ஆயர் மேதகு தாமஸ் பர்னாந்து, மதுரை ஆயர் மேதகு லெயோனார்டு அவர்களும், கோட்டாறு ஆயர் மேதகு ஆஞ்சிசாமி அவர்களும் வருகை தந்து இரதோற்சவப் பெருவிழாவை அலங்கரித்தார்கள். 

அவ்வாறே 1964 ஆம் ஆண்டில் திருமந்திர நகரின் ஆசனக் கோவிலான சேசுமரியாயின் திருஇருதய கோவில் நிர்மாணிக்கப்பட்ட நூற்றாண்டின் நினைவாகவும், ஆயர் தாமஸ் பர்னாந்து ஆண்டகையின் குருத்துவ வெள்ளிவிழா நினைவாகவும் 5.8.1964 அன்று 10 வது முறையாக நடைபெற்ற ரதோற்சவம் மிக விமரிசையாகவும், பக்தி சிறப்புடனும், கெம்பீரமாகவும் கொண்டாடப்பெற அரும்பெரும் பணிகளை ஆற்றினார்.

தம் பணிகாலத்தில் பனிமய நாயகியின் பொன் இரதோற்சவத்தை இருமுறை நடத்தி மிகுந்த பக்தி சிறப்புடன் நகர்வலம் வரசெய்து, நாயகியின் அற்புத தரிசனத்தை மக்களுக்கு அளித்து அருள்பாலிக்க செய்த பெருமை சுவாமிகளையே சேரும். 

தாம் பங்கு பொறுப்பேற்ற காலம் (1954 ஆண்டு) தொடங்கி பணி மாறுதல் பெரும் காலம் வரை (1970 ஆண்டு) 1875 ல் தொடங்கப்பட்டு இன்று St. Lasalle Hr.Sec.School என அழைக்கப்படும் P.M. ஒர்னலாஸ் பள்ளியின் (Portuguese Mission Ornellas School) தாளாளராக சிறப்பாக பணியாற்றினார். இந்நிலையில் 1964 ஆம் ஆண்டு இப்பள்ளியை புனித தெலசால் சபையினரிடம் ஒப்படைத்து ஏழை மாணவர்கள் கல்வி பெற வகை செய்யும் உன்னத நோக்கில், தமது இல்லத்தின் கீழ் பகுதியில் பள்ளி நடைபெற வழிவகை செய்து, பின்னாளில் உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தினார். 

திரு இருதய மேற்றிராசன ஆலயத்தில் 21 ஆண்டுகளும் (1935-1954), தூய பனிமய நாயகியின் ஆலயத்தில் 16 ஆண்டுகளும் என தொடர்ந்து 37ஆண்டுகள் தம் பணியை திருமந்திர நகரில் நிறைவேற்றிய பெருமை சுவாமிகளையே சேரும். மாற்றம் பெறாமல் நீண்ட காலம் ஒரே நகரில் சுவாமிகளை பணி புரிய வைத்த இரகசியம் என்னவென்று மக்கள் இன்றும் வியப்படைவது இயல்பே.

முத்துக்குளித்துறையின் முதல் ஆயர் வந். திபூர்சியஸ் ரோச் ஆண்டகை அவர்கள், “எனக்கு உதவ இரு கரங்கள் இருக்கின்றன. வலக்கரம் சங். S. M. தல்மெய்தா சுவாமி, இடக்கரம் சங். T.P. அலங்காரம் சுவாமி” எனப் பெருமைபடக் கூறுவார்.

தம் தாய்பதியாம் வேம்பாற்றின் மீதும் வேம்பாற்றுவாசிகள் மீதும் அளவு கடந்த பற்றுதல் கொண்ட சுவாமிகள் வறுமையில் வாழும் வேம்பாற்றுவாசிகளுக்காக பெரும் தொகை ஒன்றினை வங்கியில் சேமித்து அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு மாதம் பத்து பேருக்கு வழங்கினார். சங். பவுல் அலங்காரம் அடிகளார் அந்நிதியை மறைமாவட்ட அளவிலான நிதியுடன் இணைக்க  வேண்டுகோள் விடுக்க, ஏழ்மையுற்ற வேம்பாற்றுவாசிகள் பத்து நபர்களுக்கு பிரதி மாதமும் தொடர்ந்து உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சம்மதித்தார். ஆரம்ப காலத்தில் பத்து நபர்களுக்கு வழங்கப்பட்ட அந்நிதி பின்னாளில் என்ன காரணத்தினாலோ  நிறுத்தப்பட்டு விட்டது.

வேம்பாறு பரிசுத்த ஆவி ஆலயத்தின் வருவாயை மனதில் கொண்டு 1948 ஆம் ஆண்டு தமது சொந்த செலவில் ஆலய வளாகத்தில் டிமெல் பஜாரில் ஆறு கடைகளைக் கட்டிக் கொடுத்தார். அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஆலய அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்த காரணமாக அமைந்தார். வேம்பாற்றில் புனித அந்தோனியார் சிற்றாலயம் அமைக்க தமது சொந்த வீடு இருந்த இடத்தை வழங்கினார். இச்சிற்றாலயத்தில் வணங்கப்படும் புதுமை சொருபம் சுவாமிகளின் முன்னோர் வழிபட்டு வந்த சொருபம் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட சுவாமிகள் 04.08.1980 ஆம் நாளில் திரு இருதய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு இறுதி தேவ திரவிய அனுமானங்களைப் பெற்று இரவு 9.00 மணியளவில், தூய பனிமய நாயகியின் மாலை ஆராதனை நடைபெறும் வேளையில் இறைபதம் அடைந்தார். தான் பனிமய நாயகியின் பக்தன் என்பதை வலியுறுத்தவே, அற்புதத் தாயின் திருவிழாவிற்கு முந்தைய இரவு பாக்கியமான மரணமடைந்தார். 

சுவாமிகளின் மரணத்தை அறிந்த மக்கள் அன்னையின் திருவிழா அன்று உயர் ரக பட்டடைகளைத் தவிர்த்து சாதாரண ஆடைகளையே அணிந்து எளிமையாகத் திருவிழாவைக் கொண்டாடினர். 05.08.1980 காலை வேம்பாற்றுக்கு கொண்டுவரப்பட்ட அவரது உடல் மக்களின் வணக்கத்திற்காக அவரது சொந்த வீடு இருந்த இடமான புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டது. அன்று மாலை வேம்பாறு பரிசுத்த ஆவியானவர் ஆலயத்தில் திருமந்திர நகர் மக்கள் புடைசூழ நல்லடக்கம் செய்யப்பட்டார்.

இறுதிவரை கடவுளுக்கும் மனிதருக்கும் பிரியமானவராகவே நடந்து கொண்டு பரந்த மனதுடன் பணி செய்த சுவாமிகளின் கல்லறையில் கடவுளுக்கும் மனிதருக்கும் பிரியமானவர் என்ற குறிப்பும் காணப்படுகிறது. இறுதி வரை முத்துக்குளித்துறை  மறைமாவட்டத்திற்கு சங். சிலுவைமுத்து தல்மெய்தா சுவாமிகள் மிளிரும் நித்திலமாகவே  திகழ்ந்தார்.

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.