Our Blog

வேம்பாற்றில் தமிழ் பயின்ற அன்றிக் பாதிரியார்

தமிழ் மொழியின் அச்சுத் தந்தை என தமிழ் கூறும் நல்லுலகினால் அழைக்கப்படும் அன்றிக் பாதிரியார் 1520 ஆம் ஆண்டு போர்த்துகல் நாட்டின் “வில்லா விசியோ” என்ற ஊரில் பிறந்தார். 1546 ஆம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதே ஆண்டு முத்துக்குளித்துறையில் புதிதாக கத்தோலிக்கம் தழுவிய பரதவர்களுக்கு தேவையான ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுமாறு புனித சவேரியார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் முத்துக்குளித்துறை வந்து சேர்ந்தார். 

1548 ஆம் ஆண்டில் வணக்கத்திற்குரிய அந்தோணி கிருமினாலி அடிகள் முத்துக்குளித்துறையின் சேசுசபை தலைமைக் குருவாய் பணியாற்றி வந்தார். புன்னைகாயல் வந்திறங்கிய ஹென்றிக் ஹென்றிக்ஸ் அடிகளாரை புன்னைக்காயல், தூத்துக்குடி, வைப்பாறு, வேம்பாறு ஆகிய ஊர்களில் மறைபரப்புப் பணிகளை பார்த்துக் கொள்ளுமாறு கிருமினாலி கேட்டுக் கொண்டார். இதனிடையில் 1549 ஆம் ஆண்டு வேதாளையில் நடைபெற்ற போரில் வடுகப் படையினரால் அந்தோணி கிருமினாலி அடிகள் கொல்லப்பட்டார். இதனையடுத்து ஹென்றிக்ஸ் அடிகளார் முத்துகுளித்துறையின் தலைமைக் குருவாய் தேர்வு செய்யப்பட்டார். 

முத்துக்குளித்துறை பரதவர்களுக்கு மத போதகம் செய்யவும், அவர்களுடன் கலந்து பழகவும் வேண்டுமெனில் அவர்கள் தாய் மொழியாகிய தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தார். அதன்படி தமிழ் மொழியை பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் முறையாகப் பயின்றார். முதன்முதலாகத் தமிழ் மொழியை முறையாகவும், இலக்கண வரம்போடும் கற்ற ஐரோப்பியர் இவர் ஒருவரே. 

ஹென்றிக்ஸ் அடிகளார் தாம் தமிழ் மொழியை பயின்ற விதத்தை வேம்பாற்றிலிருந்து 1548 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி, உரோமையில் இருந்த சேசு சபையின் அதிபரான அர்ச். லொயலா இஞ்ஞாசியாருக்கு எழுதிய மடலில் பின்வருமாறு கூறுகிறார்....

“........ முத்துக்குளித்துறைக்கு வந்தவுடன் இந்த மொழியை பேசவும், படிக்கவும், பழகவும் முயன்றேன். ஆனால் அது எவ்வளவு கடினமாக இருந்ததென்றால், அதை நான் ஒருக்காலும் படிக்கப்போவதில்லை என்று தளர்ச்சியுற்று கைவிட்டுவிட்டேன். எனவே எப்போதும் ஒரு தொப்பாசியை (மொழிபெயர்ப்பவன்) பயன்படுத்தி வந்தேன். சவேரியார் மொலுக்கஸ் நாட்டிலிருந்து 1548 ஆம் ஆண்டு பிப்ருவரி மாதம் திரும்பி வந்த போது, எனக்கு இரண்டு தமிழ் சொற்களுக்கு மேல் தெரியாது. அப்போது எனது தொப்பாசி வேறொரு வேலை காரணமாக சென்றுவிட்ட படியால், தமிழ்மொழியை கற்கத் தீர்மானித்து, இராப்பகலாக இவ்வேலையில் ஈடுபட்டேன். முதலில் தமிழ் இலக்கணத்தைப் புரிந்து கொள்ள தீர்மானித்தேன். அதன்படி இறந்தகாலம், எதிர்காலம், வினையெச்சம் போன்ற இலக்கணக்குறிப்புகளை முதலில் கற்றேன். மிகக் குறுகிய காலத்தில் பேசவும், எழுதவும், படிக்கவும், கற்றிருக்கிறேன். நான் இந்த மக்களோடு, தமிழ் மொழியில் பேசும் போது அவர்கள் மிகவும் வியப்படைகிறார்கள். 

மொலுக்கசிலிருந்து சவேரியார் திரும்பி வந்த போது எல்லோரிலும் மூத்த இந்தியக் குருவானவர் ஒருவரை எனக்குக் கொடுத்து, தாம் போர்த்துக்கல் மொழியில் எழுதியிருந்த விசுவாசக் கோட்பாடுகளை, தமிழில் மொழி பெயர்க்கும்படி சொன்னார். சிலநாட்களுக்கு முன்னால் அவ்வேலை முடிந்துவிட்டது. தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட விசுவாசக் கோட்பாடுகள் எல்லாக் கோவில்களிலும் வாசிக்கப்பட வேண்டுமென்று சவேரியார் கட்டளையிட்டிருந்தார். தற்போது நான் தங்கி இருக்கும் இடத்தில் அந்தக் கோட்பாடுகளை ஆறு, ஏழு ஞாயிற்றுக்கிழமைகளில் விளக்கி வந்திருக்கிறேன். இது எனக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கிறது. ஏனெனில் நான் சொல்வது அவர்களுக்கு விளங்குகிறது. தமிழில் உள்ள அந்த ஓலையை நமது எழுத்துகளில் எழுதி இதை ஒவ்வொரு தமிழ்ச் சொல்லுக்கும் மேல் அமைக்க கடவுள் அருளால் எண்ணியிருக்கிறேன். கோவிலில் அது வாசிக்கப்படும் போது அங்கிருக்கும் குருவானவர், என்ன வாசிக்கப்படுகிறது என்று இந்த எழுத்து முறையால் கண்டுபிடிக்க முடியும். 

குருக்கள் அனைவரும் தமிழ்மொழியை எளிதில் கற்றுக்கொள்ளும் வண்ணம், சவேரியாரின் வேண்டுகோளுக்கிணங்க, ஓர் இலக்கணம் கடவுளின் அருளால் செய்யப்போகிறேன். சென்ற இரண்டு, மூன்று மாதங்களாக நான் தங்கியிருக்கும் இந்த ஊரும், பக்கத்தில் உள்ள வேறொரு சிற்றூரும் என் பார்வையில் இருக்கின்றன. இம்மொழியைப் பயில்வதற்கு இங்கு மிகுந்த நேரம் கிடைக்கிறது........” 

இவ்வாறு ஹென்றிக்ஸ் அடிகளார் தமது கடிதத்தில் இந்த ஊர் என நமது தாய்பதியாம் வேம்பாற்றையும், வேறொரு சிற்றூர் என வைப்பாற்றையும் குறிப்பிடுகிறார். ஹென்றிக்ஸ் அடிகளாரின் கடிதத்தின் அடிப்படையில் அவர் தமிழ் பயின்றது வேம்பாற்றிலே என்பதை  மட்டுமல்லாது அவர் தமிழ்படுத்திய விசுவாசக் கோட்பாடுகளை முதன் முதலாக வாசித்தது நமது திவ்ய இஸ்பிரித்து சாந்து சர்வேஸ்வரன் ஆலயத்திலே என்பது மிகவும் நமக்கு மிகவும் ஆனந்தமான செய்தியே ....

- நி. தேவ் ஆனந்த் பர்னாந்து 

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.