Our Blog

கடல் சார் தொழில் முனைவோர்


கடலும் கடல்சார்ந்த நிலப்பகுதியும் நெய்தல் நிலம் எனப்பட்டது. இப்பகுதியில் வாழ்ந்த பரதவ மக்கள் கடலில் கலம் செலுத்தி மீன் பிடித்தலைத் தம் தொழிலாகக் கொண்டவர். கடல்படு பொருட்களுள் மீனும், உப்பும் பரதவ மகளிர் தொழில்முனைவோருக்கு முக்கிய வணிகப் பொருட்களாயின.

மீன் பிடித்தலும் விற்றலும் 

பரதவர் பிடித்து வரும் மீன்களைப் பரதவகுலப் பெண்டிர் ஊருக்குள் எடுத்துச் சென்று விற்றுவிட்டு அதற்கு ஈடாகத் தமக்குத் தேவையான பிற பொருட்களைப் பெற்று வந்தனர். இதனை, 


ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇ

விழவு அயர் மறுகின் விலையெனப் பருகும் (அகம்.320:1-4)

என்பதில் அறியலாம். பாண்மகள், நள்ளிரவில் சென்று பிடித்துத் தன் தமையன்மார் விடியலில் கொணர்ந்த திரண்ட கோடுகளை உடைய வாளை மீன்களுக்கு ஈடாக, நெடிய கொடிகள் பறக்கும் கள் மிக்க தெருவில் பழைய செந்நெல்லை வாங்க மறுத்துக் கழங்கு போன்ற பெரிய முத்துகளையும் அணிகலன்களையும் பெற்று வந்ததையும்(அகம்.126:7-12), வரால் மீன் கொண்டு வந்த வட்டி நிறைய இல்லக்கிழந்திகளிடம் பழைய நெல்லையும் (ஐங்.48:11-3), அரிகாலில் விதைத்துப் பெறும் பயறினையும் (ஐங்.47:1-3) பெற்று வந்ததையும் அறியமுடிகிறது.


இவற்றோடு, பரத ஆண்கள் பிடித்து வரும் மீன்களை வணிகப்படுத்தியதோடு, பெண்களே மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதும் தெரியவருகிறது. கயிற்றையுடைய தூண்டிற்கோலால் மீன்களைப் பிடித்த பாணர் மகளை, 

நாண்கொள்நுண் கோலின் மீன்கொள் பாண்மகள்

தான்புனல் அடைகரைப் படுத்த வராஅல் (216:1,2)

என்று காட்டுகிறது அகநானூறு.

உணங்கல் மீன் உற்பத்தி

பரதவ ஆண்கள் பிடித்து வந்த மீன்களுள் விற்றது போக எஞ்சியவற்றையும், விற்பனைக்குரிய காலங்கடந்து பிடித்தவற்றையும் பரதவ மகளிர் உப்பிட்டு உலர வைத்து உணங்கல் மீன் தயாரிப்பர். வருவாயைப் பெருக்கிய தொழிலுள் இதுவும் குறிப்பிடத்தக்கது. இத்தொழிலையும், தொழில்நுட்பத்தையும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. கடற்கரை மணலில் மீன்கள் உலர்த்தப்பட்டிருந்தன(அகம்.300:1-2). பரதவர் பிடித்து வந்த மீன்களும் இருங்கழியில் முகந்து வந்த இறால்களும் நிலவொளி போலும் எக்கர் மணலில் நன்றாக உலர்ந்து, பாக்கம் எங்கிலும் புலால் நாற்றம் பரவி வீசியது(குறு.320:1-4). பரதவ மகளிர் நிணம் மிகுந்த பெரிய மீன்களைத் துண்டங்களாகத் துணித்து உப்பிட்டு, வெண்மணல் பரப்பில் அவற்றைப் பரப்பி வெயிலில் உலர்த்தி, பறவைகள் அவற்றைக் கவராமல் காவல் காத்தனர். இதனை,

உரவுக்கடல் உழந்த பெருவலைப் பரதவர்
மிகுமீன் உணக்கிய புதுமணல் ஆங்கண் (நற்.63:1-2)
என்பதிலும்,

நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஒப்பும் (நற்.45:6-7)


என்பதிலும் அறியலாம்.

உப்பு வணிகம்

எந்தத் திணையைச் சார்ந்த மக்களாயினும் அவர்களின் அன்றாடத் தேவைகளுள் முதன்மையானது உப்பு. அதனால், நெய்தல் நில மகளிர் உப்பு வணிகத்தில் சிறப்புடன் ஈடுபட்டனர். உப்பு வணிகர் உமணர் எனப்பட்டனர். உவர் நிலத்தில் விளைவித்த உப்பினை வண்டிகளில் ஏற்றிச் சென்று மற்ற இடங்களில் வாழும் மக்களிடத்தே விற்பர். உமணர்கள் தங்கள் குடும்பத்தோடு கூட்டங்கூட்டமாக உப்பு விற்கச் சென்றனர். உப்பு வண்டிகளை உமணப் பெண்களே ஓட்டிச் சென்றனர். ஊருக்குள் சென்றதும் உப்பு விலை கூறி விற்பர். உப்பிற்கு ஈடாக பிற பொருட்கள் மாறு கொள்ளப்பட்டன (பெரும்பாண்.56-65; நற்.183; அகம்.60:4; 140:7-8; 390:8-9; குறு.269:5-6; பெரும்பாண்.164-165; மலைபடு.413; பட்டினப்.28-30). உப்பிற்கு ஈடாக நெல்லைக் கோரும் உமணப் பெண்களை,

உமணர் காதல் மடமகள்
சேரி விலைமாறு கூறலின் (அக.140:5-8)
என்பதிலும், 


நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோவெனச் சேரிதொறும் நுவலும் (அக.390:8-9)

என்பதிலும் காணலாம்.

நன்றி: anichchem.blogspot.in

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.