Our Blog

பரதவர் வாழ்வில் திருஞான சம்பந்தர்


திருஞான சம்பந்தரின் அன்னையார் பெயர் பகவதி. மேற்கு கடற்கரை பெண் தாய் தெய்வங்களின் பெயர். கத்தோலிக்கம் கவிந்த பிறகும் கொற்கை-குமரி மீனவர்களால் ’ஆத்தா’ என உள்ளன்புடன் அழைக்கப்படும் குமரி அம்மனின் பெயர் பகவதிதான். மண்டைக்காட்டிலும் அதுவே. ஆனால் பகவதி அம்மையாரின் ஊர் சேரநாடு அல்ல. சோழ மண்டலம். பகவதி அம்மையாரின் ஊர் திருநனிபள்ளி. பெயரே காட்டுகிறது. சமண ஆதிக்கம் உள்ள ஊராக இருந்திருக்க வேண்டும்.

சமண ஆதிக்கம் பல தொழில் - சமுதாய குழுக்களை பாதித்திருந்தது. அவர்கள் இழிசினராகக் கருதப்பட்டனர்.

இதனை நாம் கீழ்வரும் சீவகசிந்தாமணி பாடலில் காண்கிறோம்:


வில்லின் மா கொன்று வெண்ணிணத் தடிவிளம்படுத்த
பல்லினார்களும் படுகடற் பரதவர் முதலா
எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி
நல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே.

வைதீகம் செழித்த பழந்தமிழர் பண்பாட்டில் அரச குலத்தாருடன் சரி சம அந்தஸ்து கொண்டிருந்தனர். பாண்டியருடன் பொருதும் பொருந்தியும் செல்லும் மக்கள் சமுதாயத்தவராக இருந்தவர்கள் பாண்டிய பதிகள் என வாழும் பரதவ சமுதாயத்தினர். அக்காலகட்டத்தில் அதீத உயிர்கொல்லாமை எனும் சமண கருத்தாக்கத்தால் பரதவ சமுதாய மக்களின் தொழில் உரிமை மறுக்கப் பட்டிருக்கலாம். அத்துடன் தொழில் பெருமையும் இழந்திருக்கலாம். 

பகவதியே கூட பரதவ சமுதாயத்துடன் இணைந்த புரோகிதர் குடும்பத்து பெண்ணாக இருந்திருக்கலாம். அவரை பெண்ணெடுத்த ஊரில் (சீர்காழி) உள்ள சுவாமியின் பெயர் தோணியப்பர். இதுவும் பரதவ சமுதாயத்துடன் இணைந்த பெயரே. (இன்று நிலம் சார்ந்த சமுதாயங்கள் தமதாக சுவீகரித்து கொண்ட ஆன்மிக மரபுகளில் கடற்கரையிலிருந்து வந்து சேர்ந்தவற்றின் பங்கு இன்னும் சரியாகக் கணிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் அந்தண சமுதாயங்களின் குடும்ப வழக்காடு சொல்லான ‘அம்பி’ என்பதற்கு தோணி என்றும் பொருள் உண்டு.)

சோழ மண்டல கடற்கரை பரதவ சமுதாய குழுக்கள் தம் தொழில்களை துறந்தது ஒட்டு மொத்த பொருளாதாரத்துக்கும் வாழ்க்கை நிலைக்கும் பெரும் நிலைகுலைவை ஏற்படுத்தியிருக்கும். இவ்வாறு பாலையாகி விட்ட ஊருக்குத்தான் திருஞான சம்பந்தர் வருகிறார். திருஞான சம்பந்தர் இந்த ஊரில் வந்து பதிகம் பாடி பாலையாக இருந்த ஊரில் நெய்தலை உருவாக்கினார் என்பது – தொழில் உரிமையும் குடி உரிமையும் மறுக்கப்பட்டு ஊருக்கு வெளியில் வாழவைக்கப்பட்ட பரதவர்களுக்கு மீண்டும் தொழில் உரிமையை மீட்டெடுத்து மீண்டும் சுயமரியாதையுடன் குடியமர்த்திய சமுதாய மறுமலர்ச்சி செயலை ஞான சம்பந்தர் செய்திருக்க வேண்டும். 

திருநனிபள்ளியில் உள்ள சிவன் கோவிலின் அம்பாள் பெயர் – பர்வத ராஜகுமாரி. சோழ மண்டலத்தின் முக்கிய மீனவர் சமுதாய குழுப் பெயர்களில் ஒன்றாக பர்வத ராஜ குலம் இன்றும் திகழ்கிறது. சமணத்தின் அதீத கொள்கை பிடிப்பினால் ’எல்லை நீங்கிய இழிதொழில் இழிகுலம்’ என களங்கப்பட்டு நின்றவர்களை நாம் பர்வத ராஜகுலம் என கௌரவம் அளித்த மானுட நேயம் பக்தி இயக்கத்தின் முக்கிய பங்களிப்பு.

அம்பா பாடல்கள் பரதவர் கடலில் மீன்பிடிக்கும் போதும் பாடும் பாடல்கள். (அம்=) நீர் மீது பாடும் பாடல்கள் என்கிறார் முனைவர் மோகனராசு. அம்பியில்-தோணியில் செல்லும் போது பாடும் பாடல்கள் என்கிறார் புட்பராசன். அம்பாளை பாடும் பாடல்களே அம்பா பாட்டு என ஆகியிருக்க வேண்டும் என்கிறார் நா.வானமாமலை. முனைவர் மோகனராசு தொகுத்து வெளியிட்ட நாட்டுப்புற பாடல்களின் முதல் தொகுதி அம்பாப் பாட்டுகளைக் கொண்டது. அதில் திருஞான சம்பந்தர் சமணர்களை வென்றது சிலாகிக்கப்படுகிறது:

தேசங்களைக் கண்ட பிள்ளை! – ஏலேலோ ஏலே
தெளிவடைந்த ஞானப் பிள்ளை – ஏலேலோ ஏலே
தெளிவடைந்த ஞானப் பிள்ளை – ஏலேலோ ஏலே
தேவாரம் பாடுரானே – ஏலேலோ ஏலே
தேவாரம் பாடும்போது – ஏலேலோ ஏலே
ஓடுரானே சமணப்பையன் – ஏலேலோ ஏலே
மங்கையரே மாதாவே – ஏலேலோ ஏலே
மங்கையர்க்கரசியாரே – ஏலேலோ ஏலே

(பாட்டு-15: பாடியவர்:சி.ராஜமாணிக்கம் தாத்தா, நாட்டுப்புற பாடல்கள் தொகுதி-1, டாக்டர்.கு.மோகனராசு, ஸ்டார் பிரசுரம்,1988, பக்.136-7)

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். திருநனிபள்ளியில் நெய்தலை மட்டுமல்ல, மருதத்தையும் ஏற்படுத்தினார் திருஞானசம்பந்தர் என்பது வரலாறு. போர்த்துகீசிய கட்டாயத்தால் இஸ்லாமிய தாக்குல்களிலிருந்து தப்ப கத்தோலிக்கத்தை தழுவிய மீனவ சகோதரர்கள் இன்று சொந்த பண்பாட்டிலும் வரலாற்றிலும் சமவெளி சமுதாயங்களிலிருந்தும் அந்நியப்பட்டு நிற்பதை நாம் காண்கிறோம். 

ஆனால் திருஞான சம்பந்தர் மீனவர் வாழ்வுரிமையையும் தொழில் உரிமையையும் மீட்டெடுத்த போது சமவெளி சமுதாயக் குழுக்களுக்கும் நெய்தலுக்கும் எவ்வித தனிமைப் படுத்தலும் ஏற்படாமலிருக்க கவனம் கொண்டிருந்ததையும் இதில் காணமுடிகிறது. கண்மூடித்தனமான அதீத அகிம்சையால் பாழ்பட்டு கிடந்த பொருளாதாரமும் அங்கு சம்பந்த பெருமானால் சீர் பட்டிருக்கிறது. பக்தி இயக்கம் பக்தியின் அடிப்படையில் சமுதாய சமத்துவத்தை மட்டும் வலியுறுத்தவில்லை. 

அதனுடன் அன்று மறுக்கப்பட்ட தொழில் உரிமைகளையும் தொழில் சார்ந்த பெருமிதத்தையும் ஆன்மிகம் மூலமாக மீட்டெடுத்தது. பின்னர் உருவான சோழ பேரரசின் கடற்படையின் முக்கிய தளபதிகளாக செயல்பட்டவர்கள் நெய்தல் சமுதாயங்களே. இன்று நம் பண்பாடு தென் கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதிகளில் அழியாத சின்னங்களாக நிற்க இவர்களே முக்கிய காரணம்.

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.