Our Blog

பரத குல வரலாறு*மனிதனாகப் பிறந்ததை எண்ணி மகிழ்வுறு!*
*இந்தியனாகப் பிறந்ததை எண்ணி இன்புறு!*
*தமிழனாகப் பிறந்ததை எண்ணி தற்கேற்று*
*பரவனாகப் பிறந்ததை எண்ணி பரவசபடு!*


நாம் ஒவ்வொருவரும் மனிதனாக, இந்தியனாக, தமிழனாக, பரவனாகப் பிறந்ததை எண்ணி பெருமைப்பட வேண்டும். காரணம், மானிடவியலில் “பரவர் குலம்” ஒரு தலைசிறந்த குலம் என்று வரலாறு உரைக்கின்றது.

உலக வரலாறை விரும்பிப் படித்தால்தான், தாய்த் திருநாட்டுப் பற்று மலரும்!
இந்திய நாட்டின் வரலாறை விரும்பிப் படித்தால்தான், தாய்மொழிப் பற்று பெருகும்!
தமிழ்நாட்டின் வரலாறை விரும்பிப் படித்தால்தான், பிறந்த மண், பிறந்த ஊர் மீது பாசம் பொங்கும்!
பிறந்த குலத்தின் வரலாறை மதித்தால்தான், நம்மை நாமே நன்கு உணரமுடியும்!
நம் குலத்தை மதிப்போம் நம் வரலாற்றைத் தெரிந்துகொள்வோம்!.

மானிடவியல் அறிஞர் *எட்கர் தர்ஸ்டன்* அவர்கள் தான் எழுதிய *“தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்”* (”Castes and Tribes of South India”-(Edgar Thurston – 1909))என்ற ஆய்வு நூலில், *“பரவன்”* (Paravan) என்ற குலத்திற்குரிய மானுட வாழ்வின் பிறப்பு, இறப்பு, கல்வி, வழிபாட்டுச் சடங்குகள், திருமணம், ஆட்சியியல் நிலை ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து விளக்கியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக நூலகக் குழுவின் தலைவரான எட்கர் தர்ஸ்டன், 1885-ல் சென்னை அருங்காட்சியகப் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். மேற்கூறிய நூலின் தமிழாக்கம் , இதோ:

தென் கிழக்குக் கடற்கரையைச் சார்ந்த “பரவர்”, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கடற்கரையில் உள்ள துறைமுகப் பட்டணங்களிலும் இலங்கையின் வடமேற்குக் கடற்கரை மாநிலங்களிலும் காணப்படுகின்றனர்.

பரவரின் தோற்றம் பற்றி வழங்கிவரும் வரலாறுகள், *சைமன் காசி செட்டி* எழுதிய *“பரவர்களின் தோற்றமும் வரலாறும்”* என்ற கட்டுரையில் (Origin and History of the Paravars by Simon Casie Chitty – 1873 Journal Roy.As.Soc.IV) கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

1) 1735-ல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட *“கிறிஸ்தவ திருச்சபையின் வரலாற்றின்“* ( The Historia Ecclesiastica) ஆசிரியர், பரவர்களை மறைநூல்களில் கூறப்பட்டுள்ள பர்வையம்கள் (Parvaim of the Scriptures) என்று வகைப்படுத்துகிறார். மேலும் பரவர்கள் , சாலமன் அரசர்(King Solomon) காலத்தில் கடற்பயணங்கள் மேற்கொள்வதில் புகழ் பெற்றவர்கள் என்றும் கூறுகிறார்.

2) பரவர்கள் தங்களை *அயோத்தி*யினைச் (Ayodhya) சேர்ந்தவர்கள் எனவும் , மகாபாரதப் போர் நிகழ்வதற்கு முன்னர் யமுனைக் கரையில் வாழ்ந்து வந்ததாகவும் கூறிக்கொள்வார்கள்.
3) பரவர்களிடையே அவர்களது தோற்றம் பற்றிய பல வரலாறுகள் புராணக் கதைகளோடு தொடர்புடையனவாக காணப்படுகிறது.

பரவர்கள் தங்களைக் கடல் தெய்வமான *வருணனின்* வழிவந்தவர்கள் எனக் கூறிக்கொள்வதோடு, சிவன் அசுரர்களை வெல்லப் போர்க்கடவுளான கார்த்திகேயனைப் படைத்தபொழுது சரவணப்பொய்கையிலிருந்து அவனுடன் கூடத் தோன்றிய கார்த்திகைப் பெண்களால் அவனைப் போலவே வளர்க்கப்பட்டவர்கள் என்றும் கூறிக்கொள்கிறார்கள். கடந்த யுகத்தின் முடிவில் உலகம் முழுவதும் நீரால் மூடப்பட்டு மூழ்கிய போது பரவர்கள் ஒரு தோணியினைக் கட்டியதாகவும், அதில் ஏறிக்கொண்டு பேரழிவிலிருந்து தப்பியதாகவும், பின்னர் நீர்வற்றி மீண்டும் நிலம் புலப்பட்டு தங்களது தோணி தரைதட்டியபோது, அந்த இடத்தில் குடியமர்ந்து அதற்கு *தோணிபுரம்* எனப் பெயரிட்டதாகவும் கூறப்படுகின்றன.

4) பரவர்கள் ஒரு காலத்தில் செல்வாக்கு உடையவர்களாகவும், கடற்பயணம் பற்றிய தங்களது அறிவின்காரணமாக மற்றச் சாதியர் மீது அதிகாரம் செலுத்துபவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்களுள் *“ஆதியரசன்”* என்ற பட்டப்பெயர் கொண்ட அரச வம்சம் இருந்துள்ளதாகவும், அதில் சிலர் *“மங்கை”* என்ற பெயருள்ள நகரிலிருந்து ஆண்டதாகவும், இந்நாளில் அது *“உத்தரகோசமங்கை”* என்ற பெயருடன் இராமநாதபுரம் அருகே விளங்குவதாகவும் கூறப்படுகின்றது.

5) *“வலைவீசு புராணம்”* என்ற புராணத்தில் பின்வரும் கதை கூறப்பட்டுள்ளது. சிவனின் மனைவி பார்வதியும் மகன் கார்த்திகேயனும் சொல்லக்கூடாத சில இரகசியங்களை வெளியிட்டதால் தேவலோகத்திலிருந்து வெளியேறும்படி பணிக்கப்பட்டனர். அவர்கள் பல மானிட பிறவிகள் எடுத்த பிறகே மீண்டும் தேவலோகத்தில் அனுமதிக்கப்படலாம் எனச் சாபம் பெற்றனர். பார்வதியின் வேண்டுகோளுக்கு இணங்கிய சிவன், அவர்கள் குற்றத்திற்கு தண்டனையாக ஒரு மானிட பிறவி மட்டும் எடுத்தால் போதுமானது என்று அவர்களுக்கான தண்டனையைக் குறைத்தார்.

இந்த வேளையில் பரவனின் அரசன் *திரியம்பகனும்* (Triambaka) அவனது மனைவி *வருணவள்ளியும்* (Varuna Valli) புத்திரப்பாக்கியத்திற்காக தவம் புரிந்து கொண்டிருந்த படியால், பார்வதி அவர்களுடைய மகளாகப் பிறந்து திரைசேர்மடந்தை (Tiryser Madente) என்று பெயரிடப்பட்டாள். கார்த்திகேயன் ஒரு மீனாக உருவெடுத்தான்.

வடகடலில் மீனாகத் திரிந்துகொண்டிருந்த கார்த்திகேயன், மிகப்பெரிய மீனாக வளர்ந்து தென் கடலுக்கு வந்து, பரவர்களின் மீன்பிடிக் கலங்களையெல்லாம் தாக்கி வந்தான். பரவர்களின் தொழில் சீரழிந்து வருவதை பரவர்களின் அரசன் *“திரியம்பகனன்”* , அந்த மீனைப் பிடிப்பவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்குத் தனது மகளை மணம்முடித்துத் தருவதாக அறிக்கையிட்டார்.

அப்போது சிவன், ஒரு பரவனாக உருவெடுத்து அந்த மீனைப் பிடித்து, அரசனின் மகள் *“திரைசேர்மடந்தை”* என்ற பெயரில் உள்ள தனது மனைவியான பார்வதியை மணந்துகொண்டான்.

6) மகாபாரதத்தின் *“ஆதிபருவம்”* (Adiparva) என்ற பகுதியில் , பரவனின் அரசன் யமுனைக் கரையில் அரசாண்டதாகவும் ஒரு மீனின் வயிற்றிலிருந்து ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்ததாகவும் , அவளுக்கு “மச்சகந்தி” (Machchakindi) எனப் பெயரிட்டு தனது மகளாக வளர்த்ததாகவும், அவள் பருவம் அடைந்தபின் குலவழக்கப்படி பரவப் பெண்களோடு சேர்ந்து ஆற்றின் குறுக்கே பரிசலோட்டிப் பயணிகளை மறுகரை சேர்க்கும் பணியினை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒருநாள் *“பராசர முனிவர்”* (Parasara Sage) பரிசல் துறையில் மச்சகந்தியை கண்டு காதல் கொள்ள, அவள் கறுவுற்று ஈன்ற குழந்தைதான் புராணங்கள் பலவற்றை இயற்றிய புகழ்பெற்ற *“வியாசர்”* (Viyasar)ஆவார். பின்னர் மச்சகந்தியின் அழகில் மோகங்கொண்ட சந்திர குல மன்னனான *“சந்தனு”* (King Santanu of Lunar Race) அவளை தன் மனைவியாக ஏற்று, பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் மூதாதையான *“விசித்திரவீரியனை”* (Vichitravirya) பெற்றெடுத்தாள். அஸ்தினாபுர அரசுக்கு உரிமை கொண்டாட நடத்தப்பட்ட பெரும் போரே மகாபாரத இதிகாசத்தின் மூலக் கருவாகும். இதனால்தான் பரவர்கள் தங்களைச் *“சந்திர குலத்தவர்”* என்று கூறிக்கொள்வார்கள். மேலும் தங்களது திருமண விருந்தினில் சந்திர குலச் சின்னங்களையும் கொடிகளையும் காட்சிப்பொருளாக ஏற்றி வைக்கின்றனர்.

7) இலங்கையின் வடமேற்குக் கரையில் உள்ள *“குதிரைமலை”* (Kudremalle)யில் அரசாண்ட *“அல்லியரசாணி”* (Alliarasany) பற்றி நடத்தப்படும் நாடகத்தில் , பரவர்கள் ஒரு முதன்மைப் பாத்திரத்தில் பங்கெடுக்கின்றனர். கடற்கரையில் முத்தெடுக்க பரவர்களை அந்த அரசி பணியில் அமர்த்தியதாகவும், ஒவ்வொரு முத்துக்குளிப்பிலும் பத்துக்கலம் முத்தினை அரசிக்கு பரவர்கள் தரவேண்டும் என்ற விதிமுறை கொண்டிருந்ததாகவும் நாடகத்தில் கூறப்படுகின்றது.

8) *1871 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கை*யின் படி “பரவர்கள் மதுரை, திருநெல்வேலிக் கடற்கரைச் சார்ந்த மீனவர்கள் ஆவார்கள். இவர்கள் போர்த்துக்கீசியர் இந்தியாவிற்கு வந்தபோது முகமதியர்களின் அடக்கு முறையில் சிக்கித்தவித்தனர். இதனைக் கண்ட போர்த்துக்கீசியர் இவர்கள் கிறிஸ்த்தவர்களாக மதம் மாறினால் அவர்களுக்கு உதவுவதாகக் கூறியதால், அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் தென்கிழக்குக் கடற்கரையினைச் சேர்ந்தவர்களில் பலர் ரோமன கிறிஸ்த்தவர்களாக மதம்மாற காரணமானது.”

அதே அறிக்கையில், *திரு. எஸ். பி. றைஸ்* (S.P. Rice – Occasional Essays on Native South Indian Life, 1901) இந்த மீனவர்களைப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

” தென் கோடியில் வாழும் இந்த மீனவர்கள் மிகவும் பக்தியுள்ள கத்தோலிக்கர்கள் ஆவார்கள். இவர்கள் தங்களது முன்னோர்கள் மதம் மாறிய போது அவர்களுக்கு வைக்கப்பட்ட போர்த்துக்கீசிய *“ஜோஸ்ப் பர்னான்டோ மற்றும் மரிய சந்தியாகு”* (Jose Fernandez and Maria Santiago)போன்ற பெயர்களை இன்றும் தாங்கியவர்களாக இருந்தாலும், நேரில் காணும்போது இடையில் கழுத்தில் கன்னி மேரியின் படங்கொண்ட உத்தரியம் அணிந்தவர்களாக காட்சியளித்து பழங்கால முறைப்படி மீன்பிடிக்கும் சாமானியர்கள், என்பது ஒப்புக் கொள்ளமுடியாத ஒரு செய்தியாகும்.”

9) *1901 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கை* (Madras Census Report 1901) பரவர்களைப் பற்றி கூறுவதாவது:
” பரவன் என்ற பெயருக்குரியனவாக முறையே தமிழ், மலையாளம், கன்னடம் பேசும் மூன்று சாதிகள் உள்ளன. இந்த மூன்று பிரிவினருமே தமிழ் பேசும் *பரவன் அல்லது பரதவர்களின்* வழித்தோன்றல்களாக இருக்கலாம்.

*தமிழ் பரவர்கள்* கடற்கரையோர மீனவர்களாகும். இவர்களின் தலைமையிடம் தூத்துக்குடி. தலைவன் என்றொருவன் அவர்களை ஆட்சிப்புரிவான். இவர்களில் பெரும்பாலோர் பாரம்பரியக் கிறிஸ்த்தவர்கள். தங்களைப் பாண்டியர் குலத்தைச் சேர்ந்த *சத்திரியர்* எனக் கூறிக்கொள்ளும் இவர்கள் பிராமணர்கள் இல்லத்தில் மட்டுமே உணவு உண்பர்.

*மலையாளப் பரவர்கள்* கிளிஞ்சல் பொறுக்குதல், சுண்ணாம்புக் காளவாய் போடுதல், உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடுவார்கள்; இவர்கள் வீட்டுப் பெண்கள் மகப்பேறு பார்க்கும் மருத்துவச்சிகளாக இருப்பார்கள். இவர்களின் பட்டப்பெயர்கள் *குருப்பு, வாரக்குருப்பு, நூறன் குருப்பு* (Kurup, Varakurup, Nurankurup)ஆகியவனாகும்.

*கன்னடப் பரவர்கள்* குடைகட்டிகளாகத் தொழில் செய்வதோடு பூத ஆட்டக்காரர்களாகவும் விளங்குகின்றனர்.

மேலும் மேற்குக் கடற்கரையில் வாழும் பரவர்கள், முகமதியரின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க திருநெல்வேலியிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

10) *மன்னார் வளைகுடாவில் இந்தியர்கள் முத்துக்குளித்தல் தொடர்பான அறிக்கையில்* (Report of the Indian Pearl Fisheries in the gulf of manner 1905) திரு. ஜெ. ஹெர்னெல்(J.Hornell), மன்னார் வளைகுடாவின் இந்தியக் கடற்கரை சார்ந்து வாழ்கின்ற பரவர்களின் வரலாறு பற்றியும், முத்துக்குளித்தலோடு அவர்கள் கொண்ட தொடர்பு பற்றியும் பல தகவல்களை தந்துள்ளார். அவை:

“ முத்துக்குளிக்கும் தொழில் நினைவுக்கு எட்டாத காலந்தொட்டு, பரவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாக வழக்குவரலாறு தெரிவிக்கின்றது. கி.மு. முதல் ஆண்டுகள் தொடர்ந்து மதுரை,திருநெல்வேலி மாவட்டங்கள் என்று இன்று வழங்கப்படும் பகுதி தமிழர்களுக்குரிய பாண்டியப் பேரரசாக இருந்து வந்திருக்கின்றது என்பது தெரிந்த செய்தியாகும். பழைய தமிழ் நூலான *‘கல்வேடு’* (kalvedu) என்ற நூலில், பாண்டிய மன்னனுக்கும் முத்துக்குளிக்கும் பரவர்களுக்கும் இடையேயான உறவு பற்றிய குறிப்பு கீழ்க்கண்டவாறு காணப்படுகின்றது:-

*வேதநாராயணன் செட்டியும்* (VidanarayanenCheddi) முத்துக்குளிக்கும் பரவர்களும் மதுரையை ஆண்டுவந்த *பாண்டியன்* மகளான *அல்லியரசாணிக்கு* (Alliyarasani) கப்பம் செலுத்தி வந்தனர். அவள் கடலில் பயணம்போன போது அவர்களது கப்பல் புயலில் அகப்பட்டு, இலங்கையின் கரையில் ஒதுங்க, அங்கு அவர்கள் *கரைநேர்கை, குதிரைமலை* (Karainerkai and Kutiraimalai) ஆகிய இடங்களைக் கண்டனர். வேதநாராயணன் செட்டி தனது கப்பலில் இருந்த செல்வம் முழுவதையும் அங்கேகொண்டு சேர்க்க பரவர் உதவியை நாடினார்.கடலிகிலபம்,கல்லக்கிலபம்(Kadalihilapam,Kallachihilapam) ஆகிய துறைகளில் பரவர்கள் முத்துக்குளிக்க ஏற்பாடுகள் செய்வதோடு, இரும்பைப் பொன்னாக்கும் இரசவாதத்திற்கு உதவும் மரங்களையும் அங்கிருந்து கொண்டுவந்தான்.

கொற்கையில்(Korkai) பரவர்கள் மிகுந்த செல்வாக்கு உடையவர்களாக விளங்கினர் என்று மதுரைக்காஞ்சி(Madurai Kanchi) தெரிவிக்கின்றது. மீனை உணவாகக் கொள்ளும் பரவர்கள் வில்லையேந்தி கூட்டமாகத் திரிந்து, பகைவர்களைத் தங்களுடைய புறங்காட்டாத வீரச்செயல்களால் அச்சுறுத்தி வந்தனர். பரவர் நாட்டின் முக்கியப் பட்டணம் கொற்கை என்றும், அங்கு முத்துக்குளிப்பவர்களும் சங்கு அறுப்பவர்களுமே பெறும் அளவில் வாழ்கின்றனர் என்றும் , மதுரைக்காஞ்சி தெரிவிக்கின்றது.

பாண்டியர் அரசு வலிமைவாய்ந்ததாக இருந்த காலத்தில், பரவர்கள் அரசரிடமிருந்து பாதுகாப்பினையும் வரிவிலக்கினையும் பெற்று வந்தனர்.”

மேற்கூறியன அனைத்தும் பரவர்களின் தோற்றம் பற்றி வழங்கி வரும் பதிவுகளாகும் ஆகும். இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்கின்றது.

மேலும் “பரத வம்ச விளக்கம்” நூலிலிருந்து தொகுப்புகள் அடுத்த இதழில் மலரும்…..

by T.சொர்ணராஜன் விக்டோரியா

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.