Our Blog

பரத குல வரலாறு - 2


“கால வேறுபாட்டால் மாறுபட்டுக் கிடக்கும் ஸ்ரீ பரதரது பூர்வேந்திர வரலாற்றை விளக்கமாக எழுதுங்கள். அது பலரது அறியாமையை போக்கும்”, என்று தூத்துக்குடி சவேரியார் பள்ளித் தமிழ்ப் பண்டிதரான வடக்கன்குளம் டி.சவரிராயப் பிள்ளை கேட்டுக் கொண்டதற்காக, வித்வான், சோ. சு. இராமநாதபிள்ளை எழுதிய நூலில் பெயர், “ பரத வம்ச விளக்கம் ”.

கி.பி. 1887-ம் ஆண்டில் எழுதப்பட்ட இந்த நூலை, இலங்கைச் சுமங்கல சுவாமிகள், காசி செட்டித்துரை ஆகியவர்கள் எழுதிய பல நூல்கள், பழைய இலக்கியத்திலும் புராணங்களிலும் அமைந்த பல கருத்துக்கள், பரத மக்களிடையே வழங்கி வரும் பரம்பரை வழக்கங்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு, நூலாசிரியர் உருவாக்கியுள்ளார்.

பார்புகழ் வாழ்ந்த, பரத குலத்தினரது வரலாற்றை, இந்த இனத்தைச் சாராத ஒருவர் எடுத்து இயம்பியுள்ளது, பெருமைக்குரியது ஒன்றே!

1887-ம் ஆண்டில், பாடல் வடிவிலும் அன்றைய வழக்கிலுள்ள புரிந்து கொள்ளமுடியாத தமிழ் உரைநடையிலும் எழுதப்பட்ட இந்த வரலாற்று நூலின் சில தொகுப்புகள் கீழ்வருமாறு:

பூர்வ காலத்தில் அஸ்தினாபுரியை ஆண்ட சந்தரவம்ச அரசர்களில் புரூருவன் என்பவரை முதல் தலைமுறையாகக் கொண்டு இருபதாவது தலைமுறையில் தோன்றிய துக்ஷ்யந்த ராஜனிடம் பரதன் என்ற அரசன் தோன்றினான்.

பாகவத புராணம் முதற்பகுதி அத்தியாயம் 21-ம் செய்யுளில், பரதனுக்கு இணையாக இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் என்ற முக்காலத்திலும் மனுநூல் ஆட்சிசெய்த மன்னர் எவருமில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே பரதனின் ஆட்சி காலத்திலிருந்து சந்திர வம்சமானது “ பரதவம்சம் ” என்றும், பரதனின் குலத்தவர் “ பரதவர் ” என்றும் அழைக்கப்படலாயின.

உவின்சலன்துரை அகராதியில், “பரதவர் நெய்த நில மக்களாகிய மீன்பிடி குலத்தவர், பரதன் என்ற அரசனால் இந்தப் பெயர் வழங்கலாயிற்று,” என்று காணப்படுகிறது.

வீராமுனிவரின் சதுரகராதி, “ பரதவர் நெய்தல் நில மக்கள், ” என்று கூறுகிறது. இலங்கை சுமங்கல சுவாமிகள் இயற்றிய “ ஹித்தியாச வருணநாவ ” என்ற நூலில் பரதர் வம்சத்தினருக்குப் “ “ “ பரவர் ” என்னும் மற்றொரு பெயர் உண்டு என்றும், புதன் மகன் புரூருவனால் “ பெளரவர் ” என்றப் பெயர் பெற்று, வடமொழிச் சொல்லான “ பெளரவ ” என்பதின் தமிழ் வடிவமே “ பரவர் ” என்றும் கூறப்பட்டுள்ளது.

பரதரது பூர்வ சரித்திரம் பாரத இதிகாசத்தில் விஸ்தாரமாய் விவரிக்கப்பட்டுள்ளது. அவ்வம்சத்தின் பாரம்பரிய சரித்திரத்தின் சுருக்கமான வரலாறு கீழ்வருமாறு:

“முதலில் சந்திரன் என்பவன் புதனைப் பெற்றான். புதன் புரூருவனைப் பெற்றான். புரூருவன் ஊர்வசியுடன் கூடி ஆயு என்பவனைப் பெற்றான். ஆயுவுக்கு நகுடன் பிறந்தான். இந்த நகுடன் அரசாண்ட போது பெற்ற மூன்று ஆண் மக்களில் மூத்த புதல்வன் யயாதி ஆட்சி உரிமை பெற்றான். இந்த யயாதி முதல் துக்ஷ்யந்தன் வரையுள்ள 11 தலைமுறை முறையே:

யயாதி – புரூருவன் – ஜனனேஜயன் – பிரசாவன் – சாயதி – சார்வபெளமன் – அரிசிகன் – மதிவான் – திடன் – நீலன் – துக்ஷ்யந்தன்.

துக்ஷ்யந்தன் மகாராஜனுக்குச் சகுந்தலையிடம் பரதன் பிறந்தான். பரதனின் மகன் பெளமன், இவன் மகன் சுகோத்திரன்; இவன் மகன் அஸ்தன். இந்த அரசனால் ஏற்பட்ட நகரத்துக்கு அஸ்தினாபுரம் என்று பெயர். இவனுக்கு நிகும்பன் பிறந்தான். அவனிடம் அரசமீளி பிறந்தான். அவனுக்கு வருணன் பிறந்தான். வருணனிடம் குரு உற்பவித்தான். இந்தக் குரு அரசனால் பரத வம்சத்தினர் “ கெளரவர் ” என்ற பெயர் பெற்றனர். இவன் யாகஞ் செய்த இடத்திற்கும், அரசாண்ட நாட்டிற்கும், குருக்ஷேத்திரம் என்ற பெயர் வந்தது.

குரு அரசனுக்கு பிரதீபனும், அவனிடம் பிறந்த தேவாபி, சந்தனு என்ற இரு மக்களில் மூத்தவன் தேவாபி காட்டில் தவம் செய்யச் சென்றதால், இளையவன் சந்தனு அரசாள உரிமைப் பெற்றான்.

சந்தனு அரசன் முதலில் கங்கை என்ற பெண்ணை மணந்து பீக்ஷ்மன் என்பவனைப் பெற்றான். பின்னர் பரதவம்சத்தின் திலகனாய் விளங்கிய தாசராஜன் புதல்வியும், வியாசரது தாயுமாகிய சத்தியவதியை மணந்து, சித்திராங்கதன் – சித்திரவீரியன் என்ற இரு புதல்வர்களைப் பெற்றான். சித்திராங்கதன் இளமையிலேயே இறந்ததால், சித்திரவீரியனுக்கு காசிராஜனின் இரு புதல்விகளையும் திருமணம் செய்விக்கப்பட்டு முடியுஞ் சூட்டப்பட்டது. இவன் மக்கட்பேறு இல்லாது இறக்கவே, இவனது மனைவிகளிடம் வியாசர் கூடி திருதராக்ஷடிரன் – பாண்டு என்று இரு புதல்வர்களைப் பெற்றார். திருதராக்ஷடிரனுக்கு துரியோதனன் முதலிய நூற்றுவர் பிள்ளைகளாவர். பாண்டுவுக்கு யுதிக்ஷ்டிரன் முதலிய வர் பிள்ளைகளாவர்.

இந்த நூற்றுவர் மற்றும் வர் காலத்தில்தான் மகாபாரத யுத்தம் நடந்தது. கூர்ச்சாத்து அரசனான கிருக்ஷ்ணன் பாண்டவர்கட்கு உதவி செய்ததால், பாண்டவரே யுத்தத்தில் வென்றனர்.

கிறிஸ்து பிறப்பதற்கு ஏறத்தாழ 4400 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது தான் இந்த மகாபாரத யுத்தம். இதற்கு பிறகும் , சில காலம் பரத அரசாட்சி அஸ்தினாபுரத்தில் நிலைத்து வந்தது.

இதுதான் பரத வம்சத்தின் பூர்வ சரித்திரம்!

மேற்கூறிய சந்திர வம்சத்தினரான பரதரும், மதுராபுரியை ஆண்டு வந்த பாண்டியரும் ஒரே வம்சத்தினர் என்று ,வில்லிபாரதம் கன்னபருவம் 17-ம் நாள் போர்புரிச் சுருக்கம் 106-ம் செய்யுளில் கூறப்பட்டுள்ளது.

பரதரின் தலைநகரான அஸ்தினாபுரியிலிருந்து பாண்டுவின் புதல்வர்கள் வரில் அருச்சுனன் தீர்த்தயாத்திரை செய்தபோது, மதுக்கரை (மதுரை) க்கு அடுத்த பூழி என்ற மணலிபுரத்தை அடைந்து, அங்க ஆட்சி செய்த சித்திரவாகு பாண்டியனின் ஏக புதல்வியை கண்டு அவளை மணங்கொள்ள விரும்பினான். மன்னன் பாண்டியன் தன் மகள் வயிற்றில் பிறக்கும் குழந்தையை மதுரை அரசாட்சிக்கு உரியதாக்கும் பட்சத்தில், அருச்சுனன் விருப்பத்திற்கு உடன்பாடு தெரிவித்தான். அருச்சுனன் சித்திரவாகு பாண்டியன் மகள் சித்திராங்கதையை மணந்து, பப்புருவாகனன் என்ற மகனை பெற்றுப் பாண்டியனிடம் ஒப்படைத்து, மனைவி சித்திரங்காதையுடன் சென்றான்.”

கி.பி.1735-ம் ஆண்டு தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட வேத அகராதியில், பூரு என்னும் அரசன் முதல் கூன் பாண்டியன் வரை மொத்தம் 364 பாண்டியர்கள் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது.

அருணாசலப் புராணம் வச்சிராங்கத பாண்டியன் சருக்கம் 411-ம் செய்யுளில் கூறப்பட்டது போல, பரத வம்சமும் பாண்டிய வம்சமும் ஒன்று என எவர்க்கும் நன்கு புலப்படும்.

காசி செட்டித்துரை எழுதிய கெஜற்றியர் என்ற ஆங்கில நூலிலும் இதுதான் கூறப்பட்டுள்ளது.

பரத குலத்தவர்க்கு உரிய கொடிகள் 211-ல் மீன் கொடியும் ஒன்று. பாண்டியனுக்கு உரிய கொடியும் மீன் கொடியாகையால், பரதவரே பாண்டியர் என்று அவர்களது துவஜம் (அதாவது, கொடி) சாட்சி பகருகின்றது.

நெய்தல் நிலத் தலைவனே கடற்சேர்ப்பன் என்றும், அவனே பாண்டியன் என்றும், அவனது குலத்தவரே பரதவர் என்றும் சூடாமணி நிகண்டு மக்கட் பெயர்த் தொகுதியிலும் , நாலடியார் – பழமொழி முதலிய சங்கச் செய்யுட்களிலும் கூறப்படுகின்றது.

வீரமாமுனிவர், வின்ஸ்லோ துரை இவர்களின் அகராதிகளில் , நெய்தல் நில மக்களைப் பரதர் என்று காணப்படுகின்றது. எனவே, பரத குலமே பாண்டிய குலமென மயக்கமின்றி தெளிவாகும்.

பரத வம்சத்தைப் பற்றிய மற்றொரு வரலாறு, பதினெட்டுப் புராணத்தில் ஒன்றான பிரமபுராணத்தின் மூன்றாவது காண்டத்தில் கூறப்பட்டுள்ளது. அது:

“சக்கரபுரிப் பட்டணத்தில் அரசாண்டு வந்த சுரா பாண்டியன் என்பவனின் புதல்வன் அமிர்தபாண்டியன். இவனுக்குப் பிறந்த ஏழு பிள்ளைகளில் மூத்தவன் காந்தவீரிய பாண்டியன். இந்த அரசன் தனது சகோதரர்களுடன் வேட்டையாட காட்டிற்குச் சென்றபோது களைப்புற்றதால், தனது தம்பியான குலசேகர பாண்டியனை தாகத்திற்கு தண்ணீர் கொண்டுவரப் பணித்தான். தண்ணீர் கொணர்வதில் கால தாமதஞ் செய்த தம்பிமீது சினங்கொண்டு, அவனை தங்களை விட்டு நீங்குமாறு கட்டளையிட்டான். அக்கட்டளையின்படி, குலசேகர பாண்டியன் தென் பகுதியில் மணவூர் என்னும் இடத்தில் உள்ள சமணராஜன் நகரில் மீன் பிடித்து விற்று ஜீவனம் செய்து வந்தான். இதையறிந்த சமணராஜன் தனது புதல்வி சுலோதையம்மாளை குலசேகர பாண்டியனுக்கு மணமுடித்து, ஆண் சந்ததியில்லாத தனது ராச்சியத்தையும் அவனுக்கே அளித்து ராஜபட்டம் சூட்டுவித்தான். குலசேகர பாண்டியன் மீன்பிடி தொழில் புரிந்தமையால், மீன்கொடி கட்டிச் சந்திர குலத்திற்கு அரசனாய் இருந்து, தனது வம்சத்திற்குரிய பாண்டியன் என்ற பெயர் பெற்று விளங்கினான்.”

தொகுப்புகள் by T.சொர்ணராஜன் விக்டோரியா

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.