Our Blog

சங். பெஸ்கி தல்மெய்தா அவர்களுக்கு வாழ்த்துமடல்

நிம்ப நகரின்கண் தோன்றிய எட்டாவது குருவாம் 
அருள்தந்தை பெஸ்கி குமாரராஜன் தல்மெய்தா அவர்கள் 
12.05.1978 அன்று குருவாக திருநிலைப்படுத்தப்பட்டபோது 
நிம்பநகர் பரிசுத்த ஆவி ஆலயத்தைச் சார்ந்த 
பரதகுல மக்கள் வாசித்தளித்த 
வாழ்த்துமடல் 


அருளறம் பூண்ட அண்ணலே! 

"துறந்தார் பெருமை துணைக் கூறின் வையத்து 
இறந்தாரை எண்ணிக் கொண்டற்று" 

என்று வள்ளுவப் பெருந்தகையால் சிறப்பித்துக் கூறப்பட்ட மண த்துறவினை நாடி, அத்தியாக வாழ்வின்வழி திருமறைப் பணியாற்றும் திருத்தொண்டராகத் தாங்கள் திருநிலைப்படுத்தப்பட்டதைக் கண்டு, நிம்பைவாழ் மக்களாகிய யாம் அளவிடற்கரிய மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றோம். 

நமது ஞானப் பிதா புனித பிரான்சிஸ் சவேரியார், சுவாமி என்ரி என்றிக்க்ஸ், தமிழ்  வளர்த்த வீரமாமுனிவர் போன்ற தியாக செம்மல்களின் திருவடிகள் பதிய பேறு பெற்ற புனித பூமி நமது ஊர்; மறைந்த அருள் தந்தை சிங்கராயன் லோபோ அவர்களால், " சீர்பெரும் கலைஞர் சித்திரக் கவிஞர் பக்த குருமார் ஈன்ற பழ நாடே" என்று பாடல் பெற்ற தலம் இது. இத்தலத்திலிருந்து இறைவனின் குருவாகும் இணையற்ற பெருமையினை அடைந்தவர், தங்களுடன் சேர்ந்து எண்மர் என்பதை எண்ணுந்தோறும் மகிழ்ச்சியால் எம் நெஞ்சுயரும்: பெருமையால் எம் தோள்கள் பூரிக்கும். 

ஏழாவது குருவாம் அருள்தந்தை இம்மானுவேல் பர்னாந்து அவர்கள் பாப்பரசரால் திருநிலைப்படுத்தப்படும் பெறலரும் பேற்றினைப் பெற்றார்கள் என்றால், எட்டாவது குருவாகிய தாங்கள் தொல்புகழ் வாய்ந்த 'நாம் பிறந்த மண்'ணிலேயே குருவாகத் திருநிலைப்படுத்தப்படும் தனிச்சிறப்பினை அடைந்திருக்கிறீர்கள். தாங்கள் பன்னலமும் பெற்று வாழ, தாங்கள் தேர்ந்து கொண்ட நெறி சிறக்க, பணி உயர மனமார வாழ்த்துகின்றோம்.

நற்குடியில் பிறந்த நித்திலமே!

நூலறிவும், நுண்மாண் நூழைபுலமும், இறைப்பற்றும், எதற்கும் அஞ்சா அறவுணர்வும், சொற்றிறனும், சோர்விலாத் தொண்டுள்ளமும் கொண்டு விளங்கிய காலஞ்சென்ற ஜோசப் ரொசாரி தல்மெய்தா அவர்களும், அவர்தம் பத்தினியார் செபஸ்தியம்மாள் கர்வாலோ அவர்களும் நோற்ற நோன்பின் பயனாய்ப் பிறந்த தாங்கள், பிறப்பின் வழிவந்த சிறப்பியல்புகளோடு, பயிற்சி வழி வந்த பண்புகளும் சேரப்பெற்று, இவ்வுலகில் கதிரொளியாய், தண்மதியாய், நும்பாட்டியார் பூண்டிருந்த 'நட்சத்திரமாய்' ஒளிர்வீர்கள் என்பதில் எமக்குச் சற்றேனும் ஐயப்பாடு இல்லை.

தாங்கள் இவ்வுயர் நிலையை எய்துள்ளீர்கள் என்றால், அப்பெருமை முதற்கண் தங்கள் அருமைப் பெற்றோரையும், ஒழுக்கம் பயிற்றுவித்த தங்கள் பெரியப்பா சூசை  இஞ்ஞாசி தல்மெய்தா அவர்களையும், அதன்பின் தங்களை ஆதரித்து, ஊக்குவித்த தூத்துக்குடி, டெல்லி மறைமாவட்டங்களைச் சார்ந்த மேதகு ஆயர் பெருந்தகைகளையும், தங்களுக்கு நற்பயிற்சியளித்த குருமடத் தலைவர்களையுமே சாரும். அவர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்த பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கின்றோம். 

பிறப்பால் ஐரோப்பியரெனினும், மொழியால் பண்பாட்டால் தமிழராக வாழ்ந்து, தமிழ் தழைக்கக் காப்பியங்கள் இலக்கண நூல்கள் இயற்றித் தன்னிகரிலாப் புகழ்பெற்ற ஜோசப் பெஸ்கி எனும் வீரமாமுனிவரின் பெயரைச் சுமந்துள்ள தாங்கள், அவர் அடியொற்றி நம் திருமறைத் தொண்டு புரிவதுடன், நம் தாய்த் தமிழுக்கும் தொண்டாற்ற வேண்டும் என்பது எமது ஆவல். இந்தியப் பேரரசின் தலைநகராம் டெல்லி மாநகரிலே பணிபுரிய வாய்ப்புப் பெற்றுள்ள தாங்கள், தங்கள் பேச்சாலும், எழுத்தாலும் அங்கு தமிழ்மணம் கமலச் செய்து, தமிழின் இனிமையையும்,  தமிழர் தம் பெருமையையும் பறை சாற்ற வேண்டுகிறோம். 

இறுதியாய், மீண்டும் தங்களுக்கு வாழ்த்துக் கூறுவதுடன், நமது தாய் திருநகரை எப்பொழுதும் நினைவில் வைத்து, அதன் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், நம் இளைஞரின் இறையழைத்தல் எழுச்சிக்காகவும் இறைவனை வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

இவண் 
தங்களின் திருக்கர ஆசீர் வேண்டுகின்ற 
நிம்பநகர் பரத குல மக்கள் 
வேம்பார் 
13.05.1978
No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.