Our Blog

பெரிய‌ப‌ட்டின‌ம் வரலாறு


கடந்த ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் வரை தமிழர்கள், கடல் வழி வாணிபத்தில் உயர்ந்து நின்ற பாங்கிளை வரலாறும், இலக்கியங்களும் எடுத்து இயம்புகின்றன. தமிழகத்தின் நீண்ட நெடுங்கரையை மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே, நத்தி நமக்கினய பொருள் கொணர்ந்து நம்மருள் வேண்டிநின்ற பட்டினங்கள் காலத்தின் போர விளையாட்டில் சிற்றீல் போல் நிறைந்த செய்திகள் பல உண்டு. பிற நாட்டுப் பயணிகளின் குறிப்புகளில் பெருமையுடன் பேசப்பட்ட அந்தப் பட்டினங்கள் இன்று எட்டிக் காட்ட இயலாத நிலையில், சுவடு இல்லாமல் மறைந்து விட்டன. கடற்கோளுக்கும், அடற்புயலுக்கும் இளக்காகிக் காலத்தின் கரங்களாற் கவரப்பட் பிறகும், மறைந்த அந்த மாநாகரங்களை, மனத்திரையில் நினைவுபடுத்த, பெயரளவில் எஞ்சி நிற்கும் சில பட்டினங்களும் இன்றும் உள்ளன.

குறிப்பாக காவேரிப்பூம்பட்டினம்., தொண்டிப்பட்டினம், காயல்பட்டினம் ஆகியவைகளுடன் இணைத்து எண்ணத்தக்கதுதான் பாண்டிய நாட்டு பாராக்கிரமப் பட்டினமுமாகும். இந்த பராக்கிரமப் பட்டினம், இராமநாதபுரம் நகருக்கு தொன் கிழக்கே பத்து மைல் தொலைவில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. பராக்கிரமப்பட்டினம் காலப்போக்கில் பௌத்திர மாணிக்கப்பட்டினமாகி, இன்று பெரிய பட்டினம் என வழக்கில் இருந்து வருகிறது. பாண்டிய மன்னர்களில் ஒருவராக பராக்கிரமன் என்பாரது நினைவாக எழுந்த ஊரே இந்தப்பட்டினம். பாண்டியர் வரலாற்றிலே பல பராக்கிரம பாண்டியர்கள்குறிப்பிடப்படுகின்றனர். பாண்டியன் சடாவர்மன் என்ற பராக்கிமபாண்டிய தேவன்

 திரிபுவனச் சக்கரவர்த்திபராக்கிரம பாண்டிய தேவன்

பராக்கிரம பாண்டியன் கல்லணை...

பராக்கிரம பாண்டியன் கட்டளை..

தென்னன் பராக்கிரம பாண்டிய தேவனது ஒன்பதாவது ஆண்டு

பரராசர் நாளும் பணியும் பராக்கிரம பாண்டியனே

என்ற தொடர்களுடன் அடைவு படுத்திப்பார்க்கும் இந்த ஊர் எந்த பராக்கிரம பாண்டியனது பெயரில் எப்பொழுது எழுந்தது என்பதை அறுதியிட்டுச் சொல்ல இயலவில்லை.

வரலாற்றில்:

வரவாற்றின் குறிப்புகளை வகைப்படுத்தி நுணுகி நோக்கும் பொழுது, முதன் முறையாகத் தமிழகத்தில் பாண்டியன் உரிமைப் போரில் சடையவர்மன் குலசேகரப் பாண்டியனுக்கு

எதிராக பராக்கிரம பாண்டியன் பக்கலில் போரிட ஈழப்படைகள் இலங்கைத் தண்டநாயகன் தலைiயில் கி.பி 1170ல் நுழைந்தது. கடல்வழியாக இராமேசுரத் தீவைக் கைப்பற்றி எதிர்கரையில் கரை இறங்கிய பொழுது, இந்தப்பட்டினம் மூன்று சுற்றுக்கோட்டை மதில்களையும் பன்னிரென்டு வாயில்களையும் பெற்ற பெருநகராக விளங்கியதாகவும், அதைக் கைப்பற்றிப் பலப்படுத்தியதாகவும், இலங்கை நாட்டு வரலாறு விவரிக்கிறது 

அடுத்து சீனத்திலிருந்து ஈழம் வழியாக கி.பி. 1293ல் இந்தியா போத்து ...லாப் பயணி மார்க்கோபோலோவும், இபுன்பதூதாவும் இந்தக் கடற்கரையில் தான் கரை இறங்கினர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தின் வரலாற்றில், இந்தப்பெருநகரம் அரேபிய நாட்டுப் பயணியான திமிஷ்கி, பாரசீக நாட்டு வஸ்ஸப், தூனிஷிய நாட்டு இபன்பதூதா போன்ற உலகப் பயிகளாலும், இந்திய வரலாற்று ஆசிரியர்களான அமீர் குஸ்ரு, பரிஷ்கா ஆகியவர்களாலும் பத்தன், பத்னி எனவும் அரபி வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது 

பட்டினம் என்ற தமிழ்ச் சொல்லின் மாற்று வடிவம் பத்தன் ஆகும். அதே சொல் விகாரமடைந்து விரிந்து தமிழில் பெரியபட்டினமாகியுள்ளது. இங்ஙனம், பராக்கிரம பட்டினமாகவும், பௌத்திர மாணிக்கபட்டினமாகவும், பத்தனாகவும் குறிக்கப்பட்டுள்ள பெருநகரம், இன்றைய சிற்றூரான பெரியப்பட்டினம் தானா என்ற வியப்பூட்டும் வினாவிற்கு விளக்கம் பெறுவதுதான் இந்த ஆய்வு.

ஆதாரங்கள்:

தென்னகமும் முஸ்லிம் ஆட்சியாளர்களும் என்ற ஆங்கில நூலில், இலங்கைத் தண்டநாயகன் ஜகத் விஜயன் தலைமையில் ஈழத்துப் பெரும்படையொன்று மாந்தோட்டம் என்ற ஊரின் கண் அணி சேர்க்கப்பட்டு, கி.பி. 1170ல் இராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே இரண்டு கல் தொலைவில் கரை இறங்கியதாகவும், அங்கிருந்து பாம்பன், குந்துகால் ஆகிய ஊர்களைக் கைப்பற்றி எதிர்கரையில் உள்ள பராக்கிரமப்பட்டினக்கோட்டையைப் பலப்படுத்தியதாகவும் குறிப்பிடபட்டுள்ளது 

மீண்டும் அந்தக் கோட்டையைக் கைப்பற்ற முயன்ற பாண்டியன் குலசேகரனது தளபதி அழகன் பெருமாள் போரில் கொல்லப்பட்டதாகவும், தொடர்ந்து நில, நீர் மார்க்கமாக பாண்டியன் குலசேகரனது தலையையில் வந்த பெரும் படை படு தோல்யுற, பாண்டியன் புறமுதுகிட்டு ஓடியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் போர் பராக்கிரம பட்டினத்திற்கு அண்மையில் வேதாளை என்ற இடத்தில் நடைபெற்றதாகவும் ஈழப்படைகள் தொடர்ந்து முன்னேறி, தேவிப்பட்டினம், சிறுவயல், தொண்டி ஆகிய ஊர்களையும் கைப்பற்றிதாகவும் இலங்கை வரலாற்றை மேற்கோளாகச் சுட்டி வரையப்பட்டுள்ளது.

இந்த வட்டாரத்தில் உள்ள ஈழக்காடு, இலங்காமணி, இலங்கையர் மேடு, ஈழம்படல், ஈழவனூர், ஈழவன் கோட்டை ஆகிய சிற்றூர்கள் அந்த ஈழப்படையெடுப்பை இன்னும் நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன. பெரியப்பட்டினத்தின் தென்மேற்குப் பகுதியில் இன்னும் கோட்டைச் சுவரின் அதிமானம் தென்படுகிறது. வேறு கோட்டைகள் இந்தப் பகுதியில் இருந்ததாக வரலாறு இல்லையாலின் மூன்று சுற்று மதிலுடன் அமைந்த நகரம் என இலங்கை மகாவம்சம் குறிப்பிடுவது இந்தப்பட்டினத்தையேயாகும்.

பன்னிரென்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வலிவும் பொலிவுமிழந்த பாண்டிய நாடு ஐந்து பகுதிகளாகப் பாண்டிய இளவல்களால் ஆட்சி செலுத்தப்பட்டது. அவர்கள் பேரரசர்களைப் போலத் தங்கள் பெயரால் கல்வெட்டுகளும், மெய்க்கீர்த்திகளும் வரைந்துள்ளனர் 

விட்ட கண்டெழ மீனவர் ஐவருங் கெட்ட கேட்டினை கேட்டிலை போலுநீ என்று பரணி பாடுவதும் இவர்களைத்தான் 

இன்றைய திருநெல்வேலிச் சீமையில் ஒருவரும், மதுரை, தஞ்சைப் பகுதியில் இருவரும், கிழக்கு இராமநாதபுரம் பகுதியில் ஒருவருமாக இந்தப் பஞ்ச பாண்டியர்கள் இருந்திருக்க வேண்டும். கி.பி. 1188ல் மதினத்திலிருந்து (அரேபியா) காயல்பட்டினம் வந்து சேர்ந்த சுல்தான் சையது இபுறாகிம் அவர்களது வரலாறும் மார்க்கோ போலே, வஸ்ஸாப் பயணக்குறிப்புகளும் பாண்டிய நாட்டில் ஒருவருக்கு மேற்பட்ட பாண்டியர்களது ஆட்சியை உறுதிப்படுத்துகின்றன. 

சமயப் பணிக்காகத் தமிழகம் வந்த சுல்தான் சையது இபுறாகிம் காயலில் இருந்த பாண்டியன் குலசேகரனுடன் நட்புரிமை பாராட்டியதையும் அவனது கோருதலின்படி மதுரையில் அப்பொழுது அரியணையிலிருந்த திருப்பாண்டியனையும், பவுத்திர மாணிக்கப் பட்டினத்தை ஆண்ட விக்கிரம பாண்டியனைத் தோல்வியுறச் செய்ததையும் வரலாறு கூறுகிறது. சுல்தானின் ஆட்சி கி.பி. 1199 வரை பவுத்திர மாணிக்கப் பட்டினத்தில் நீடித்தாகவும் தெரிகிறது.

செய்யது சுல்தான் ஒலியுல்லா தர்ஹா.. பெரியபட்டினம்.
சுல்தான் சையது இபுறாகீம் வாழ்க்கையை இலக்கியமாகத் தமிழ்க் காப்பியத்தில் வடித்த மீசுல் வண்ணக் களஞ்சியப்புலவர் பௌத்திர மாணிக்கப்பட்டினம் மதுரை, மூதூரையும் விஞ்சிய வளமுடையதாக விளங்கியதாக பாடியுள்ளர்.

அதனை கோநகராகக் கொண்டிருந்த விக்கிரமபாண்டியன் பெயரில் விக்கிரமபாண்டியபுரம் என்ற தனிக்கிராமம் உள்ளது (முதுகுளத்தூர் வட்டம்) விக்கிரமபாண்டியன் பெருஞ்தெரு என்ற தொடர் ஒன்று அருப்புக்போட்டைக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

(விக்கிரமபாண்டியனை அடுத்து அரியணயேறிய சுந்தரபாண்டியனது கி.பி. 1216வது வருடத்திய கல்வெட்டு) இதைப்போலவே பௌத்திரமாணிக்கப்பட்டினம் பற்றிய தொடர்கள் உள்ள ஒரு கல்வெட்டும் உள்ளது. திருநெல்வேலி மாவட்ட மாறமங்கலம் சந்திரசேகர ஈஸ்வரசுவாமி கோவிலில் இருந்து படியெடுக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் முடித்தலைக் கொண்ட மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரது இருபத்து எட்டாவது ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டது. அங்கு சென்று இருந்த பவித்திர மாணிக்கப்பட்டின வியாபாரிகளது கொடை சம்பந்தப்பட்டது. இது தஞ்சை மாவட்ட திட்டைகுடி சுகாஷன பெருமாள் கோவிலுக்குக் கீரனூர் கிராமத்தை திருவிடையாட்டக் காணியாக காமன் சொக்கன் என்ற பவுத்திர மாணிக்க வேளாளன் என்பவன், குலோத்துங்க சோழ தேவரது முப்பதாவது ஆண்டு ஆட்சிக் காலத்தில் நீர்வார்த்து கொடுத்து அதனைப் பவித்தரமாணிக்க நல்லூர் எனப் பேரிட்டு வழங்கிய செய்தியைப் படிக்கும் பொழுது பவத்திரமாணிக்க நல்லூர் என்ற பெயர்கள் அதே காலத்தில் வழக்கில் இருந்தமையும் தெரிய வருகிறது. 

பவித்திரமாணிக்கம் என்பது சிலப்பதிகாரம் சொல்லுகின்ற 

..காக பேதமும் களங்கமும் விந்தவும்
ஏகையும் நீங்கி இயல்பு குன்றாத...
பன்னிரு ரூணமும் பெற்று பதினாறு குற்றமுந் நீங்கிய மாணிக்கம் என்பதும்,

தூயகலத் துகில் விரித்துத் தெய்வமாணிக்கம் நடுவே வைத்து...
என்று பரஞ்சோதி முனிவர் குறிப்பிட்டுள்ள பவித்திரமான தெய்வீகமான மாணிக்கம் என்பதே பொருள் 

இத்தகைய மாணிக்கம் நிறைந்த வளமைமிக்க பட்டினம் என்பதுதான் இந்த ஊரின் பெயருக்கான காரணமாக இருக்கலாம். மேலும் இந்த ஊரில் தென்பகுதியில் மேற்கே உள்ள தரவை இன்றும் பவளக்கால் தரவை என்றே வழங்கப்பட்டு வருகிறது. முன்பு இந்தப் பகுதியில் பவளம் மிகுதியாக விளைந்ததாக வரலாறு கூறுகிறது. பவளமும் ஒருவகையான மாணிக்கம் என உத்பலபரிமளம் என்ற நூலிலும் அக்னி புராணத்திலும் வரையறுத்துச் சொல்லப்படுள்ளது. 

இதே கடற்கரையில் சில கல் தொலைவில் அமைந்துள்ள கோவில் மாரியூரில் (கோனேரின்மை கொண்டான் திருபுவனச் சக்கரவர்த்தியான சுந்தர பாண்டிய தேவனது பெருங்கொடை பெற்ற பழமையான கோவிலாகும்) எழுந்தருளியுள்ள அம்பிகைக்கு பவளநிறவல்லி என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பதுவும் இந்தப் பகுதியுடன் பவள விளைவையுதம் இணைத்துச் சிந்திப்பதற்குப் பொருத்தமுடையதாக உள்ளது.

மேலும், பவித்திரம் என்ற சொல்லுக்குத் தமிழ் லெக்சிகன் பேரகராதி (பக்கம் 2543) யில் தருப்பை என்ற பொருள் சூட்டப்பட்டு சீவக சிந்தாமணியும், சூடாமணி நிகண்டும் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது. இராமாயணக் காலந்தொட்டு இந்தப் பகுதியில் தருப்பைப் புல் நிறைந்து இருந்ததை புல்லாரண்யம் திருப்புல்லணை என்ற பெயரும், இந்தத் திருப்புல்லணைத் தலத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமானது தருப்பாசன அழகியார் என்ற திருப்பெயரும் இன்றளவும் நினைவூட்டுவனாக உள்ளன. அத்துடன் திருப்புல்லணைக்குப் பக்கத்தில் உள்ள கோரைக் (தருப்பை) குட்டம் என்ற சிற்றூரும் இதற்குச் சான்று வழங்குவதாக அமைந்துள்ளது.

பொருள் நயந்து நன்னூல் நெறியடுக்கிய புல்லில்
கருணையங் கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி..
தருப்பை மீதினுலுவந்து திருக்கண் மேவிய தேவை நினைவீரே 
என்ற இலக்கியத் தொடர்களும்,
பார் தந்த பாதம் பரல் உறைப்புன்ன வெம்பாலையெல்லாம்
பேர்தந்து புல்லைப் பரப்பிக் கிடந்த பெருந்தகைக்கு தேர் தந்தனன்...
என்ற முகவை மகாவித்வான் ரா. ராகவனாரது தனிப்பாடலும் இதே உண்மையினை வலியுறுத்துவனவாக அமைந்துள்ளன.

மற்றும், வீரமாமுனிவரது சதுர் அகராதியில் மௌத்திகம் என்ற சொல்லுக்கு முத்து, நித்திலம் எனப் பொருள் விவரிக்கபட்டுள்ளது. திருப்புல்லணையிலிருந்து இராமேசுவரம் வரையான கடற்கரையில் பவளம் மட்டுமின்றி முத்தும் சங்கும் வளங்கொழித்து விளங்கியதை இலக்கியச் சான்றுகளும் எடுத்து இயம்புகின்றன. திருபுல்லணையை மங்களாசாஸனம் செய்து மனம் மகிழ்ந்த திருமங்கை ஆழ்வார்.
பொருது முந்நீர்க்கரைக்கே மணி உந்து புல்லாணியே..
புணரி ஓதம் பணிலம் மணி உத்து புல்லாணியே..
என்றும்,

இலங்கி மத்தும், பவளக் கொழுந்தும், எழில் தாமரைப் புலங்கள் மற்றும்பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணி எனவும் வாய்நிறைய வர்ணித்துள்ளார். அவரையடுத்து வந்த கம்பநாடர் இதே கடற்கரையில் நவரத்தினங்களில் சிறந்த முத்தும் பவளமும் மிக்க இருந்ததைத் தனது இராம காதையில் கடல்காண் படலத்திலும், விபீடணன் அடைக்கலப் படத்திலும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

தூய மலர்போல நுரைத்தொகையும் முந்தும் சிந்தி புடைசுருட்டி
பாயல் உதறிப் படுப்பதே ஒத்த திரையின் பரப்ப அம்மா 
தரளமும் பவளமும் தரங்கமும் ஈட்டிய தரன்மணிக் குப்பையும்
கனக தீரமும் புரள நெடுந்திரைகளும் புரிந்து நோக்கினான்
என்ற தொடர்களும், இந்தப் பகுதியின் ஏக சக்கரவர்த்தியாக விளங்கிய ரகுநாத சேதுபதியை ஏற்றிப் போற்றிய அழகிய சிற்றம்பலக் கவிராயர் வாக்கில்,

முந்நீர் சொரிமுத்த மாணிக்க ராசி முகந்தருளி
நன்னீர் சொரி கந்தமானதனத்தான் ரகுநாதன்...
திரை வந்த முத்தும் வரைவந்த பொன்னும் தெவ்வேந்தர் தந்து
நிரை வந்து பொற்றும் ரகுநாதன்..
எனப் பாராட்டியிருப்பதிலிருந்தும், 

சேதுபதிகளுக்குரிய விருதாவளியில் செரிமுத்து வன்னியன் என்ற தொடர் பயன்படுத்தப்பட்டதிலிருந்தும், இந்தப் பகுதியில் முத்து மிகுத்து இருந்தது புலப்படுகிறது. அத்துடன் முத்து மாணிக்கப்பட்டினமான மௌத்திக மாணிக்கம் மருவி பௌத்திர மாணிக்கப்பட்டினமாக வழங்கி இருந்திருக்கலாம் எனத் துணியவும் இடமுளது.

இராமநாதபுரத்திற்கு அண்மையில் உள்ள திருப்புல்லாணித்திரக்கோயில் கல்வெட்டு ஒன்று. இந்த பவித்திரமபணிக்கப்பட்டினம் எங்கு உள்ளது என்பதைச் சற்று விளக்கமாகச் சுட்டுகிறது. கி.பி.1251 முதல் 1271 வரை மதுரையை ஆண்ட கோனேரின்மை கொண்டான் திரிபுவனச் சக்கரவர்த்தி முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியத் தேவன் பவித்திர மாணிக்கப்பட்டினத்தில் உள்ள சோனக நமாந்தப் பள்ளிக்கு இறையிலியாக மருதூர், ஆம்புத்தூர் என்ற கிராமங்களை வழங்கி உத்திரவிடுவதாகும்.

அந்தக் கல்வெட்டில் கீழ்ச்செம்பி நாட்டு பவித்திரமாணிக்கப்பட்டின கீழ்பால்... என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருப்பதிலிருந்தும், திருப்புல்லாணி கோவில் கீழ்ச்செம்பி நாட்டில் இருப்பதாலும் இன்றை பெரியப்பட்டினம் அந்தக் கோவிலிருந்து கிழக்கே நான்கு மைல் தொலைவில் இருப்பதாலும் பவித்திரமாணிக்கப்பட்டினம் திருப்புல்லாணிக்க வெகு அண்மையில் அமைந்து இருத்தல் வேண்டும் என்பதும் உறுதியாகிறது.

அடுத்து, மார்கோபோலோவின் குறிப்புகளில் தாம் இலங்கைத் தீவிலிருந்து மேற்குத் திசையில் அறுபது மைலுக்கு மேல் கடற்பணம் செய்து மாபார் (பாண்டிய நாட்டு ...
நிலத்தை அடைந்ததாகவும் இதனை ஐந்து ...
ஆட்சி புரிந்து வந்தனர் என்றும், இந்த ...

பகுதியில் மிகவும் நேர்த்தியான பெரிய முத்துக்கள் கிடைக்கின்றன. இலங்கைத் தீவிற்கும், இந்த நாட்டிற்கும் இடையில் விளைகுடா ஒன்று உள்ளது, ஆழமற்ற அந்த குடாவில் 10 அல்லது 12 பாதம்ஸ் (கஜங்கள்) மேலே ஆழம் இல்லை. முத்துக்குளிப்பவர்கள், பெரிதும் சிறிதுமான கப்பல்களில் இந்தக் குடாப் பகுதிக்குச் சென்று ஏப்ரல் துவக்கத்திலிருந்து மே மாதம் இறுதிப்பகுதி வரை தாமதித்து முத்துக் குளிக்கின்றனர்...

முத்துக் குளிக்க செல்லும் படகுகள் முதலில் பத்தலாறு என்ற இடத்தில் ஒரு சேரக் கூடி அங்கிருந்து 60 மைல் தொலைவு வரை கடலில் முத்துக் குளிக்கின்றன. அன்றைய நாளில் முத்துக் குளித்தலைப்பற்றி மிகவும் விவரமாக மார்க்கோபோலோ குறித்துள்ளார். நமது ஆய்வுக்குரிய பொருளக்கு வரும் பொழுது மார்க்கோபோலோ கரையிறங்கிய இடம் பாண்டி மண்டலத்தின் (மாபாரில்) கீழ்க்கோடி என்பதும், இலங்கைக்கு மேற்கே அறபது மைல் தொலைவில் உள்ள பாண்டிய நாட்டுக் கரையென்பதும் அமைதியான வளைகுடாப் பகுதியென்பதும் புலனாகிறது. 

மார்க்கோபோலோ, காயலைப் பற்றியும் அதனை ஆட்சி புரிந்த பாண்டிய சகோதரர்களில் மூத்தவராக குலசேகர பாண்டியனையும் தனது குறிப்புகளில் தனியாகக் குறிப்பிடுவாஸ்ரீதால் அவர் கரையிறங்கியது காயல்பட்டினம் பகுதியல்ல என்பது நிரூபணம் மற்றும் அவர் குறிப்பிட்டுள்ள பத்தலாறு என்ற இடம் இன்னும் பெரியபட்டினம் கிராமத்தின் தென்கிழக்கே கடற்கரைலயொட்டிய நீண்ட கழிப்பகுதியாக உள்ளது. அதனை கப்பலாற் (கப்பலபாறு) என மக்கள் வழங்கி வருகின்றனர். 

அத்துடன் மன்னார் வளைகுடாவில் பாம்பனுக்கு தெற்கே பெரிய பட்டினத்திற்கு வடகிழக்கு வரை கடல் ஆழமற்று இருப்பதைக் காணலாம். இதற்கெல்லாம் மேலாக மன்னார் வளைகுடாவில் இலங்கைக் கரையிலும், பாண்டிய நாட்டுக் கரையிலும்தான் பன்னூற்றாண்டு காலமாக முத்துக் குளித்தல் நடைபெற்றது என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

குறிப்பாக, 

மார்க்கோபோலோ விவரிக்கின்ற முத்துக் குளித்தல் மன்னார் வளைகுடாவில் இலங்கைக் கரையில் அல்லாமல் பாண்டிய நாட்டுக் கரையில் பத்தன் பகுதியில்தான் நடைபெற்றது என்பதற்கு முக்கியமான ஆதாரம் மார்க்கோபோலோவிற்கு முந்தைய நூற்றாண்டில் வந்த ஆல்பருனி என்பவரது பயணக்குறிப்புகள்தான்  இலங்கைக் கரையில் முத்துக் குளிப்பது இலாபகரமாக இல்லையாததால் அங்கு முத்துக் குளித்தல் நிறுத்தப்பட்டு பாண்டிய நாட்டுக்கரையில் முத்துக்கள் எடுக்கப்பட்டதாக அவர் குறித்துள்ளார். 

மார்க்கோபோலோவின் காலத்திறகுப் பிந்தைய நாளில் இந்த முத்துக்குளிப்பில் இராமேசுவரம், திருபுல்லணை திருக்கோயில்களுக்கும் முதலுரிமை இருந்து வந்துள்ள செய்திகள் பட்டயங்களில் உள்ளன. சேதுபதிகளுக்கும் நாயக்க மன்னர்களுக்கும், சேதுபதிகளுக்கும் டச்சுக்காரர்களுக்கும் இடையில் நிறைவேறிய உடன்படிக்கைகள் இந்தப் பகுதியில் தொடர்ந்து முத்துக் குளிக்கப்பட்ட உண்மைகளை உணர்த்துகின்றன. 

இராமேசுவரத்தில் இன்றும் முத்துச்சாவடி என்ற பகுதி இருந்து வருவதும், பெரியபட்டினத்தின் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை என்ற ஊர் இன்றளவும் இருந்து வருவதும், மன்னார் விளைகுடாவில் குளிக்கப்பட்ட முத்துக்களில் விற்பனை நிலையம் அங்கு அமைத்து இருந்ததை நினைவூட்டுகின்றன. கள்ளிக்கோட்டை துறைமுகத்தில் இருந்து மேனாடுகளுக்குக் கப்பலில் அனுப்பட்ட பலவகையான பொருள்களின் பட்டியலில் இராமேசுவரம் நன்முத்துக்கள் இடம் பெற்றிருந்ததை ஆசிரியர் கெர்ர் என்பவர் சுட்டிக்காட்டியுள்ளார்,

இந்தக் கடற்கரை ஊர்களில் வாழும் முஸ்லிம் முதியவர்களை முத்துவாப்பா என்று (பாட்டனார் என்ற பொருளில்) செல்லமாக அழைத்து வருவதிலிருந்து இந்தப் பகுதி முஸ்லிம்கள், முத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்ததையும் அறியலாம். தமிழகத்தில் வேறு எந்த ஊரிலும் இல்லாத அளவில் பெரியப்பட்டினம் கிராமத்தில் முத்து, சங்கு குளிக்கும் முஸ்லிம் தொழிலாளிகள் தொகுதியாக வாழ்ந்துவருவதும் மார்கோபோலோவின் குறிப்புகளை உறுதிபடுத்துகின்றன.

மார்க்கோபோலோவின் காலத்திலேயே பாண்டிய நாட்டிற்கு வருகை தந்த வஸ்ஸாப என்ற பாரசீக வரலாற்றாசிரியர் இந்தத்துறைகளில் வந்து இறங்கி அரபிக்குதிரை வணிகத்தை மேற்பார்வையிட தனியான அமைப்பு ஒன்று சுல்தான் ஜாத்தியுத்தீன் தலைமையில் இயங்கியதாக வரைந்துள்ளார். கி.பி.111ல் தென்னாட்டில் படைபெடுத்து வந்த டில்லி சுல்தான் தளபதி குஸ்ருகான் பத்தன் நகரில் இருந்த அரபி தனவந்தர் சுல்தான் ஸராஜூதீனைக் கைது செய்து, அவரது உடமைகளைக் கொள்ளையிட்டு அவரையும் கொன்றதாகத் தெரிய வருகிறது. 

மேலும் அந்தப் பெரும் வணிகரது பேரழகியான மகளைத் திருமணம் செய்து வைக்குமாறு பலவந்தப் படுத்தியதாகவும் அதனால் மனமுடைந்த அந்தத் தனவந்தர் விஷமருந்தித் தற்கொலை செய்து கொண்டதாகவும் கவிதை பாடியுள்ளார், பார்சிக் கவிஞர் இஸாமி.

இதே பத்தனைப் பற்றி கி.பி. 1344ல் உலகப் பயணி இபுன் பதூதா, மதுரை மன்னன் சுல்தான் அஹ்ஷன் ஷாவின் அகதியாக மூன்ற மாதங்கள் பத்தனில் தங்கி இருந்ததாகவும், அங்கிருந்து ஏமன் நாட்டுக்குப்புற்பட்ட கப்பல் ஒன்றில் கொல்லம் சென்றதாகவும் பயணக்குறிப்புகளில் வரைந்துள்ளார்.

பட்டினம் என்ற தமிழச் சொல்லுக்குரிய இந்த பத்தன் அவருடைய குறிப்புகளில் இருந்து மதுரையிலிருந்து எளிதாகச் சென்று அடையக் கூடிய தொலைவில் இருந்து இருப்பதால், இந்தத்துறைமுகம் சோழநாட்டுக் கடற்கரையில் உள்ளது அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது. அப்படியானால் அப்பொழுது பிரபலமாகி இருந்த தேவிப்பட்டினமாகவோ (மாலிபத்தன்) அல்லது ராமேஸ்வர பட்டினமாகவோ இந்த பத்தன் இருக்கலாமோ என்ற ஐயத்திற்கு இல்லையென்ற விடைதான் உள்ளது. 

இப்னது பதூதா வர்ணனை செய்யும் அளவிற்கு அந்தத்துறைமுகங்கள் பதினான்காம் நூற்றாண்டில் சிறப்புற்று விளங்கியதற்கான செய்திகள் எதுவும் இல்லை. இந்தக் காரணத்தினால்தான் இன்றைய கீழக்கரையும் அன்றைய பத்தன் இல்லையென உறுதியாகச் சொல்ல முடிகிறது. மேலும் மார்க்கோபோலோவின் பயணக் குறிப்புகளை புதிப்பித்துள்ள ஆசிரியர் யூல் பத்தன் இராமநாதபுரத்திறகு மிக அண்மையில் இருந்து இருக்க வேண்டுமென்ற முடிவிற்கு வந்துள்ளார். 

ஆசிரியர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் வஸ்ஸப், இஸன்பதூதா ஆகியோர்களது குறிப்புகளைத் தொடர்புபடுத்திப் படித்தால், பத்தன் மதுரை அரசின் துறைமுகம் என்பதும் மதுரைச் சீமைக்குள் நுழைபவர்களோ அல்லது அங்கிருந்து வெளியேறுபவர்களோ, இந்த துறைமுகம் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பது புலனாவதாகவும் மார்க்கோபோலோவும் இங்குதான் கரையிறங்கி இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை என்றும் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

மேலும் அவர் பத்தன், இன்றைய வேதாளை, மரைக்காயர் பட்டினம், பெரியபட்டினம் ஆகிய ஊர்களில் ஒன்றாக இருக்கவேண்டும் என 1928ல் ஊகித்துள்ளார். அவரது ஊகம் மார்க்கோபோலோ, இபுனு பதூதா ஆகியோர்களின் பயணக் குறிப்புகளை மட்டும் ஆதராமாகக் கொண்டது. அவைகளுடன் பிற உண்மைகளையும் அகழ்வாராய்வுத் தடயங்களையும் ஒருங்கிணைத்துச் சிந்திக்கும் பொழுதுதான் பெரிய பட்டினத்தின் தொண்மையும் வரலாற்றுத் தொடர்பும் உறுதிப்படுத்துகிறது.

இன்றைய பெரியபட்டினம் கிராமம் மன்னார் வளைகுடாவில் கடற்கரையிலிருந்து ஒரு கல் தொலைவில் உள்ளது. கடற்கரையையும் கிராமத்தையும், தென் பகுதியில் கப்பலாறு இணைக்கிறது. மழைக்காலங்களில் மட்டும் கடலுடன் இணைந்து காட்சியளிக்கிறது. பத்தனின் பெருமைக்கு நிலைகளனாக இருந்த இந்தப் பகுதியைக் கற்பனையில்தான் சித்ததரித்துப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. பட்டினப் பாலையைப் படித்துவிட்டுப் பூம்புகாரை நினைவில் கொள்வதுபோல, உலகப் பயணி இபின் பதூதாவின் குறிப்புகளைப் படித்துவிட்டுக் கப்பலாறைப் பற்றிய கற்பனையில் ஈடுபடலாம்.

கடற்கரையில் அமைந்துள்ள அழகிய பெரிய நகரம், புகழத் தக்க துறைமுகம். அங்கே முழுவதும் மரத்திலான அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. உறுதியான தூண்களினால் தாங்கி நின்ற இந்த அரங்கத்திற்குச் செல்வதற்கு மூடு வழி ஒன்று இருந்தது. அதுவும் மரத்திலானது, எதிரி நுழைந்தால், துறைமுகத்தில் உள்ள கப்பல்கள் அனைத்தும் இந்த அரங்கத்துடன் பிணைக்கபட்டுவிடும். வில்லேந்திய வீரர்கள் இந்த அரங்கத்தின் மேல் நின்று தாக்குதலுக்குத் தயாராகி விடுவர். எதிரியினால், இந்த வீரர்களைத் தாக்கி எவ்விதக் காயமும் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. ஏமன் நாட்டுக்குச் செல்லக்கூடிய எட்டுக் கப்பல்களும் நின்று கொண்டிருந்தன.

அடுத்து இந்த ஊரில் உள்ள கல்லாலான பள்ளி ஒன்று உள்ளது. இதனைப் பற்றி இபன் பதூதா குறிப்பிடுகிறார், இந்த ஊரில் அழகிய தொழுகைப்பள்ளி ஒன்று உள்ளது. முழுவதும் கல்லாலானது. இங்கே பூஜ்யர், ஷேக் முகம்மது மஜ்தூபி என்ற புனிதரைக் சந்தித்தேன், அவருடன் முப்பது இறையடியார்களும் இருந்தனர். அவர்களில் மோன நிலையில் இருந்த ஒருவர் தன்னுடன் சிங்கம் ஒன்றை வைத்திருந்தார். மற்றொருவர் புள்ளிமான் ஒன்றும் வைத்து இருந்தார். அவை இரண்டும் ஒரே இடத்தில் இருந்தன. எவ்வித முரண்பாடும் இல்லாமல் தற்பொழுது முகப்பு மட்டும் மாற்றம் பெற்று அப்படியே இருக்கிறது, இந்தப் பள்ளிவாசல்.

இந்தப் பள்ளியின் முகப்பில் இரண்டு கபுறுஸ்தானிகள் (புதைகுழிகள்) உள்ளன. இவைகளில் தலைப்புக் கற்களில் (மீஸான்) ஒன்றில் குடையும் பிறிதில் நான்கு இதழ்கள் கொண்ட மலரின் வடிவம் பொறிக்கப்பட்டு அரபி எழுத்துகளுடன் காணப்படுகின்றன. கி.பி. 1921ல் இவைகளை ஆராய்ந்த அரபி ஆராய்ச்சியாளர்கள் ஒருவர், திருக்குர்ஆனின் திருவசனங்களுடன் (55:26) ஒரு பெண்ணின் தியாகத்தையும் குறிப்பிடுவதாகவும் வரைந்துள்ளார் .

அடுத்து இந்தப் பள்ளியிலிருந்து கடற்கரை செல்லும் வழியில் புஞ்சை ஒன்றில் இரண்டு நீண்ட கற்தூண்கள் பூமியில் புதையுண்டு இருக்கின்றன. இந்த இடத்தை கோட்டை வாசல் என இந்த ஊர் மக்கள் வழங்குகின்றனர். அவைகளுக்கு அண்மையில் மற்றும் மூன்று கற்கள் ஆய்தப் புள்ளி போல நடப்பட்டு உள்ளன. மார்க்கோபோலோ, கரை இறங்கிய பட்டினத்தில் ஒரு ஸ்தூபி நாட்டப்பட்டு இருந்ததாகக் குறிப்பிட்பட்டுள்ளது மற்றும் கி.பி. 1340ல் ஹொய்ராள மன்னனான வீரபல்லாள தேவர், மதுரை சுல்தான்களை வெற்றி கொண்ட நினைவாக சேது மூலத்தில் வெற்றித்தூண் ஒன்றை எழுப்பியதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இங்கிருந்து சேது அணை இரண்டு கல் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது). இந்த இரண்டு ஜயஸ்தம் பங்களின் சிதைவாக இந்தக் கல்தூண்கள் இருக்கலாம் என்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. முழுமையான அகழ்வு ஒன்றினால்தான் இதனை நிரூபிக்க முடியும்.

மேலும், இந்தக் கிராமத்தின் தெற்கு தென்மேற்குப் பகுதிகள் மேடாக உள்ளன. கிராமத்திற்கும், கிராமத்தை யொட்டியும் அறுபதுக்கு மேற்பட்ட குளங்கள் உளளன, வேறு எந்தக் கிராமத்திலும் இந்த அளவில் குளங்கள் இருப்பதில்லை காலப் போக்கில் மண் மேடிட்டு நிலை குலைந்த பேரூரின் தாழ்வான பகுதிகள் இங்ஙனம் குளங்களாக அமைந்து விட்டன போலும். பொதுவாக இந்த ஊரில் பெலும்பாலான இடங்களில் தோப்பு, கிணறு அமைப்பதற்கு நிலத்தைத் தோண்டும் பொழுது, நல்ல கற்களினாலான கட்டுமானம் தென்படுகிறது, அவைகளை உடைத்துக் கற்களை வீடுகள் கட்டுவதற்கு இன்றளவும் இந்த ஊர் மக்கள்பயன்படுத்தி வருகின்றனர். இத்துடன் அவ்வபொழுது பழங்கால பொருட்களும் கிடைக்கின்றன.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கிராமத்தில் ஆராய்ந்து எடுக்கப்பட்ட பல வகையான நாணயங்களைப் பற்றிய விவரங்கள் ஈண்டு கொடுக்கப்பட்டுளன. அந்த நாணயங்களை வகைப்படுத்தி ஆய்வு செய்ததில் மிகவும் பழமையான சங்ககாலச் செப்பு நாணயம் ஒன்றும் எந்த ஆட்சியாளர்களால் வழங்கப்பட்டது என இனம் கண்டு கொள்ள இயலாத மூன்று சிறிய தங்கக் காசுகளும் கிடைத்துள்ளன. சங்க காலச் செப்புக் காசு நீண்ட சதுர வடிவில் ஒரு புறம் மட்டும் யானை இலச்சினையுடலும் திரிசூலத்தூடனும், சந்திரனுடனும் காணப்படுகிறது. தங்கக் காசுகளில் ஒரு புறம் மூன்று வரிசையில் பதினொரு புள்ளிகளைத் தாங்கிய ........திகளும் மறு புறத்தில் ஒன்பது புள்ளி......மேல ஆரம் போன்ற யோடும் .........தனிப்புள்ளியொன்றும் அதனையடுத்த வளை.. புள்ளி யொன்றுமாகக் காட்சியளிக்கிறது.

பல்லவர் காசு:
இங்கு கிடைத்துள்ள ஒரே ஒரு காசு பல்லவர் ஆட்சியைக் குறிப்பது. ஒரு புறம் எருதும், சந்திரனும் பொறிக்கபட்டது.

சோழர் காலக் காசுகள்:
இங்கு கிடைத்துள்ள காசுகள் அனைத்தும் செப்புக்காசுகள் இவை பெரும்பாலும் நின்ற நிலையிவட மனிதன் ஒருவன் நிற்பது போன்றும் அருகில் திரிசூலம், தண்டம் ஆகியவை ஒரு புறமம், மறுபுறத்தில் அமர்ந்த நிலையில் உள்ள மனிதனது உருவமும் உடையதாக இருக்கின்றன. இந்தக் காசுகளை காலக் காசு என இங்குள்ள மக்கள் சொல்லுகின்றனர். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டைப் பராமரித்த இலங்கைத் தண்டநாயகன் கொற்கையிலிருந்து வெளியிட்ட ஈழக்காசுகள் தான் அவை. 

மீண்டும் பாண்டிய நாடு சோழர் பிடியில் வந்தபொழுது இதே காசுகளை சிறு மாற்றங்களுடன் வெளியிட்டதாகத் தெரிய வருகிறது. ராஜ ராஜ ஸ்ரீ என்ற சொற்கள் தேவநாகரி லிபியுடன் காணப்டுகின்றன. அவைகளில் ராஜராஜ சோழனது, பாண்டியனது மீன்களும், புலியும் ஒரு சேரப் பொறிக்கப்பட்ட செப்புக் காசு ஒன்றும் கிடைத்துள்ளது.

பாண்டிய காசு:
இந்தக் காசுகள் அனைத்தும் பன்னிரெண்டாம் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சோழர்களது காசுகளைவிடச் சிறியதாகவும் நிறையில் குறைவாகவும் உள்ளன. இவற்றில் சுந்தர பாண்டியனது செப்புக்காசுகள் நிறைய உள்ளன. அவனது எல்லாத்த தலையானான பூதல கச்சி வழங்கிய பெருமானட் சுப என்ற தொடர்களுடன் வெளியிடப்பட்டவை. இவைகளைத் தவிர பிற்காலப் பாண்டியர்களது, புவனே வீரன் சமரகோலா கலன் ஆகியோர்களது காசுகளும் இங்கே கிடைத்துள்ளன. இவை அனைத்திலும் இரண்டு மீன்களும் அமர்ந்த நிலையில் உள்ள மனித உருவமும் பொறிக்கபட்டுள்ளன. சில காசுகளில் மட்டும் சிறு சிறுமாற்றங்கள் உள்ளன.

மதுரை சுல்தான்கள்:
டில்லிப் பேரரசிலிருந்து தன்னுரிமை பெற்று 1333 முதல் 1378 வரை மதுரையைக் கோநகராகக் கொண்டு மதுரை இராமநாதபுரம் சீமைகளையும் தஞ்சை, திருச்சி மாவட்டப் பகுதிகளையும் ஆண்ட மதுரை சுல்தான்கள் அறுவரில் மூவருடைய காசுகள் கிடைத்துள்ளன. முகம்மது அஹ்ஷன் ஷா, சுல்தான் முபாரக்ஷா, பக்ருதீன் அஹமது ஆகியோர் வெளியிட்டவை. இவை தவிர இவர்களது காலத்தில் டில்லியில் ஆட்சி புரிந்த முகம்மது பின் துக்ளக்கின் வெள்ளிக் காசு ஒன்றும், செப்புக்கதாசுகளம் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த அக்பர் சக்கரவர்த்தியின் சமசதுர வடிவத்திலான வெள்ளிக்காசு ஒன்றும் (வேலைப்பாடு மிக்கவை) கிடைத்துள்ளன).

பிற மன்னர் காசுகள்:
இந்தக் காசுகளைத் தவிர பிற்கால விஜயநகர மன்னர்கள், தளவாங்களது 16 வர் 17 வது நூற்றாண்டைச் சேர்ந்தவையும், வடிவில் மிகவும் சிறியவையுமான செப்புக்காசுகள் பலவும் இங்கு அகழ்ந்து எடுக்கபட்டு இருக்கின்றன. இவைகளில் கிருஷ்னன், அனுமன் ஆகிய கடவுள் வடிவங்களும் ஸ்ரீசக்கரம் போன்ற பிற சின்னங்களும் உள்ளன. மற்றும், இந்தப் பகுதியயை ஆண்ட சேது மன்னர்களது செப்புக் காசுகளும் கிடைத்துள்ளன. இவைகளில் ஒரு புறம் சேதுபதி என்ற எழுத்துக்களும், மறுபுறத்தில் கணபதியின் வடிவம் பொறிக்கப்பட்டுள்ன. தொடர்ந்து இந்தப்பகுதியில் 17வது நூற்றாண்டின் இறுதியில் வியாபாரச் செல்வாக்குடன் விளங்கிய டச்சுக்காரர்கள் தங்கள் அரச இலச்சினையுடன் கி.பி. 1704, 1750, 1760 வருடங்களில் வெளியிட்ட செப்புக் காசுகளும் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியில் தராசுக் சின்னத்துடன் அரவி, ஆங்கிலச் சொற்களுடன் வெளியிட்ட செப்புக் காசுகள் சிலவும் அகழ்ந்து எடுக்கபட்டு இருக்கின்றன.

மேலும், இந்த சிற்றூரை கடந்து விட்ட பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தொடர்பு படுத்தி நினைவு படுத்தும் ராஜபாட்டையும், அதில் அமைந்துள்ள பழமையான வட்டக் கிணறும் உள்ளன. இந்தக் கிணறு சோழ வளநாட்டு புலியூர்க் கூற்றத்தைச் சேர்ந்த சிறுத் தொண்டன் என்பவரால் அமைக்கப்பட்ட தர்மம் என்பதை அந்தக் கிணற்றின் உட்புறத்தில் உள்ள சிதைந்த கல்வெட்டு சுட்டுகிறது. கல்வெட்டில் கையாளப்படுள்ள எழுத்துகளின் வடிவத்திலிருந்து இந்தக் கல்வெட்டுக் கிணறு பன்னிரென்டாவது நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை அறுதியிட முடிகிறது. வலுவிழந்த பாண்டிய நாடு பத்து, பதினொன்று, பன்னிரென்டாவது நூற்றாண்டுகளில் சோழர்களது நேரடியான ஆட்சியிலும், பிடிப்பிலும் இருந்து வந்தக் காலை, சோழர் நாட்டு பிரதிநிதியான சிறுத்தொண்டன் என்பவர் அந்தக் கிணற்றையும் இந்தக் கிணற்றையொட்டிய இடத்தில் இருந்து அழிந்து விட்ட அன்ன சத்திரத்தையும், இராமேசுவர தலயாத்திரை செல்லும் யாத்ரீகர்களது பயனுக்காக அமைத்திருந்ததார் எனக் கொள்வது பொருத்தமுடையதாக இருக்கிறது. இதனைக் தொடர்ந்து கோவில் ஒன்று அமைந்து இருந்து அழிந்து விட்டதாகவும் அதனை ஈஸ்வரன் கோவில் என இன்றும் மக்களால் வழங்கபட்டு வருகிறது. இன்றும் சற்று தொலைவில் உள்ள ஊரின் வடகிழக்கின் பகுதியில் டச்சசுக்காரர்களால் அமைக்கப்பட்ட சர்வேஸ்வரன் தேவலாயம் முத்துப்பேட்டைஎன்ற பகுதியில் உள்ளது. சேது மன்னரது தன்னறியில் வளர்ந்த அந்த ஆலயம் இன்று நன்கு பராமரிக்கபட்டு வருகிறது. முந்தைய நாளங்காடியாக விளங்கிய இந்தப் பகுதியல் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

இங்ஙனம் தொண்மையை தொடர்பு படுத்திச் சொல்லும் நூல்களுக்கு ஆதாரமாக நாணயங்களும், கல்வெட்டு போன்ற தடயங்களும் மன்னார் வளைகுடாவில் உள்ள தொண்டி, தேவிப்பட்டினம், வேதாளை, மரைக்காயர் பட்டினம், கீழக்கரை ஆகிய பழம்பதிகளில் இதுவரை அகழ்ந்து எடுக்கப்படவில்லை. பிற ஆதாரங்களும் வெளிபபடுத்தப்படவில்லை. ஆதலின், மேலே சுட்டிக் காட்டப்பட்ட சான்றுகளை பொருத்தமுடைய, சரியான ஆதாரங்களாகக் கொள்ளும் பொழுது, பன்னிரென்டாம் நூறாறாண்டில் பராக்கிரம பட்டினமாகவும், பவித்திர மாணிக்கபட்டினமாகவும் பதின்மூன்று, பதினான்காம் நூற்றாண்டுகளில் பத்தன் பத்னி எனவும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ள பெருநகர் இன்றைய பெரியபட்டினம் என்று தீர்க்கமான முடிவிற்கு வருவது எளிதாகியுள்ளது.

பிரபல வரலாற்றாசிரியா் டாக்டா் முகவை எஸ்.எம் கமால்

பிற நாடுகளில் தமிழகத் தொடர்பு:
தமிழகம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கடல் வழியாக வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தது என்பது சங்க இலக்கியங்களாலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களாலும், அரிக்கமேடு முதல் கொடுமணல் ஈறாகப் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்வுகளாலும் தெளிவாக்கபட்டுள்ளது.

சீனம், கிழக்காசிய நாடுகள், இலங்கை, யவனம் முதலிய நாடுகளுடன் சங்ககாலத் தொடர்புகள் தமிழகத்தில் பல இடங்களில் கிடைத்தாலும் வெளிநாடுகளில் பிற்காலத் தொடர்புச் சன்னங்கள் கிடைத்தனவே அன்றி முற்காலச் சின்னங்கள் இதுவரை கிடைக்கப் பெறாமலிருந்தன.

அந்நிலை இன்று ஓரளவு மாறித் தமிழகப் பண்டைச் சின்னங்களும் அங்கு கண்டறியப்பட்டுள்ளன. எகிப்து நாட்டு நைல் நதிக்கரையில் 'கேணன்', 'சாதன்' எனத் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பனை ஓடுகளை அமெரிக்கத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதைத் தமிழ் அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.

அண்மையில் ஜப்பான் நாட்டுத் தென்கிழக்கு ஆசிய ஆய்வு நிறுவன ஆதரவில் வரலாற்று ஆய்வாளர்கள் மலேசியக் கடலாய்விலும், தாய்லாந்திலும் கன ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் தாய்லாந்தில் சங்ககாலச் சோழரின் சதுரப் புலிக் காசினையும், 'பெரும்பதன் கல்' என்று தமிழி எழுத்துப் பொறிக்கப்ட்ட சிறு கல்லையும் கண்டறிந்து வந்துள்ளனர். இது தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் செய்தியாகும்.

துறைமுகங்கள்:
பல்லவர் கால முதலே தமிழகக் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் செயல்படத் தொடங்கின. சோழர்கள் காலத்தில் அலைகடல் நடுவுகள் பலகலம் செலுத்திய அத்துறைமுகங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்;கின. பிற்காலத்திலும் 19ஆம் நூற்றாண்டு வரை கடல் வாணிகம் நடைபெற்றமைக்குப் பல சான்றுகள் உள்ளன.

துறைமுகங்கள் 'கரைதுறை' என அழைக்கப்பட்டன, பட்டினங்கள் எனவும் அழைக்கபட்டன. அவை நாகப்பட்டினம், ஜயங்கொண்ட சோழப்பட்டினம், வீரசோழன் பட்டினம்;, சாளுவ நாயக்கன் பட்டினம், பாசிப்பட்டினம், சுந்தர பாண்டியன் பட்டினம், கண்கொள்ளான் பட்டினம், தொண்டிப் பட்டினம், உலகமாதேவிப்பட்டினம், முடிவீரன் பட்டினம், மரைக்காயர் பட்டினம், இராமேசுவரப் பட்டினம், பெரியப் பட்டினம், சீவல்லப்ப பட்டினம், குலசேகரப் பட்டினம் என்பவைகளாகும். 

அரிக்கமேட்டிலும் அழகன்குளத்திலும் ரோமானியத் தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூம்புகார், கொற்கை, அழகன்குளம், அரிக்கமேடு, வசவசமுத்திரம், மாமல்லை ஆகியனவும் கீழக்கடல் பகுதியில் உள்ள முக்கிய நகரங்களாகும். இத்துறைமுககங்கிளல் 'ஏறுவன இறங்குவன' என்றும் 'ஏறுசாத்து' 'இறங்குசாத்து' என்றும் ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்கள் குறிக்கப்பட்டன. அப்பொருட்களை ஒரு கல்வெட்டு எடுப்பன, நிறுப்பன, விரிப்பன, பிடிப்பன, அளப்பன, முகப்பன, அழுகல் சரக்கு எனவும் அழைக்கிறது.

பேட்டை சந்தை முதலிய வாணிகத் தலங்கள் பெருகின, பேட்டைகள் பொது வணிக இடமாக இருந்தவை ஆட்டுப்பேட்டை, நெல்லுப்பேட்டை எனத் தனி வணிக இடங்களாகவும் மாறின. தொழிற்கூடங்கள் 'பட்டை' என்று அழைக்கபட்டன. பதினெட்டுப் பட்டடை என்பது வழக்கு. கடற்கரையில் அமைக்கப்பட்ட இத்தொழிற்கூடங்கள் (குயஉவழசநைள) 'பெத்திரி வீடு' எனப்பட்டன.

பொருள் சேமிப்பிடங்கள் கிட்டங்கி, கிடங்கு, கட்டியம் என அழைக்கபட்டன. தானியங்கள் பொதி, சுமை, கண்டி, கரிசு, மூட்டை, பாக்கம் என்ற அளவுகளில் குறிக்கப்பட்டன. நிறுக்கப்பட்ட பொருள்கள் துலை, கட்டி, பாரம் எனவும், எண்ணெய் முதலிய தரவப் பொருட்கள் ஆடம், காணம் எனவும், துணிகள் கட்டு, சிப்பம் என்ற அளவுகளிலும் குறிக்கப்பட்டன.

துறைமுகங்களில் பொக்குவரத்துக் கப்பல், பாறு, படகு, தோணி, சுரிப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்ன.

பெரியப்பட்டினம்:
கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களில் இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம் பெரியப்பட்டினம் மிக முக்கியமான துறைமுகம் ஆகும். மார்க்கோபோலோ, இபின் படுடா போன்றவர்கள் ஃபக்தன் அல்லது பத்தன் எனக் குறிப்பிட்டது இவ்வூரையேயாகும். பாண்டிய மன்னர்கள் பெயரால் 10 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் பராக்கிரம பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. 12 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் பவித்திர மாணிக்கப்பட்டினம் எனச் சிறப்புப் பெயர் பெற்றுள்ளது. 14 ஆம் நூற்றாண்டு சீன நூல் ஒன்றில் (வுயi-i-உhih-டரஉh) 'தா பத்தன்' எனக் குறிக்கப்பட்டுள்ளது. தா என்றால் பெரிய என்று பொருள். தாபத்தன்-பெரியபட்டினம் ஆகும். அமிர்குஸ்ரு, பரிஷ்கா போன்ற ஆசிரியர்களும் பெரியபட்டினத்தைப் பத்தன், பத்னி எனவும் அழைத்தனர்.

மகாவம்சத்தில்:
பாண்டியர் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கைப் படைத் தலைவன் ஜகத்விஜயத் தண்டநாயகன் 1170-ல் தமிழ் நாட்டின் மீது படைகொண்டு வந்தான். குலசேகர பாண்டியனுக்கு எதிராகப் பராக்கிரம பாண்டியனுக்கு ஆதரவாக இராமேசுவரம் தீவைக் கைப்பற்றி எதிர்கரையில் இறங்கியபோது கண்ட பெரியப்பட்டினம் நகர வருணனை இலங்கை மகாவம்சத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

பராக்கிரம பட்டினம் மூன்று சுற்றுக் கோட்டை மதில்களையும், பன்னிரண்டு வாயில்களையும் உடையது என்று கூறப்படுகிறது. பெருநகரான அப்பட்டினத்தைக் கைப்பற்றிப் பலப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் இலங்காமணி, ஈழக்காடு, ஈழம்படல், இலங்கைர் மேடு, ஈழவனூர், ஈழவன் கோட்டை என்ற பெயர்களில் இன்றும் ஊர்கள் இருப்பது இலங்கைத் தொடர்பை நினைவூட்டுகிறது.

1293-ல் சீனத்திலிருந்து இலங்கை வழியாகத் தமிழகம் வந்த உலகப் பயணி மார்க்கோபோலோவும், இபின் படுடாவும் பெரியபட்டினக் கரையில்தான் தரை இறங்கினர்.

அரேபிய சுல்தான் ஆட்சி:
கி.பி. 1188-ல் மதினத்திலிருந்து காயல்பட்டினத்திற்குச் சமயப் பணிக்காக வந்த சுல்தான் செயது இபுறாகீம் பவித்திர மாணிக்கப்பட்டினத்தில் ஆட்சிபுரிந்த விக்கிரம பாண்டியனைக் குலசேகரனுடன் நட்புரிமை பாராட்டி 1199 வரை இங்கு ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது.

சுல்தான் சையது இபுறாகீம் வாழ்க்கையைத் தமிழ்க் காப்பியமாகச் செய்த வண்ணக்களஞ்சியப் புலவர் பவித்திர மாணிக்கப்பட்டினம் மதுரை மூதூரையும் விஞ்சிய வளமுடையதாகக் குறிக்கிறார்.

திருப்புல்லாணிக் கல்வெட்டில்:
இராமநாதபுரத்திற்கு அண்மையில் உள்ள திருப்புல்லாணிக் கல்வெட்டு ஒன்று பவித்திரமாணிக்கப்பட்டினம் எங்குள்ளது என்பதை விளக்குகிறது. 1251 முதல் 1271 வரை மதுரையை ஆட்சிபுரிந்த சடையவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டில் பவித்திரமாணிக்கப் பட்டினத்தில் உள்ள சோனச் சாமந்தப் பள்ளிக்கு இறையிலியாக மருதூர், ஆம்புத்தூர் ஆகிய ஊர்களை வழங்கினான். 'கீழ்ச்செம்பிநாட்டு பவித்திர மாணிக்கப்பட்டினக் கீழ்ப்பால்' என்று குறிக்கப்படுகிறது. திருப்புல்லாணிக் கோயிலிலிருந்து நான்கு மைல் தொலைவில் கிழக்கே அமைந்திருப்பதும் இன்றைய பெரியப்பட்டினமும், பவித்திரமாணிக்கப்பட்டினமும் ஒன்றே என்பதை உறுதிப்படுத்துகிறது.

வெளிநாட்டார் குறிப்புகளில்:
மன்னார் வளைகுடாவில் பெரியப்பட்டினம் பகுதியில் முத்துக் குளிப்பதைப் பற்றி மார்க்கோபோலோ விரிவாக எழுதியுள்ளார். முத்துக் குளிக்கச் செல்லும் படகுகள் 'பத்தலாறு' என்ற இடத்தில் ஒன்று கூடுகின்றன. அந்தப் பத்தலாற்றைப் பெரியபட்டினம் அருகே உள்ள 'கப்பலாறு' என்று ஆய்வாளர் எஸ். எம். கமால் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்.

இராமேசுவரம், திருப்புல்லாணி போன்று பெரியப்பட்டினம் அருகேயுள்ள கொயில்கட்கு முத்துக் குளித்தலில் ஒரு பங்கு கொடையாகக் கொடுக்க வேண்டும் என்று செப்பேடுகள் கூறுகின்றன. உள்ளிக் கோட்டையில் ஏற்றுமதியாகும் பொருள்களில் இராமேசுவரம் பகுதி நன்முத்துக்கள் இடம் பெற்றிருந்தன. பெரியப்பட்டினத்தின் ஒரு பகுதிக்கு முத்தப்பேட்டை என்றே பெயர்.

பெரியப்பட்டினத்தில் அரேபியக் குதிரைகள் வ்நது இறங்கியுள்ளன. அவைகளைக் கண்காணிக்கக் குழு ஒன்றும் இயங்கியது. இபின் படுடா 1344-ஆம் ஆண்டு பத்தனில் மூன்று மாதங்கள் மதுரை சுல்தானின் விருந்தாளியாகத் தங்கியிருந்தார். பெரிய பட்டினத்தை அழகிய பெரிய நனரம் என்றும், சிறந்த துறைமுகம் என்றும், மரத்தலால் செய்ய்பட்ட அரங்கமும் மூடுவழியும் இருந்ததென்றும், போர் வீரர்கள் காத்திருந்தனர் என்றும் ஏமன் நாட்டுக்குச் செல்ல எட்டுக் கப்பல்கள் நின்றன என்றும் இபின் படுடா கூறிளள்ளார்.

இங்க கல்லால் கட்டப்பட்ட தொழுகைப் பள்ளியைப் பற்றி அவர் குறிப்படகிறார். அத்தொழுகைப் பள்ளி இன்றும் உள்ளது.

அகழாய்வு:
வரலாற்றுச் சறப்புமிக் உலகப் பயணிகள், உயர்வாக்குறித்த பெரியபட்டினத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கலவெட்டியல் துறையினர் அகழாய்வு நடத்தினர். அ;குள்ள் நத்தமேடு, களிமண் குண்டு ஆகிய மேட்டுப்பகுதிகள் கண்டறியப்பட்டன. அவை முறையே 25, 40 ஏக்கர் பரப்புள்ளவை, இவ்விரு பகுதிகளும் பெரியபட்டினத்திற்கு மேல் எல்லையில் உள்ளன.

இங்க நடத்தப்பட்ட அகழாய்வில் சீனநாட்டு உயர் ரகப்பீங்கான் துண்டுகள் (ஊநடயனழn றுயசந) மிக அதிகமாகக் கடைத்தன. மதுரைப் பாண்டியர், சுல்தான், சோழர் காசுகளுடன் சீனக் காசும் கிடைத்துள்ளது. இது வட்டக்காசில் நடுவே சதுரமான துவாரம் உள்ள காசாகும். சீனப் பெலுட்கள் கி.பி. 9 அம் நூற்றாண்டிற்கும் 14 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டவை.

உறை கிணறுகள் சில கண்டறியப்பட்டன. இங்குள்ள மூன்று தூண்களைக் கோட்டை வாசல் என அழைக்கின்றனர். இங்கு கிடத்த சீனப் பீங்கான்கள் தென் கிழக்காசிய நாடுகளிலும் இலங்கையிலும், கிழக்கு ஆப்பிரிக்க கரைப் பகுதிகளிலும் கிடைத்துள்ளன.

சோழர்கட்கும் சீன நாட்டுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளன. சீனாவில் தமிழ்க் கல்வெட்டு கண்முடுபிடிக்கப்பட்டுள்ளது. பாண்டியர் சார்பில் தூதுவர்கள் சீனம் சென்றுள்ளனர். கிழக்கு - மேற்கு நாடுகளின் கடல்வழிப் பயணத்தில் பெரிய பட்டினம் மிகவும் முக்கிய நகராக விளங்கிளுள்ளது என்பதில் ஐயமில்லை.

ஜப்பான் பேராசிரியர் நொபுரு கராஷிமா அவர்கள் 1987 ஆம் ஆண்டு கொலாலாம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பெரியபட்டினம் அகழாய்வு குறித்துச் சிறப்புரை ஒன்றை நிகழ்த்தினார்.

தமிழ்ப் பல்கலைக்கழகக் கலவெட்டில் முறை பெரியபட்டினத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபொது நொபுரு கராஷிமா, யோஜி ஒயாகி, ஈஜி நிட்டா பொன்ற ஜப்பான் நாட்டுப் பேராசிரியர்களும், சென்னைப் பேராசிhயர் டாக்டர் கே.வி. இராமன் அவர்களும் வருகை பரிந்து ஆலோசனை வழங்கினா. டாக்டர் ஒங். சுப்பராயலு, டாக்டர் கே. ராஜன் ஆகியோர் நாகப்பட்டினம் வரை கழக்குக் கடற்கரையில் பல பகுதிகளில் கள ஆய்வை மேற்கொண்டனர். 

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.