Our Blog

சங்க இலக்கியத்தில் பரதவர்கள்


தமிழ் நாட்டில் ஆதி வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த பல்வேறு சமூகக் குழுக்களுள் ஒன்று வேளிர் என்ற குழு. இன்னொன்று பரதர் என்ற குழு.இக்குழுக்களைச் சார்ந்தோர் ஆதி வரலாற்றுக்க்காலத்தில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்ததற்கான சான்றுகள் கல்வெட்டுச் சான்றுகளும் தொல்லியல் சான்றுகளும் உள்ளன என்பதை பேராசிரியர் ஸெனெவிரத்ன எட்டுத்துறைத்துள்ளார்// ( கா.இந்திரபாலா- இலங்கையில் தமிழர் - ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு) மேலும் பரதர் என்ற குழுவினர் சங்கச் செய்யுள்களில் பல முறை குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தமிழக கரையோரப்பட்டினங்களில் இவர்கள் கடல்சார் தொழில் புரிவோராகவும் வணிகராகவும் செல்வாக்குப் பெற்றிருந்தனர் (( கா.இந்திரபாலா- இலங்கையில் தமிழர் - ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு) ) நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்களை சங்க இலக்கியங்கள் ‘பரதவர்” என்று அடையாளப்படுத்துகின்றன. ஐந்து வகை திணைகளாக வகுக்கப்பட்ட நிலங்களில் நெய்தல் நிலத்தின் திணைக்குரிய தலை மக்களாக ஆண்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் சேர்ப்பன், புலம்பன், கொண்கன், துறைவன், ஆகியோரும் பெண்களாக பரத்தி, நுளைச்சி என்றும் குறிக்கின்றன.

நெய்தல் நிலத்திற்குரிய மக்களாக ஆண்கள் பரதர், நுளையர், அளவர் பெண்களாக நுளைச்சியர் பரத்தியர், அளத்தியர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர். உப்பு வணிகம் செய்தவர்களை உமணர் என்கிறது சங்கப்பாடல்கள். மீனவர்களில் ஒரு பிரிவினரான நுளையர் என்ற பெயர் அகநானூற்றிலும் திமிலர் என்ற பெயர் மதுரைக் காஞ்சியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பரதவர் என்ற பெயர்தான் பெரும்பாலான சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. பரதவர்கள் காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்ததாக பட்டினப்பாலை கூறுகிறது.

புறநானூறு - //திண் திமில் பரதர்// ( உறுதி மிக்க படகையாளும் பரதவர்) பட்டினப்பாலை - //புன் தலை இரும்பரதவர்// (உப்பு நீர் படுவதால் பழுப்பேறிய தலைமுடியைக் கொண்ட வலிமைமிக்க பரதவர்) நுண் வலைப் பரதவர், பெருங்கடல் பரதவர், பழந்திமில் கொன்ற பரதவர், வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர், ’உரைசால் சிறப்பின் அரசுவிழை திருவின் பரதவர் மலிந்த பயங்கொழு மாநகர்” ( மனையறம் படுத்த காதை) ’’அரச குமாரரும் பரவ குமாரரும்” (இந்திர விழா ஊர் எடுத்த காதை) அரசர் முறையோ பரதர் முறையோ” இந்தப் பாடல்கள் பரதவருக்கும் கடலுக்கும் உழைப்பிற்குமான தொடர்பை நமக்குக் காட்டும் சித்திரங்கள் இவை, பரதவர்கள் சங்ககாலத்திலும் அதன் பின்னரும் மீனவர்களாக, முத்துக்குளிப்போர்களாக, வணிகர்களாக, சிற்றரசர்களாக, படைத்தலைவர்களாக, எதிரிப்படைகளில் பங்கு கொண்டவர்காளாக வரலாற்றில் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான் ஆதாரமாக ஏராளமான பாடல்கள் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன.

பாண்டியர்களின் பண்டைத் தலைநகரான கொற்கையும், கோவலன் கண்ணகி கதையும், காவிரிப்பூம்பட்டினமுமாக செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்ந்த சமூகங்களில் பரதவர்களும் பிரதானமானவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் இவை. இந்த பரதவர்கள் வரலாற்றில் யாருங்கும் அடங்காமல் செருக்கோடு வாழ்ந்ததும் சில நேரங்களில் சோழர்கள் இவர்கள் மீது படையெடுத்தமையும் பல நேரங்களில் நாடு பிடிக்கும் ஆசையோடு கடல் கடந்த போது பரதவர் துணையோடு போர் புரிந்தமைக்கான சான்றுகளும் உள்ளன.

‘தென்பரதர் மிடல் சாய வட வடுகர் வாள் ஒட்டி” என்கிற புறநானூற்றுப் பாடல் மூலம் அவர்கள் பாண்டியர்களின் ஆளுகைக்குட்படாத தனி இனக்குழுவாக பிரத்தியேக ஆட்சி முறையை நடத்தியிருக்கிறார்கள் என்பதும் அவர்களை பாண்டியர்கள் போர் செய்து வென்றதையும் உணர்த்துகிறது. சிலப்பதிகார காலத்திற்குப் பிந்தைய மதுரைக்காஞ்சியில் பாண்டியர்கள் பெரும்படை திரட்டி பரதவர்களோடு போர் புரிந்ததை ‘’தென் பரதர் போர் ஏறே” என்கிற பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நிலத்தை ஐந்து வகை திணையாகப் பிரித்து இந் நிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையினை பட்டியலிட்டது சங்ககாலம். பின்னர் பேரரசுகளின் விரிவு வெளிநாட்டு ஆதிக்கத்தின் இடையீடு பிராமணீயத்தின் செல்வாக்கு, ஆகியவற்றின் காராணமாக மருத நிலம் தவிர்த்த ஏனைய நிலங்கள் படிப்படியாக மறைந்து பின்னில்லைக்குச் சென்றன என்கிறார் -பேராசிரியர் சிவத்தம்பி. (நூல்- பண்டைத் தமிழ்ச் சமூகம்)

தமிழகத்தின் மிக தொன்மையான பல சமூகங்கள் வரலாற்றுப் போக்கில் சாதி ரீதியாக தங்களை மேன்மைப்படுத்தும் போக்கை நீண்ட காலமாக செய்து வருகின்ற நிலையில் ஒரு சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் அசைவியக்கத்தை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது அவ்வளவு எளிமையான ஒன்றல்ல, தமிழ் சமூகத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு வாழ்ந்து வரும் கடலோரச் சமூகங்களில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் சமூகம் பரவர். இன்றைக்கு பரதவர் என்ற பெயரில் இராமேஸ்வரம் தொடங்கி கன்னியாகுமரி வரை வங்கக்கடலோரத்திலும், கன்னியாகுமரி தொடங்கி கேரளக் கரையோரங்களிலும் இலங்கை கரையோரங்களிலும் வாழ்கிறார்கள் இவர்கள்.

பரவர் அல்லது பரதவர் என்பது தற்காலத்தில் சாதிப் பெயராக அடையாளம் காணப்பட்டாலும் அது சாதிப் பெயர் அல்ல பண்டை இலக்கியங்களில் நெய்தல் என்னும் திணையின் தலைவர்களாக வருகிறவர்களே இந்த பரவர்கள். பரதவர்களில் பல சாதிகள் இன்று தங்களை சைவ மரபினராக மாற்றிக் கொண்டுள்ளனர். காலம் தோறும் ஒடுக்கப்பட்ட சமூங்களை தூய்மைப்படுத்திக் கொள்ளவும் மேன் மக்களாக காட்டிக் கொள்ளவும் பிற இழிந்த சாதியினரை விட தாங்கள் மேலானவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளவும் மரபை மாற்றிக் கொள்வதுண்டு. அந்த வகையில் உப்பு வணிகத்தோடு தொடர்புடைய நெய்தல் நில மக்களை நாட்டுக்கோட்டை செட்டியார்கள் என்று சொல்கிறவர்களும் உண்டு.

இவர்கள் உமணர்கள் என்றும் வணிக உமணர்கள் என்றும் சில குறிப்புகளும் ஆய்வுகளும் சொல்கின்றன. பொதுவாக இன்றைக்கு செட்டியார்கள் என்றழைக்கப்படுவோரிடம் மீன் பிடிச் சமூகங்களின் எச்சங்கள் இருக்கிறthu. சங்க இலக்கியங்கள் செட்டி என்றும் மாசத்துவன் என்றும் குறிப்பிடும் செட்டிகள் Paravar, கடல் வணிகத்தில் ஈடுபட்டவர்கள் என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இப்போதும் பரதவர்களிலும். காலப்போக்கில் நிலம் மறைந்து சாதிகள் ஆக்கம் பெற்ற போது பல சாதிகள் தங்களை சைவமாக மாற்றிக் கொண்டன அப்படித்தான் செட்டிகள் செட்டியார்கள் ஆகியிருக்கலாம். எட்கர் தர்ஸ்டனின் பரவன் பற்றிய குறிப்புகள்.

இன்னொரு கதை பரதவர்கள் தங்களை அயோத்தியைச் சார்ந்தவர்கள் என்றும் மகாபாரதப் போருக்கு முன்னர் யமுனைக்கரையில் வாழ்ந்ததாகவும் கூறிக் கொள்கின்றனர். சூத்திரப் பெண் ஒருத்திக்கு பிராமணன் வாயிலாக வந்தவர்கள் என்றும் இலங்கையில் இவர்கள் இராமனால் குடியமர்த்தப்பட்ட குகன் மரபினர் என்றும் தங்களை அழைத்துக் கொள்கிறார்காள். சென்ற யுகத்தின் முடிவில் உலகம் நீரால் சூழப்பட்டிருந்த போது தங்களைக் காத்துக் கொள்ளும் விதமாக ஒரு தோணியைச் செய்து அதில் ஏறி பயணப்பட்டு பின்னர் நீர்வற்றி தரை தட்டிய போது தாங்கள் குடியேறியதுதான் தோணிபுரம் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கதைகள் ///எவற்றுக்கும் ஆதாரங்கள் எதுவும் கிடையாது. இவைகள் பழமரபுக் கதைகளாகவோ புரானக்கதைகளாகவோ காலந்தோறும் மக்களிடையே வழங்கிவருகின்றன.

ஒரு காலத்தில் பரவர் செல்வாக்குடையோராகவும் கடற்பயணம் பற்றியதான தங்கள் அறிவின் காரணமாக அவர்கள் மற்ற சாதியார் மீது செல்வாக்குச் செலுத்துவோராகவும் இருந்துள்ளனர். இவர்களுள் சிலர் ஆதிரயரசர்கள் என்ற பெயரில் ஆண்டுள்ளதாகவும் தெரிகிறது. இவர்களுள் சிலர் உத்திரகோசமங்கையிலிருந்து ஆண்டதாகவும், அந்நாட்களில் கடலோரப்பட்டினமான இந்த நகரம் மங்கை என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இராமநாதபுரத்திற்கு அருகே உள்ள புகழ்பெற்ற இந்துக் கோவிலாக இன்று அது திகழ்கிறது// (எட்கர் தர்ஸ்டன்- தென்னிந்திய குலங்களும் குடிகளும், தொகுதி ஆறு ) இது போக வலைவீசு புராணத்தில் சிவன் பார்வதி தொடர்புடைய கதையொன்றும். 1912-ல் வெளிவந்த மேல் மலையனூர் வீரப்பதாசனார் எழுதிய ஆதி ஆதி ஐதீக புராணத்தில் பரதவர்களின் தொண்ணூறு மரபுகளை பட்டியிலிடுகிறது. (பரதவர் -அரு. பரமசிவம் -காவ்யா வெளியீடு)

இதெல்லாம் இன்றைய காலச் சூழலில் ஒவ்வாது என்னும் நிலையில், 1901-ல் சென்னை மாநில சாதிக் கணக்கெடுப்பில் // பரவன் என்பவன் முறையே தமிழ், மலையாளம், கன்னடம் ஆகினவற்றைப் பேசும் மூன்று சாதிகளாக உள்ளனர். இந்த மூன்று பிரிவினருமே தமிழ் பேசும் பரவன் அல்லது பரதவனின் வழித்தோன்றல்களே....இவர்களின் தலைமையிடம் தூத்துக்குடி ஆகும். (தென்னிந்திய குலங்களும் குடிகளும்-தொகுதி ஆறு) ஆனால் தூத்துக்குடி என்பது பரதவர்களின் பிற்கால தலைநகர்தான் பண்டையில் அவர்களின் பிரதான நகராக இருந்தது கொற்கை அது கடல் சார்ந்த இயற்கைப் பேரிடரில் பெரும் அழிவுற்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நினைவுக்கு எட்டிய காலத்திற்கு முன்பிருந்தே முத்துக்குளித்தல் தொழில் உரிமை பரவர்களிடமிருந்தது.

பழைய தமிழ் நூலான கலவேடு என்ற நூலில் பாண்டிய மன்னனுக்கும் முத்துக்குளிக்கும் பரவருக்கும் இடையேயான உறவு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. வேத நாராயணன் செட்டியும் முத்துக்குழிக்கும் பரவரும் மதுரையை ஆண்ட பாண்டியன் மகளான அல்லியராசானிக்கு கப்பம் செலுத்தி வந்தனர் என்கிறது அந்தக் குறிப்பு. அல்லியராசானி அவள் கப்பலில் பயணம் மேற்கொண்டிருந்த போது புயலில் அகப்பட்டு இலங்கையில் சென்று ஒதுக்கினாள். அங்கு அவர்கள் கரை ஒதுங்கிய நேர்கை, குதிரை மலை ஆகிய இரண்டு இடங்களை கண்டனர். வேத நாராயணன் செட்டி தன் கப்பலில் இருந்த செல்வம் முழுவதையும் அங்கே கொண்டு சேர்க்கும் படி பரவரை பணித்ததோடு கடல்கீலபம், கள்ளக்கிலபம் ஆகிய துறைகளில் முத்துக்குளிக்க ஏற்பாடுகள் செய்ததோடு இரும்பைப் பொன்னாக்கும் ரசாசவாதத்திற்கு உதவும் மரங்களையும் அங்கிருந்து கொண்டு வந்தான் என்கிறது அந்தக் குறிப்பு.

பாண்டியர் அரசு வலிமையானதாக இருந்தவரை பரவர்கள் பாண்டிய மன்னர்களிடமிருந்து பொது வரிவிதி்ப்பிலிருந்து விலக்கையும் பாதுகாப்பையும் பெற்று வந்தனர். 16-ஆம் நூற்றாண்டு வரை பரவர் செல்வச் செழிப்போடும், யாருக்கும் கட்டுப்படாமலும் வாழ்ந்து வந்தற்கான சான்றுகள் உள்ளன். மலபார் கன்னட கடற்கரை சார்ந்த கப்பல் படைத் தலைவனான வான் ரீதெயும், மதுரையினைச் சார்ந்த துறைமுகங்களின் தலைமை வணிகனான வயுரென்ஸ் ஆகியோர் எழுதிய கடிதங்கள் ஆதாரங்களாக உள்ளன. 19-02-1669-ல் எழுதப்பட்ட கடிதம் இப்படிச் சொல்கிரது “ இங்கு அவர்கள் (பரவர்கள்) அவர்களின் சாதித் தலைவனுக்கே கட்டுப்பட்டவர்களாக உள்ளனர்.

அரசனுக்கு ஆண்டுதோறும் கப்பமாக ஒரு தொகையைக் கட்டிவாந்தார்களே தவிற நாட்டின் பிற மக்களுக்கு உள்ளது போன்ற கடுமையான வரிச்சுமை ஏதும் இல்லை, அரசனின் நேரடி ஆளுகைக்குட்பாடாதவர்களாக தங்களால் தேர்ந்தெடுக்கபப்ட்ட சாதித் தலைமைகளால் ஆளப்படுவோராக பரதவர்கள் உள்ளனர் “ கொல்லம் முதல் இராமேஸ்வரம் வரை வாழும் பரவர் இந்த சாதித் தலைவருக்கு வரிச் செலுத்துகின்றார்கள் “ என்கிறது அந்தக் கடிதக் குறிப்பு. (எட்கர் தர்ஸ்டனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் - மேற்கண்ட கடிதம் பரதவரின் வாழ்வுக்கு ஒரு எடுத்துக்காட்டான ஒன்றாக விளங்குகிறது. வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டு அவர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்தமையும் அதுவே பல போர்களுக்கும் ஆக்ரமிப்புகளுக்கும் காரணமாக அமைந்ததையும் நாம் வரலாற்றை நோக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.
Thanks: Wikipedia

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.