Our Blog

ரிஜினா செலி


ரிலிக் என்று ஆங்கிலத்திலும் ரிலிக்யூயா என்று போர்த்துக்கீசிய மொழியிலும், அருளிக்கம் அல்லது திருப்பண்டம் என்று தமிழிலும் கூறப்படுவது, புதுமை வரம் கொண்ட புனிதர்களின் பொருட்கள் அல்லது அவையவங்களை குறிக்கும் சொல். ஏசுகிறிஸ்துவின் திரு உடல் விண்ணகம் சென்று விட்டாலும், அவர் இவ்வுலகில் விட்டுச் சென்ற முழுநீள அங்கி, திருமுகம் பதிந்த துணி, திரு இதயத்தை குத்திய ஈட்டி, கல்லறையில் அவரை மூடி இருந்த போர்வை, அவர் திருக்கரங்களையும், கால்களையும் துளைத்த ஆணிகள் இவற்றிற்கெல்லாம் வரலாறுகள் உண்டு. அவர் மரித்த திருச்சிலுவை சிறு சிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு, உலகின் பல ஊர்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில், வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் உள்ளது போல, நம் அன்னையின் ஆலயத்திலும், மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பொன்மயமான ஒரு பாத்திரத்தில், திருச்சிலுவையின் சிறு துண்டு ஒன்று உள்ளது என்பது அநேகர் அறியாத உண்மை. 

அதைப்போன்று மற்றுமொரு உன்னதமான அருளிக்கம் இருப்பதும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 15-ம் நூற்றாண்டில், கீழ்த்திசை நாடுகளின் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு, பரிசுத்த பாப்பரசரின் ஆணையின்படி போர்த்துக்கீசிய மன்னரே ஞானாதிக்கம் படைத்தவராய் இருந்தார். அதே காலகட்டத்தில், இங்கே கொடுங்கோல் நாயக்க, வடுக, மன்னர்களுக்கும், பட்டாக்கத்திகளுடன் குலை நடுங்கச் செய்த மூர் இன துலுக்கருக்கும் இடையில் சிக்கி, சீரழிந்து கொண்டிருந்த முத்துக்குளித்துறை பரதவர் இனத்தை கைகொடுத்து காப்பாற்றியதும், பரிசுத்த பனிமயத்தாயை முத்துக்குளித்துறையின் ஏக அடைக்கலத்தாயாக பிரகடனம் செய்ததும், மற்றும், சத்தியமறையில் உறுதியாக இருந்து உயிர் நீத்த வேதசாட்சிகளைப் பற்றியும், உடனுக்குடன் அறிந்துவந்த போர்த்துக்கீசிய மன்னர், இந்த பரதவர்களை தம் ஞானப்பிள்ளைகளாக கருதி, அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து வந்தார். இதனால், தம் திருநிலையினர் மூலமாக நம் அன்னைக்கு அவர் அளித்த நன்கொடைகளில் ஒன்று நவரத்தினக்கற்களால் ஆவே மரியா என்று பொறித்த விலைமதிப்பற்ற கனத்த அட்டியல். மற்றது, அன்னையின் திருத்தலைமுடி. 

அன்னாளும் சுவக்கினும் வருடிக் கொடுத்த திருத்தலைமுடி. சின்ன சேசுபாலனின் பிஞ்சு விரல்கள் விளையாடிய திருத்தலைமுடி. மரித்த சேசுவின் சிதைந்த உடல் அன்னைமரியின் மடியில் வளர்த்தப்பட்டபோது, அன்னையின் கண்ணீரும், மகனின் உதிரமும் இணைந்து நனைந்த, அதே திருத்தலைமுடிகளில் ஒன்று நம் ஆலயத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விண்ணகத்தில் இருக்கும் நம் அரசியின் திருத்தலைமுடி, பரலோகத்திற்கும், நம் பசிலிக்காவுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து நமக்கு அருள் பாலித்து வருகிறது.

கொச்சி மறைமாவட்டத்தின் தலைமைபீடம் அஞ்சங்கோவில் (சொலதாரே) இருந்து, கொச்சி ஆயர் தொம் பிரே யோசெதெ சொலதாரே ஆண்டகை, 24-ம் தேதி மே மாதம் 1790-ம் ஆண்டு தேர்மாறன் என்று அழைக்கப்படும் சிஞ்ஞோர். தொம் கபிரியேல் வாஸ் கோமஸ்,குலாதிபனுக்கு எழுதிய ஒரு பெரிய மடலில் இவ்விபரம் காணப்படுகிறது. அதில், அவரால் அனுப்பிவைக்கப்பட்ட திருத்தலைமுடி, அது அன்னையின் திருத்தலைமுடிதான் என்பதற்கான சான்றிதழ்களும், அதற்கு எப்படிப்பட்ட ஆராதனை, வணக்கம் செய்ய வேண்டும் என்ற விபரங்களும் அனுப்பி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனை உறுதிசெய்யும் வண்ணம் 26.01.2000 அன்று, பனிமய அன்னை ஆலயத்தில் இருக்கும் திருபண்டங்களை எல்லாம், பேராலய அதிபர் அருட்திரு ரத்தினராஜ் அடிகள் முன்னிலையில் சோதித்து பார்த்தபோது, திருச்சிலுவை, புனிதர்கள் மரிய கொரற்றி, பார்பரா, பாப்பரசர் 10-ம் பத்திநாதர், அவர்களுடைய திருப்பண்டங்களுடன் விண்ணக அரசி என்று பொருள்படும் ரிஜினா செலி என்று பொறிக்கப்பட்ட ஒரு திருப்பண்டம் அடங்கிய பாத்திரத்தை காண முடிந்தது. இதனை மேலும் உறுதி செய்யும் வண்ணம், 1802-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆலயத்தின் நகைப்பட்டியலில் பொன்னாலான அருளிக்கம் என்ற வார்த்தையும் காணப்படுகிறது. அன்னையின் மைந்தர்களாகிய நாம், நம் அன்னையின் திருமுடியை உரிய இடத்தில் வைத்து, உரிய மரியாதை செலுத்த கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் வைரம், பொன்மகுடம் மற்றும் அணிகலன்களையெல்லாம் அணிந்த நம் திருச்சுரூபத்தையும் விட இந்த தலைமுடி அளவில்லாத மதிப்புக்குரியதாகும்.

பாண்டியபதியின் பழைய கோப்புகளிலிருந்து தேடி எடுத்த போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட இந்த குறிப்பிட்ட மடலை, மொழிபெயர்த்து ஆய்ந்து, இந்த அரிய உண்மையை வெளிக் கொணர்ந்த பெருமை, வேம்பாறு திரு.தம்பிஐயா பர்னாந்து அவர்களைச் சாரும்.

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.