Our Blog

கடலம்மை மணிமேகலா தெய்வம்!


மணிமேகலை காப்பியத்துக்குப்பின் கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் தமிழகத்தில் பதியப்பெறாத கதையிது என்றும் சொல்லலாம்.

காப்பியத்தின் நாயகி மணிமேகலை வாழ்வினை முற்றாய் ஊழ்வழி நடத்திச் சென்று அவள் காமத்தை வென்று துறவுக்கோலமாம் அறக்கோலம் பூணவைப்பதும் மணிமேகலா தெய்வமே.

கோவலனின் குலதேவதை மணிமேகலா என்ற அந்தக் கடலரசி. அவள் திரவியம் தேடித் திரைகடலோடியிருந்த வணிகர்களைக் காக்கும் தெய்வம். மாதவி மூலம் பிறக்கும் குழந்தைக்குத் தன் குலதெய்வத்தின் பெயரையே கோவலன் வைப்பதன் பின்னணிக்கதை சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதையில் வருகிறது:

//எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக’ என

அணி மேகலையார் ஆயிரம் கணிகையர்,
மணிமேகலை” என வாழ்த்திய ஞான்று//


கோவலன் மூதாதை ஒருமுறை கடலோடிச் செல்கையில் மரக்கலம் உடைந்து தத்தளித்திருக்கையில் அவன் செய்த அருந்தவப் பலனால், இந்திரன் ஏவலில் கடல்மிசை வாழ்ந்திருக்கும் மணிமேகலா எனும் அதிதேவதை அவன்முன் வந்து தோன்றி அஞ்சேல் என்று அவனைக் காத்துக் கரைசேர்த்த கதையினை நினைவுகூர்ந்து அந்த மணிமேகலாவின் பெயரே குழந்தைக்கு வைக்கப்படுகிறது. பின்னர் மாதவியின் கனவிலும் அந்தத் தேவதை தோன்றி தம் உருக்காட்டி மறைகிறது.

பரப்பு நீர்ப் பவ்வம் (பெருங்கடல்) பலர் தொழக் காப்போள்’ என்றும் ‘திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு’ என்றும் மணிமேகலை காப்பியத்தில் குறிக்கப்படும் அந்தக் கடலரசி, மணிமேகலையை மயக்கிலாழ்த்திக் கொண்டு சென்று மணிபல்லவத்தீவில் வைத்துத் துயிலெழுப்பி அவள் வாழ்வின் பயனை எடுத்தியம்பிப் பின்னர் ‘வேற்றுருவு எய்தவும், அந்தரம் திரியவும், ஆக்கும் இவ் அருந்திறன் மந்திரம் கொள்க!’ என்றும், ‘மக்கள் யாக்கை உணவின் பிண்டம் ஆதலால் இப்பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும்’ என்றும் – விரும்பியவண்ணம் உருமாறவும், வான்மிசை ஏறிப்பறக்கவும், பசியை வெல்லவும் வல்ல – மூன்று மந்திரங்களைச் சொல்லித் தருகிறாள்.

இறுதியில் 

//வானவன் விழாக் கோள் மா நகர் ஒழிந்தது
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள்
அணி நகர் தன்னை அலை கடல் கொள்க என
இட்டனள் சாபம் பட்டது இதுவால்// 

என்று வானோர்க்குப் பூசனையும் இந்திரவிழாவும் மறந்து போன பூம்புகாரைக் கடற்கோளில் மறைப்பதும் அவளே.


காப்பதும் அழிப்பதும் அந்தக் கடலன்னையே.

இன்றும் ஒட்டுமொத்த ஜாவானியரும் வணங்கியிருக்கும் இந்தோநேசியாவின் காவல் தெய்வம் இந்த மணிமேகலா தெய்வமே!

பரப்பு நீர்ப் பவ்வம் பலர் தொழக் காத்திருக்கும் கடலரசி ராத்து கிடுல் அவள் பெயர் ராத்து கிடுல் (Ratu Kidul). Ratu என்றால் ராணி Kidul என்றால் கடல். அவளே திரை இரும் பௌவத்துத் தெய்வமமான கடலரசி!

ஆனால் இந்தோனேசியர் எவரும் அவளைக் கடலரசி என்று தவறியும் வேறேதும் அடைமொழியின்றிச் சொல்லிவிட மாட்டார்கள். தேவி ராத்து கிடுல், பெருமதிப்புக்குரிய தலைவி ராத்து கிடுல் (Kyai Kanjeng Ratu Kidul) என்றே மிகமிக அச்சம் கலந்த மரியாதையுடன் அவளை விளிப்பர்.

அவளே தென்கடலாம் ஹிந்துமஹாசமுத்திரத்தின் பேரரசி.

பெருங்கடல் சூழ்ந்த தீவுக்கூட்டங்களால் ஆன நாடான (Archipelago) இந்தோநேசியாவுக்கு அவளே காவல் தேவதை. ஜாவாவின் மேற்கு முனையிலிருந்து பாலியின் கிழக்கு முனைவரை அவளை வழிபடாத இடங்களே இல்லை. இன்றும் இந்தோநேசிய அரசகுடும்பத்தினர் அனுதினமும் அவளுக்குப் படையல் வைத்து வணங்காமல் எந்த வேலையும் தொடங்க மாட்டார்கள்.

Ratu_Kidul_deity_and_Sukarnoஇந்தோநேசியாவின் முன்னாள் அதிபர் சுகர்ணோ இந்தக் கடலரசியின் பெரும்பக்தர். ஜாவாவின் தென்மேற்குமுனையில் ‘ப்லாபுவான் ராத்து’ (ராணியின் துறைமுகம்) என்றோர் கடற்கரையோரச் சிற்றூர் இருக்கிறது [ Pelabuhan_Ratu ] இது இந்தக்கடலரசி வந்து ஓய்வெடுக்கும் இடம் என்பது ஜாவானியரின் தொன்னாள் நம்பிக்கை. இங்குதான் அதிபர் சுகர்ணோ ஒரு வாதாமரத்தின் கீழ் கடலரசியின் பல சக்திகள் கைவரப் பெற்றதாய்ச் சொல்வர். அதே இடத்தில் கடற்கரையோரம் ஒரு பிரம்மாண்டமான எட்டடுக்கு மாளிகை ஹோட்டல் (Samudra Beach Hotel) ஒன்றையும் சுகர்ணோவே கட்டி எழுப்பினார்.

இன்றும் இந்த ஹோட்டலில் ஓர் அறை (அறை எண் 308) இந்தக் கடலரசிக்கென்று பிரத்யேகமாய் ஒதுக்கப்பட்டு தினமும் பகலில் தேவிக்குப் பலவித பூஜைகள் செய்யப்பட்டு இரவில் பூட்டப்பட்டுவிடும். அவள் இரவில் வந்து போகும் அடையாளங்கள் இருப்பதை அங்கே பூஜை செய்வோர் நான் போயிருந்தபோது சுட்டிக் காட்டினர். அங்கே சில மணித்துளிகள் விசேட அனுமதி பெற்றுத் தொழுது வந்தேன். இந்த அறை குறித்து விவரமாய் வலையில் தேடிப் படிக்கலாம். (Samudra Beach Hotel, Pelabuhan Ratu, West Java)

இந்தப்பகுதியில் ஆண்டுக்கொருமுறை ஏப்ரல் மாதத்தில் மீனவமக்கள் வந்து கூடி இரண்டு நாள் இந்தக் கடலரசிக்குத் திருவிழா கொண்டாடுவது வழக்கம். எந்த எதிர்ப்பு வந்தாலும் கடலன்னைக்கு நடைபெறும் இந்தத் திருவிழாவை யாரும் தடுக்க முடியாது. இதை விமர்சிக்க முயல்வோரே பேராபத்துகளில் சிக்கிக்கொள்ளும் கதைகள் இருப்பதால் இன்றுவரை இது தொடர்கிறது.

இன்றும் இந்தக் கடலரசியின் உள்ளூர்க்கதைகள் பல பலவிதங்களில் பாடப்படுகின்றன. அவற்றில் குறிப்பாய் நம் காப்பியத்தில் காணும் வண்ணமே வேண்டியபடி உருமாறவல்ல, எங்கும் மனோவேகத்தில் பறக்கவல்ல இவள் வல்லமைகளே புகழ்ந்து பாடப்படுவன. இவளின் தமிழகத் தொடர்புகள் இன்று அறுந்து விட்டாலும் இவளே மணிமேகலா தெய்வம் என்பதில் ஐயமில்லை.
நன்றி-- ஜாவா குமார்


No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.