Our Blog

திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளுக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்



எங்கள் இருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங்கொண்டு எழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! பரலோக பூலோக அரசியே! கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே! உமது இன்பமான சந்திதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையை வேண்டிவந்தோம். உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ! எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ! எங்கள் ஆதரவும், சந்தோஷமும் எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்கு காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை மாதா பாராட்டுவாளோ? உம்மைத்தேடி வந்த நிர்ப்பாக்கியருக்கு உதவியாயிரும்.

அழுகிறபேர்களை அரவணையும். அல்லல் படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்? நீர்; ஆதரிக்காவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? தஞ்சமென ஓடி வரும் அடியோர் மேலே தயவாயிரும். தயை கடலே தவித்தவருக்குத் தடாகமே! தனித்தவருக்கு தஞ்சமே. உம்முடைய சந்நிதானம் தேடிவந்தோம். ஆறு, காடுகளைக் கடந்து ஓடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடி நொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் வேண்டுதல் பலனற்றதாய் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ அம்மா? அன்பான அம்மா! அருமையான அம்மா! அடியோருக்கு அன்பான அம்மா! தஸ்நேவிஸ் மரியே அம்மா! எங்கள் குடும்பங்களை முழுதும் இன்று உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். எங்களை ஏற்று ஆசீர்வதித்தருளும் தாயே - ஆமென்.

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.