Our Blog

பண்டைய கடற்கரை கிராமங்களில் காணப்பட்ட பப்பரபுளி மரம்


ஜீவனுள்ளவைகளில் வெகுகாலம் நீடித்திருக்கக்கூடிய பப்பரப்புளி யென்றமாம் 20,000 வருஷங்கள் ஆயுளுடையதாயிருக்கிறதென்று சொல்லுகிறார்கள். இம்மரம் தென்னிந்தியாவில் அங்கங்கே நாளது வரையும் காண்கிறோம். தென்னிந்தியாவிற்கு இது இயற்கையாயுள்ள மரமேயொழிய நூதனமான மரமல்ல. மேலும் இம்மரத்தின் தன்மையை அறிந்த சித்தர்கள் அதில் ஒரு சிறு துவாரஞ்செய்து துருசு சுண்ணத்தை அமுக்கி வைப்பார்கள்; சிறிது நேரத்துக்குள் அதிலிருந்து தண்ணீர் ஊறும்; அந்தத் தண்ணீரைச் சிறு பாத்திரங்களில் பிடித்துத் தங்களுக்கு வேண்டிய அளவு சாப்பிடுவார்கள். சாப்பிட்டபுடன் தங்களையறியாத மயக்கம் அவர்களுக்கு உண்டாக நாலுநாள் பரியந்தம் பிரக்கினையற்றுப் படுத்திருந்து பின் எழுந்திருப்பார்கள். இப்படி அதன் ரசத்தைச் சாப்பிடுவது அவர்கள் செய்யும் யோக சாதனைக்கும் கற்பசாதனைக்கும் அனுகூலமானதென்று எண்ணப்படுகிறது. ஒரு மரத்தின் உபயோகத்தை நன்றாய் ஒரு தேசத்தார் அறிந்திருப்பார்களானால் அந்த மரம் அத்தேசத்திற்கேயுரியதென்று சொல்லாமலே விளங்கும். தென்னிந்தியாவின் சில இடங்களில் இதைப் பூத விருக்ஷமென்று சொல்லுவார்கள். இது பரிசுத்தமான விருக்ஷமென்று பொதுவாக எண்ணப்படுகிறது. ஆகையினால் அதன் கிளைகளையாவது இலைகளையாவது ஒருவரும் சேதப்படுத்துகிறதில்லை. அதன் அடிப்பாகம் பெருத்து நுனிப்பாகம் சிறுத்துக் கோபுரத்தின் சாய்வாக வளர்ந்திருக்கும். 

இம்மரத்தைத் தஞ்சாவூர் ஜில்லாவிலும் ஏராளமாய்க் காணலாம். திருநெல்வேலி மதுரை முதலிய இடங்களிலும் அங்கங்கேயிருக்கிறது. தஞ்சாவூரில், சிவகங்கைத் தோட்டத்தில் ஒரு மரமும் வெண்ணாற்றங்கரையில் ஒரு மரமுமிருக்கிறது. இப்படியே காவேரிப் பாய்ச்சலிலும் அனேக மரங்களிருக்கலாம். இம்மரங்களைக் குறுக்காக அறுத்து அவைகளில் சுற்றிச் சுற்றியிருக்கும் ரேகைகளைக்கொண்டு இத்தனை வருஷமாக இம்மரங்கள் நிற்கின்றன. வென்று சாஸ்திரிகள் கண்டுபிடிக்கிறார்கள். இவைகளைக் கொண்டு நாம் சொல்லுகிற முதல் ஊழியின் காலம் அதிகமாகாதென்றே தோன்றுகிறது. இம்மரங்கள் வேறு சில இடங்களிலிருப்பதாக அடியில்வரும் வசனத்தில் காணலாம்.

Dravidian comparative Grammar by Bishop Caldwell, Page 66, Foot-note.

"Huge old specimens of the Baobab, or Adansonia Digitata, an African tree, of which the Hindus do not know even the name, may still be seen in or near various sites of foreign commerce in the extreme south of the Indian peninsula : e. g. in Kottar, near Cape Comorin, and near Tuticorin in Tinnevelly-possibly on the site of the ancient Kolkhi."

"இந்தியாவின் தென்கோடியில், அந்நிய தேசங்களோடு வர்த்தகம் நடத்திவந்த அநேக துறைமுகப் பட்டணங்களிலும் அவைகளுக்குச் சமீபத்திலும், பேயோபாப் அல்லது அடன்ஸோனியா டிஜிற்றாற்றா என்ற ஆப்பிரிக்காக் கண்டத்து மரம், நீண்டு பாரித்துப் பரிமாண்டமாய் வளர்ந்து நிற்பதைக் காணலாம். அவைகள் வெகுகாலத்து மரங்கள். உதாரணமாக, கன்னியாகுமரி முனைக்குச் சமீபமான கோட்டாற்றிலேயும் திருநெல் வேலியைச்சார்ந்த தூத்துக்குடிக்குச் சமீபமாகக் கொற்கையென்ற பழைய நகரிருந்த இடத்திலேயும் இம்மரங்கள் நிற்கின்றன. இவைகளின் பேர்முதலாய் இந்துக்களுக்குத் தெரியவில்லை."

மேலேகூறிய பேயோபாப் என்றமரம் ஆப்பிரிக்காக் கண்டத்து மரமென்றும் அன்னியதேச வியாபார சம்பந்தமான துறைமுகப் பட்டணங்களில் அது காணப்படுகிறதென்றும் அதன் பெயர் இந்துக்களுக்குத் தெரியவில்லையென்றும் சொல்லுகிறார். இம்மரத்தின் உபயோகத்தை அறிந் திருந்த தென்னிந்திய ஜனங்களுக்கு அது நூதனமான மரமல்ல. ஆனால் ஆப்பிரிக்காவுக்கும் தென்னிந்தியாவுக்கும் நடுவிலுள்ள பூபாகத்தில் இம்மரம் ஏராளமா யிருந்திருக்க வேண்டுமென்றும், அப்பூபாகம் அழிந்தபின் அதற்குச் சம்பந்தப்பட்டதான பூமிகளில் அங்கங்கே காணப்படுகிறதென்றும் நாம் நினைக்க ஏதுவிருக்கிறது. அம்மரத்தைப்பற்றி,

உவின்ஸ்லோ அகராதி பக்கம் 728.

"பப்பரப்புளி-(also பெருக்கமரம்) A species of large tree, Adonsonia digitata, L" என்றும், வாசுதேவநாயுடு எழுதிய

ஆயுர்வேத பாராவாரம் பக்கம் 676.

"யானைப்புளியமரம், பப்பரப்புளி, பூரிமரம், அடன்ஸோனியா டிஜிடாடா Adonsonia Digitata பேயோபாப் Baobab மங்கி ப்ரெட் டரீ Monkey-bread tree. ஆப்பிரிக்கா தேசத்திலும் இப்போது நமது தேசத்திலும் இந்த மரம் விஸ்தாரமாய்விட்டது. பழத்தின் சதைக்கு ஸங்கோசநி (நரம்புகளையும் சரீரதாதுக்களையும் சுருக்கி உதிரம் கீழ் முதலியவற்றை நிறுத்தும்) அந்தரஸ் நிக்தகாரி (உட்கொண்டால் தாதுக்களின் எரிச்சலைச் சாந்தி செய்து அவற்றைத் துவள்விக்கும்) செய்கைகளுண்டு. இதைச் சீதபேதிக்கும் சீதசுரங்களுக்கும் கொடுக்கலாம்."

என்றும் சொல்லியிருப்பதினால் மேலேகூறிய மரம் பப்பரப்புளி என்று அறியலாம். மேற்கண்ட வரிகளைக் கவனிக்கையில் நரம்புகளையும் சரீரதாதுக்களையும் சுருக்கி உதிரம் சீழ் முதலியவற்றை நிறுத்தக் கூடியதான சக்தி பப்பரப்புளி (பூத விருக்ஷம்) என்ற மரத்துக்கு இருந்ததினால் சித்தர்கள் அதை உபயோகப்படுத்துகிறதாகச் சொல்லப்படுகிறது மிகப் பொருத்தமாகத் தெரிகிறது. நீண்ட ஆயுளுள்ள இம்மரம் நீண்ட ஆயுளை விரும்பித் தவஞ்செய்த பெரியோர்களுள்ள லெமூரியாவில் அது பூர்வமாயிருந்திருக்க வேண்டும். லெமூரியா அழிந்துபோன பின் அதோடு நிலச் சம்பந்தம் பெற்ற ஆப்பிரிக்கா தென்னிந்தியா முதலிய பூபாகங்களில் காணப்படுவது இயற்கையே. பொதிகைமலையின் பக்கத்திலும் காவேரியாற்றின் பக்கங்களிலும் இருப்பதே அவைகள் மற்றத் தேசங்களிலிருந்து வரவில்லையென்பதைக் காட்டுகிறது.

Castes and Tribes of Southern India by E. Thurston Vol. I, Intro. P. XXIV.

"On the evidence of the very close affinities between the plants and animals in Africa and India at a very remore period, Mr. R. D. Oldham concludes that there was once a continuous stretch of dry land connecting South Africa and India."

"மிகப்பழமையான காலங்களில் ஆப்பிரிக்காவிலிருந்த ஸ்தாவரஜங்கமங்களுக்கும் இந்தியாவிலிருந்த ஸ்தாவரஜங்கமங்களுக்கும் இருக்கும் நெருங்கின ஒற்றுமையைக்கொண்டு, ஆர். டி. ஓல்ப்ஹாம் என்பவர், ஒருகாலத்தில் தென் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் ஒரே தொடர்ச்சியான பெருந்தரை இணைத்துக் கொண்டிருந்தது என்று தீர்மானிக்கிறார்."

மேற்கண்டவரிகளை நாம் கவனிக்கையில் லெமூரியாக்கண்டமும் தென் ஆப்பிரிக்காவும் வெகுகாலத்துக்கு முன் தொடர்ச்சியான பூகம்பந்தமுடையதா யிருந்ததென்று தெரிகிறது. லெமூரியா அழிந்தபின் ஆப்பிரிக்காவின் தென் பாகத்திலும் தென்னிந்தியாவிலும் காணப்படும் தாபரவர்க்கங்களின் ஒற்றுமையே இதற்குக் காரணமென்றுஞ் சொல்லுகிறார். இதைக் கொண்டு பப்பரப்புளி என்ற மரம் ஆப்பிரிக்காவிலிருந்து, கொண்டுவரப்படவில்லை, தென்னிந்தியாவிற்கேயுரிய மரமென்று தெளிவாகத் தெரிகிறது.

மேலும் பதினாயிர வருஷங்களுக்கு முன்னாலேயே எகிப்தியர்களிருந்தார்களென்றும், அவர்கள் தண்டசக்கரம் முதலிய யந்திரங்களின் உதவியின்றிக் கையினாலேயே மண்பாண்டங்கள் செய்தார்களென்றும் காண்கிறோம்.

http://tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=166&pno=158

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.