Our Blog

பரவர் மாதாவின் ரதோற்சவ பெரு விழாக்கள்


ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரக் கிளர்ச்சியில் ஈடுப்பட்டிருந்த சிற்றரசர்களுக்கு, ஆளுதவியும், பொருளுதவியும், அடைக்கலமும் தந்து உதவியதற்காக ஆங்கிலேயரால் குற்றவாளி ஆக்கப்பட்டிருந்த எழுகடல் துறை மன்னன் சிஞ்ஞோர் சிஞ்ஞோர் தொன் கபிரியேல் தெக்குருஸ் வாஸ் கோமஸ் ஜாதித் தலைவ மோர் அவர்கள், அன்னையின் கடாட்சத்தினால் கொடிய தண்டுனையிலிருந்து தப்பினார். அவ்வேளையில் அன்னையின் திருச்சுருபம் நகரை வந்தடைந்த 250-ம் ஆண்டும் நெருங்கியது. ஆதியிலிருந்து இந்நாள் வரை திருச்செந்தூர் கந்தனின் தேர்வடுத்தை முதன் முதலில் தொட்டுக் கொடுக்கும் கவுரவ உரிமைக்குத் தன் ராஜினமா அறிக்கையின் மூலம் மறுப்பு தெரிவித்துவிட்டு தன் குல தெய்வம் “பரதர் மாதாவுக்கென்று” ஒரு தேர் செய்ய சித்தமானார்.


தேவ அன்னை எவ்வாறு விண்ணகத்தில் வானதூதரும் புனிதரும் புடை சூழ வீற்றிருப்பாள் என்பதை நினைவு கூறும் வகையில் ஒரு தேரினை உருவாக்கக் கேரளாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் நூற்றுக்கணக்கான சிற்பிகளைத் தருவித்து நேவிஸ் பொன்சேக்கா என்பவரை தலைமையாக நியமித்தார். இத்தேரினை செய்து முடிக்க அந்நாளில் ஆன செலவு ஒரு லட்சம் ரூபாய். அதன் இன்றைய மதிப்பு 7500 சவரன்கள். இது முத்துச் சிலாபங்களில் முத்துக்குளித்துறை மன்னன் ஈட்டிய பொருள்.


அன்னையின் திருச்சுரூபத்தை பலிபிட மாடத்திலிருந்து இறக்கி, தேருக்கு எடுத்துச் செல்வதற்காக “முத்துப் பல்லக்கு” எனப்படும் ஒரு சிறு பல்லக்கும் செய்தனர். முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த நெட்டையான பல்லக்கில், சுரூபம் நிறுத்தி வைக்க ஒரு இடமும் பக்கத்தில் ஒரு இருக்கையும் மட்டும் இருக்கும். சுரூபத்தை இறக்கிவைப்பவர்களும், பல்லக்குத் தூக்குபவர்களும், ஜாதித் தலைவருடன் இரவு முழுவதும் உபவாசம், ஆராதனையில் கழிப்பர். அதிகாலை மிகவும் பக்தி வணக்கத்துடன், பாவப் பரிகாரச் செபம் படித்தபின் சுரூபம் இறக்கப்பட்டு பல்லக்கினுள் வைக்கப்படும். ஜாதித் தலைவர் இருக்கையில் அமர்ந்து சுரூபத்தைப் பிடித்துக் கொள்ள, மாதாவின் பாடலுடுன் 6 பேர் சுமந்தபடி பல்லக்கு தேரைச் சென்றடையும்.

தேருக்கடியில் மிகவும் பக்தி ஆசாரத்துடுன் சுரூபம் இறக்கி வைக்கப்பட்டு, குருவானவர் மந்திரித்தபின் தேரின் மீது ஏற்றிவைக்கப்படும். பரதகுலச் சிற்றரசன், நல்முத்துகள் கலந்த மலர்களை அன்னை மீது தெளிப்பார்.

அதிகாலையில் பலிபூசை நிறைவேறியபின், தேரின் வடத்தை பரதகுல ஜாதித்தலைவர் தொட்டுக் கொடுத்து, தனது மந்திரி, பிரதானிகளாகிய அடப்பன்மார் மற்றும் ஊர்த் தலைவர்களிடம் அளிப்பார். மக்கள் வடத்தை மரியே, மாதாவே எனும் வானைப் பிளக்கும் கோஷத்துடன் இழுக்க, தேர் நகர்ந்து செல்லும்.

யானை மீது பாண்டியரின் மீன் கொடி தாரை தப்பட்டையுடுன் முன் செல்ல அதனைத் தொடர்ந்து பரதவர்களின் சின்னம் பொறித்த மீதி 20 கொடிகளும், கேடயம், குடை, குடைச் சுருட்டி, அசை கம்பு, முரபு, பரிசை போன்ற விருதுகள் கெம்பீரமாய் அணிவகுத்துச் செல்லும். இருபக்கமும் குதிரை வீரர்களும் வருவர். 1926-ம் ஆண்டு வரையில் மேற்சொன்னபடியே தேர் இழுக்கப்பட்டு வந்திருக்கிறது.


முதல்பவனி

1805-ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி அன்னையின் சுரூபம் நகரை வந்தடைந்த 250-ம் ஆண்டு நிறைவில் இழுக்கப்படு வேண்டிய தேர், சித்திரங்களில் தூய தங்கத் தாள் பொதியும் வேலையின் சுணக்கத்தினால் 1806-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி முதல்முறையாக நகர் வலம் வந்தது. (மாதா சுத்திகரித்த திருநாள் அன்று) ஏழு கடற்றுறை மக்களுடுன், தென்னாட்டின் சிற்றரசர்களும், மலையாளத்திலிருந்து மறை குருக்களும், அரபுப் பிரதிநிதிகளும் இவ்விழாவில் கலந்து கொண்டுனர். கிறிஸ்தவ உலகிலேயே வடம் கட்டி இழுக்கப்பட்டு முதல் தேராக இருந்தபடியால், வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர் எனவும் தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டிருந்ததினால், தங்கத்தேர் எனவும் 1879அழைக்கப்பட்டுது.


1806 -ம் ஆண்டிற்குப்பின், பல தலைமுறைகளாக பரதவர்களின் முத்துக்குளித்துறைக்கு இருண்டு காலமாய் இருந்தது. செல்வம் கொழித்த முத்துக்குளித்துறையைக் கவர வெள்ளையரின் வெறித்தனமான போட்டிகளில் பரதவர் சமுதாயம் மிகவும் சிரமத்திற்குள்ளாயிற்று. 1818-ல் டச்சுக்காரரும், 1825-ல் ஆங்கிலேயருமாய் மாறி மாறி நாட்டைக் கவர்ந்தனர். எட்டப்பர்களும் முளைத்தனர். மேலும் இந்நாள்வரை ஆத்துமகாரியங்களை மட்டும் கவனித்து வந்த பதுரவாதோ எனும் போர்த்துக்கீசிய குருக்களுக்கு மாற்றாக “துலுஸ்” எனப்படும் பிரெஞ்சுமிஷன் குருக்கள் 1837-ம் ஆண்டு இங்கு வந்து அடிகோலினர். கோயில்களையும் கோயில் சொத்துக்களையும் தன் வசப்படுத்துவதே அவர்களின் முதல் குறிக்கோளாய் இருந்ததினால், ஏழு கடற்றுறை முழுவதும் குழப்பங்கள், கலவரங்கள், நீதிமன்ற விசாரணைகள் காரணமாய் ஊர்களும், பங்குகளும், கோவாமிஷன், பிரெஞ்சுமிஷன் எனும் இருகட்சிகளாகப் பரதவர் சமுதாயம் பிளவுபட்டுப் போயிற்று. கோயில்களில் குருக்கள் இல்லாத நிலையும் ஏற்பட்டது.


2வது பவனி

இறுதியாக போர்த்துக்கீசியக் குருக்களை அன்னையின் ஆலயத்தில் நியமனம் செய்வதில் வெற்றிகண்டு பரதகுலாதிபன் தேர் மாறனின் பேரன் சிங்ஞோர் தொண் கபிரியேல் பிராஞ்சிஸ்கு தெக்குருஸ் வாஸ் பல்தான் தனது 50வது வயதின் பூர்த்தியின் போது, பரதவர்களின் ஒற்றுமையைக் கோரி, தேரினை நகர் வலம் வரச் செய்தார். இந்த இரண்டாம் பவனி நடந்தது 1872-ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி கோவா

மிஷனைச் சேர்ந்த அருட்திரு. சில்வெஸ்டர் மஸ்கரேனாஸ் பங்குக் குருவாயிருந்தார். மயிலை ஆயர் மேதகு ஒர்னலாஸ் ஆண்டகையும் கலந்து கொண்டார். இத்திருவிழாவில் எதிர்பார்த்தது போலவே பிரிந்து போன பிரெஞ்சுமிஷன்காரரும் கலந்து கொண்டு அன்னையின் ஆசீரைப் பெற்றுச் சென்றனர்.


3வது பவனி

1879 ஆகஸ்ட் 5ம் தேதி 2-ம் பவனியை நடத்திய அதே பரதவர் மன்னன், இந்த 3வது பவனியையும் நடத்தி வைத்தார். கோவா மிஷனைச் சார்ந்த அருட்திரு மனுவேல் கொன்சியாஸ் கோயல்ஹோ பங்குக் குருவாயிருந்தார். சிறப்பு விருந்தினராகக் கொச்சி, கிராங்கனூர் மறைமாவட்ட நிர்வாகி பேரருட் திரு. மொன்சிங்ஙோர், கஸ்மிர் கிறிஸ்தொம் நசரேத் வருகை தந்திருந்தார்.


4வது பவனி

1895 ஆகஸ்ட் 5ம் தேதி பரிசுத்த பனிமய மாதா ஆலயம் மயிலாப்பூர் பதுரவாது மாவட்டுத்துடன் இணைந்ததும் சிற்றரசர் தொன் கபிரியேல் தெக்குருஸ் லாசருஸ் மோத்தா வாஸ் சந்ததியில் ஒரு ஆண்வாரிசு வெகுகாலத்திற்குப் பின் உருவானதற்கு நன்றியாக தேர் நகர் வலம் வந்தது. கோவாமிஷனைச் சேர்ந்த அருட்திரு. ஜே.என்.எக்ஸ் மிஸ்கிட்டா பங்குக் குருவாயிருந்தார். மயிலை பிஷப் மேதகு டொன் ஜோசா என்றி டிசில்வா வருகை தந்திருந்தார். புரவலர் திரு. ஜே.எம்.பி.ரோச் விக்டோரியாவின் தலைமையிலான தூத்துக்குடி நகர சபை சிறப்பான ஏற்பாடுகளைச் செய்வித்தது.


5வது பவனி

1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் நாள். அன்னையின் திருச்சுரூபம் நகரை வந்தடைந்த 350-ம் ஆண்டு நிறைவாக, தங்கத்தேர் செய்வித்த நூறாவது ஆண்டில் மன்னன் தொன் கபிரியேல் தெக்குருஸ் லாசருஸ் மோத்தா வாஸ் தலைமையில் நகர் வலம் வந்தது. அருட்திரு. ஜே.பி.டிசூசா பங்குக் குருவாயிருந்தார். மயிலை பிஷப் மேதகு டொன் தியோட்டனிஸ் எம்மானுவேல் ரிபேரா வெய்ரா டிகாஸ்ட்ரோ வருகை தந்திருந்தார்.


6 வது பவனி

1908-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் நாள் அருட்திரு.விஜிலியுஸ் மான்சியும் அவரது இரு சீடர்களும், அன்னையின் சுரூபத்துடன் இடியின் கோரத்தாக்குதலினின்று காப்பாற்றப்பட்ட அற்புத சம்பவம் நிகழ்ந்த தினத்தை அந்நாளில் திருநாளாக கொண்டாடி வந்தனர் பரத குல மக்கள். இந்நிகழ்ச்சியே அன்னைக்குப் பெரிய கோயில் கட்ட காரணமாயிருந்தது. இது நிகழ்ந்த 200-வது ஆண்டு நிறைவாக குலாதிபன் தொன் கபிரியேல் தெக்குருஸ் லாசருஸ் மோத்தாவாஸ் அவர்களால் இத்தேர்விழா நடந்தேறியது.


பங்குக் குருவாயிருந்தவர் அருட்திரு. எம். ஜே.பின்ட்டோ 1905-ல் தேர்விழாவுக்கு வந்த அதே மயிலை பிஷப் வருகை தந்து சிறப்பித்தார். அதன் பின்னர், 1914-ல் குலாதிபன் தொன் லாசருஸ் மோத்தாவாஸ் அவர்களின் மரணத்திற்குப்பின், பரதவர்களிடம் உட்கட்சிப் பூசல்களினாலும், ஒற்றுமைக் குறைவாலும், அரசாங்கத்தாரால் முத்துச் சிலாபம் கைவிடுப்பட்டதாக அறிவிக்கப்பட்டுதாலும், பட்டத்து வாரீசு, பட்டம் ஏற்க மறுத்து இலங்கை சென்றுவிட்டனர். ஒரு தலைவன் இல்லாத நிலையில் 18 ஆண்டுகள் தேர் ஓடுவில்லை.


7வது பவனி

1926 ஆகஸ்ட் 5–ம் நாள் 1926-ம் ஆண்டு நடக்கவிருந்த முத்துச் சிலாபத்திற்கு ஜாதித்தலைவரின் ஆலோசனைகள் அரசாங்கத்திற்குத் தேவைப்பட்டதினால் 06-01-1926-ல் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இளவல் தொன் மனுவேல் லூயிஸ் தெக்குருஸ் அனஸ்தாசியுஸ் மோத்தா கொரையறா பரதகுல ஜாதித் தலைவராக பட்டம் சூட்டுப்பட்டார். முத்துச் சிலாபங்கள் சிறப்பாக நடந்தேறின. எனவே 05–08–1926-ல் தங்கத்தேர் நகர்வலம் வந்தது. அருட்திரு. கஜத்தான் சி.பெரட்டோ பங்குக் குருவாயிருந்தார். தஞ்சை பெரிய குரு ராஜரிஷி மொன் சிஞ்ஞோர் மைக்கேல் மோத்தாவாஸ் வருகை தந்திருந்தார். இதற்குப் பின் முத்துக் குளித்தல் கைவிடப்பட்டதாக 2-ம் முறை அறிவிக்கப்பட்டது. அன்னையின் பக்தர்கள் பெருமளவில், தூரத்து ஊர்களுக்கும், வெளிநாட்டிற்கும் குடி பெயர்ந்தனர். பக்கத்துச் சிற்றூர்களிலிருந்து இவ்வூருக்கு பெருமளவில் அன்னையை அறிந்திராதவர்கள் குடியமர்ந்தனர். இவ்வாறாகப் பரதவர் பலம் குன்றிய நிலையில், இப்போது புதிதாக “மேசைக்காரன்” என்றும் “கம்மாரக்காரன்” என்றும் பரதவர்களை மேலும் பிளவுபடுத்தி சில பிரெஞ்சுமிஷன் ஆதரவு தனவந்தர்களின் கைங்கரியத்தால் சீரும் சிறப்புமாய் தலை நிமிர்ந்து நின்ற பரதவர் சமுதாயம் பலம் குன்றி பொலிவிருந்து சிதறுண்டு போனது.


8வது பவனி

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 5–ம் நாள் இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கும் தினத்தையொட்டி நகரின் சில பிரபலங்கள் தேரை இழுத்து சிறப்பிக்க விரும்பினர். ஆனாலும் மக்கள் மத்தியில் நீடித்த பிரிவினை வாதத்தால், பரதகுல ஜாதித் தலைவர் பொறுப்பேற்கவில்லை. பங்குத்தந்தை அருட்திரு. அலங்காரம் சுவாமிகளும் இவ்வித ஆடும்பரத்தை விரும்பவில்லை. எனினும் அந்நாளில் பிரபலமாயிருந்த உயர்திருவாளர்கள் ஜே.எல்.பி.ரோச் விக் டோரியா, ஆர்.ஜி.பெரைரா, ஜே.எஸ்.மிராண்டா, அகஸ்டின் பர்னான்டஸ், ஜே.ஏ.பர்னான்டஸ், ஐ.எஸ்.மச்சாது, சி.மச்சாது, ஏ.பி.வாஸ் ஆகிய எட்டு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, தேர் ஓட்டுவதில் ஏற்படும் எவ்வித பிரச்சனைக்கும் தாங்களே பொறுப்பேற்பதாக உறுதியளித்ததன் பேரில் பங்குக்குரு அனுமதியளித்துச் சேர்ந்து செயல்பட்டார். தேர் செப்பனிடும் பொறுப்பு திரு.லெயோன்ஸ் வாஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வெகுகாலத்திற்கு தங்கமயமாய் ஜொலிக்கும்படி தஞ்சாவூர் பட்டை ஒட்டுப்பட்டது. பாரத நாடு சுதந்திரம் பெற்று விடுவதால் ஜாதிகள் இல்லை என்று காரணம் காட்டி, இவ்வளவு காலமும் கோயிலில் திருவிழா பிரகடுனப்படுத்தும் போது, “பரதர் மாதா எனும் பனிமயத் தாய்” எனப்படும் வாசகம் நிறுத்தப்பட்டது. பிரிவினைவாதிகள் ஜாதித்தலைவர் வடம் தொடக்கூடாது என மல்லுக்கட்டி, மோட்டார் வாகனம் வைத்து தேரை இழுக்கப் போவதாக ஆயரிடம் வாதாடினர். பெருவாரியான மக்கள் பாரம்பரியத்தை மாற்ற அனுமதியோம் எனக் கூறி அம்முயற்சியைத் தகர்த்தெறிந்தனர். முடிவு மேதகு ரோச் ஆண்டுகையிடம் விடப்பட்டது. அவரோ, திருவிழாவுக்கு ஒரு நாள் முன்னதாகத் தன் முடிவைத் தந்தி மூலம் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு உரோமை சென்று விட்டார். உரோமையிலிருந்து வரும் ஆயரின் உத்தரவை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். தங்கள் முயற்சி பின்னடைவதைக் கண்டு குழப்பக்காரர்கள் கருணாகரன் பீரிஸ் எனும் கைக்கூலியை அமர்த்தி ஜாதித்தலைவரைக் குத்திக் காயப்படுத்தினர். ஆனால் அவர் புதுமையாக உயிர்தப்பினார். மக்கள் எதிர்பார்த்த தந்தி “JATHI FIRST PULL BUT AFTER CLERGY” எனும் வாசகத்துடன், முதன்மைக்குரு அருட்திரு. மரியதாஸ் அவர்களுக்கு வந்து சேர்ந்தது. இவ்வாசகம் தெளிவு இல்லாததினால் மக்கள் குழப்பம் அடைந்தாலும், குருவானவர் வடத்தை எடுத்து ஜாதித்தலைவர் கையில் கொடுத்தபின் ஜாதித்தலைவர் “மரியே மாதாவே” எனக் கூறி தேர் இழுப்பதை ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவாயிற்று. மறுநாள் காலை, காயம்பட்டு தலைவரை மக்கள் சுமந்து சென்று தேரின் வடம் பிடிக்க வைத்தனர். இதுவே ஜாதித்தலைவர்கள் இழுத்து வைத்த கடைசித் தேரோட்டும்.

நகர்வலம் வந்த தேர், ஜாதித்தலைவரின் இல்லத்தின் முன் வழக்கம் போல நின்றது. ஜாதித்தலைவர் தரையில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, தனது கொக்கரைக் கிரீடுத்தை அன்னையின் தேருக்கு அடியில் கண்ணீர் விட்டு சமர்ப்பித்தார்.


அன்னையின் மகிமைக்காகத் தங்கத்தேர் விழாவைச் சிறப்பாக நடத்தி முடித்த விழாக் குழுவினர் புனித பிலோமினா மண்டபத்தில் (தற்போது அந்தோணியார் மண்டபம்) கூடி வரவு செலவு கணக்குகளைக் காட்டி மீதி இருந்த பணத்தைப் பங்குத் தந்தை அருட்திரு பவுல் அலங்காரம் அடிகளிடம் ஒப்படைத்தனர். அலங்காரம் சுவாமிகளிடம் இருந்த கதர் அங்கியின் பைகளில் ஜெபமாலையும் தன்னைத் தானே வருத்திக் கொள்ள ஐந்து மணி கசையும் வைத்திருப்பார். சாக்குக் கிட்டங்கி போல அழுது வடியும் அசிங்கமான உப்புச் சுவர்களும், ஆயிரம் பொத்தல்களுமாய் இருளடைந்து கிடந்த நம் ஆலயத்தை புதிதாய் மாற்றியமைத்தார். பலிபீடத்தின் முன் இருக்கும் வளைவு (ARCH) பெரிதாக்கப்பட்டு, அதன் மீது “SANCTA MARIA ORA PRO NOBIS” எனும் வசனத்தைப் பொறித்தார். பலிபீடம் விசாலமாக்கப்பட்டுது. ஆறு கதவுகளின் மேலேயும், வண்ணக் கண்ணாடிகள் பொருந்திய வட்ட ஜன்னல்கள் பொருத்தப்பட்டன. குண்டு குழியாய் இருந்த தளம் “மொசெய்க்” ஆக்கப்பட்டது. இது தவிர வேறு பல அறப்பணிகளையும், ஒரு வாகன வசதியோ, தொலைபேசி வசதியோ இல்லாமல் கால்நடையாகவே செய்து முடித்த இப்புனிதரின் பாதம் பதிந்த நம் ஆலய வளாகத்தில் அன்னாருக்கு ஒரு சிலை வைத்தாலும் தகும்.


9 வது பவனி

1955-ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் நாள் நம் அன்னையின் திருச்சுரூபம் நம் நகரை வந்தடைந்த 400-ம் ஆண்டு நினைவாக இத்தேரோட்டம் நடைபெற்றது. பங்குத் தந்தை அருட்திரு. எஸ்.எம்.தல்மெய்தா, ஆயர் மேதகு தாமஸ் பர்னாந்து, மதுரை ஆயர் மேதகு லெயோனார்டு அவர்களும், கோட் டாறு ஆயர் மேதகு ஆஞ்சிசாமி அவர்களும் வருகை தந்து சிறப்பித்தனர்.


10வது பவனி

1964 -ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் நாள் ஆயர் மேதகு தாமஸ் பர்னாந்து அவர்கள் குருத்துவம் ஏற்ற 25 ஆண்டு பூர்த்தியானதை கவுரவித்தது. இத்தேரோட்டத்தின் 9-ம் பவனியை நடத்திய அருட்திரு. எஸ்.எம்.தல்மெய்தா அப்போதும் பங்குக் குருவாயிருந்தார்.


11வது பவனி

1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் நாள் பாத்திமா அன்னை காட்சி தந்த 60-ம் ஆண்டு நினைவாக இத்தேரோட்டம் நிகழ்ந்தது. ஆலய பங்குத்தந்தை அருட்திரு. ஜோப் டிரோஸ், தல ஆயர் மேதகு எம்.அம்புரோஸ், திருச்சி ஆயராயிருந்த மேதகு தாமஸ் பர்னாந்து வருகை தந்து சிறப்பித்தனர்.


12வது பவனி

1982-ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் நாள் தேவமாதா, இரக்கத்தின் மாதா, படகுகளின் இராக்கினி (தஸ்நேவிஸ்) பரதர் மாதா என்று பல நாமங்களால் அழைக்கப்பட்டு வந்த நம்அன்னையை, 1582-ம் ஆண்டில் கற்களால் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புனித பவுல் ஆலயத்தில் எழுந்தேற்றம் செய்வித்து, உரோமை மாநகரில் காட்சி தந்த பரிசுத்த பனிமய மாதாவின் திருநாளாகிய ஆகஸ்ட் 5-ம் நாள் முதல் பலிபூசை நடத்தி “பனிமய மாதா”என திருநிலைப்படுத்திய 400-ம் ஆண்டு நிறைவாக இத்தேரோட்டம் நடந்தது.

இப்படி, 400 ஆண்டு நிறைவிலே தான் ஜூலை மாதம் 3-ம் நாள் அன்னையின் ஆலயம் பரிசுத்த பாப்பரசர் 2-ம் அருள் சின்னப்பரால் “பசிலிக்கா” எனும் பேராலய நிலைக்கு உயர்த்தப்பட்டது. 1806 முதல் 1947-ம் ஆண்டு வரை ஏழுகடல் துறை பரத ஜாதித்தலைவர்களே “மரியே மாதாவே” என தேர்வடம் தொட்டுக் கொடுத்துள்ளனர். இதன்பின் நிகழ்ந்த 4 தேரோட்டங்களிலும் தலைவனும் இல்லை, எவ்வித கமிட்டியோ, குழுவோ அமைக்கப்படவும் இல்லை. இவை, அன்னையின் மகிமைக்காக பொது மக்களால் பக்தியுடன் நடத்தி வைக்கப்பட்டன.


13வது பவனி

1982ம் ஆண்டிற்குப்பின், தங்கத்தேர் அநேகமாக மறந்து விடப்பட்ட நிலையில், உலகெங்கிலும் யூபிலி ஆண்டாகிய 2000-ம் ஆண்டினை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில், மூல தெய்வமாகிய நமது அன்னையை தங்கத்தேரில் அமர்த்தி நகர்வலம் வரச் செய்து சாலச்சிறந்ததாய் இருக்குமே என்ற எண்ணம் மக்களிடையே உருவாயிற்று. மேதகு ஆயரவர்கள் ஆலோசனையில் பல குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்திற்கும் முதன்மைக்குரு அருட்திரு. லொரன்சோ தலைமையேற்றார்.

தேரின் அதிமுக்கிய பாகங்களாகிய தேரினை தாங்கி நிற்கும் குறுக்கு விட்டங்களும், அதனை தாங்கும் சக்கரங்களும் தீர ஆய்ந்து சரிசெய்யப்பட்டன. தேரின் தூண்கள் மற்றும் இதர பாகங்களை எல்லாம் சரி செய்து அழகு படுத்த ஒரு தனிக் குழு செயல்பட்டது.

ஆலயத்திற்குள் அன்னையின் பின்னாலிருந்த ஓவியம் அழகுறத் திருத்தியமைக்கப்பட்டது. திருப்பயணிகளுக்காகச் சென்னையிலிருந்து சிறப்பு ரயில்களும், கொழும்பில் இருந்து சிறப்பு விமானங்களும் இயக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் அரசாங்க விடுமுறை அளிக்கப்பட்டது.

தலைமை ஆயர் மேதகு. பீட்டர் பர்னாந்து அவர்களின் முயற்சியால் தேர் திருவிழாவைச் சிறப்பிக்கும் முகமாகத் திருச்சியில் நடைபெற இருந்த தென்னக ஆயர்களின் பேரவைக் கூட்டம் தூத்துக்குடியில் நடத்தப்பட்டதால் திருத்தந்தையின் இந்திய தூதரான மேதகு லாரன்ஸோ பஸ்திலேரி ஆண்டகையும், 15க்கும் மேற்பட்ட ஆயர்களும் வருகை தந்து திருப்பலி நிகழ்த்தி விழாவின் சிறப்புக்குச் சிகரம் வைத்தனர்.

நவநாட்காலங்களில் எந்நேரமும் ஆலயமும் ஆலய வளாகமும் மக்கள் நிறைந்து காணப்பட்டது. ஆகஸ்ட் 4ம் நாள் இரவு 12 மணியளவில் அன்னை பொன்தேரில் கொலுவமர்த்தப்பட்டாள். அந்நேரத்திலிருந்தே, நகரின் எல்லா திசைகளிலிருந்தும் மக்கள் அன்னையின் ஆலயம் நோக்கி வந்தனர். கொடி மரத்திற்கருகில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட சிறப்பு மேடையில் திருத்தூதர் 3-ம் திருப்பலி நிறைவேற்றி சரியாக 8 மணிக்கு தேர்ப்பவனியை துவக்கிவைத்தார். 5 லட்சம் மக்கள் வெள்ளத்தில் அசைந்து முன்னேறிய அழகுத்தேர் நான்கு வீதிகளின் வழியாக பவனியை முடித்துக் கொண்டு பகல் 12 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது.

14 வது பவனி:

2007 ம் ஆண்டு பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. அன்னையின் திருச்சுரூபம் 1555 ம் ஆண்டு நம் நகரை வந்தடைந்தையொட்டி 450 ம் ஆண்டு நிறைவாகவும், தமது அன்னையின் ஆலயம் எழுப்பப்பட்ட 425 ம் ஆண்டின் நிறைவு ஆண்டாகவும், நமதன்னைக்கு செதுக்கப்பட்ட சித்திரத்தேரின் 200 ம் ஆண்டு நிறைவு நன்றியாகவும், நமது பனிமய அன்னையின் ஆலயம் திருத்தந்தையவர்களால் பேராலயமாக உயர்த்தப்பட்ட வெள்ளி விழா ஆண்டாகவும் தொடர் ஜூபிலிகளின் பெருவிழாவாகையால் இவ்வாண்டில் தேவதாயை நன்றியுடன் தங்கரதத்தில் நகர்வலம் எடுத்து வர முடிவு செய்யப்பட்டது. இத்தேர் பவனி பனிமய அன்னையின் பதினான்காவது மகோன்னத தேரோட்சவமாகும்.

-கேப்டன் பெர்க்மான்ஸ் மோத்தா

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.