Our Blog

அதிபத்த நாயனார் புராணக்கதை

அதிபத்த நாயனார் புராணம்
Athipattha Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் 
கத்தியரூபமாக செய்தது

அலையாருங் கடனாகை நகருள் வாழு
    மதிபத்தர் பரதவர்க ளதிபர் வேலை
வலைவாரி வருமீனிற் றலைமீ னீசன்
    வார்கழற்கே யென்றுவிடு மரபார் பன்னாட்
டலையான தொருமீனே சார நாளுந்
    தந்தொழிலால் விடுத்துமிடி சாரச் செம்பொ
னிலையாரு மணிநயத்த மீனொன் றெய்த
    நீத்தருளா லிறைவனடி நேர்ந்து ளாரே.


சோழமண்டலத்திலே, நாகப்பட்டணத்திலே, சமுத்திர தீரத்திலே உள்ள நுளைப்பாடியிலே, பரதவர் குலத்திலே, அதிபத்தநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரதவர்களுக்குத் தலைவராகி, அவர்கள் வலைப்படுத்துக் குவிக்கும் மீன்குவைகளைப் பெற்றுவாழ்வார். சிவபத்தியின் மிகச் சிறந்தவராதலால், அகப்படும் மீன்களிலே ஒருதலைமீனை "இது பரமசிவனுக்கு" என்று மிகுந்த அன்பினோடு எப்பொழுதும் விட்டு வந்தார். ஒருநாளிலே ஒருமீனே வரினும் அதனைப் பரமசிவனுக்கு என்றே விடுவார். இப்படி ஒழுகுநாட்களிலே அடுத்தடுத்து அநேக நாட்களிலே ஒவ்வொருமீனே அகப்பட; அதனைக் கடலிலே விட்டுவந்தார். மீன்விலையினாலே மிகுஞ்செல்வம் மறுத்தமையால், தம்முடைய சுற்றத்தார்கள் உணவின்றி வருந்தவும்; தாம் வருந்தாது பட்டமீனைப் பரமசிவனுக்கு என்றே விட்டு மகிழ்ந்தார். இப்படி நெடுநாள் வர, உணவின்மையால் திருமேனி தளரவும் தம்முடைய தொழிலிலே நிலை நின்றமையைப் பரமசிவன் அறிந்து, அவரது அன்பென்னும் அமுதை உண்பாராயினார்.

இப்படி நிகழுநாளிலே, வேறு ஒருநாள் பரதவர்கள் அவ்வொரு மீனையும் அவ்வாறே விட்டு, விலைமதிப்பில்லாத மகாதிவ்யப்பிரகாசங்கொண்ட நவரத்தினங்களால் உறுப்பமைந்த அற்புதமயமாகிய ஒரு பொன்மீனை வலைப்படுத்து, கரையில் ஏறியபோது, அம்மீன் சூரியன் உதித்தாற்போல உலகமெல்லாம் வியக்கும்படி மிகப் பிரகாசிக்கக் கண்டு, அதனை எடுத்து, "ஒருமீன் படுத்தோம்" என்றார்கள். அதிபத்த நாயனார் அம்மீனைக்கண்டு, "இது இரத்தினங்களால் உறுப்பமைந்த பொன்மீனாதலால், என்னை ஆட்கொண்டருளிய பரமசிவனுக்கு ஆகும்" என்று கடலிலே விட்டார். அப்பொழுது பரமசிவன் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருள;

அதிபத்தநாயனார் ஆனந்தவருவி சொரிய மனங்கசிந்துருகி நமஸ்கரித்து, சிரசின்மேலே அஞ்சலி செய்தார். சிவபெருமான் தமது உலகத்திலே அடியார்களோடு இருக்கும்படி அவருக்கு அருள்செய்தார்.

திருச்சிற்றம்பலம்.


அதிபத்த நாயனார் புராண சூசனம்
பண்டிதர் மு. கந்தையா எழுதியது

சிவதொண்டிற் பயின்று சிவனைச்சேரும் வாய்ப்பு எவர்க்கும் முளதாதல்
தானே முதலாந் தனிமுதல்வன் ஒருவனாலன்றி உலகம் இயலுமாறில்லை. அம்முதல்வனுஞ் சிவனலாதில்லை என்ற உணர்வும் அவ்வுணர்வின் வழிநிகழுஞ் சிவதொண்டும். பூர்வபுண்ணியப் பேறாக மனமாக நீங்கி மெய்யுணர்வு தலைப்படும் நிலையுடையார் யாவர்க்கும் பொதுவாம். அது அவ்வாய்ப்புறுவார் எக்குலமரபில் இருக்கும்போதும் ஏற்படலாம்; எத்தொழில் மரபில் இருக்கும் போதும் ஏற்படலாம் என்பதும் அத்தகுதிபெறும் அவ்வவர்க்கு அவரவர் குலமரபு தொழில்மரபுகளுக் கடங்க நின்றே சிவதொண்டி லீடுபடும் மார்க்கம் அங்கங்குளதென்பதும் அவரவர் கன்மாநுசார ரீதியாக அவர்களைப் படிமுறையா லீடேற்றும் நோக்கில் குலமரபு தொழில்மரபுகளை விதிப்பதுஞ் சிவனே. அவ்வவருடன் நின்று அவரவர் பரிபக்குவத்திற் கேற்ப அவரவர்க்குத் தோன்றியுந் தோன்றாமலுஞ் செயற்படுத்திக் கொண்டிருப்பதுஞ் சிவனே யாதலால் ஏதொரு தாழ்மரபில் நிற்கையிலும் ஒருவர்க்கு மெய்யுணர்வு தலைப்பட்டுச் சிவனுணர்வும் சிவதொண்டும் நிகழ்தற்கு அம்மரபு தடைக்கல்லாதல் பொருந்தாதென்பதும் சைவஞான உண்மைகளாம் (சைவத்தின் அகில மளாவிய தன்மையும் இதில் வைத்தே உணரப்படுவதாகும்). தத்தம் குலமரபு தொழின் மரபுகளுக்கேற்பவே சிவாலய சேவைக்குக் கோரோசனை பேரிகையாதியன தருதல், சிவனடியார்க்கு உண்கலமாந் திருவோடு வழங்குதல், சிவனடியார்க்குத் துணிவெளுத்துதவுதல், சிவன் புகழை யாழிலமைத்து வாசித்தல் என்ற சிவதொண்டுகளாற்றி முத்திப் பேரின்ப முற்றோராக முறையே வரும் திருநாளைப்போவார் நாயனார் திருநீலகண்ட நாயனார் திருக்குறிப்புத் தொண்ட நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் வரலாறுகளால் அவ்வுண்மை வலுவுறுவதாகும்.

இங்ஙனமாதற் கேற்ப, பரதகுலத்தினராய் வலைத்தொழில் மரபினராயிருக்கும் நிலையிலேயே மெய்யுணர்வு தலைப்பட்டுச் சிவபக்தி மேலோங்கிச் சிவதொண்டிலீடுபடும் நல்வாய்ப்புப் பெற்றுள்ளோர் அதிபத்த நாயனார். அவர் தமது தொழின்மரபுக்குட்பட்ட மீன்பிடித்தலினூடாகவே சிவதொண்டுக்கும் வகையொன்று கண்டுகொண்ட விவேகம் மஹத்தானதாகும். அவர் தினசரி தம் ஏவலர்கள் கடலிற் போட்டிழுக்கும் வலையில் அகப்படும் மீன்களில் முதன்மையானதொன்றைக் கொல்லாது இது நட்டமாடிய நம்பருக்கு" எனக் கூறி அன்பாதரவாக மீளவும் அதனைக் கடலில் விட்டுவிடும் நியமம் பூண்டிருந்தார். திருவருட் செயலாக ஒரு காலகட்டத்தில், பல நாள் தொடர்பாக ஒரேயொரு மீன்மட்டும் அவர் வலையிற் படுவதாயிற்று, அதனையும் பக்தி பூர்வமாகச் சிவனுக்கென்றே கடலில் மீளவிட்டு விடுவதனால் தம் ஏவலர்களுடன் தாமும் பசி பட்டினியால் தளர்ந்து வாடும் நிலை யெய்தியபோதும் அவர்தம் தொண்டுநிலையில் தளர்ந்திலர். இவரது இத்தொண்டுறுதியின் அழுத்தத்தை இன்னுஞ் சற்று ஏறவிட்டுக் காணும் திருவுளச் செயலாக ஒருநாள் அவயவங்களெல்லாம் நவரத்தினங்களாலமைந்த பொன்மீனொன்று முன்னைய தனிமீனுக்குப் பதிலாக அவர் வலையில் அகப்படுவதாயிற்று. சூரியப் பிரகாசமாக விளங்கும் அவ்வற்புத மீனைக் கண்டதும் பேரானந்தமுற்றவராய் இத்தகைய அரிய மீன் சிவனுக்கே உரித்தாந் தகுதியுள்ளது எனக் கொண்டு, "சென்று சேர்க சிவன்கழற்கே" எனக் கூறிக்கரையெற்றி மீளும் அலையோடு மீளுமாறு அதனைத் தள்ளி விட்டருளினார். சோதனை இனிப்போதும் எனத் திருப்தியுற்றவர்போல் சிவபெருமான் அப்பொழுதே ஆகாயத்தில் இடபாரூடராய்த் தோன்றி அவர்க்குச் சிவலோகப் பெருவாழ்வு தந்தருளினார். இந்நிகழ்ச்சி அவர் புராணத்தில், "ஆன நாளொன்றி லவ்வொரு மீனுமங் கொழித்துத் தூநிறப்பசுங் கனகநற் சுடர்நவமணியால் மீனுறுப்புற அமைந்துல கடங்கலும் விலையாம் பான்மை அற்புதப் படியதொன் றிடுவலைப் படுத்தார்" - "என்று மற்றுளோரியம் பவு மேவுசீர்த் தொண்டர் பொன்திரள் சுடர் நவமணி பொலிந்த மீனுறுப்பால் ஒன்றும் மற்றிது என்னை ஆளுடையவர்க்காகும் சென்று பொற்கழல் சேர்கெனத் திரையொடுந் திரித்தார்" - "அகிலகோகமும் பொருள் முதற்றா மெனுமளவில் புகலுமப்பெரும் பற்றினைப் புரையற வெறிந்த, இகலில் மெய்த்திருத் தொண்டர் முன் இறைவர்தாம் விடைமேல் முகில்விசும்பிடை அணைந்தனர் பொழிந்தன முகைப்பூ" என வரும்.

பற்றும் பற்றுக்கள் யாவினுக்குந் தலைப்பற்றாகப் பொருட் பற்றையே பற்றும் பாங்குள்ள இவ்வுலகில் அதனைத் துச்சமாக மதித்துத் துடைத்தெறிந்தவர் என இந்த நாயனார் மகிமையை மேல் இறுதிச் செய்யுளில் சேக்கிழார் நாயனார் போற்றிப் புனைதல் குறிப்பிடத்தகும். மறத்தொழில் எனவே மதிக்கப்படும் வலைத்தொழிலுள்ளுஞ் சிவ தொண்டின்சீலம் விளக்கமுற நின்றவாறும் தம்மவருடனான தமது சீவனோபாயமே கேள்விக்குரியதாயிருந்த கட்டத்தில் உலகமெலாம் விலைபோகக்கூடிய பொன்மீன் கிடைக்கவும் அத்தகைய உயர்பொருள் ஆவசியமாகச் சிவனுக்கே அர்ப்பணிக்கப்பட்டாக வேண்டுமென்ற பக்தி வைராக்கியசீலம் புலப்பட நின்றவாறும் இந்த நாயனாரின் தொண்டுறுதி விசேடங்களாக அறிந்து கடைப்பிடிக்கத்தகும்.

திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.