Our Blog

வேம்பாற்றுவாசிகளின் கல்வி நிலையங்கள்கல்வியிலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கிய வேம்பாற்றுவாசிகள் தங்களுக்கென கல்விக்கூடங்களை அமைத்த வரலாற்றை இக்கட்டுரை விளிக்கின்றது. 

1571 ஆம் ஆண்டு சேசு சபை அறிக்கையின்படி வேம்பாற்றில் பாடசாலை நடைபெற்று வந்ததை அறிய முடிகிறது. அதில் முத்துக்குளித்துறையின் மற்ற பாடசாலைகளைப் போன்றே தமிழ் மொழியும், போர்த்துக்கீசிய மொழியும் பயிற்றுவிக்கப்பட்டது எனக் கொள்ளலாம். நாளடைவில் வடுகர்கள், மறவர்கள் மற்றும் பல்வேறு குறுநில மன்னர்களின் படையெடுப்பால் அது சிதைவுற்றிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக 1883 ஆம் ஆண்டு வேம்பார் பரிசுத்த ஆவி ஆலயத்தின் பங்குத்தந்தை சங். இராயப்பன் சுவாமிகள் தனது பெயர் கொண்ட புனிதரான இராயப்பர் பெயரால் ஓர் ஆரம்பப் பாடசாலையை (புனித இராயப்பர் ஆரம்ப பாடசாலை) நிறுவினார். அப்பாடசாலையானது சங். D. சுவாமிநாதர் சுவாமிகள் பங்குத்தந்தையாக இருக்கும் காலத்தில் 1903 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் லோயர் பிரெய்மெரி கலப்பு பாடசாலையாகவும், 1905 ஆம் ஆண்டு அப்பர் பிரெய்மெரி கலப்பு பாடசாலையாகவும் மாற்றப்பட்டது. பின்னர் 1907 ஆம் ஆண்டு ஆண்களுக்கு, பெண்களுக்கு எனத் தனித்தனியாக இரு பாடசாலைகள் பிரிக்கப்பட்டு, ஆண்கள் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரையிலும், பெண்கள் பாடசாலையில் நான்காம் வகுப்பு வரையிலும் கற்பிக்கப்பட்டது. ஆண்கள் பாடசாலை புனித இராயப்பர் ஆரம்ப பாடசாலை எனவும், பெண்கள் பாடசாலை அர்ச். மார்கிரீத் மரியன்னை பாடசாலை எனவும் அழைக்கப்பட்டது. அந்தக் காலத்திலேயே புனித இராயப்பர் ஆரம்ப பாடசாலை தூத்துக்குடி ரேஞ்சுக்குட்பட்ட ஆரம்பப்பள்ளிகள் நான்கினுள் முதன்மையானதாகத் திகழ்ந்தது.


இப்பள்ளியின் முன்னேற்றம் மற்ற பள்ளிகளின் வளர்ச்சிக்கு வித்திடும் என்ற நோக்கில் சப்இன்ஸ்பெக்டர் திரு. T. பரஞ்சோதி B.A.L.T அவர்கள் 1911 ஆம் ஆண்டு ஆசிரியர் சங்க ஒன்றினை உருவாக்கினார். அதன் அதிபராக  கோவில்பட்டி ஜூனியர் சப்இன்ஸ்பெக்டர் திரு. N. சேஷய்யர் B.A.L.T அவர்களும், உபஅதிபராக விளாத்திகுளம் சூப்பெரின்டெண்ட்டன்ட் திரு.G. வெங்கட்டராமைய்யா அவர்களும், செயலாளராக பள்ளியின் தலைமையாசிரியரும் செயல்பட்டனர். இப்பள்ளியுடன் பெரியசாமிபுரம், வைப்பாறு, சிப்பிக்குளம், பொம்மையாபுரம், மார்தாண்டன்பட்டி, வௌவால்தொத்தி, நாகலாபுரம், செவல்பட்டி, நரிப்பூர், மூக்கூர், குஞ்செயபுரம், எதிரணைப்பட்டி, மேலமாந்தை, சூரங்குடி ஆகிய பதினான்கு கிராமங்கள் இணைக்கப்பட்டு இருந்தன. மாதத்தின் இறுதி சனிக்கிழமை அன்று இவ்வங்கத்தினர் கூடி விவாதிப்பார். 

அந்தகாலகட்டத்தில் வேம்பாற்றில் இருந்த அமலோற்பவ ஜுபிலி கிளப் உறுப்பினர்கள் பள்ளியின் நிர்வாகத்திலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் பெரிதும் அக்கறை கொண்டு விளங்கினர். 1912 ல் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு வெகுமதிகள் அளிக்கப்பட்டன. அமலோற்பவ ஜுபிலி கிளப்பில் ஏற்பட்ட மனதாங்கல்  ஆசிரியர் சங்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது

இதே சுழலில் பங்குக்குருவாக இருந்த சங். சுவாமிநாதர் சுவாமிகள் மாற்றப்பட்டு புதிய பங்குகுருவாக நியமிக்கப்பட்ட சங். P.J. மரியதாஸ் சுவாமிகள் 1918 ல் புதிதாக பள்ளிக் கட்டிடம் கட்டும் பொருட்டு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. ஆசிரியர் சங்கத்தில் ஏற்பட்ட மனத்தாங்கல்கள் பல்வேறு விளைவுகளை உருவாக்கின. இதனால் திரு. சீனியாப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் இராயப்பர் பாடசாலையிலிருந்து விலகி வாலசமுத்திரபுரத்தில் ஏட்டுப்பள்ளி ஒன்றினை நிறுவி கற்பிக்கத் தொடங்கினார். பள்ளியில் கற்பித்தலில் குளறுபடிகள் உருவானதால் பலர் திருச்சி, பாளையம்கோட்டை போன்ற இடங்களுக்கு சென்று கற்கத் தொடங்கினர்.

1920 - 21 ஆம் ஆண்டுகளில் 40 பேர் பாளையம்கோட்டையில் மட்டும் பயின்றனர். அப்போது புனித இராயப்பர் பாடசாலையின் தலைமையாசிரியர் திரு. தாமஸ்பிள்ளை அவர்களுக்கும் வேம்பார் பரதகுல மக்களுக்கும் இடையே மிக கடுமையான கருத்து வேறுபாடுகள் தோன்றியது. அதேநிமித்தம் பங்குக்குருவும் தலைமையாசிரியருடன் இணைந்து பள்ளியை மூடிவிட்டதுடன் அதனை வாலசுப்பிரமணியபுரத்திற்கு மாற்றி திறந்து வைத்தார். இப்பள்ளியானது 1925 ல் புனித தோமையார் ஆலய வளாகத்திற்கு மாற்றப்பட்டது. 1927 ஆம் ஆண்டு முதல் அரசு அனுமதி கிடைக்காமல் நடந்த புனித இராயப்பர் பாடசாலை 1942 ல் அரசு அனுமதி பெற்றது. 1955 ல் இப்பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் உருவாகி, விரைவில் நடுநிலைப்பள்ளியாக மாறியது.

இதற்கிடையே பாடசாலை இல்லாத காரணத்தால் கல்வி கற்கும் வயதுடைய மாணாக்கர்கள் கல்வி பெற இயலாமல் போனது. இந்நிலையில் பாடசாலையின் அவசியத்தை உணர்ந்த மக்கள் புதிய பாடசாலையை அமைக்கத் திட்டமிட்டனர். 1923 ஆம் ஆண்டில் வேம்பாற்றை சேர்ந்த திரு. குருஸ் மிக்கேல் விக்டோரியா அவர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டு புனித செபஸ்தியார் ஆரம்ப பாடசாலை துவங்கப்பட்டு 18.05.1924 அன்று அரசின் அனுமதியுடன் நான்காம் வகுப்பு வரை நடத்தி வந்தார்கள். முத்துக்குளித்துறை மறைமாவட்டம் உருவான பின் பங்கினை ஒப்புக்கொண்ட  சங். S. மரியதாஸ் சுவாமிகளின் பெரும் முயற்சியினாலும் திரு. லாசர் பர்னாந்து, திரு.  S.S. வாஸ், திரு. L.A கர்வாலோ, திரு. நீ. விசுவாசம் பர்னாந்து ஆகியோரின் பெரும் ஒத்துழைப்பாலும் துணை பங்குக்குருவாக இருந்த சங். கபிரியேல் தவத்த சுவாமிகளின் பெரும் முயற்சியாலும் 100 அடி நீளமும், 22 அடி அகலமும் கொண்ட அழகிய பள்ளியை கட்டி முடித்தனர்.

1925 ஜனவரி 23 ஆம் தேதி வியாகுல அன்னை கன்னியர்கள் நால்வர் பரிசுத்த ஆவி பங்கிற்கு வந்து சேர்ந்தனர். பெண் கல்வியை கருத்தில் கொண்டு நடந்து வந்த புனித மார்கரீத் மரியன்னை ஆரம்ப பாடசாலை கன்னியர் இல்லத்திலே நடந்து வந்தது. S. மரியதாஸ் சுவாமிகள் நான்காம் வகுப்பு வரை இருந்த புனித செபஸ்தியார் ஆரம்ப பாடசாலை லோயர் செகெண்டரியாக மாற்றினார். இக்காலகட்டத்தில் வேம்பாற்றில் பரத குலத்தவரே அதிகம் வாழ்ந்தனர். இலங்கை வாணிகம் மற்றும் உள்ளூர் கடல் தொழிலாலும் கிடைத்த பொருளாதார வசதியினால் செழிப்புற்று வாழ்ந்தனர். எனவே இரு பள்ளிகளிலும் போதிய மாணவர்கள் இருந்தனர்.

1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை பெற்றதும் அங்கு சட்டதிட்டங்கள் கடுமையாகப்பட்டன. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அங்கு சென்று குடியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணத்தால் இரு பாடசாலைகளிலும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை குறைந்தது. எனவே 1964 ஆம் ஆண்டில் பங்குக்குருவாக இருந்த சங். G.சூசைநாதர் சுவாமிகள் நம் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் சுற்று வட்டார மாணவர்கள் தங்கிப் பயிலும் வகையில் கருணை இல்லம் ஒன்றினை உருவாக்கினார். அரசு அனுமதி கிடைக்கும் வரையில் தமது சொந்த பணத்திலே நடத்தி வந்தார். கிராமத்தலைவர் திரு. தம்பிராஜ் கர்வாலோ, அருட்சகோதரி. பொனவந்தூர் மேரி, அருட்சகோதரி. கொன்செப்தா மேரி   இவர்களுடன் இணைந்து அரசு அங்கீகாரமும் பெற செய்தார். இன்று புனித சூசையப்பர் கருணை இல்லம் என்ற பெயரில் நடைபெறும் விடுதியில் தூத்துக்குடி, இராமநாதபுரம், மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு மாணவ, மாணவியர் தங்கி பயின்று வருகிறார்கள். மாணவ மாணவியரின் எண்ணிக்கையை மேலும் சரி செய்ய மேற்கூரிய நால்வரும் கலந்து பேசி இரு பள்ளிகளையும் ஒருங்கிணைத்து ஒரே பள்ளியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன்படி 1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் புனித மார்கரீத் மரியன்னை பாடசாலை, புனித செபஸ்தியார் பாடசாலையுடன் இணைக்கப்பட்டது.

அப்போது புனித செபஸ்தியார் பாடசாலையின் தலைமையாசிரியர் திரு. ராஜகுலசேகரன் பர்னாந்து அவர்கள் தமது தலைமையாசிரியர் பொறுப்பை அருட்சகோதரிகளுக்கு அளித்தார். இதனால் ஒருங்கிணைக்கப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியராக அருட்சகோதரி. பெனற்றாமேரி அவர்கள் பொறுப்பேற்றார்கள். மார்கரீத் மரியன்னை பாடசாலை இருந்த கட்டிடம் புனித சூசையப்பர் கருணை இல்லமாக மாறியது. சங். பவுல் அலங்காரம் சுவாமிகளாலும், சங். சேசு அருளப்பன் சுவாமிகளாலும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு போதிய இடவசதி உள்ளதாக திகழ்கிறது.

1977 ஆம் ஆண்டு கருணை இல்ல மாணவ, மாணவியர்கள் மற்றும் நமதூர் மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு மருத்துவ விடுதி ஓன்று கருணை இல்லத்தின் அருகே அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சில குழப்பங்களுக்குப் பின் புனித தோமையார் பங்கிற்கு மாற்றி அமைக்கப்பட்டு 07.10.1977 அன்று சாக்ரோஸ் மருந்தகம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. அவ்வாறே நமதூர் குழந்தைகளின் மேற்கல்வியை மனதில் கொண்டுதிரு. தம்பிராஜ் கர்வாலோ அவர்களின் மேற்கொண்ட சீரிய முயற்சியால் 1958 ஆம் ஆண்டு புனித செபஸ்தியார் பாடசாலைக்கு அருகிலே அரசு உயர்நிலைப்பள்ளி உருவானது. 12.04.1960 அன்று ரோச் பாளையத்தில் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. இப்பள்ளி 2004 ஆண்டு முதல் அரசு மேல்நிலைப்பள்ளியாக மாறி சிறப்புடன் நடைபெறு வருகிறது என்பதும் நமக்கு என்றும் பெருமிதமே.

மேலும் நம் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழக அரசு 2001 – 2002 ஆம் கல்வியாண்டில் புனித செபஸ்தியார் நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருதை அளித்து பெருமைபடுத்தியுள்ளது. திரு. சுதந்திரசீலன் விக்டோரியா அவர்களின் பெரும் உதவியால் 2002 – 2003 ஆம் கல்வியாண்டு முதல் கணினிக் கல்வியை பயிற்சி அளித்து வருகிறது. பங்கு குரு சங். ரஞ்சித்குமார் கார்டோசா சுவாமிகள் அவர்களின் அரும்பெரும் முயற்சியினால் தற்போதைய ஆயர் வந். இவான் அம்புரோயிஸ் அவர்களின் பரிந்துரையால் புனித செபஸ்தியார் பாடசாலை புதிதாக கட்டப்பட்டு 20.01.2007 அன்று திறந்து வைக்கப்பட்டு இன்று புதுபொலிவுடன் திகழ்கிறது. அவ்வாறே 2011 - 2012 ஆம் கல்வியாண்டில் புனித இராயப்பர் நடுநிலைப்பள்ளியும் தமிழக அரசின் சிறந்த பள்ளி விருதை பெற்றதும் நமக்கு பெரும் பெருமையே.

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.