Our Blog

வேம்பாறும் அதன் பாதுகாவலரும் - 5

வேம்பாறும் அதன் பாதுகாவலரும்


கடந்த காலத்தில் சந்த செபஸ்தியார் சிற்றாலயம் இருந்த பகுதியில் “சன் செபஸ்டியன் ஹால்” (St. Sebastian’s Hall) என்ற கட்டிடம் “வேம்பாற்று அமலோற்பவ ஜுபிலி கிளப்’ இளைஞர்களின் வாசகசாலையாகவும் (Library) வெகு காலம் திகழ்ந்துள்ளது என்பதும் இங்கு கவனத்திற்குரியது. இவை அனைத்தையும் ஓருமித்து முழுமையாக கவனிக்கும் போது வேம்பாற்றில் சந்த செபஸ்தியாருக்கென சிற்றாலயம் ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றதையும், அது சிதைவுற்றதையும் பின் அதன் மீள்உருவாக்கமாகவே சந்த செபஸ்தியார் திருத்தலம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் உணர முடிகிறது.
               
சந்த பேதுரு பள்ளி நிம்ப நகரை விட்டகன்றதும் சந்த செபஸ்தியாரின் பேரில் புதிய பள்ளியை “புனித செபஸ்தியார் உயர்தர ஆரம்பப் பாடசாலை” (St. Sebastian’s Higher Elementary School) என அமைக்கத் தூண்டிய உந்துதல் இத்தூயவரின் மேல்நிம்பவாசிகள் கொண்ட ஆழ்ந்த பற்றுதலின் வெளிப்பாடாகும். இடைக்காலத்தில் வேம்பாறு பரிசுத்த ஆவி ஆலயத்தில் செயல்பட்ட “சந்த செபஸ்தியார் வாலிபர்சபை” (Society of San Sebastian) சந்த செபஸ்தியாரின் மகிமைக்காகவும், அவர் பேரில்பக்தி முயற்சியை வளர்த்தெடுக்கும் பொருட்டு சிறப்பாக செயல்பட்டது. தற்போது இதனை மீள்உருவாக்கம் செய்து (Soldiers of San Sebastian) என்ற பெயரில் உலகளாவிய அளவில் வேம்பாற்றுவாசிகளை உறுப்பினராகக் கொண்டு செயல்பட அணியமாகி வருகிறது.


அய்யா’ என்ற சொல்லாடல் அப்பா, தந்தை அல்லது மதிப்புமிக்கவர் என்ற பதத்தை வழங்கி நிற்கிறது. நிம்பவாசிகளுக்கு அய்யா என்றாலே செபஸ்தியாரைய்யா, மிக்கேலய்யா என இருவரை மட்டுமே குறிக்கிறது. அதிலும் குறிப்பாக செபஸ்தியாரைய்யா என்ற பதமே அனைவர் நெஞ்சங்களிலும் ஊடுருவியுள்ளது. புனிதரின் திருவிழா அன்று பகலிலும்,அதற்கு முந்தின நாள் இரவிலும் இவ்விரு அய்யாகளின் லாவண்ய சொரூபங்களை பவனியாக, பஜனைகள் பாடிக் கொண்டு, தெருக்கள் வழியாகக் கொண்டு சென்று கோவில் கொடிமரம் அருகில் வட திசையை நோக்கியும், வளனார் தெருவின் மழைநீர் வடிகால்அருகில் கிழக்கே ஆற்றினை நோக்கியும், டிமல் பஜாரில் மேற்கே பேருந்து நிலையம் நோக்கியும்,பழைய செபஸ்தியார் குருசடி பகுதியில் தெற்கே வாலசமுத்திரபுரம் கோவிலை; நோக்கி என நான்கு மூலைகளையும் நோக்கி நான்திசைகளிலிருந்தும் தங்களுக்கு இடர் நேராதவாறு செபித்து வரும் வழக்கம் வேறெந்த ஊர்களிலும் இல்லாத நடைமுறைச் சிறப்பாகும்.

- நி.தேவ் ஆனந்த் பர்னாந்து

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.